Friday, May 30, 2014

மல்லாரி

1972, திருச்செந்தூர் முருகன் கோவில் வாயில்

                 "சுவாமி புறப்பாடு டேய்! நாதஸ்வரகாரா மல்லாரி வாசிப்பா. அப்..ப்பிடி இருக்கும் பாத்துக்கோ!", சிவஞானம் தன் ஐந்து வயது மகன் சிவராமனிடம் கூறினான்.
                 ஆனால் சிவராமனின் கண்களோ பலூன் காரனையே பார்த்துகொண்டிருந்தன. "அப்பா! எனக்கு ரெட் கலர் பலூன் வாங்கித்தா. அப்பறமா ஒரு க்ரீன். அப்பறமா ஒரு ப்ளூ. வாங்கித்தரியா?", என்று கேட்டான்.
                 "நாளைக்கு வாங்கித்தரேன் டேய். அங்க சாமி வரப்போறது. மல்லாரி கேளு. டான் டட்ட டான். டான் ட டட்ட டான். அருமையா இருக்கும். கவனமா கேட்டேனா, அப்பா எல்லா கலர்லயும் ஒரு ஒரு பலூன் வாங்கி தரேன்.", என்று சிவராமனிடம் கூறினான்.
                 சிவஞானம், சிவராமன் தன் பின்கழுத்தில் இருக்கை போல் அமரும் வகையில் தலை மேல் தூக்கி கொண்டான். சண்முகர் பக்தர் படை சூழ வெளியில் வந்தார். தலைசிறந்த நாதஸ்வர கலைஞர்கள் மல்லாரி வாசிக்க துவங்கினர். மல்லாரி, நாதஸ்வரத்திற்கென்றே இருக்கும் சிறப்பான இசை. மேளத்தட்டும் நாதஸ்வர இசையும் கேட்போரை ஒரு தியான நிலையை அடைய செய்யும். சிவராமனின் இரு கைகளையும் பிடித்து கொண்டு மேளதாளத்திற்கும் நாதஸ்வர இசைக்கும் ஏற்றவாறு அசைத்தான்.
நாதஸ்வரகாரர்களை சூழ்ந்திருந்தவர்கள் கைகளில் தாளம் போட்டு ரசித்து வந்தனர். பக்தர்களின் பரவசத்தை மேலும் கூட்டியது இந்த இசை. நாதஸ்வரகாரர்களுடனே முன்னே சென்றனர் சிவஞானமும் சிவராமனும்.
                வீதி உலா முடித்து உறவினர் வீடு திரும்பினர். சிவஞானம் தன மகனிடம்,
"எப்படிடா இருந்தது சிவராமா?"
                "நல்லா இருந்தது பா." "டான் ட டட்ட டான்", என பாடியவாறே ஆடினான்.
                "அப்படித்தான்.", ஏதோ ஒரு பெருமிதத்தில் சிரித்தான் சிவஞானம்.
             
                 திருவிழா முடிந்து மெட்ராஸ் புறப்பட தயாராயினர். சிவஞானம், கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டியை சேர்ந்தவன். தனது பள்ளி காலங்களில் ஏழாந்திருநாளுக்கு காலை ஐந்து மணிக்கெல்லாம் கோவிலுக்கு சென்று விடுவான். இரவு நாதஸ்வர இசை கேட்க காலையிலேயே ஒரு வேகத்துடன் கிளம்பிய காலம். தன் மகனுக்கும் நாதஸ்வரம் ரசிக்க தெரிய வேண்டும் என்ற விருப்பம்.
             
                சிவஞானத்திற்கு மெட்ராஸில் அரசுப்பணி. தன் மகனின் ஐந்து வயதிலிருந்து திருச்செந்தூருக்கும் பூதபாண்டிக்கும் நாதஸ்வரம் கேட்க அழைத்து செல்ல வேண்டும் என நினைத்திருந்தான். முதல் திருவிழா முடிந்தாயிற்று. இவ்வாறே வருடங்கள் தொடர்ந்தன.

1974, மெட்ராஸ்

               சிவராமன், மாம்பலம் ராமகிருஷ்ணா பள்ளியில் இரண்டாம் வகுப்பு, அப்போது. மார்கழி மாதம் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரிக்கு டிக்கட் கிடைத்திருந்தது. தன் மகனையும் அழைத்து சென்றிருந்தான்.

கச்சேரியின் போது,
               "அப்பா! இவா மட்டும் உக்காந்துண்டு பாடறா, திருச்செந்தூர், பூதபாண்டில எல்லாம் நாதஸ்வர காரா நடந்துண்டு வாசிக்கறா. ஏன்?"
              "சிவராமா! கச்சேரிய கேளு! எம்.எஸ் அடானா ராகம் என்னமா பாடறா பாரு. அப்பா, திரும்பி போறச்ச உனக்கு பதில் சொல்றேன்."
              சிவராமனின் சிந்தனை எல்லாம் இந்த பாடல் காரைகுறிச்சி வாசித்திருந்தால் எவ்வாறு இருக்கும் என்றவாறே ஓடிக்கொண்டிருந்தது.
              கச்சேரி முடிந்து வீடு திரும்புகையில்,
              " அப்பா. அப்பறமா சொல்றேன்னு சொன்னேளே?"
              "நாதஸ்வரகாரா எல்லாம் சுவாமி மாதிரி. அவா, சுவாமி தெருவுல வீதி வரமாதிரியே, வீதிலே ஜோரா வந்து வாசிக்கிறா பாத்தியா. அவா வந்தப்பறம் தான் சுவாமியே வரும்."
              "அவா ஏன் நம்மள மாதிரி பூனல் போட்டுக்கல?"
              சற்றே யோசித்த சிவஞானம் ஜாதியை காரணமாய் கூற வேண்டாம் என நினைத்தான். ஆனால் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே!
              "டேய். பூனல் போட்டுண்டு நாதஸ்வரம் வாசிக்கறது கஷ்டம். அதான்.", என பதில் கூறினான்.
              "அப்போ பூனல் போட்டுண்டு வாசிக்க முடியாதா?"
              "நா வேணும்னா கத்துண்டு வாசிக்கறேன்.", சிரித்தவாறே கூறினான் சிவஞானம்.

1974,
              பூதபாண்டி திருவிழாவிற்கு குடும்பத்தோடு வந்திருந்தான் சிவஞானம்.
நாதஸ்வர கலைஞர்கள் சிவஞானம் வீட்டில் தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.
               சுவாமி வீதி உலா முடிந்து வீட்டில் அமர்ந்திருந்த நாதஸ்வர கலைஞரிடம் சிவராமன், "மாமா சூப்பரா வாசிச்சேள்."
               "சின்னபயலா இருக்க. உனக்கு என்ன மக்கா பிடிச்சது?"
               "மல்லாரி புடிச்சது. தவில் மாமாவும் அருமையா வாசிச்சாரு." தவில் காரரின் முகத்தில் புன்னகை. "அப்பறமா சரசிருகா வாசிச்சேளே அதுவும் பிடிச்சது."
               "மக்கா உன் வயசுக்கு பாட்டு பேரெல்லாம் சொல்லுத. பிராமணா வீட்டு பிள்ள பிராமணா வீட்டு பிள்ள தான். என்ன சொல்லுத தவிலு?" சரி தான் என்பது போல் தலை அசைத்தார் தவில்.
               "எனக்கு வாசிக்க சொல்லி தரேளா?", பாவமாய் கேட்டான் சிவராமன்.
               "மக்கா. இது நீங்க வாசிக்கற வாத்தியம் இல்ல. என்ன இனிமயா இருக்கு உன்னோட குரல்! பாட்டி அம்மைக்கிட்டலாம் பாட்டு கத்துக்கிடு. எதுக்கு மக்கா இந்த ஜோலி?"
               ஒன்றும் புரியாதவாறு இருந்த சிவராமன், "நாதஸ்வர காரா சுவாமி மாதிரி. சுவாமி கூடயே வீதில வந்து வாசிப்பா. அவாளுக்கு அப்பறம் தான் சுவாமியே வரும்னு அப்பா சொல்லிருக்கார்."
                பதிலில் திகைத்த நாதஸ்வர வித்வான், "நீ பெரிய ஆள்  ஆகிட்டு வா, நான் சொல்லி தரேன்." என்று சிவராமனிடம் கூறினார். வாதியகாரருக்கு முப்பத்தைந்து வயது இருக்கும்.

                 வருடங்கள் செல்ல, சிவராமனுக்கு நாதஸ்வரத்தில் ஈடுபாடு மேலும் கூடியது. நாதஸ்வரம் சுற்றியுள்ளோரிடம் மதிக்கத்தக்க வாத்தியங்களில் ஒன்றாய் இல்லை என்பதையும் அறிந்து கொண்டான்.

1981,

                 சிவஞானத்திற்கு லண்டனில் உத்தியோகம் கிடைத்தது. குடும்பத்துடன் செல்லும் அளவிற்கு சம்பளம். திருச்செந்தூர் திருவிழா முடிந்து கிளம்ப திட்டமிட்டான்.
                 கோவில் வாயிலில் சிவஞானம், "முருகா! ரொம்ப அவசியம்னா தான் இந்தியா வரணும். அப்போ திருவிழா இருக்குமோ என்னவோ? கோச்சிக்காத." என கூறினான். இதை கேட்ட சிவராமனுக்கு கண்களில் நீர் கட்ட தொடங்கியது. பூதபாண்டிக்கு வந்திருந்த நாதஸ்வர வித்வான் வந்திருப்பதை பார்த்தான் . திருவிழா முடிந்ததும் அவரிடம் சென்று,
                  "மாமா, என்ன அடையாளம் தெரியறதா?"
                  "யாரு மக்கா? புரியலையே!"
                  "பூதபாண்டி"
                  "ஓ. சிவராமனா! நல்லா வளந்துட்ட மக்கா! நல்லா இருக்கியா? நான் வாசிச்சத கேட்டியா? நல்லா இருந்துச்சா மக்கா?"
                  "மாமா. நல்லா இருந்தது. நாங்க லண்டன் போக போறோம். திரும்ப எப்ப வருவோம்னு தெரில. வருஷங்க கூட ஆகலாம்னு அப்பா சொன்னாரு. ரொம்ப அவசியம்னா தான் வரணுமாம். நாதஸ்வரம் கத்துக்க முடியுமான்னு தெரியல."
                 "ஏன் மக்கா! அதுனால என்ன? நல்ல படி. பெரிய ஆளா வா. நாதஸ்வரம்லாம் உனக்கு வேண்டாம் சிவராமா. பாரு! கஷ்டம். கல்யாண வீட்டுல, கோவில்ல நின்னுக்குட்டு. எதுக்கு மக்கா?", கலையை மறந்து அதிலிருக்கும் வாழ்வியல் சிரமங்களை பதினைந்து வயது சிறுவனுக்கு புரியும்படி கூறினார்.
                 "மாமா! நீங்க கத்துதறேன்னு சொன்னேளே. எனக்கு கத்துக்கணும் மாமா."
                 "என்ன மக்கா?"
                 "உங்க நாதஸ்வரத்த எனக்கு தரேளா?" என்று கேட்டான் சிவராமன்.
                 தனது சிரமங்களை கூறியும் அவன் நாதஸ்வரம் கேட்டது, அவனை கண் கலங்க வைத்தது. தன உதவியாளரை பார்த்து, "லேய் முருகா! அந்த நாதஸ்வரத்த எடுத்து வா லே.", என கூறினார்.
                  நாதஸ்வரத்தை கொடுத்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டவாறு, "அழிஞ்சு போயிட்டிருக்கு மக்கா நாதஸ்வரம். இப்ப எனக்கு பயம் இல்ல. இத்தன நாள் வாசிச்சிருக்கேன் மக்களே. எனக்கு இது தான் பெரும. இத வெச்சிக்கோ. எப்போ திரும்ப வரியோ என் கிட்ட வா நான் உனக்கு சொல்லி தரேன்." என கொடுத்தார்.
                   வாங்கிக்கொண்டு தங்கி இருந்த உறவினர் வீட்டிற்கு ஓடினான் சிவராமன்.

2007, 26 வருடங்கள் கழித்து
                 
                 சிவராமன், லண்டனில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை. இந்தியாவில் தங்கள் நிறுவனத்தை துவங்க நினைத்து அதுவும் சென்னையில் அலுவலகம் அமைக்க முடிவெடுத்தனர். சென்னையை சேர்ந்தவன் என்பதால் சிவராமனுக்கு பொறுப்பாளர் வேலை கொடுத்து மாற்றம் செய்தனர். இதுவரை இந்தியாவிற்கு பத்து முறை வந்திருப்பினும் திருவிழாவின் போது வர வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது சென்னைக்கே மாற்றம். அதுவும் திருவிழாவிற்கு இரண்டு வாரங்கள் முன்பு.
                  இரண்டு வாரங்கள் கழித்து சிவராமன் பூதபாண்டி அடைந்தான், சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்து நின்றான். சிவஞானமும் இருந்தார். வீதி உலா செல்ல சுவாமியும் அதற்கு முன்னர் நாதஸ்வர வித்வான்களும் புறப்பட்டனர். சிவராமனுக்கு நாதஸ்வரம் கொடுத்த பூதலிங்கம்பிள்ளை முன்வரிசையில் நின்று வாசிப்பதை கண்டான். அவனை நினைவலைகள் எங்கோ கொண்டு சென்றன. அவன் தந்தை, பின்கழுத்தில் அமர வைத்து, பலூனுக்கு கூலியாக நாதஸ்வரம் கேட்க வைத்தது அவன் நினைவில் வந்தது. அவனருகில் இருந்த தந்தையின் பின்கழுத்தை தடவி கொடுத்தான். மேளக்கட்டு கூடியபோது கண்ணீர் கொட்ட தொடங்கியது. கோவிலிலிருந்து பூதலிங்கம்பிள்ளை வெளியில் வரும் போது சிவராமன்,
                 "நல்லா வாசிச்சேள். ரொம்ப பிரமாதம்."
                 "அப்படியா சார். ரொம்ப சந்தோஷம்." சிவராமன் பிரெஞ்சு தாடி, வழுக்கை, சற்றே தொப்பை என இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை பெரியவருக்கு.

                 "நடந்துண்டே வாசிக்கறேளே கஷ்டமா இல்லையா?"
                 "அந்த சாமி மாதிரி நாங்க ஊர்வலம் வரோம். நாங்க வாசிச்சு முன்னாடி போனா தான் சாமியே வரும். இங்கயே உக்காந்துட்டா, பின்ன சாமி எப்படி வெளில வரது?"
                 "நல்லா சொன்னேள். அப்பறம் மாமா. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நீங்க கொடுத்த நாதஸ்வரம் ஆத்துல இருக்கு. எடுத்துண்டு வந்தா வாசிக்க சொல்லி தரேளா?"
                    கையில் இருந்த நாதஸ்வரத்தை கீழே வைத்துவிட்டு, "மக்கா! நீயா?", என அணைத்து கொண்டார். சிவராமன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டார்.
                   "இங்கயே வந்துட்டேன். கத்துண்டுட்டு உங்களோட சேந்து திருவிழாவுல மல்லாரி வாசிக்கறேன்."
                   "வாப்போ! வாப்போ! சொல்லும்போதே அவ்வளவு ஆனந்தம் பூதலிங்கத்திற்கு.

                   ஆறு வருடங்கள் விடுமுறைகளில் நாதஸ்வரம் கற்று கொண்டான் சிவராமன். சிறந்த வாசிப்பு. சங்கிதத்தில் ஏற்கனவே தேர்ந்தவனாய் இருந்ததாலும் வாத்தியத்தின் மீது இருந்த பிரியத்தினாலும் சிறப்பாக வாசிக்க கற்றுகொண்டான். அலுவல் காரணத்தினால் பூதபாண்டி திருச்செந்தூர் திருவிழாக்களுக்கு மட்டும் வாசிக்க முடிவு செய்தான்.

2014, திருச்செந்தூர்

                  திருவிழாவிற்கு பக்தர்கள் கூட்டம் கூடி இருந்தது. சுவாமியும் சுவாமிக்கு முன்பு நாதஸ்வர கலைஞர்களும் வந்தனர். பூதலிங்கம்பிள்ளை அருகில் அவர் கொடுத்த நாதஸ்வரத்தோடு மல்லாரி வாசிக்க தொடங்கினார் பூனூல் அணிந்த சிவராமன்.

மல்லாரி இசையை கேட்க விரும்புவோருக்கு ஒரு நிமிடம் பத்தொன்பது நொடிகளிலிருந்து,