Tuesday, October 7, 2014

தனுமதி

                           காலை ஐந்தரை மணிக்கு வீட்டு வாயிலில் கோலமிட்டு கொண்டிருந்தாள் பாக்கியம். வெங்கிடு வீட்டினுள் விபூதிப் பெட்டியைத் தேடியவாறு இருந்தார்.

"பாக்கியம். இந்த விபூதி டப்பா எங்கடி", கேட்டவாறு வெளியில் வந்தார் வெங்கிடு.
"ஃபிரிட்ஜ் மேல பாருங்கோ"
வாயிலில் இருந்த செய்தித்தாளை எடுத்து உள்ளே நுழைந்தார் வெங்கிடு.
நெற்றியில் பட்டை இட்டுவிட்டு செய்தித்தாளை வாசிக்கத் துவங்கினார்.

"ஒன்பது மணிக்கு டி.எல்.எஃப். ல இருக்கணும்  . இப்படித் தூங்கிண்டு இருக்காப் பாருங்கோ. ஷங்கரும் நைட் டியூட்டி முடிச்சிட்டு வந்துட்டான். ஆறரை ஆறது."
"என்னப் போல இருக்கா. ஆறுக்கு முகூர்தத்த வெச்சிண்டு அஞ்சரைக்கு எழுந்தேனே நம்ம கல்யாணத்துல.", சொல்லி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தார் வெங்கிடு.
"சிரிப்பப் பாரு. தனுமதி!!! எழுந்துடு டி. மணி ஆறரையாச்சுப் பார். தனுமதி!!"
"எழுந்துக்கறேன் மா.", தூக்கம் கலந்த குரலில் கூறி எழுந்தாள் தனுமதி.

காலை உணவை முடித்து வெங்கிடுவும் தனுமதியும் அவரவர் வண்டியில் அலுவலகம் புறப்பட்டனர். ஷங்கர் தூங்கச் சென்றான். பாக்கியம் தோசைக்கு மாவரைக்க  ஆயத்தமானாள். மாவரைத்துவிட்டு செய்தித்தாளை படிக்கத் துவங்கினாள் பாக்கியம். நாலாவது பக்கத்தில் அவள் படித்த செய்தி அவளை பதறச் செய்தது. 'டெல்லியில் ஒரு சாஃப்ட்வேர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணைக் கடத்ததிய சதிகார கும்பல், அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து அளித்து பாலியல் கொடுமை செய்து விடுவித்துள்ளனர். அதோடு விட்டு விடாத  சதிகார கும்பல், பெண்ணின்  தந்தையிடம் சி.டியைக் காண்பித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இத்தகவல் அறிந்தப் பெண் குடும்பத்தோடு தற்கொலை. போலீசார் சதிகார கும்பலைத் தேடி வருகின்றனர்.

படித்த  மாத்திரத்தில் பாக்கியம், தன் மகளை கைபேசியில் அழைத்து, "தனுமா! ஆபிஸ் போயிட்டியா?", என ஆரம்பித்தாள்.
"என்னம்மா இது? வித்தியாசமா இருக்கு? கரண்ட் இல்லையா? சீரியல் பாக்கலையா?"
"ஆபிஸ் போயிட்டேலியா?"
"ஒரு மணி நேரம் ஆறது வந்து சேர்ந்து."
"திரும்பி வரச்ச பாத்து வாம்மா.", என சொல்லிவிட்டு   ஃபோனை வைத்தார்.

ஒரு மணி அளவில் திரும்ப தன் மகளை அழைத்தார். மனதில்  ஏதோ ஒரு நெருடல் பாக்கியத்திற்கு.

மாலை நான்கு மணிக்கு தனுமதி கைபேசியிலிருந்து. தினமும் ஆறு மணிக்கெல்லாம் வீட்டினை அடையும் தனுமதி அன்று வீட்டுக்கு வர எட்டு மணி வரை ஆகும் எனக்கூறி அழைப்பினைத்  துண்டித்தாள்.

"சாயிங்காலம் ஆறு மணி வரைக்கும் வேலை செய்யாதத, இப்ப ஒக்காந்து செய்யனுமா? ஏன் தான் இப்பிடி பண்றாளோ?", என தன மகனிடம் முனங்கினாள் பாக்கியம்.
"என்ன மாதிரி நைட் டியூட்டி போட்டா இன்னும் டென்சன் ஆவ போலியே?", என்றான் ஷங்கர்.
"பொன் இல்லையா டா?"
"பாரதி கண்ட புதுமைப் பெண்கள். இந்த ஜெனரேசன் எல்லாருமே. பயப்படாதே. வந்துடுவா."
"பயம்லாம் இல்லை."
"அப்போ வேற என்னன்னு பேர் வைக்கலாம்."
"பேசாமக் குளிக்கப் போடா, ராக்கோழி. இல்லை.ஆந்தை."
"ஆந்தையெல்லம் குளிக்குமா?"
" போடா."

ஷங்கர் குளிக்க சென்ற நேரம் வெங்கிடு வீடுத் திரும்பினார்.
"என்னடி. ஆறடிச்சிருத்து. தனுமதி இன்னும் வரலையா."
"இன்னிக்கி லேட் ஆகுமாம்."
"ஃபோன் பண்ணியா? கடைசியா நாலு மணிக்கு பண்ணினா. லேட் ஆகும்னு சொன்னா. அதுக்கப்பறம் நான் ஃபோன் பண்ணலை."
 "சரி. இப்ப நான் பண்றேன்."
"ஃபோன் சுவிட்ச் ஆஃப்னு வருது. செரி வரட்டும்."

ஏழு மணிக்கு ஷங்கர் வேலைக்கு புறப்பட்டான்.

ஷங்கருக்கு டைடல் பார்க்கில் வேலை. ஷங்கர் ஒன்பதரை மணியளவில் வெளியே வந்தான். அவனது நண்பர்கள் அஷோக்கும், மார்டினும் அவரவர் விரல்களில் கோல்ட் ஃப்ளேக்கை பொருத்திக் கொண்டனர்.

ஷங்கருக்கு கைபேசியில் அழைப்பு வந்தது.
"அஷோக். ஒரு நிமிஷம்."
"ஹலோ! அம்மா"
"ஷங்கர்! இன்னும் தனு வரல டா. பயமா இருக்கு டா. அவ ஃபோன் வேற சுவிட்ச் ஆஃப் ல இருக்கு. பயமா இருக்கு டா."
"பயப்படாத மா வந்துடுவா.நான் அவ ஃபிரண்ட் கிட்ட கேக்கறேன்."
"சீக்கரம் டா. பயமா இருக்கு."

ஷங்கர் அழைப்பைத் துண்டித்து தனுமதியின் தோழி நித்யாவை அழைத்தான்,
"ஹலோ! நித்யா."
"ஹலோ! அண்ணா எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் மா. தனு இன்னும் வீட்டுக்கு வரல, எப்போ கிளம்பினா ஆஃபிஸ்ல இருந்து?"
"கிளையன்ட் காலா இருக்கும் ணா. நான் இன்னிக்கி ஆஃபிஸ் போல. இருங்க நான் இன்னொரு டீம் மேட் கிட்ட பேசறேன். ஹோல்ட் ல போடறேன்."
"ஓகே."

"அண்ணா. தனு ஏழேகாலுக்கெல்லாம் கிளம்பிட்டாளாம். ஒரு வேல டிராபிக்ல மாட்டிட்டு இருப்பாளோ? அப்படி தான் அண்ணா இருக்கும். பயப்பட வேண்டாம்."
"தேங்க்ஸ் மா."

ஷங்கரின் நண்பர்கள் ஏதோ பிரச்சனை என அறிந்து அவன் அருகில் வந்தனர்.
"ஷங்கர். எதுனா பிரச்சனையா?"
"மார்டின். தனுமதி இன்னும் வீட்டுக்கு வரல. ரெண்டு மணி நேரம் மேல ஆச்சு ஆஃபிஸ்ல இருந்து அவ கியம்பி, இன்னும் வரல."
"அஷோக். மார்டினும் நானும் அவ ஆஃபிஸ் ரூட்ல போய் பாக்கறோம். டிராபிக் ஏதாவதானு. நீ வீட்டுக்கு போ. ரெண்டு பேரும் வயசானவங்க."
"செரி."

அஷோக்கும் மார்டினும் டி.எல்.எஃப்க்கு புறப்பட்டனர். ஷங்கர் அவன் வீட்டுக்குப்  புறப்பட்டான்."நான் வேணும்னா அவ பங்கஜம் ஆத்துக்குப் போயிருக்காலானு பாக்கட்டா. வர வழி  அப்பிடியேப் போயிருக்கலாம்."
"பண்ணிப்பாரு.", சோகமாக சொன்னார் வெங்கிடு.
"ஹலோ! பங்கஜம்! எப்பிடி இருக்காய்?"
"நல்லா இருக்கேன் பாக்கியம்."
"ஒன்னும் இல்லை. தனுமதி இன்னிக்கி லேட்டாகும். பங்கஜம் அத்தை ஆத்துக்கு போறேன்னு சொன்னா. வந்தாளா?"
"இன்னும் வரலைடி. மணி பத்தரை ஆச்சு."
"தனுமதி! வாடி வா! அத்தையாத்துக்கு போறேன்னு சொன்னையே வந்துட்டாடி! நான் வெச்சிடுறேன்."

"அங்கையும் போல ஷங்கரப்பா. பயமா இருக்கு. பேப்பர்ல வேற கன்னாபின்னான்னு நியூஸா இருக்கு. பயமா இருக்கு அண்ணா."
"நாலாவது பக்கத்த சொல்றியா? தனுமதிக்கு அப்பிடிலாம் நடக்காது."
ஷங்கர் வீட்டினை அடைந்தான். அன்று சாதாரண நாட்களை விட டிராபிக் குறைவாகவே இருந்தது. தன தங்கையை பற்றி எண்ணியவாறே உள்ளே நுழைந்தான்.

"ஏதாவது தெரிஞ்சுதாடா?"
"பாத்துண்டு இருக்கேன் மா."
"என்னடா? எங்க இருக்கான்னு தெரியலையா?"
"அழாதே மா. அழாதே."
"அழாம எப்பிடி டா. அவளுக்கு எதுவும் ஆகாது. ஆகாது இல்லையாண்ணா?"

"மச்சான் அங்க என்னடா இவ்வளோ கூட்டம்?"
"தெரியல டா. விசாரிப்போம்."
அஷோக் வண்டியை நிறுத்திவிட்டு,
"என்னங்க கூட்டம்?"
"ஆக்சிடென்ட். இப்ப தான் ஆம்புலன்ஸ்ல கிளியர் பண்ணாங்க. ஸ்பாட் அவுட். பாவம் சின்னப் பொண்ணு."
"என்ன வண்டி?"
"ப்ளாக் ஸ்கூட்டி."
"என்னங்க சொல்றீங்க? என்ன கலர் டிரெஸ்?"
"ப்ளூ சுடிதார், வெள்ள  துப்பட்டா."
"தேங்க்சுங்க."
"மார்டின் ஆக்சிடெண்ட். பொண்ணு. கருப்பு ஸ்கூட்டி. பயமா இருக்கு டா. ஷங்கர் கிட்ட கலர் கன்பர்ம் பண்ணனும்."
"ஃபோன் பண்ணுடா."

அஷோக் அவனை கைபேசியில் அழைத்தான்.
"அசோக். பாத்துட்டியா?"
"தனு என்ன கலர் டிரஸ் போட்டுருந்தா."
"மஞ்சள் சுடிதார். பிரவுன் துப்பட்டா."
"தேங்க் காட்."
"ஏன் டா?"
"தெரிஞ்சிக்கிட்டா தேட ஈசியா இருக்கும்னு கேட்டேன். கிடச்சிடுவா"
"அந்த நம்பிக்கைல தான் நான் இருக்கேன்."
"மச்சி. போலிஸ் போவோமா?
"இன்னும் கொஞ்ச நேரம் பாப்போம் டா. அப்பா அம்மா போலிஸ்னா பயப்படுறாங்க,"
"மார்டின் பிரெண்ட் சிவா மூலியமா ட்ரை பண்ணுவோம் டா."
"செரி நீ பேசு."
"சரி டா. நாங்களும் வீட்டுக்கு வரோம்."
"ஹ்ம்ம்."

வண்டியில் வந்துக் கொண்டிருக்கும்போது
"சிவா. மார்டின் டா."
"சொல்லு மார்டின்."
"என் பிரண்டோட சிஸ்டர் மிஸ்ஸிங் டா. சாயிங்காலம் ஏழு மணிக்கெல்லாம் ஆபிஸ்ல இருந்து கிளம்பிட்டாங்க. இன்னும் வீட்டுக்கு வரல."
"போலிஸ் கம்ப்ளைன்ட் குடுத்தாச்சா."
"இல்லடா. பொண்ணு மேட்டர் பயப்படுறாங்க."
"போலிஸ்கிட்ட போறது பூச்சாண்டிக் கிட்ட போறமாதிரி ஆயிடுச்சுல. சேரி டிடைல்ஸ் சொல்லு."
தனுமதியின் விவரங்களை மார்டின் கூறினான்.
"நான் சொல்லி வைக்கறேன். பீமேல் டிராபிக்கிங்க் குரூப் ஒன்னு இப்போ ரொம்ப இம்சைய குடுத்துட்டு இருக்கு. எதுக்கும் தயாரா இருங்க."
"ப்ளீஸ் டா."

ஷங்கர் வீட்டினை அடைந்தனர். சிறிது நேரம் கழித்து வெங்கிடு ஃபோனிற்கு ஒரு அழைப்பு வந்தது.

"அப்பா! நான் தனுமதி."
"சொல்லும்மா. பாக்கியம் தனு."
எல்லோர் முகத்திலும் ஒரு பூரிப்பு.
"பிரெண்ட விட பல்லாவரம் வந்தேன்பா, பாவம் ஹாண்டிகப்ட். திரும்பி வரச்ச திரிசூலம் கிட்ட ஆக்சிடன்ட் ஆயிடுத்து. சின்ன அடி. ஹாஸ்பிடல்ல இருந்து தான் பேசுறேன். ஆட்டோல வந்துடறேன் பா."
"பாத்து வாம்மா."

"நான் சொன்னேன்லியா டி. என்னமோ ஏதோன்னு பயப்படாதேன்னு. பாவம் அடிப்பட்டுருக்குப்போல."
அரைமணிநேரத்தில் தனுமதி வீட்டினை அடைந்தாள்.
அவள் அம்மாவை கட்டி அணைத்தாள்.
"என்னடி இவ்வளவு ரத்தம் சட்டை எல்லாம்?"
"இல்ல அம்மா. எனக்கு அடி சின்னதுதான். இது பக்கத்துல இன்னொரு வண்டில வந்தவாளுக்கும்."
"அம்மா! அவளுக்கு அப்பவே ஒரு கண்ணாடிய வாங்கிக் கொடுன்னேன். கேட்டியா?"
"போடா ஆந்தை.", என்றாள்  சிரித்தவாறே பாக்கியம்.
"வண்டி. ஹாஸ்பிடல் வாசல்ல வெச்சிருக்கேன். ரிப்பேர் பண்ணி எடுத்துண்டு வாடா ப்ளீஸ்."
"சரி டி. பப்ளிமாஸ்."

பத்து நிமிடங்கள் கழித்து,
"மார்டின் அந்தப் பொண்ணு எந்த கலர் துப்பட்டான்னு சொன்ன?"
"சிவா டேய். சினிமா போலிசு. பிரவுன். கெடைச்சிட்டா. திரிசூலம் பக்கத்துல சின்ன ஆக்சிடெண்ட். பெரிய அடியெல்லாம் இல்ல."
"குட். சரி மச்சான். சன்டே பாக்கலாம்."

ஒன்றரை மணிநேரங்களுக்கு முன்,

"ஏய். வசமா மாட்டினியா? செமையா இருக்காடா. உரிச்சிட வேண்டியது தான். எப்படியும் ஆறுல இருந்து எட்டு வரைக்கும் தேறும்."
"என்ன விட்டுடுங்கோ?"
"அய்யோ ஐயரு. மச்சி இது வரைக்கும் எந்தப் பாப்பாத்தியையும் செஞ்சதே இல்லடா. இன்னிக்கி சாப்பிடறேன் டா இந்தத் தயிர் சாதத்த."
"வேண்டாம். வேண்டாம்."
"மச்சி வாயக் கட்டுடா. இம்சையா இருக்குது. முத்தம் குடுக்கலாம்னு வாயக் கொண்டுப்போன வேணாம் வேணாங்குது. என்ன! முத்தம் குடுக்க முடியாது. அதுவா முக்கியம்?"
 வாயைத் துணியால் மூட வந்தவனை உடைந்த பாட்டிலால் நெஞ்சினில் குத்தினாள் தனுமதி.
"எவளோ நேரம்டா உனக்கு துணியக் கட்டின்னு இருக்கியா இல்ல பாப்பாத்தியத் தடவிட்டு இருக்கியா? அடிப்பாவிக் குத்திட்டியா?"
அங்கிருந்து ஓடத் தொடங்கினாள் தனுமதி.
"ஓத்தா! ஓடுற! சாவு தாண்டி இன்னிக்கி உனக்கு." பின்தொடர்ந்தவாறு ஓடினான்.
தண்டவாளத்தைத் தாண்டி ஓடிய தனுமதியைத் துரத்தினான். அப்போது தண்டவாளத்தில் வந்த ரயில் அவனைத் தூக்கி அடித்தது.

தனுமதி அங்கிருந்த கல்குவிப்பில் வேண்டுமென்றே விழுந்தாள். வண்டியின் கண்ணாடிப் பகுதியினை உடைத்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றாள்.

"சார். போலிஸ் ஸ்டேசனா. திரிசூலம் கிரௌண்ட் கிட்டயும் தண்டவாளத்துக்கு கிட்டையும் ரெண்டு பேரு செத்துக் கிடக்குறானுங்க.", சிவாவிற்கு அழைப்பு வந்தது. அங்கு விரைந்தான்,

"சார். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் நடந்துருக்கணும். ஒடஞ்ச பாட்டிலாலக் குத்திருக்காங்க."
"பாய். இவன் டிராபிக்கிங்க் கேசு சீனு இல்ல."
"அல்லாஹ்! ஆமான் தம்பி. சாவட்டும். அப்போ தண்டவாளத்துல இருக்கறவன் ரவியா இருக்கணும். மூஞ்சு அடையாலமேத் தெரியலே,"
"அங்க என்ன துணி?"
"துப்பட்டா மாறி தெரியுதுங்க. ஒரே ரத்த கர."
"சால்வையா இருக்கும் பசீர் பாய்."

பிரவுன் கலர் துப்பட்டாவைப் பார்த்தவுடன் அவனுக்கு மார்டின் சொன்னது மனதில் வந்தது. அந்தப் பெண்ணிற்கு என்ன ஆனது என்ற பதற்றத்தில் உடனே அழைத்தான்.
"மார்டின் அந்தப் பொண்ணு எந்த கலர் துப்பட்டான்னு சொன்ன?"
"சிவா டேய். சினிமா போலிசு. பிரவுன். கெடைச்சிட்டா. திரிசூலம் பக்கத்துல சின்ன ஆக்சிடெண்ட். பெரிய அடியெல்லாம் இல்ல."
"குட். சரி மச்சான். சன்டே பாக்கலாம்."
அங்கு எப்படி இவர்கள் இறந்திருக்கக் கூடும் என எண்ணிப் பார்த்தான். நிஜத்தில் நடந்தது கண் முன்னே ஓடியது.
"பசீர் பாய் அவன் இவன குத்திட்டு ஓடிருப்பான். ஓடும்போது ரயில் மோதிருக்கும்."
"நானும் அத தான் தம்பி நெனைச்சேன்."

இரண்டு நாட்களுக்குப பிறகு, தனுமதி அலுவலகம் செல்லத் தயாரானாள். சமையல் அறை சென்று மிளகாய் பொடியை  ஒரு காகிதத்தில் மடித்து ஹேண்ட்பேகில் போட்டுக்கொண்டாள்.  குளியலறை சென்று அவள் அண்ணனின் பிளேட் ஒன்றையும் எடுத்துக் கொண்டாள்.

கிளம்பும்போது,
"தனும்மா! செல்லுல சார்ஜ் இருக்குலடி?"
"இருக்கும்மா."
"எல்லாம் எடுத்து வெச்சிண்டு இருக்காய்லியா?"
"எடுத்துண்டேன் மா."
"பத்தரமாப் போயிட்டு வாடி."
ரிப்பேர் செய்து வீடு வந்த ஸ்கூட்டரில் புறப்பட்டாள் தனுமதி.  அதே மஞ்சள் சுடிதார். விழும்பில் உத்துப்பார்த்தால் தெரியும்படி ரத்தக் கரை.