Monday, August 20, 2018

ஒன்பதும் அறுபத்தி இரண்டும்


"சித்தப்பா! கொல்கத்தாக்கு ட்ரான்ஸ்பர் ஆயிருக்கு. டெம்பரரி. ஆறு மாசம் தான். வெள்ளிக்கிழமை கிளம்புறேன்."கூறினான் சரவணன்.
"நித்யாவ கூட்டிட்டுப் போறியா?"
"இல்ல சித்தப்பா. நித்யாவும் குட்டியும் இங்க அம்மா கூட இருப்பாங்க. நவராத்திரிக்கு அங்க நாலு நாள் லீவு. அப்போ வருவேன். உடனே தீபாவளி. அப்படியே ஓடிடும்."
"நல்லதுப்பா."
"நான் கிளம்பறேன் சித்தப்பா."
"இருப்பா. திலகம்! திலகம்!!! என் சட்டப் பாக்கெட்ல பர்ஸ் இருக்கும். கொஞ்சம் எடுத்துட்டு வா."
"ஏன் சித்தப்பா பணம் எல்லாம்?"
"பெரியவங்க தந்தா வாங்கிக்கணும்."

ஐந்நூறு ரூபாய் சரவணன் கையில் சேர்ந்தது.

கொல்கத்தா

இதற்கு முன்னர் பணியில் சேரும் பொழுது வந்தது. மீண்டும் இப்பொழுது பன்னிரெண்டு வருடங்கள் கழித்து. டிராம்களை முந்திக் கொண்டு டோலிகஞ்ஜ் நோக்கி பயணப்பட்டது உபெர். சரவணன் தங்குவதற்கான வீடு முன்னரே தயாராய் பார்க்கப் பட்டிருந்தது. விமானத்திலிருந்து எடுத்து வந்திருந்த செய்தித்தாளின் பக்கங்கள் புறட்டப்பட்டன.

வீட்டில் இறங்கி சற்று தூங்கிவிட்டு மாலை தேநீருக்கு பால் வாங்க கிளம்பினான் சரவணன். படியில் இறங்கும் பொழுது ஒரு சிறுமி மேலே வந்தாள்.

புன்னகைத்துவிட்டு
"ஹை! வாட்ஸ் யுவர் நேம்?"
"பல்லவி நாயர்."
"ஓ! மலையாளி ஆனோ?"
"எஸ். நிங்களும் மலையாளி ஆனோ?"
"இல்ல. தமிழ்."
"அங்கிளிடே பேரு?"
"சரவணன்."
"பை அங்கிள்"வீட்டை நோக்கி கிளம்பினாள்.

சரவணனுக்கு ஹிந்தி தெரிந்தமையால் கொல்கத்தாவில் சமாளிக்க முடிந்தது. ரோட்டோர முடித்திருத்தகங்கள்இழுவண்டியில் மனிதர்களை இழுத்துச் செல்லும் தொழிலாளர்கள்மறுமுனையில் அடுக்குமாடி மகிழுந்து நிறுத்தம் - இவை அனைத்தையும் கண்டான். ஏற்றமும் தாழ்வும் தான் இந்தியா என எண்ணிக்கொண்டான். வீட்டின் நினைவு - மனைவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பாய் சென்றது.

தேநீர் அருந்திவிட்டி தொலைக்காட்சி பார்க்கும் பொழுது வீட்டின் அழைப்பு மணி அடித்தது. கதவினை திறந்தான் சரவணன். சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி.

"பேட்டா. ஐ லிவ் இன் தி ஆப்போஸிட் ஹவுஸ். ஸ்ரீதேவி."
"கம் இன்."
"தமிழானோ?"
"ஆமாம்."
"நான் மலையாளி. பக்ஷே தமிழ் நல்லா தெரியும். கமலஹாசன் படம்இளையராஜா பாட்டு ரொம்ப பிடிக்கும். தமிழ் தான் பாப்பேன் டிவில.தமிழ் அப்டியே கத்துக்கிட்டேன்."
"பல்லவியோட பாட்டியா?"
"ஆமாம். பல்லவி மீட் பண்ணியாச்சா?"
"ஈவினிங் பார்த்தேன். ஸ்கூல் முடிஞ்சு டயர்டா வந்தாங்க."
சிரித்துவிட்டு, "நைட் என்ன சாப்பாடு?"
"வெளில போணும் ஆண்ட்டி. ஹோட்டல்."
"இங்க பக்கத்துல பெங்காலி ஹோட்டல் தான். சவுத்தும் கிடையாதுநார்த்தும் கிடையாது. கடுகு எண்ணெய்ல செய்வாங்க.நம்ம வீட்டுல சாப்பிடு. ஆப்பமும் பால்கறியும். பிடிக்குமா?"
தவிர்க்கும் விதமாய், "பரவா இல்ல ஆண்ட்டி."
"அதெல்லாம் இல்ல. நம்ம வீட்டுல சாப்பிடு."என்று சொல்லிக்கொண்டே எழுந்து சென்றாள். ஸ்ரீதேவி அழைத்த விதம்! யாராலும் மறுக்க முடியாது. சரவணன் வருவதாய் கூறினான்.

பல நாட்கள் பழகியவர் போல பழகுகிறார்களே! என்று ஆச்சரியப்பட்டான். எதிர்வீட்டு சாப்பாடு தகவலை மனைவிக்கு வாட்சப்பில் தெரியப் படுத்தி ஆயிற்று.

எட்டு மணி. மீண்டும் அழைப்பு மணி. இம்முறை பல்லவி.
"அங்கிள் சாப்பிட வாங்க."
"பல்லவிக்கு தமிழ் தெரியுமா?"
"பாட்டி எப்பவும் தமிழ் தான் பாப்பாங்க டிவில. அதுனால தெரியும்,"
"கியூட்டாப் பேசுறியே! எந்த கிளாஸ் படிக்கிற?"
"ஃபோர்த்."
"ம்ம்ம்ம்.."

பல்லவியின் வீட்டிற்கு சென்றான். கே டிவியில் அஞ்சான் ஓடிக் கொண்டிருந்தது. ஸ்ரீதேவி சமையல் அறையிலிருந்து வந்து
"மோனே! சாய குடிக்குமோ?" என்று கேட்டார்
"இல்ல ஆண்ட்டி. நான் இப்ப தான் குடிச்சேன்."
உள்ளே சென்று தன் கணவரை அழைத்தார். சரவணனை அறிமுகம் செய்து வைத்தார்.
"அங்கிளுக்கு தமிழ் பேச வராது. ஆனா புரியும்."என்று சிரித்தவாறே சொன்னார்.

சரவணனின் கண்கள் பல்லவியின் தாய் தந்தையரைத் தேடின. ஒரு படுக்கை அறை வீட்டில் ஐந்து பேராஹாலிலும் கட்டில் இல்லையே என்று மனவோட்டம். ஒரு பெரிய சைசில் பல்லவியின் புகைப்படம். தொலைக்காட்சியின் மேலே பாட்டியுடன் ஒரு புகைப்படம்.

நன்றி: www.alamy.com


உணவு முடிந்து

"ஆண்ட்டி பல்லவியோட பேரெண்ட்ஸ் காணுமே!"
"புவனேஸ்வர்ல இருக்காங்க."பதில் அளிக்கும்போதே முகம் மாறியது.
"ஓ! என்ன பண்றாங்க?"
"ட்ராவல் ஏஜென்சி."

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அம்பாஸடர் மகிழுந்தை வெளிநாட்டு நிறுவனம் வாங்கிய பின்னர் அதனை மறுபடியும் உற்பத்திக்கு கொண்டுவர ஆய்வு செய்யும் வேலை சரவணனுக்கு. மறுநாள் தன் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பினான். ரசம் செய்து கொஞ்சம் பல்லவி வீட்டிற்கு கொடுக்க எடுத்து சென்றான். வாங்கி வைத்து விட்டு தான் செய்த அவியலை எடுத்து கொடுத்தார் ஸ்ரீதேவி. கார்த்திக் நடித்த சின்ன ஜமீன் திரைப்படம் ஓடி கொண்டிருந்தது.

"மோனே! எதுக்கு சமைச்சதுஇங்க சாப்பிடலாமே."
"இல்ல ஆண்ட்டி."
"நீ எனக்கு மோனப்போல. இங்கையே சாப்பிடு."என்றார்.
"பரவாயில்லை ஆண்ட்டி. எதுக்கு கஷ்டம் உங்களுக்கு?"
"கொஞ்ச நாள்ல ஊருக்கு போக போகுது."
"இல்ல ஆண்ட்டி. ஆறு மாசம்."
"ஆறு மாசம் தானே மோனே."
தமிழர்கள் மட்டுமல்ல மலையாளிகளும் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். சேரநாடு தானே என எண்ணிக்கொண்டான்.
சிறிது நேரத்தில் சரவணன் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.
"வாங்க ஆண்ட்டி."
சுவற்றில் மாட்டியிருந்த படத்தை பார்த்துவிட்டு, "உங்க ஆள்காரா?"
"ஆமாம்."
"பேரு?"
"அம்மா லதாவைஃப் நித்யா. பாப்பா பேரு கண்ணம்மா."
"பாப்பா பெரு பழசா இருக்கே?"
"பாரதியார் பிடிக்கும். அதான்."
"சரி. சரி."
"சொல்லுங்க ஆண்ட்டி."
சிரித்த முகம் வாட ஆரம்பித்தது
"மோனே. பல்லவி முன்னாடி அவ பேரெண்ட்ஸ் பத்தி கேக்கண்டா."
என்ன ரியாக்ட் செய்வது என்று தெரியாது அமைதியாய் இருந்தான். ஸ்ரீதேவியின் கண்ணில் கண்ணீர் வரத் தொடங்கியது. சரவணன் இறந்திருப்பார்களோ என்று யோசித்தான்.

"மோனே! உன்ன என் மகன் மாதிரி நினைச்சி சொல்றேன். என் பொண்ண நான் சரியா வளர்க்கலையோன்னு எனக்கே தோன வெச்சிட்டாங்க."
ஆறுதல் தேடி வந்திருக்கிறார். எப்பொழுதும் சிரித்தபடி இருக்கும் முகத்திற்குள் ஏதோ ஒரு கடுஞ்சோக கதை இருப்பதை உணர்ந்தான்.

"என் பொண்ணு. பி.ஏ டூரிஸம் படிச்சது. ஒரு பெங்காலிய லவ் பண்ணி படிக்கும் போதே கல்யாணம் பண்ணாங்க. நாங்க வீட்டுலையே சேர்க்கல. அவளும் அவனும் டூரிஸம் ஏஜென்ஸி நடத்தினாங்க.. இவப் பெரியவளா அவன் பெரியவனான்னு எப்பவும் சண்டை. பல்லவி ரெண்டு மாச குழந்தை. விட்டுட்டு டைவர்ஸ் பண்ணிட்டாங்க. இங்க வந்து இருந்தா அதுக்கு அப்புறம். பொண்ணாச்சே சேர்த்துக்கிட்டேன். ஒரு ஒரிஸா காரனுக்கு பழசு எல்லாம் சொல்லி கல்யாணம் பண்ணோம். குழந்தை இங்க இருக்கட்டும்னு சொல்லிட்டு போய்ட்டா. எட்டு வருஷம் ஆச்சு. சொல்லப் போன பல்லவி இங்க வந்தது இருந்தே நான் தான்பா அவளுக்கு அம்மா. அங்கிள் தான் அப்பா. முதுகே வலிக்கும் இருந்தாலும் பல்லவிக்காக எல்லா வேலையும் சிரிச்சிக்கிட்டே செய்வாரு. அங்கிள் பாவம். ஆனா ஒன்னு. என் குழந்தைய மாதிரி பல்லவி வரமாட்டா. கட்டுப்பாடும் சுதந்திரமும் ஒரு சேர வளர்ப்பேன். தப்பா நினைக்காத மோனே. பல்லவிக்கு விஷயம் தெரியும். இருந்தாலும் யாராவது கேட்டா அன்னிக்கு எல்லாம் அவ முகம் பார்க்கவே நல்லா இருக்காது. இங்க அவ அம்மா அப்பப்போ வந்துட்டுப் போகும். இருந்தாலும் நாங்க தான் அவளுக்கு எல்லாம். அதான்."

"பல்லவி நல்ல வருவா அம்மா. வேற எதுவும் சொல்ல என்னால முடியல."

அன்று இரவெல்லாம் சரவணனுக்கு தூக்கம் வரவே இல்லை. இந்த தாயுள்ளம் கொண்டவளுக்கு மகளையே விட்டு சென்ற ஒரு மகள் . எது காதல் என்றே தெரியாத தலைமுறையினர் என்ற கோபம். நான் தான் முக்கியம் என்று எண்ணி பெற்ற மகளை விட்டுச்செல்லும் அளவுக்கு இருக்கிறார்கள். ஸ்ரீதேவி அம்மா இருக்கிறார் என்ற உறுதியில் தனக்கென்று மற்றொரு வாழ்க்கையைத் தேடிச் சென்றிருப்பாளோ?  ஸ்ரீதேவியின் மகள் ஆயிற்றே ஈரம் இல்லாமலா இருக்கும்? இவள் புதுமைப் பெண்ணாஇல்லை தாயுமான பாட்டியாய் இருக்கிறாளே ஸ்ரீதேவி அம்மா. அவர் புதுமைப் பெண்ணாஎன்று கேள்விகள். இன்னும் சில வருடங்களில் பல்லவி தெளிந்தவளாய் வளர்ந்த பின்னர் வயது இடைவெளி பிரச்சனைகளைத் தாருமே. ஸ்ரீதேவி அம்மா -புதுமைப் பெண் - பார்த்துக் கொள்வார் என்று தனக்குத் தானே பதில் அளித்துக் கொண்டான்.

நாட்கள் சென்றன. பல்லவியுடன் நல்ல நட்பாகிக் கொண்டான். மாலை ஸ்ரீதேவி அம்மாவுடன் திரைப்படம்சனி ஞாயிறுகளில் ஒன்றாய் ஊர் சுற்றுதல் என்று சென்றது. நவராத்திரி விடுமுறைக்கு சென்னை செல்ல தந்து தாய்மனைவிகுழந்தைக்கு ஸ்ரீதேவி அம்மா வாங்கி தந்த ஆடைகளோடு ஆயத்தமானான்.

சித்தப்பா தந்த ஐந்நூறு ரூபாய் இவர்கள் ஒரு மாதம் முன்னே காளி கோவில் சென்றபோது வரிசையை மீறி செல்ல ஒரு ஹிட்லர் மீசைக்காரனிடம் காணிக்கையாய் சென்றது.

No comments:

Post a Comment