Wednesday, April 2, 2014

இறச்சகுளம் தாணு

          நெற்பயிர்கள், வாழைத்தோட்டங்கள், வளைந்ததும் நிமிர்ந்ததுமாய் தென்னைகளை கொண்ட தோப்புகள், மேற்கே வரிசையாய் மலைகள், எல்லைக்கு ஒன்றாக அனந்தனாறு, பழையாறு என இரண்டு ஆறுகள், ஆற்றிலிருந்து கால்வாய் வழியே பெரிய குளம். சின்ன ஏரி என்றே கூறலாம். அவ்வளவு பெரிது. நாரைகளும் கொக்குகளும் குடித்தனம் நடத்தும் குளம். நாரைகள் தன றெக்கைகளை நீரில் படுமாறு தொட்டு விளையாடும் அழகு சொல்லி மாளாது. அந்த பெரிய குளத்திலிருந்து ஒரு சின்ன குளம். அங்கே சிறார்கள் தண்ணீரில் குதிப்பது ஓர் அழகு.


          ஊர் நடுவே ஒரு கோவில். கோவிலை சுற்றி வீதிகள். தெருக்களில் இன்னும் சிட்டுக்குருவிகள் பேசும். வீதிக்கு ஒரு சமுதாயம். கோவில் முன் தெருவில் அந்தணர்கள், தெற்கு தெருவில் வெள்ளாளர்கள், வடக்கு தெருவில் நாடார்கள் என கோட்பாடு இன்னும் கலைக்கபடாமல்! ஊரிலிருந்து கிலோமீட்டர் தொலைவில் பேருந்து நிறுத்தம். புதியவர் வந்தால் "இதுவல்லவா கிராமம்" என வாய்விட்டு சொல்லவைக்கும் கிராமம். பெயர் இறச்சகுளம். பெயரில் இன்றும் ஜாதி பெயர்களை கொண்டவர்கள், ஐந்தாறுதலைமுறை முன்னரே தெருக்களில் ஜாதி வேண்டாம் என முடிவெடுத்தனர். அக்ரஹாரம், பெருமாள் கோவில் தெருவானது. பிள்ளைத்தெரு தெற்கு தெரு ஆனது. நாடார் தெரு வடக்கு தெரு ஆனது.
நன்றி திரு. ஆனந்த் 

           மாலை பொழுதில் அந்தண பெரியவர்கள் கோவில் செல்ல, சிறு பிள்ளைகள் ஓடியாடி விளையாட பெண்கள் கோலவித்தை காட்ட வானும் செந்நிறத்திலிருந்து கருநிறத்திற்கு மாறிவரத்தொடங்கியது. அப்பொழுது தன் வேலை முடிந்து தெருவினுள் ஸ்கூட்டரில் வந்துக்கொண்டிருந்தார் தாணு ஐயர். நாகர்கோவில் இந்திய வங்கி உதவி மேலாளர். தெருவில் ஸ்கூட்டர் வாங்கிய முதல் நபர். இருபத்திரெண்டு வருடங்களாக அதே ஸ்கூட்டர் தான். அதனாலேயே தாணு அய்யர் போய் ஸ்கூட்டர் அய்யர் என்றே அழைக்கப்பட்டார்.
          தாணு பிள்ளை, தெற்கு தெருவில் கடை நடத்தி வருபவர். தலைமையாசிரியராய் இருந்து ஒய்வு பெற்றவர். அறுபத்தி நான்கு வயதிலும் முடி உதிராது ஃபங்க் வைத்திருப்பார். கல்லூரிகாலத்திலிருந்தே ஃபங்க் தான்.  இதனால் ஊரினுள் ஃபங்க் பிள்ளை என அழைக்கப்பட்டார். ஊர் சிறுவர்களுக்கு கணித பாடம் சொல்லி கொடுப்பார். அவர்களிடையே ஃபங்க் சார் என பிரசித்தம்.
          வடக்கு தெரு, விவசாயிகள் சங்க தலைவர் தாணு நாடார். ஐம்பது ஏக்கர் விவசாய நிலம் இவருக்கு. தன் நிலத்து நெல்லினால் செய்த சோறினைத்தவிர வெளியில் உண்ணாதவர். தீவிர இசக்கியம்மன் பக்தர். வீட்டு வாசலிலேயே இசக்கி அம்மன் சிலையினை வைத்தார். இசக்கி நாடார் என்றால் பூதபாண்டி வரை தெரியாத ஆளில்லை.

           நாராயணன், கார்த்திக், மணி பெருமாள் கோவிலிலிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இவர்கள் மூவர் தான். மூன்று பேருமே ஒரே வகுப்பு. இவர்களை தவிர இரண்டு மாணவிகள். மற்ற வீடுகளிலெல்லாம் வேலை ஓய்வு பெற்று மறு குடியேறியவர்கள். இவர்கள் பிள்ளைகள் அமெரிக்கா, பிரிட்டன், துபாய், மும்பை, பெங்களூர், சென்னை இவ்வூர்களில் இருந்து வருடமொருமுறை சில வாரங்களிற்கு கேமரா தூக்கி வருபவர்கள். தெற்கு தெரு, வடக்கு தெருவிலும் பாதி தான் இங்கே.   
          காலை நாராயணனும் மணியும் வேகநடை போட்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.
          "மக்கா. இன்னிக்கு ஸ்கூல்ல எவன் என்னசொன்னாலும் செரி, அந்த கார்த்தி பயல அடிக்காம விடமாட்டேம்ல. கெட்டவார்த்தைல ஏசி புட்டாம்ல.", சற்றே கோபத்துடன் கூறினான் நாராயணன்.
          "என்ன லே? என்ன சொன்னான்? பொதுவா அப்படி ஏசமாட்டனே!", புரியாதபடி கேட்டான் மணி.
          "கோவில்ல அவன் தானே எப்பவும் மணி அடிப்பான். செரி ஒரு நாள் நான் அடிக்கலான்னு போனேன். வெளிய வந்து ஏசிட்டாம்லே."
           என்ன சொல்வதென்று யோசித்த மணி, "லேய், அவன் தாத்தா ஸ்கூட்டருக்கு தெரிஞ்சா போலந்துருவார் லே", என்றான்
           "அந்த ஸ்கூட்டர கல்லால அடிக்கறேன் லே, காத்த புடுங்கி விட்டரனும்", கோபத்துடன்  கூறினான் நாராயணன்.
         
            மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பினர். டியூசனுக்காக நாராயணன் நடந்து நாவல்காடு செல்லும்போது எதிரே ஸ்கூட்டரில் வந்தார் அய்யர். 
             "என்னடா அம்பி டியூசனுக்கா?", வினவினார் ஸ்கூட்டர்.
             "ஆமாம் தாத்தா."
             "ஏன்டா இவ்வளவு பெரிய பேக தூக்கிண்டு போற. நாவக்காடு ஷீலா டீச்சர் தானே  நானே விட்டுடறேன்."
             கார்த்தி சொன்ன வார்த்தை நாராயணனை வண்டியில் ஏறவிடாமல் தடுத்தது. அரை மனதாக, "இல்ல தாத்தா நான் போய்க்கிறேன்" என சொல்லும்போதே ஏறுமாறு ஸ்கூட்டர் செல்ல அதட்டல் விட ஏறிக்கொண்டான் நாராயணன்.
            "தாத்தா இவ்வளவு நல்லவரா இருக்காரே, அந்த கார்த்தி மடையன் தான் அயோக்யன். அவனுக்காக இந்த வண்டிய அடிக்கப்பாத்தோமே", என மனதில் நினைத்துக்கொண்டான் நாராயணன்.
           சற்று தூரம் அமைதியாய் சென்ற ஐயர்,"நீயும் கார்த்தியும் ஒன்னா என்கிட்டே படிங்களேன். எதுக்கு நாவக்காடு வர நடந்து போற? அவனும் ஆத்துக்கு வந்தா தாணுபிள்ளை கிட்டே டியூசன் படிக்க ஓடிடறான்." என வினவினார்.
            "அம்மா கிட்ட கேக்கறேன் தாத்தா."
            "ஆறாங்கிளாசுக்கே டியூசனா? என்னவோ போ? நாங்கலாம் கண்ணாம்பூச்சி பம்பரம்னு விளையாடிட்டு இருந்தோம் " என சலித்து கொண்டார் ஸ்கூட்டர்.   நாராயணனனை டியூசனில் விட்டுவிட்டு வீடு திரும்பினார்.

           சிறுவர்கள் டியூசனுக்கு வந்ததை கண்ட ஃபங்க் தன் மனைவியிடம் வியாபாரத்தை விட்டுவிட்டு  வகுப்பிற்கு தயாரானார். ஃபங்க் தன் முடியினை ஒரு கோது கோதிவிட்டு வகுப்பினுள் நுழைந்தார். கார்த்திக்கு அன்று அல்ஜீப்ரா பாடம். கணிதம் எண்களோடு இருந்தவரை மின்னித்திரிந்த கார்த்தி, எண்ணோடு எழுத்தும் சேர சற்றே தவறுகள் செய்ய தொடங்கினான். ஃபங்க் கொடுத்த இரு கணக்கிலும் தவறு செய்தான் கார்த்தி.
         "அல்ஜீப்ரா ஒளவையார் காலத்துலேயே இருந்துருக்கு. எண்ணும் எழுத்தும் கண்ணென தகுமனு சும்மாவா சொல்லி வெச்சிருக்காவ  அந்த பாட்டி. நாப்பத்தினாலுல நால வகு, ஆறால அஞ்ச பெருக்குனு சின்னபுள்ள கணக்கா போட்டுட்டு இருப்பியா, ஏ ஸ்கொயர் பீ ஸ்கொயர்னு முன்னேறணும்லே. உங்க பக்கத்து வீட்டு சுந்தரம் ஐயருக்கு மவன் ரமேஷ் மாதிரி அமெரிக்கா போவேனு பாத்தேன். லேய் நீ இறச்சகுளம் பஸ் ஸ்டாப்பே போக மாட்ட போலையே." என ஃபங்க் ஒரு அதட்டு அதட்டினார்.
         எல்லோர் முன்னமும் தன்னை அதட்டியதால் ஆத்திரம் அடைந்தான் கார்த்தி. ஃபங்க் நடுவே கடைப்பக்கம் செல்லும்போது, "லேய் மணி. ஃபங்க் நான் இறச்சகுளம் பஸ் ஸ்டாப் கூட போக மாட்டேன்னு எல்லார் முன்னாடியும் திட்டிட்டாரு லே. நான் அவருக்கு சாபம் விடறேம்ல. அவர் ஃபங்க் முடி நாளைக்கே சொட்டையாகும். நீ வேணா பாருல.', என மணியிடம் கோவமாக காது கடித்தான். பின்னர் அவர் கொடுத்த கணக்கை போட்டு முடித்து உள்ளே வந்த ஃபங்கிடம் பயந்தவாறே காண்பித்தான்.
           கணக்கை திருத்திய ஃபங்க்," ஏலே நீ பஸ்ஸ்டாப்புக்கே போகமாட்டேன்னு சொன்னேன் சந்திரமண்டலத்துக்கே போயிருவா போலதெரிவ? சின்ன கணக்கு பூரா தப்பு பண்ணிட்டு, கஷ்டத்த ரெண்டு நிமிஷத்துல பிச்சிவாங்கிட்டியே. இவ்வளவு தாமுல அல்ஜீப்ரா.", என பாராட்டினார்.
            வீடு திரும்புகையில் கார்த்தி மணியிடம், "இவ்வளவு நல்லவரபோய் சபிச்சிபுட்டேனே லே. எங்க அம்மைக்கு இருக்குற மாதிரி நல்ல வளரனும்லே அவரு முடி.", என தான் சொல்லியதற்கு வருந்தி வீட்டினுள் நுழைந்தான் கார்த்தி.
            மணி கார்த்தியோடு வருவதை பார்த்துவிட்டு அவனை நோக்கி ஓடி வந்தான் நாராயணன்.
            "டேய். ஸ்கூல்ல என்கூட இருந்துட்டு இப்ப அவனோட வரியா?", என கேட்டான்.
            "நீ ஏன் ஷீலா மிஸ் கிட்ட டியூசன் போற? நீயும் ஃபங்க் வாத்தியார் கிட்ட வரலாம்ல?" என எதிர் கேள்வி கேட்டான் மணி.
            "அடப்போடே. நாளைல இருந்து ஸ்கூட்டர் தாத்தா எனக்கு மேத்ஸ் சொல்லித்தரேன்னு சொல்லியிருக்காரு."
            "என்னடா! கார்த்தால திட்டினே."
            "அவர்தான் என்ன இன்னிக்கி டியூஷன்ல விட்டாரு. ரொம்ப நல்லவர். அந்த கார்த்தி கூட  நல்லவன் தான். நேத்து கோவத்துல திட்டி இருப்பான்."
             நாராயணன் பேசிக்கொண்டு இருந்த போதே மணியை அவன் தந்தை அழைத்ததால் வீட்டிற்கு கிளம்பினான்.
             மறுநாள் காலை இனிதே புணர்ந்தது. கோவிலுக்கு செல்ல வெளியே வந்த நாராயணன், ஸ்கூட்டர் வீட்டு வாசலில் பலர் சூழ்ந்திருந்ததை பார்த்தான். மணியும் அங்கு நின்று கொண்டிருந்தான். எதற்காக இந்த கூட்டம் என புரியாத நாராயணன் ஸ்கூட்டர் வீட்டை நோக்கிச் சென்றான். எல்லோரும் ஸ்கூட்டரை சுற்றி நின்று கொண்டிருந்ததை பார்த்தான். அருகில் சென்றதில் ஸ்கூட்டர் கண்ணாடி உடைந்தது தெரிந்தது.
             "யாரோ கல்ல விட்டு எறிஞ்சிருக்கா. எப்படி ஒடஞ்சிருக்கு. தாணு நீ வெப்றாளப்படாதே. போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுத்துடு.", என கூட்டத்தில் இருந்த பெரியவர் கூறினார்.
             "இருவது வருஷமா இருந்த கண்ணாடி எவனோ ஒடச்சிட்டான். எவளோ பெரிய கல்லால அடிச்சிருக்கான் பாருங்கோ. விடு ஹரி கண்ணாடிக்கெல்லாம் போலிஸ் கிட்ட போயிண்டு, கெழக்க பாத்து நின்னுண்டு இருக்கார் பெருமாள். சாயிங்காலதுக்குள்ள அவர் பாத்துப்பார்.", என வருந்தியவாறே சொல்லி கூடிய ஆட்களை அனுப்பினார்.
             நாராயணனை நோக்கி அமைதியாக சென்ற மணி, "கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு லே" என காது கடித்தான்.
             "லேய். நான் இல்ல லே. நாங்க தான் நேத்தே கை குடுத்துகிட்டோமே.", என தன்னிலை விளக்கினான் நாராயணன்.
             "எனக்கு தெரியல. சாயிங்காலம் தெரிஞ்சிடும் பாப்போம். நீ கேர்ஃபுல்லா இரு.", என கூறிவிட்டு நகர்ந்தான் மணி.
               அப்போது தெற்கு தெருவிலிருந்து வந்த ஒருவர், "ஏங்க! ஃபங்க் பிள்ள ஒரே நாள்ல சொட்டயாயிட்டான். வீட்டு வாசல்ல கத்திக்கிட்டு கெடக்கான். பாவம் கோதிவிடற பழக்கம் போவல. காத்த கோதிவிட்டுட்டு கெடக்கான். எண்ணி பத்தே முடிதானே இருக்கு. செரி வாரேன்", என தண்டோரா போட்டுவிட்டு  குளத்து வழியாக சென்றார்.
                மணி, கார்த்தி கூறியவாறே நடந்துவிட்டதால் வாயை பிளந்து கொண்டு மௌனமாக ஃபங்க் வீடு நோக்கி நடந்தான்.
                வெளியிலிருந்த ஃபங்க், "கோதிகிட்டே ஸ்டைலா போவேனே. ஊர்பய எல்லாம் ஃபங்க் பிள்ள, ஃபங்க் சார், ஃபங்க் வாத்தியார்னு சொல்லுவான். அவளோ பெருமையா இருக்கும். இப்போ முடி போயிடுச்சே. எவனோ கண்ணு வெச்சிடாமுல. மனசுக்குள்ளயே சாபம் விட்டுருப்பான். 'தன் பொண்டாட்டிக்கு கூட இவளோ முடி இல்லையே. இந்த ஃபங்குக்கு இருக்கேன்னு' வயத்தெரிச்சல் லே. எவன் சாபம் உட்டானோ அவன் இன்னிக்கி சாயிங்காலத்துக்குள்ள பேதி வந்து சாவாம்லே.", என கொட்டி தீர்த்தார். இன்னும் கோதல் நிக்கவில்லை.
                 மணி தன்  இரு நண்பர்களுக்கும் ஆபத்தாகி விட்டதே என பயந்தவாறே இருந்தான். அன்று மாலை சாய்ந்து இரவு எட்டியவுடன் கார்த்தி வீடு நோக்கி ஓடினான். கார்த்தி கார்த்தி என உள்பயத்தோடு  அழைத்தான். அன்றே ஸ்கூட்டருக்கு கண்ணாடி மாட்டியிருந்தது. சிரித்தவாறே கார்த்தி வெளியில் வந்தான். அப்பாடா என பெருமூச்சு விட்டான் மணி.
                "டேய். பேதி எதுவும் இல்லையே.", என பதற்றத்தோடே கேட்டான்.
                "இல்லடா. நானும் இருட்டுற வரைக்கும் பயந்துட்டே இருந்தேன். மதியம் சாப்புடலையே."
                "கருநாக்கு காரன் சொன்னா கரக்டா நடக்கும்னு செந்தில் சொன்னாமுலே. ஃபங்க் முடி இல்லாம பண்ணிட்டியே. நான் நைன்டி பெர்சன்ட் எடுப்பேன்னு சொல்லேன்."
                "நீ நைன்டி பெர்சன்ட் எடுப்ப. நான் நைன்டி ஒன் பெர்சன்ட் எடுப்பேன்."
                "தேங்க்ஸ் டா. அம்மா தேடுவா நான் வரேன்.", என சொல்லிவிட்டு நாராயணனின் வீட்டிற்கு சென்றான்.

                 அங்கிருந்த நாராயணனிடம், "டேய். உனக்கு ஒன்னும் ஆகலையே. கார்த்தால ஸ்கூட்டர் தாத்தா சொன்னதுல இருந்து பயமா இருக்குடா."
                  "நான் தான் எதுவும் செய்யலையே டா. அப்போ இருந்தே சொல்றேனே.", என கூறினான் நாராயணன்.
                  "அப்போ! ஒரு வேல இப்படி இருக்குமோ?"
                  "எப்படி?"
                  "கார்த்தால ஸ்கூட்டர் தாத்தா என்ன சொன்னாரு?"
                  "பெருமாள் பாத்துப்பார்னு சொன்னாரு."
                  "அப்பறம் என்ன ஆச்சு?"
                  "என்ன ஆச்சு?"
                  "ஃபங்க் சார் முடியே போச்சு."
                  "அப்போ?"
                  "ஃபங்க் சார் தான் எதுக்கோ ஸ்கூட்டர் தாத்தா ஸ்கூட்டர ஒடச்சிருக்காரு."
                  "ஒளறாதே."
                  "இல்ல. இருக்கலாம்."
                  "அப்போ?"
                  "சாபம் விட்டவன் பேதில சாவான்னு ஃபங்க் சொன்னாரு. அப்போ பெருமாள்!", சொல்லிய மாத்திரத்தில் கோவிலுக்கு அலறி அடித்து ஓடினான் மணி. பெருமாள் பத்திரமாக இருந்ததால் மனம் திருப்தி அடைந்தான்.

                  காலையில் மணி எழுந்தவுடன், "மணி! இசக்கி நாடார் மாமா ஆத்து இசக்கி அம்மன காணும் டேய். சிலைய யாரோ திருடிட்டா" என அவனது தாயார் கூறினார். வேகமாக பல் துலக்கிவிட்டு நாராயணன் வீடு நோக்கி சென்றான்.
                   "டேய். நாராயணா."
                   "வாடா மணி. நான் நல்லா இருக்கேனான்னு பாக்க வந்தியா?"
                   "இல்லடா. எனக்கு தெளிவா தெரிஞ்சிடுத்து. நான் நினைச்ச மாறியே ஃபங்க் சார் தான் ஸ்கூட்டர்ல கல் அடிச்சது."
                   "எப்படி டா சொல்ற?"
                   "நேத்து பெருமாள் பொழச்சாரா! சாபம் அப்படியே  சுத்திட்டு இருந்து இசக்கி அம்மன அழிச்சிருச்சு. இசக்கி நாடார் ஆத்து அம்மன காணுமாம். போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்கா. காணாமலாம் போகல செத்துடுச்சு. பெருமாள் அளவுக்கு அவாத்து அம்மன் பவர்ஃபுல் இல்ல போல இருக்கு. பெருமாள தான் கொல்ல முடியலன்னு அவர் சொந்தம் அம்மன அழிச்சிருச்சு ஃபங்க் சாபம்." என விளக்கம் அழித்தான் மணி.
                    "ஒளராத டா. நீயும் உன்னோட" என நாராயன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே "நீ வேணும்னா பாரேன். நான் சொன்னது தான் ரைட்டுன்னு புரியும். ஃபர்ஸ்ட் ரேங்க் லே நான்.", என சொல்லிவிட்டு வேகமாக வீடு நோக்கி சென்றான் மணி.
                 
                    போலீஸ்காரர்கள் இருவர் இசக்கி நாடார் வீட்டை நன்கு ஒரு முறை சுற்றி எப்படி சிலை திருடு போயிருக்கலாம் என்ற வியூகத்தில் யோசித்தவாறு இருந்தனர்.
                     சப் இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கம் இசக்கி நாடாரிடம், " திருடு போன இசக்கி அம்ம கிடைக்கும். இந்த சொக்கலிங்கம் அம்மைய தேடி பிடிப்பாம். சாமி மேலையே கைய வெச்சிட்டானுங்க. அநியாய உலகம் இசக்கி அய்யா. என்ன செய்ய? நம்ம கண்டுபுடிச்சிடுவோம்யா. நம்ம ஆளா வேற இருக்கீங்க. சும்மா விடுவேனா?", என நம்பிக்கை வார்த்தை கூறிவிட்டு கிளம்பினார்.
                     ஸ்டேஷன் நோக்கி வண்டியில் செல்லும் போது கான்ஸ்டபிள், "சார். நம்ம இசக்கி ஐயாவோட உண்மையான பேரு தாணு நாடார் பாத்துக்கிடுங்க.  நேத்து ஊருல இன்னும் ரெண்டு சம்பவம் நடந்துருக்கு. நம்ம இந்தியன் பேங்க் தாணு ஐயர் அவர் ஸ்கூட்டர கல்லால அடிசிருக்கானுங்க. அதே நாளுல நம்ம ஃபங்க் வாத்தியார் முடி சுத்தமா போய் அங்க இங்கனு ரெண்டு மசுரு தொங்கிட்டு இருக்கு. இதுல வேடிக்க பாத்தேளா அவர் பேரு தாணு பிள்ளை. ரெண்டு நாள்ல மூணு தாணு."
                     "ப்ரில்லியன்ட் ஜோசப். நல்ல லிங்க்.அந்த போர்வைலையும் விசாரிப்போம். இப்போ எவனுக்கோ தாணுங்கரவன் எதிரி. ஆனா எந்த தாணுனு தெரியல. மூனுப்பேருக்கும் ஒரே நேரத்துல ஆப்பு வெச்சிப்புட்டான்."
                    "ஐயா. ஐயருக்கும் நாடாருக்கும் ஓகே. பிள்ளை சொட்டைலியா ஆயிருக்காரு."
                    "எதிரி மொட்ட அடிச்சிருப்பான் ஜோசப்."
                    "இல்ல யா. நேத்து அவர் பொலம்பிட்டு இருக்கும்போது போனேனே. பாக்க மொட்ட மாதிரி தெரியல. நல்ல வழு வழுனு வழுக்கையா இருந்துதே."
                    "இருந்தாலும் நான் மைன்ட்ல வச்சுக்கிறேன். நேத்து கே டீவீல இங்கிலீஷ் படம் எதாவது பாத்தீங்களா?"
                    "இல்ல சார். யோசிச்சேன்."

இதனிடையே மணி ஸ்கூட்டர் தாத்தாவிடம் சென்று,"தாத்தா! நீங்க ஸ்கூட்டர ஒடச்சவன பெருமாள் பாத்துப்பார்னு தானே சொன்னீங்க?" என கேட்டான்.
                    "ஆமாம் மணி. கண்டிப்பா பாத்துப்பார். ஏன் திடீர்னு வந்து கேக்கற?" என எதிர்கேள்வி கேட்டார்.
                    "இல்ல தாத்தா. கேட்டேன்."
                    "சாப்டுறியா?"
                    "செரி தாத்தா."
                    "உள்ளே போ."
                   வேகமாக உள்ளே ஓடினான் மணி. உணவு முடித்து கார்த்திக்கிடம் தனக்கு தோன்றியவற்றை கூறினான்.
                    "நீ வேற டா. அவரு நல்லவரு. அவர் போய்  ஏன் தாத்தா ஸ்கூட்டர உடைக்கணும்? இருக்காது.", என கூறினான்.
                                     
                    மாலை டியூசன் முடியும்போது மணி மெதுவாக ஃபங்க் சாரிடம் சென்று, "சார். நீங்க உங்களுக்கு சாபம் விட்டவன பேதி வந்தே சாகனும்னு சொன்னீங்களே."
                    "ஆமா லே மணி. கோவத்துல சொன்னேன்லே. கோவத்துல சொன்னா நடக்காது. போ கணக்க போடு வீட்டுக்கு போயி. உனக்கு எதுக்கு இதெல்லாம்", என அதட்டி விரட்டினார்.
                     அவசர பட்டு சொல்லிட்டாரு இப்ப இசக்கியம்மனே இல்ல பாரு என மனதில் நினைத்தவாறே வீடு திரும்பினான் மணி.
 
                      அடுத்த ஐந்து நாட்களில் இறச்சகுளம் போலிஸ் ஸ்டேஷனுக்கு மொட்டை கடிதாசி வந்தது. அதனை சொக்கலிங்கம் ஜோசப்பிடம் கொடுத்து வாசிக்க சொன்னார்.
                       "அனுப்புநர் விஷயம் தெரிந்தவன், இறச்சகுளம். பெறுநர் காவலதிகாரிகள், இறச்சகுளம் காவல் நிலையம். ஐயா, பொருள்: இசக்கி அம்மன் களவு பற்றி. இசக்கி அம்மன் களவாடப்படவில்லை. பேதி வந்து இறந்து விட்டார். பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஸ்கூட்டர் அய்யர் என்கிற தாணு அய்யரின் ஸ்கூட்டர் கண்ணாடி உடைந்தது, இசக்கி அம்மன் களவுக்கு முந்தைய நாள். தாணு அய்யர், ஸ்கூட்டர் கண்ணாடியை உடைத்தவனை பெருமாள் பார்த்து கொள்வார் என கூறி இருந்தார். அடுத்த கனமே தெற்கு தெரு ஃபங்க் பிள்ளை என்கிற தாணு பிள்ளை முடியிழந்து சொட்டை ஆனார். அவர் சும்மா இல்லாமல் தனக்கு இப்படி நேர காரணமானவர் பேதி வந்தே செத்து போவான் என்று சாபம் விட்டார். சாபம் யாருக்கு? சாட்சாத் அந்த பெருமாளுக்கு. ஃபங்க் தான் கண்ணாடியை உடைத்திருக்கிறார். பெருமாள் தான் அவரை சொட்டையாக்கி விட்டார். பெருமாள் சர்வ சக்தி கொண்டிருப்பதால் சாபம் அவர் மேல் பலிக்கவில்லை. மாறாக முறைப்படி பூஜை செய்யபடாத தாணு நாடார் வீட்டு வாசல் இசக்கி அம்மன் மீது சாபம் சென்று விட்டது. புரிந்து, மேல்படி நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு விஷயம் தெரிந்தவன்." "சார். நான் பாத்த இங்கிலீஷ் படத்த இவன் பலதடவ பாத்துருப்பான்னு நினைக்கேன். க்ளூ கெடைச்சிருச்சு வாங்க போகலாம்?" என்று கூறும்போதே சொக்கல்லிங்கம், "யோவ். அறிவிருக்கா? அவன் தான் சாமி அது இதுனு எழுதிருக்கான்னா, நீ வேற! அப்படியே அது நெசமா இருந்தா? ஃபங்க் விட்ட சாபம் எல்லாம் சாமிக்கே நடந்திருச்சு பாத்தியா? நம்ம யாரையாச்சு ஏதாவது சொல்லிட்டாருன்னா? மனுஷன் காணும்னாலே நீ அசால்டா தானே இருப்ப? சாமி செல தானே. அவன் அவன் இங்கிலீஷ் படம் பாத்துட்டு ஊட்டிய அறுக்குறானுங்க." என அதட்டிவிட்டு வேகமாக மதிய உணவுக்கு கிளம்பினார்.
                        நான்கு வருடங்கள் கழித்து, பாசி அதிகம் பிடித்ததால் ஆற்றிலிருந்து பெரிய குளத்திற்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. குளத்திலிருந்து ஒருவன் வேகமாக இசக்கி நாடார் வீட்டுக்கு ஓடி சென்று மூச்சு இறைத்தவாறே,"ஐயா. கொளத்துல தண்ணி வத்திட்டு. வத்தின கொளத்துல நம்ம இசக்கி அம்மே செல இருக்கையா." என கூறினார்.
தாணு நாடார் இசக்கி சிலை கிடைத்த சந்தோஷத்தில் ஊருக்கே விருந்து வைத்தார்.

அன்று போலிஸ் ஸ்டேஷனில், "ஐயா! காணாம போன இசக்கி அம்மன் செல கொளத்துல  இருந்து கெடைச்சிருக்கு." என ஜோசப் சொக்கலிங்கத்திடம் கூறினார்.
                        "யோவ். அப்படியே பைல கிளோஸ் பண்ணு. அந்த இசக்கி நாடார் கிட்ட சைன்  ஒன்ன வாங்கி வேலைய முடி."
                        "சார். இதுல வெடிக்க என்னன்னா?  தாணு அய்யர் ஸ்கூட்டர் கண்ணாடியே அன்னிக்கே செரி  பண்ணிட்டாங்க. தாணு பிள்ளையும் நாலு மாசத்துல அந்த ஃபங்க் முடி மாதிரியே விக் வெசிக்கிட்டாரு. தாணு நாடார் அம்மனும் கிடைச்சாச்சு. ஆல் தாணுஸ் பிராப்ளம் சால்வுட்."
                        "வேதக்காரரே! அமைதியா வேலைய பாரும். இல்லாட்டி அதே இங்கிலீஸ் படத்துல நடிக்க போயிடும்.", என கூறிவிட்டு மதிய இடைவேளையில் ஒரு சிறிய தூக்கம் போட வீட்டிற்கு சென்றார்.

அனந்தனாற்றங்கரையில், "டேய் மணி. இப்ப என்ன அந்த? அம்மன் வயத்தகலக்கி கொளத்தோரமா  வரும்போது தடுக்கி கொளத்துல விழுந்துட்டாங்கனா?" என்று கேட்டான் கார்த்தி.
                         "அப்போ ஆறாங்கிளாசு அப்படிலாம் தோனிச்சு. ஏன் அதை எல்லாம் கிளறுற?", என வெட்கப்பட்டு பதிலளித்தான் மணி.
                         "உனக்கு ஒன்னு சொல்லட்டுமா? தாத்தா ஸ்கூட்டர் கண்ணாடிய தெரியாம கண்ணாடில உடைச்சதே நான் தான். போன வருஷம் இத நான் தாத்தா கிட்டயே சொல்லிட்டேன். ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு விட்டுட்டாரு. நீ என்னமோ டிடக்டிவ் மாறி சுத்திட்டு இருந்த. அதுவும் இசக்கி அம்மன்னுக்கு பேதியாம். உன்னையெல்லாம் எப்படி பர்ஸ்ட் ரேங்க் வாங்க வைக்குது அந்த அம்மன்."
                       "அடப்பாவி! தாத்தா வண்டி கண்ணாடிய ஒடச்சிருக்க. ஃபங்க் வாத்தியாரையும் சொட்டை ஆக்கிருக்க. இசக்கி அம்மன நீ தானே ஏதாவது பண்ண?"
                       "அடச்சீ. நீ இன்னும் மாறலையா?"

நான்கு வருடம் இருபத்தி ரெண்டு நாட்களுக்கு முன்.
                       "யப்போ! இந்த விக்க வெச்சிக்கிடறது எவளோ கஷ்டம்!", வகுப்பு முடித்து விக்கை  மேஜை மேல் வைத்தார் தாணு பிள்ளை. பத்து வருடங்களுக்கு முன்னர் முடி குறைய ஆரம்பிக்கும் போதே, ஃபங்க் ஒரிஜினலாக தெரியும்படி விக் மாட்டிகொண்டார் ஃபங்க் பிள்ளை. மனைவி, மகள் தவிர இன்று வரை வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது.
                        அவர் இளைப்பாற சென்ற நேரத்தில் வீட்டு நாய் அவர் டோப்பாவினை கவ்வி சென்றது. இளைப்பாறி வெளியில் வந்த ஃபங்க் அவர் டோப்பாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  மனைவியிடம், "அட டோப்பா காணோமே. ஊர் காரன் முன்னாலே எப்படி நிப்பேன். ஒரே நாள்லே முழுசா சொட்டைனா நம்ப மாட்டானுன்களே. எட்டி! நீயும் நல்ல ஹெல்ப் பண்ண. ஆனா கெடைக்கலையே. நாளைக்கு ஊர்காரன் முன்னாடி ஒரு நாடகம் போடுறேன். கண்டுக்காதே. என் சொட்ட விஷயம் எவனுக்கும் தெரிய கூடாது. நீ நல்லவ  சொல்ல மாட்டம்மோ.", என கூறியவுடன் கணவரின் சொல்லே முதலானது என இருக்கும் அவரது மனைவி ஒப்புக்கொண்டவாறு தலையாட்டினாள்.

நான்கு வருடம் இருபது நாட்களுக்கு முன், அதிகாலை 1:20
         
                       வடக்கு தெருவில் குடிபோதையுடன் வந்த நபர், "வாட் இஸ் உவர் நேம்? மை நேம் இஸ் என். சுந்தரம். ஏன் பேர் சொல்ல மாட்டேங்கற? வாட் இஸ் உவர் நேம் இசக்கி அம்மன்? யூ ஏன்சர். இல்லன்னா என் பணிஸ்மண்ட்ஸ் பயங்கரமா இருக்கும். ஐ அம் பீ.டி மாஸ்டர் கவர்ன்மன்ட் ஸ்கூல். அன்டர்ஸ்டேன்ட். விசில் அடிச்சா ஸ்டேன்ட் அட் ஈஸ் ல நிக்கணும். உஸ், உஸ் . ரெண்டு தடவ வாயிலையே விசிலடிக்கறேன். யூ வை நாட் ரெஸ்பாண்ட்? கம்!", இப்படி அரை ஆங்கிலத்தில் பேசி  சிலையை அங்கிருந்து எடுத்து அதைத்திட்டியவாரே அங்கிருந்து வேகமாய் குளத்துக்கு எடுத்து சென்று, குளத்தினுள் வீசி எறிந்து, "ஸ்விம்மிங். டூ பார் டென் மினிட்ஸ். பணிஸ்மன்ட்.", என்று கூறிவிட்டு போதை நடனமாடி வீட்டிற்கு சென்றான்.
             
மூன்று வருடம் இருநூற்று அறுபத்தி ஏழு நாட்களுக்கு முன்

                        "என்னங்க. இந்த டோப்பா கெடச்சிருச்சு. போட்டுக்குங்க. பாவுள்ள வெச்சிட்டு மேசைமேல நாலு மாசமா தேடிட்டு இருந்தா எப்படி கிடைக்கும்.", என்றாள் ஃபங்கின் மனைவி.
                       "ஏட்டி! இப்படியா கத்துவ. டைப்பிஸ்ட் காதுல விழுந்துட போகுது. ஆனா, இப்படி மறந்துட்டேனே மக்கா! நீ சிவம்பிள்ளைய கூப்புடு. இந்த ஃபங்க பாத்தா போதும் ஊருக்கே சொல்லிடுவான். ஃபங்க் பிள்ளை ஃபங்க் டோப்பா போட்டுக்கிட்டு பழைய மாதிரி ஜம்முன்னு இருக்காருன்னு ஊரே சந்தோஷ படும்."
                         தன கணவன் சொன்னவாறே சிவம்பிள்ளையை செல்பேசியில் அழைத்தாள் ஃபங்கின் மனைவி.
                       "அண்ணே! கூப்டேங்களாமே. அட என்ன அண்ணே பழையமாதிரி நல்ல முடி."
                       "சிவம்பிள்ள! இந்த நித்யா. சென்னைல இருந்து வாங்கிட்டு வந்துச்சு. ஃபங்க் இல்லாம அப்பா தாணு பிள்ள எப்படின்னு டோப்பா போட்டுக்குங்கன்னு வாங்கி குடுத்துச்சு. வயசுக்கு ஏத்த மாறி இருக்கட்டுமேனு நித்யாவே அங்கங்க நர டை அடிச்சிருக்கு பாரு.", என ஆரம்பித்து கூப்பிட்டு விட்டோமே என்ற காரணத்தினால் பத்து நிமிடங்கள் ஏதேதோ  பேசிவிட்டு அவரை அனுப்பினார்.
                        ஐந்து நிமிடங்கள் கழித்து வீட்டு வெளியில் வந்தார் ஃபங்க். அங்கே பல பேர் அவரை பழையவாறு பார்க்க நின்றிருந்தனர். அங்கே மணியும் இருந்தான்.

நன்றி: நாஞ்சில் தமிழ் உரையாடல்களை இன்னும் மெருகூற்றிய திரு. கிரிதர் அவர்களுக்கு.

No comments:

Post a Comment