Thursday, July 11, 2019

மகாநதி

      "பழையாத்துல இருந்து நேரா எடுத்து குழாயப் போட்டுட்டான். இனி வீட்டு பொம்பளைங்க எல்லாம் குடத்தத் தூக்கிட்டு குளம் வரைக்கும்  போக வேண்டாம்."     "ஏலேய் சாத்தான்! அப்போ நீயும் போக வேண்டாம்! உங்க வீட்டு அம்மாவ குடம் கூடத் தூக்க விட மாட்டேங்கியேலே! உனக்கும் சவுரியமாப் போச்சு", சிரித்தவாறு சொன்னார் பூதலிங்கம்.     இறச்சகுளம் பெருமாள் கோவில் தெரு, கீழத் தெரு, மேலத் தெருவென தெருவிற்கு ஒரு குழாய் போடப்பட்டது. என்றும் வற்றாத பழையாறு இறச்சகுளம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஏனைய இடங்களின் நீர்த் தேவையைப் பார்த்துக் கொள்கிறது.

இருபது வருடங்களுக்குப் பிறகு 

     "தாத்தா. உங்க  ஊரு தண்ணி ரொம்ப சுவீட்டா இருக்கு. வாட்டரே இவ்வளவு டேஸ்ட். சூப்பர்."
   "ஏலே மக்கா அரவிந்து! உங்க ஊரு இல்ல நம்ம ஊரு. மெட்ராஸ் போயிட்டா நீ இறச்சகுளம் இல்லையா? பழையாறு லே. உங்க அப்பா, நான், எங்க அப்பா எல்லாம் இந்தத் தண்ணி. மண்ணு, தண்ணியே நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்குது. தாத்தா பார்த்தியா எப்படி இருக்கேன்?"
    சாஸ்தா தெரு வழியே சென்றார்.
    "ஏலே சாத்தான்! ரெண்டு நாளா அகப்படவே இல்ல. என்ன லே வயசாயிடுச்சா?"
   "பெரிய குளத்துல இருந்து தண்ணி எடுத்துட்டு யாரு வேகமா வருவாப் பாப்போமா லே. வயசாயிடுச்சா? நம்புரான் குதிரைய ஒத்தையாளாத் தூக்கிடுவேன் லே."
   "போ லே சாத்தான்." 
   "பேரன் என்ன சொல்றான்?"
   "நம்ம ஊரு தண்ணி நல்லா இருக்காம்."
   "பழையாத்து தண்ணி மக்களே." சொல்லிக்கொண்டே சாஸ்தா நகர்ந்தார்.

மதிய உணவு முடித்துவிட்டு அரவிந்த் பூதலிங்க  தாத்தாவிடம் வந்தான்.
    "தாத்தா! பழையாறு"
    "வீராணமங்கலம் போகும் போது ஓடுதே அதான். ரிவர்."
    "ஐயோ தாத்தா அது எனக்குத் தெரியும். ரொம்ப ஆறு ஆறு னு அதையே சொல்றீங்க."
    "உங்க ஊருல பாட்டில்ல தண்ணி மக்களே. அதான் அப்படி கேக்கற. நம்ம தெருல என்ன கோயில் இருக்கு?"
    "பெருமாள் கோவில்."
    "சரி. நம்ம குளத்துக்கிட்ட நெறைய நெல் வயல் எல்லாம் இருக்கே."
    "ஆமாம்."
    "தட் பிளாங்ஸ்  டு கோவில்."
    "இது எதுக்கு சொல்றே?"
    "காரியமாத்தான். அந்த நிலம் எல்லாம் ஊருல ஒவ்வொருத்தர் பொறுப்பு. அவங்க அவங்க விவசாயம் பண்ணி பணம் எடுத்தக்கலாம். கோயிலுக்கு கொஞ்சம் நெல் கொடுத்தாப் போதும்."
   "அதுக்கு."
   "நிலத்துக்கு எப்படித் தண்ணி வருது தெரியுமா?"
   "அன்னிக்கு சொன்னியே! ஓடை."
   "பழையாறுல இருந்து பெரிய குளத்துக்கு வந்து, குளத்துல இருந்து ஓடை வழியாத் தண்ணித் திரும்ப வீராணமங்கலத்துல பழையாத்துல சேர்ந்துடும்."
  "அப்படியா?"
  "பழையாறு குடிக்கத் தண்ணி தருது, விவசாயத்துக்கு தருது அதுனால நமக்கு சோறு. மத்தியானம் சாப்பிட்டியே. நம்ம நிலத்துல வந்த அரிசி தான். வாழைப்பழம் நம்மத் தோட்டம். பழையாறும் நமக்கு பெருமாள் மாதிரி தான். அந்த தண்ணி குடிச்சு தான் பாத்தியா எல்லா வீட்டுலயும் தாத்தா, பாட்டி எல்லாம் ஸ்ட்ராங் ஆ இருக்காங்க."

  "தாத்தா கரெக்ட் தான். ஆனா நிறைய வீட்டுல தாத்தா பாட்டி மட்டும் தானே இருக்காங்க."
  "உங்க அப்பா மாதிரி எல்லாம் மெட்ராஸ், டெல்லி, அமெரிக்கா போயிட்டாங்க. ஊரெல்லாம் மெட்ராஸ் போய் அங்க தண்ணி இல்லாமப்  பண்ணியாச்சு. இங்கப் பாரு பழையாறு அவங்க எல்லாம் போயும் கோபம் இல்லாம விடாம கொடுத்துட்டு இருக்கு."
  
மறுநாள் குளத்திற்கு சென்று பூதலிங்கமும் அரவிந்தும் ஆசை தீர குளித்தனர். சிறு வயதில் குளத்தில் டைவ் அடித்த கதைகளை எல்லாம் கூறினார் பூதலிங்கம்.வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

   "வீட்டுல பெரியவங்க இருக்காங்களா?"
   "தாத்தா ஒரு அங்கிள் வந்திருக்காங்க.", உள்ளே ஓடினான் அரவிந்த்.

   "யாரு மக்கா?"
   "சார். 'அக்வா குமரி'ன்னு தண்ணி கம்பெனில இருந்து வரோம் சார்."
   "தம்பி. பாக்க நம்ம கிட்டா மாதிரி இருக்கியே."
   "அவருக்கு மகன் ரங்கசாமி சார்."
   "மாமான்னு கூப்டு மக்கா. என்ன சார் எல்லாம்? என்ன கம்பெனி அப்போ?"
   "தண்ணி கேன் மாமா."
   "தயவு செஞ்சு போயிடு தம்பி."
   "ஏன் மாமா?"
   "நம்ம ஊருல தான் இல்லாம இருந்துச்சு. இங்கையும் வந்துடுச்சே."
   "மாமா நகரகோவில்ல எல்லாம் இருக்கு மாமா."
   "முட்டாளுங்க லே."
   "ஏன் மாமா?"
   "பழையாத்துல என்ன லே குறைய கண்டானுங்க? அதையே பாட்டில்ல போட்டுப் பணம் வேற? நம்ம பழையாறு பெருமாளு லே."
   "சரி மாமா! நான் வரேன்.", அடுத்த வீட்டுக்கு சென்றான்  
  
தான் வண்டியில் கொண்டு வந்த கேன்கள் எல்லாம் அவனோடுத் திரும்பின.

   "கிட்டாவுக்கு அறிவு வேண்டாம். பணம் வருதுன்னு அடச்சி வித்துட்டா, பணம் இருந்தா தான் தண்ணியும்னு ஆயிடாதா. பெருமாளே எல்லாருக்கும் புத்திய கொடுப்பா.", என்று வருந்திக் கொண்டார். 

 ஆற்றங்கரை, குளங்கள், வயல் வெளிகள் என அடுத்த ஐந்து நாட்களை அரவிந்த் தன் தாத்தாவுடன் கழித்தான். நீரும் மண்ணும் அவன் பால் காதல் கொண்டன. மண்ணின் மைந்தனின் வாசம் தெரியாதா மண்ணுக்கும் நீருக்கும்?

ஊருக்கு கிளம்பும் பொழுது இன்னும் ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்தான்.
  
   "யப்போ! இது மணிகண்டன் ஆபிஸ் கொண்டு போற தண்ணி பாட்டில் இல்லையாப்போ?"
  " ஆமாம் தாத்தா. அப்பாவுக்கு ஒரு பாட்டில். லாஸ்ட் டைம் கொஞ்சூண்டு தண்ணி இருந்தது என் பாட்டில்ல. குடிச்சிட்டு எங்க ஊரு தண்ணி, எங்க ஊரு தண்ணின்னு சொல்லிட்டே இருந்தாரு. இப்போ முழு பாட்டில்."

அரவிந்தன் தன் தாயுடன் ஊர் திரும்பினான். சில தினங்களில் 'அக்வா குமரி'யின் கேன்கள் இறச்சகுளத்திலும் சில வீடுகளுள் நுழைந்தன. சில மாதங்களில் ஓரிரு விளை நிலங்கள் விலைபோக பிளாட்டுகளாக மாறியன.
சில இல்லங்களின் தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் குடும்பத்தினர் வருகையை நாள்காட்டியில் குறித்து எதிர்நோக்கி இருந்தனர். வாண்டுகளின் கண்ணாமூச்சி, சிறார்களின் படிப்பு, கிரிக்கெட், இளைஞர்களின் வேலை, பல பங்குனி உத்திரங்கள் என நாட்கள் சென்று கொண்டு தான் இருக்கிறது. பழையாறும் வற்றாது ஓடிக்கொண்டிருக்கிறாள். 

No comments:

Post a Comment