Wednesday, June 14, 2017

நற்பார்வைத் தருவாய் நடராஜா

தில்லை நடராசன் பெருமைகள் 
சொல்லில் அடங்காதவையாம் 

நந்தன் என்றொரு புலையன் 
சாதியினால் கோவில் செல்ல 
மறுக்கப் பட்டானாம் 
தேரடியில் இருந்தே தரிசித்தால் 
போதும் என்றிருந்தானாம் 
திருப்பன்கூரில் நந்தி சிலையே விலகியதாம்  

சிதம்பரம் கோவிலை தரிசிக்கவே 
வாழ்க்கை என்றிருந்தாராம் 
தாழ்த்தப்பட்டவர் நாயன்மாரில் 
ஒருவரான இடம் சிதம்பரம்!!

எத்தனைப் பாடல்கள் நடராசன் மேலே!!
நந்தன் கதை 
ஈர்க்கப்பட்டு கோவில் சென்றேன் 
இன்னும் பிரிவினைகள் அங்கே 
சாதியில் குறைந்து 
பணத்தால் உயர்ந்து 
கூட்டமே இல்லாத போதும் 
நடராசனை முன்னே நின்று காண 
நூறு ரூபாயாம்  
பார்க்க நன்றாக இருந்தது 
நந்தன் நம்பாடுவான் கருணை  
பூணுல் அணியாதோரும் முன்னே நின்றனர் 


வாசலில் அமர்ந்திருக்கும் இன்னொருவர் 
பத்தைக் காட்டினாலே 
பார்க்க விடுகிறார் 
பிரிவினைகளும் லஞ்சமும் 
கடவுளால் இல்லை!!
கடவுள் இருக்கும்(?) இடத்திலேயே உள்ளது!!

கொடுக்காது வெளியிலிருந்து 
பார்க்க இங்கே பலருக்கு மனமில்லை 
கோளாறுகள் அதிகம் ஆயினவே 
கண், மனம், சிந்தனை 
கொடுப்பவன் நிறுத்தினால் 
இது யாவும் மாறலாம் 
அங்கேயும் லஞ்சம் கொடுக்க 
தயார் செய்துவிட்டான்!!

நூறுக்கு வழியின்றி 
கள்ளத்தன பத்திற்கு மனமின்றி
வெளியிருந்து காணும்  கண்களை 
குறையின்றி வைத்திடு 
தில்லை நடராஜா!!
உன் கருணையெல்லாம் படித்தேன்!!
நீ செய்திடுவாய்!!

Friday, March 10, 2017

தேடல் சிந்து

கண்கள் உன்னை தேடுதடி கண்மணி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி

மழைக்காக ஏங்கும் உழவன் போல
உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி
மழைக்காக ஏங்கும் உழவன் போல
உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி


நீ சொல்லாய்
நீ சொல்லாய்
காரணங்கள் என்னவென்று
நீ சொல்லாய்
கண்ணுறங்கும் வேலையிலும்
மனமுறங்கா நிலைதந்து
எங்கே நீ உள்ளாயோ?
கண்முன்னே வாராயோ?
சொல்லடி சொல்லடி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி


கண்ணே என் கண்மணியே - தாலேலோ

பல்லவி:
கண்ணே என் கண்மணியே
அழகே என் செல்வமே
முத்தே என் முதல்வனே
தூங்கு என் செல்லமே

சரணம் 1:
நிலவும் நட்சதிதிங்களும் நீ தூங்காமல் வாராதாம்
மின்மினிப்பூச்சிக்கூட ஆசையாய் மின்னாதாம்
ஆந்தைகள் கூட்டம் வந்து திட்டுதென்னை கண்மணியே
நீயூம் கொஞ்சம் தூங்கிச் செல்லேன் தாலேலோ தாலேலோ
சரணம் 2:
மயிலைத் தன் தோகை கொண்டு விசிறிவிட சொல்கிறேன்
குயிலையும் கொண்டு வந்து பாடிட செய்கிறேன்
சரஸ்வதி அவளும் வந்து வீணையிங்கு மீட்டணுமோ
ஆழ்ந்து நீயும் தூங்கு கண்ணே தாலேலோ தாலேலோ

இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா


பல்லவி:

பாடல்கள் பல்லாயிரம் தந்தார் இளையராஜா
தன்னிசியால் தாய்மடியை உணர்வித்தார் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா

சரணம் 1:

நாத்திகரும் இசை தெய்வம் இவரே என்பார்
ஆத்திகரோ இசைத் தூதர் இவரே என்பார்
பிள்ளைகளைத் தாலாட்டும்  நீலாம்பரி
இவர் தாரும் சுகமான பாடலொலி
இவர் கை அசைவில் வாத்தியங்கள்
சிந்தை வழி மெல்லிசைகள்
காற்றோடு இணை சேர்ந்து


பல்லவி:

பாடல்கள் பல்லாயிரம் தந்தார் இளையராஜா
தன்னிசியால் தாய்மடியை உணர்வித்தார் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா

சரணம் 2:

மூகாம்பிகை பெறாமகன் இவரே
ஞானத்தந்தை ரமணரின் வடிவே
தமிழ் காத்த பாண்டியரின் குலமே
இசைத்தமிழால் பூஜிக்கும் இசையே
இவரே இசையே
இவர்தந்த இசையாலே
மனம் யாவும் மகிழ்வாலே
இசை என்னும் வழியாலே
மருத்துவம்  செய்திட

கடை பல்லவி:

இன்னும்
பாடல்கள் பல்லாயிரம் தாரீர் இளையராஜா
உம்மிசையால் ஆயிரங்கள் சுகம் தாரீர் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா
Tuesday, July 5, 2016

என்னென்ன புண்ணியம் செய்தேனோ?


என்னென்ன புண்ணியம் செய்தேனோ?
இந்த வாழ்க்கை வாழத்தான்
என்னென்ன புண்ணியம் செய்தேனோ?


தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்

பச்சை நிறச்சட்டையாய் மலைக்கு செடிகள்
பாவம் மலைக்கு குளிரோ?
போர்வையாய் வாரும் மேகம்
கலப்படம் இல்லாத நீலவானம்
இந்த அழகினைக் காணத்தான்
கண்கள் இரண்டை வைத்தானோ?

           தென்பாறை, பூதபாண்டி அருகில் கன்னியாகுமரி மாவட்டம்

கண்ணுக்கு முன்னே வண்ண ஓவியம்!
பச்சை நிற மரங்கள்
நீலமும் பச்சையுமாய் அழகிய ஏரி
சிறகுகள் நீரில் படும்படி
பறந்து திரியும் வெண்ணிற கொக்கு
இந்த அழகினைக் காணத்தான்
கண்கள் இரண்டை வைத்தானோ?

தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்
காற்றின் ஒலி ஸ்வரமாக
நீர் பாறையில் மோதும் ஒலி தாளமாக
காற்றோடு இசை பாடும் பறவைகள் 
ஏழு ஸ்வரங்களில் இயற்கை கச்சேரி!
இதனைக் கேட்டிடத்தான் 
காதுகள் இரண்டை வைத்தானோ?

தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்

தேகம் தீண்டும் தென்றல் 
கண் வழியே மனம் ரசிக்கும் அழகு 
காது வழியே இதயம் கேட்கும் இயற்கை ஒலி 
நுரையீரல் குதூகலிக்க காற்று 
இவையாவையும் கண்டு கேட்டு உணர்ந்து 
பாறையில் அமர்ந்தவாறு நான் 

தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்  

இவையாவும் அனுபவிக்கவே 
உடலும் அதற்கு உயிரும் வைத்தானோ?
இந்த வாழ்க்கை வாழத்தானே
என்னென்ன புண்ணியம் செய்தேனோ?

Monday, June 13, 2016

இறச்சகுளத்தில் கெட் - டுகெதர்

                இறச்சகுளத்தில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்  ஆயிரம் கதைகள்
இருக்கின்றின. இந்த வீட்டின் கதைகளும் சுவாரஸ்யமானதே. வருடத்தில் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களில் ஒரு பத்து நாட்கள் அதீத மகிழ்ச்சியில் சூழ்ந்திருக்கும் இந்த வீடு. ஊரின் அழகினாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்பதினால் சுற்றி இயற்கை அழகு சூழ்ந்த இடங்கள் இருப்பதினாலும் வருடம்  ஒரு பதினைந்து பேராவது கூடுவர் - கெட் டுகெதர் - ஃபேமிலி கேதேரிங்.

                 சில வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டிற்கு பதினைந்து பேர் இயல்பாகவே வாழ்ந்தும் வந்தனர். இப்பொழுது பெருமாள் கோவில் காலை மாலை பூஜைக்கு பதினைந்து பேரை கூட காண முடியவில்லை.  கால மற்றும் அறிவியல் முன்னேற்றம்.

                 இந்த வருடம் உறவினர் கூடுதலுக்கான நாள் நெருங்கி வரத் தொடங்கியது. இந்த வீட்டு அம்மா. அறுபது வயது. சுறுசுறுப்பினையும் செயல்களையும் பார்த்தால் அப்படி சொல்லிட முடியாது - இளைஞர்களுக்கு இணையான வேகம்.  பாவம் இந்த அம்மாவிற்கு தனிமையைப் பரிசாக கொடுத்திருக்கிறது வாழ்க்கை. மகனிற்கு அயல்நாட்டில் வேலை. கணவர் பணி ஓய்வு பெற்று இறச்சகுளம் வந்து ஒரு வருடத்திலேயே இறந்து விட்டார். மூன்று வருடங்களாய் தனிமை வாழ்க்கை தான். வருடம் இருமுறை விடுமுறையில் மகன் வருவான். அதை ஒட்டி உறவினர்களும் வருவர். அந்நாட்களே இந்த அம்மாளுக்கு கொண்டாட்டம் - பொங்கல், தீபாவளி எல்லாம்.
                  தை அம்மாவாசை - அவரது திதி. இந்த வருடம் ஜனவரி இருபத்தி ஐந்து அன்று. புதன் கிழமை. இருபதாம் தேதியே மகன் வருவதால் மகனுக்கு பிடித்ததை செய்து தர வேண்டும் என்று இப்பொழுதே தயாரானாள். இன்னும் நான்கு நாட்கள் தான். பின்னர் பொங்கல் அதன் பின் ஐந்தே நாட்கள் மகன் வந்துவிடுவான். சென்ற வருடம் அவன் வரும்போது நட்ட செவ்வாழை மரம் நன்று வளர்ந்து இருந்தது. தன் கைபேசியில் அதனை படம் பிடித்து வாட்சப்பில் மகனுக்கு அனுப்பினாள். என்ன செய்வது என்று புரியாதவளாய் டிவி ரிமோட்டை அழுத்தினாள். அம்மாளின் பெயர் ராஜேஸ்வரி.

                 அம்மாளின் மகன் கிருஷ்ணன். நாட்கள் நெருங்க ஊர் செல்லத் தயாரானான்.பின்னர் வருவோர்க்கும் ஒவ்வொரு பொருளாக வாங்கினான். ஆண்கள் அனைவருக்கும் ஒன்றாய் இருப்பதுபோல் சட்டையும் வாங்கினான். மக்களிடம் சொல்லவும் இல்லை. சர்ப்ரைசாம். ஒவ்வொரு வருடமும் இருமுறை ஊருக்கு செல்வது வழக்கம். ஆனால் தை மாதம் தான் களை கட்டும். வாட்சப்பில் உறவினர்கள் வருவதை உறுதி செய்து கொண்டான். ஒவ்வொருவரும் சீரியாசனவர்களும் கேளிக்கை விரும்பிகளுமாய் கலவை செய்யப்பட்டவர்கள். மற்ற நேரங்களில் சீரியசானவர்களாய் அதிகம் தென்பட்டாலும், கூடும்பொழுது கேளிக்கை விரும்பிகளாகவே இருப்பர்.

                  ஒருவருக்கு அப்படி சீரியசான நிலைமை தான். பல வேலைகளில் இருந்து விட்டு டெஹல்கா என்ற நிறுவனத்தில் வேலை. அடித்தது ராஜயோகம் என்று பார்த்தால் அடுத்த நாளே அதன் முதலாளியின் கசமுசா காட்சிகள் வெளியே வர, புத்தகத்தின் விற்பனை குறைந்து அவல நிலை. டெஹல்காவில் வேலை என்றால் இவரே அந்த கசமுசா செய்தது போல் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு பணிவிடுப்பு இவர் மனதிற்கு தேவையாகவே இருந்தது. டெஹல்காவும் அவரது மனைவியும் வர ஆயத்தமாயினர். டெஹல்காவின் பெயர் ராமன். அவர் மனைவியின் பெயர் கவிதா. கிருஷ்ணனின் பெரியம்மா மகள்.

                  மற்றொருவர் இவர்களுடன் நன்கு பேசினாலும் இது போன்று மூன்று நான்கு நாட்களுக்கு வந்து சேர்ந்து இருந்ததில்லை. இவர் பெயர் ஹரன். ஹரன் மாப்பிள்ளை வருகிறார் என்ற சந்தோசமும் ராஜேஸ்வரி அம்மாளுக்கு இருந்தது.

                    சென்னையிலிருந்து ராஜேஸ்வரியின் அக்காள் குடும்பத்தினர், தங்கை, மற்றொரு அக்காளின் மகள் குடும்பத்தினர் என மொத்தம் பதினைந்து பேர் சேர்வதை எண்ணி ஒரே சந்தோசம் ராஜேஸ்வரிக்கு. எல்லோரும் சென்றவுடன் பல நாட்களுக்கு இந்த நினைவுகளே ஓடும் அவள் மனதில்.

                    முதலில் மகன் வந்தாயிற்று. அவள் முகம் மலர்ந்தது போல் அந்த வீடே மலர்ந்திருந்ததாய் தெரிந்தது. மகன் வந்தால் கூடுதல் சுறுசுறுப்பாகிவிடுவாள் ராஜேஸ்வரி. எல்லா வீட்டிற்கும் இவள் செய்த காய்கறிகள் போகும். மகன் அல்லவா வந்தது. தனிமைக்கு விடுமுறை கொடுத்து சுகமாய் மகனோடு செலவிடுவாள். என்ன தான் வாட்சப்பும் ஸ்கைப்பும் இருந்தாலும் கூட அமரசெய்து தான் செய்த உணவினை பரிமாறுவதைப் போல் வருமா? மகன் தான் செய்ததை நன்கு சாப்பிடுகிறானா என்று கவனிப்பாள். இன்னும் ஐந்து நாட்களில் மற்றவர்கள் வந்து விடுவார்களே. அப்பொழுது இதுபோல் உபசரிக்க முடியுமோ முடியாதோ? எதுவெல்லாமோ அவனிடம் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றும். ஆனால் பேச்செடுக்காமலே சென்று விடும். தனிமை பற்றி. அதை சொன்னால் கலங்கி விடுவானே. அவர் கனவில் வருவதை பற்றி. அதையெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டு. ஊரார் பேசும் புரளி பற்றி. திட்டிவிடுவானோ? திருமணம் பற்றி. ஓரிரு வருடம் போகட்டும் என்று சொல்லிவிடுவான் என அவளுக்குள்ளேயே பேசி நிறுத்திக் கொள்வாள். இருப்பினும் பேசியே பொழுதைக் கழிக்க தலைப்புகளா இல்லை. நாட்கள் அவ்வாறே சென்று திதியும் முடிந்தது. தனது பிள்ளைகள் மற்றும் பெயரன் பெயர்த்தி வருகிறார்கள் என்ற அந்த கூடுதல் சந்தோசம் அவள் பார்வையிலேயே தென்பட்டது. இன்னும் நான்கு நாட்களுக்குத் தான் என்று கூடவே மனம் சொல்லும்.

                      வாசலில் அழகிய கோலம் இட்டிருந்தாள்.
           
                      உறவினர்கள் அனைவரும் வந்திறங்கி ஆண்கள் ஆற்றில் குளிப்பது என்று தீர்மானமானது. செல்கையில் ராமன் தனது டெஹல்கா விஷயங்களைப் பற்றி நகைச்சுவையாக சொன்னார். ஹரன் ஊரின் அழகினை தனது கேமராவில் ஏற்றினார். விஜயன் தனது மருத்துவ கல்லூரி அனுபவத்தை தன் தந்தை சுரேஷிடம் பகிர்ந்து வந்தான். அடுத்து மூன்று நாட்களுக்கு கடல், அருவி, குளம், ஆறு, கோவில், சினிமா  என்று எங்கு செல்லலாம் எனத் திட்டமிட ஆரம்பித்தான் கிருஷ்ணன்.

                    "அஸ் யூசுவல் கன்னியாகுமரி, சுசீந்திரம் ஒரு நாள். நாளைக்கு போலாம். சனிக்கிழமை நல்லா இருக்கும். சண்டே மார்னிங் திற்பரப்பு ஃபால்ஸ் மட்டும் போயிட்டு வந்துடலாம். இவினிங் கிளம்பணும். இன்னிக்கி சங்கரன் கோவில் போலாம். 4 மணிக்கு வேன் வர சொல்றேன். காலையில லக்ஷ்மி அக்காக்கு  தெரிசனங்கோப்பு வைத்தியர்ட காமிக்கலாம்.", என்றான் கிருஷ்ணன்.
                     "சூப்பர் டா. ஆட்டம் பாட்டம்னு ஜமாய்ச்சிடலாம்.", என்றார் சுரேஷ்.

                     தான் வாங்கித்தந்த துணிகளை அனைவருக்கும் கொடுத்தான் கிருஷ்ணன். அப்படி ஒரு மகிழ்ச்சி ராஜேஸ்வரிக்கு. இதையெல்லாம் காண தன் கணவனில்லையே என்ற வருத்தம். காட்டாமல் இருந்தாள். வண்டியில் அனைவரும் ஆடி பாடி மகிழ்வதை கண்டு மகிழ்ந்தாள். தானும் பாடினாள். அனைவரும் வீடு திரும்பினர்.
                 
                    தன் அம்மாள் அறுபது வயதை அடைந்ததை காரணமாய் கொண்டு முன்பே உறவினர்களை வைத்து ஒரு காணொளி தயார் செய்திருந்தான் கிருஷ்ணன். அனைவர் முன்னரும் அதனைப் போட்டு காட்டினான். நெகிழ்ச்சியில் வாயடைத்தது ராஜேஸ்வரிக்கு.
     
                    அடுத்த நாள் கன்னியாகுமரியிலும் மகிழ்ந்தாள். மாங்காயை பார்த்தவுடன் ஆசை. தனது அக்காள் மகனிடம் கூறி வாங்கி சாப்பிட்டாள். படகு சவாரி முடிந்து கோவில் தரிசனம் முடிந்து சுசீந்திரம் தரிசனமும் முடிந்து வீடு அடைந்தனர். பாடல்களின் சத்தம் தெருவிற்கே கேட்டது. நாளையுடன் அனைவரும் சென்று விடுவர் என்பது அவள் மனதினில் அடித்தது.

                  "இது மாதிரி எல்லா வருஷமும் சேரணும் சித்தி. நான் மிஸ் பண்ணிட்டேன் போன வருஷம் எல்லாம்", என்று ஹரன் சொல்ல
                 "ஆமாம் பா", என்றாள் ராஜேஸ்வரி.
                 "சித்தி நிஜமா சித்தி. எவளோ வருத்தம் தெரியுமா வரதுக்கு முன்னாடி. மூணு நாள் இங்க வந்த தான் கொஞ்சமாவது மாறும்னு நினைச்சேன். இப்போ தான் ஃப்ரீ யா இருக்கு. ஏதோ கிருஷ்ணன் எங்கள கூப்டறான்.",  என்றார் ஹரன்.
                "அதான் அப்டி ஆட்டம் போட்டேன்களா வேன்ல?", என்று ராஜேஸ்வரியின் அக்கா விஜி கேட்க இடமே சிரிப்பில் மூழ்கியது.
             

                  ஏனோ அடுத்த நாள் ராஜேஸ்வரி திற்பரப்பு செல்லவில்லை. நாளை முதல் தனிமை வாசம் தான் என்று தெரிந்தபின்பு எதற்காக இன்றைய குதூகலம். வற்புறுத்தியும் சமைப்பதாக சொல்லி நின்று விட்டாள். அவளது அக்காளும் நின்று விட்டாள். அக்காள் அல்லவா? புரிந்து கொண்டாள்.

                 மதியம் அனைவரும் திரும்ப வந்தனர். வருத்தத்தை முகத்தில்
காட்டாது பரிமாறினாள்.
                       
                 மாலை சென்னை செல்பவர்கள், பெங்களூர் செல்பவர்கள் என்று ஒவ்வொருவராக கிளம்ப, கிருஷ்ணனும் தான் அழைத்திருந்த டாக்ஸியில் திருவனந்தபுரம் விமான நிலையம் புறப்பட்டான். அவள் வாசலில் இருந்து அனுப்பிவிட்டு, ஜன்னல் வழியே ஒரு ஏக்கப் பார்வை பார்த்தாள். அந்த வீடும் மக்கள் பின்னர் எப்போ வருவர் என்ற ஏக்கப் பார்வை பார்ப்பது போல் இருந்தது.
             
                 உள்ளே சென்று தன் கணவனின் லேமினேஷன் ஃபோடோவைப் பார்த்து, "இனி நீங்களும் நானும் தான் கிருஷ்ணன் ஜூன்ல வரவரைக்கும்.", என்று  சொல்லிவிட்டு சமயலறைக்கு சென்றாள்.

             

Monday, March 7, 2016

போதை

குடியால் குடியிழக்கும் மக்காள்
நேர்முயன்று ஓரநடைப் போவோர்
விஷமோ இங்கமிர்தம்?
இல்லாத இன்பம்
மாயத்திலே மாயம்
சுயைமறந்து வேற்றுலகம்
போதைவேண்டி நாளும்

சுயைமறந்து ஈரல்வெந்து
எதற்கிந்த பொய் இன்பம்?
தன்னை மறத்தலா போதை?
அசிங்கப் படுவதா போதை?
கிண்ண மதுவா போதை?
இது சுயை மறத்தலன்று
சுயை இறப்பு

பலசுயையிழப்பில் உயிரிழப்பு
சுயை மறுத்தலா போதை?


சுயை உணர்தலே போதை!
மெய்சிலிர்த்தல் போதை!
வெற்றி போதை!

அருவிக் குளியல்
உடலுக்கு போதை!

இயற்கை அழகு
மலையூடே மேகம்
உயிர்ந்தெழும் கடலலை
குழந்தையின் புன்சிரிப்பு
தோகை விரித்த மயில்
நடைபயண செஞ்சூரியன்
கண்களுக்கு போதை!

கொதிக்கும் மிளகுரசம்
மனோரஞ்சித வாசம்
கோடையில் மண்வாசனை
மூக்கிற்கு போதை!

இன்னிசை போதை
வீணையில் ரீங்காரம்
நாதஸ்வரத்தில் நாட்டைக்குறிஞ்சி
குழலில் நல்லிசை
நற்குரல் வாய்ப்பாட்டு
அன்னையின் தாலாட்டு
பறவைகள் பேசுமொழி
மழலைப் பாட்டு
கடலலை
ஆற்று நீரோட்டம்
சஹானா ராகம்
செவிக்கு போதை!

பசிநேரத்து உணவு
வயிற்றுக்கு போதை!

ஆண் பெண்ணுக்கும
பெண் ஆணுக்கும் போதை!
காதல் போதை!
காதலோடு காமம் போதை!
உறவோடும் நட்போடும்
சுற்றுலா போதை!
நம்பிக்கை போதை!
பெண்ணின் வெட்கம் போதை!
விடைகண்ட கணக்கு போதை!
செந்தமிழ் போதை!
சுயை உணர்தல் போதை!!!