Tuesday, July 5, 2016

என்னென்ன புண்ணியம் செய்தேனோ?


என்னென்ன புண்ணியம் செய்தேனோ?
இந்த வாழ்க்கை வாழத்தான்
என்னென்ன புண்ணியம் செய்தேனோ?


தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்

பச்சை நிறச்சட்டையாய் மலைக்கு செடிகள்
பாவம் மலைக்கு குளிரோ?
போர்வையாய் வாரும் மேகம்
கலப்படம் இல்லாத நீலவானம்
இந்த அழகினைக் காணத்தான்
கண்கள் இரண்டை வைத்தானோ?

           தென்பாறை, பூதபாண்டி அருகில் கன்னியாகுமரி மாவட்டம்

கண்ணுக்கு முன்னே வண்ண ஓவியம்!
பச்சை நிற மரங்கள்
நீலமும் பச்சையுமாய் அழகிய ஏரி
சிறகுகள் நீரில் படும்படி
பறந்து திரியும் வெண்ணிற கொக்கு
இந்த அழகினைக் காணத்தான்
கண்கள் இரண்டை வைத்தானோ?

தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்
காற்றின் ஒலி ஸ்வரமாக
நீர் பாறையில் மோதும் ஒலி தாளமாக
காற்றோடு இசை பாடும் பறவைகள் 
ஏழு ஸ்வரங்களில் இயற்கை கச்சேரி!
இதனைக் கேட்டிடத்தான் 
காதுகள் இரண்டை வைத்தானோ?

தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்

தேகம் தீண்டும் தென்றல் 
கண் வழியே மனம் ரசிக்கும் அழகு 
காது வழியே இதயம் கேட்கும் இயற்கை ஒலி 
நுரையீரல் குதூகலிக்க காற்று 
இவையாவையும் கண்டு கேட்டு உணர்ந்து 
பாறையில் அமர்ந்தவாறு நான் 

தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்  

இவையாவும் அனுபவிக்கவே 
உடலும் அதற்கு உயிரும் வைத்தானோ?
இந்த வாழ்க்கை வாழத்தானே
என்னென்ன புண்ணியம் செய்தேனோ?

Monday, June 13, 2016

இறச்சகுளத்தில் கெட் - டுகெதர்

                இறச்சகுளத்தில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்  ஆயிரம் கதைகள்
இருக்கின்றின. இந்த வீட்டின் கதைகளும் சுவாரஸ்யமானதே. வருடத்தில் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களில் ஒரு பத்து நாட்கள் அதீத மகிழ்ச்சியில் சூழ்ந்திருக்கும் இந்த வீடு. ஊரின் அழகினாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்பதினால் சுற்றி இயற்கை அழகு சூழ்ந்த இடங்கள் இருப்பதினாலும் வருடம்  ஒரு பதினைந்து பேராவது கூடுவர் - கெட் டுகெதர் - ஃபேமிலி கேதேரிங்.

                 சில வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டிற்கு பதினைந்து பேர் இயல்பாகவே வாழ்ந்தும் வந்தனர். இப்பொழுது பெருமாள் கோவில் காலை மாலை பூஜைக்கு பதினைந்து பேரை கூட காண முடியவில்லை.  கால மற்றும் அறிவியல் முன்னேற்றம்.

                 இந்த வருடம் உறவினர் கூடுதலுக்கான நாள் நெருங்கி வரத் தொடங்கியது. இந்த வீட்டு அம்மா. அறுபது வயது. சுறுசுறுப்பினையும் செயல்களையும் பார்த்தால் அப்படி சொல்லிட முடியாது - இளைஞர்களுக்கு இணையான வேகம்.  பாவம் இந்த அம்மாவிற்கு தனிமையைப் பரிசாக கொடுத்திருக்கிறது வாழ்க்கை. மகனிற்கு அயல்நாட்டில் வேலை. கணவர் பணி ஓய்வு பெற்று இறச்சகுளம் வந்து ஒரு வருடத்திலேயே இறந்து விட்டார். மூன்று வருடங்களாய் தனிமை வாழ்க்கை தான். வருடம் இருமுறை விடுமுறையில் மகன் வருவான். அதை ஒட்டி உறவினர்களும் வருவர். அந்நாட்களே இந்த அம்மாளுக்கு கொண்டாட்டம் - பொங்கல், தீபாவளி எல்லாம்.
                  தை அம்மாவாசை - அவரது திதி. இந்த வருடம் ஜனவரி இருபத்தி ஐந்து அன்று. புதன் கிழமை. இருபதாம் தேதியே மகன் வருவதால் மகனுக்கு பிடித்ததை செய்து தர வேண்டும் என்று இப்பொழுதே தயாரானாள். இன்னும் நான்கு நாட்கள் தான். பின்னர் பொங்கல் அதன் பின் ஐந்தே நாட்கள் மகன் வந்துவிடுவான். சென்ற வருடம் அவன் வரும்போது நட்ட செவ்வாழை மரம் நன்று வளர்ந்து இருந்தது. தன் கைபேசியில் அதனை படம் பிடித்து வாட்சப்பில் மகனுக்கு அனுப்பினாள். என்ன செய்வது என்று புரியாதவளாய் டிவி ரிமோட்டை அழுத்தினாள். அம்மாளின் பெயர் ராஜேஸ்வரி.

                 அம்மாளின் மகன் கிருஷ்ணன். நாட்கள் நெருங்க ஊர் செல்லத் தயாரானான்.பின்னர் வருவோர்க்கும் ஒவ்வொரு பொருளாக வாங்கினான். ஆண்கள் அனைவருக்கும் ஒன்றாய் இருப்பதுபோல் சட்டையும் வாங்கினான். மக்களிடம் சொல்லவும் இல்லை. சர்ப்ரைசாம். ஒவ்வொரு வருடமும் இருமுறை ஊருக்கு செல்வது வழக்கம். ஆனால் தை மாதம் தான் களை கட்டும். வாட்சப்பில் உறவினர்கள் வருவதை உறுதி செய்து கொண்டான். ஒவ்வொருவரும் சீரியாசனவர்களும் கேளிக்கை விரும்பிகளுமாய் கலவை செய்யப்பட்டவர்கள். மற்ற நேரங்களில் சீரியசானவர்களாய் அதிகம் தென்பட்டாலும், கூடும்பொழுது கேளிக்கை விரும்பிகளாகவே இருப்பர்.

                  ஒருவருக்கு அப்படி சீரியசான நிலைமை தான். பல வேலைகளில் இருந்து விட்டு டெஹல்கா என்ற நிறுவனத்தில் வேலை. அடித்தது ராஜயோகம் என்று பார்த்தால் அடுத்த நாளே அதன் முதலாளியின் கசமுசா காட்சிகள் வெளியே வர, புத்தகத்தின் விற்பனை குறைந்து அவல நிலை. டெஹல்காவில் வேலை என்றால் இவரே அந்த கசமுசா செய்தது போல் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு பணிவிடுப்பு இவர் மனதிற்கு தேவையாகவே இருந்தது. டெஹல்காவும் அவரது மனைவியும் வர ஆயத்தமாயினர். டெஹல்காவின் பெயர் ராமன். அவர் மனைவியின் பெயர் கவிதா. கிருஷ்ணனின் பெரியம்மா மகள்.

                  மற்றொருவர் இவர்களுடன் நன்கு பேசினாலும் இது போன்று மூன்று நான்கு நாட்களுக்கு வந்து சேர்ந்து இருந்ததில்லை. இவர் பெயர் ஹரன். ஹரன் மாப்பிள்ளை வருகிறார் என்ற சந்தோசமும் ராஜேஸ்வரி அம்மாளுக்கு இருந்தது.

                    சென்னையிலிருந்து ராஜேஸ்வரியின் அக்காள் குடும்பத்தினர், தங்கை, மற்றொரு அக்காளின் மகள் குடும்பத்தினர் என மொத்தம் பதினைந்து பேர் சேர்வதை எண்ணி ஒரே சந்தோசம் ராஜேஸ்வரிக்கு. எல்லோரும் சென்றவுடன் பல நாட்களுக்கு இந்த நினைவுகளே ஓடும் அவள் மனதில்.

                    முதலில் மகன் வந்தாயிற்று. அவள் முகம் மலர்ந்தது போல் அந்த வீடே மலர்ந்திருந்ததாய் தெரிந்தது. மகன் வந்தால் கூடுதல் சுறுசுறுப்பாகிவிடுவாள் ராஜேஸ்வரி. எல்லா வீட்டிற்கும் இவள் செய்த காய்கறிகள் போகும். மகன் அல்லவா வந்தது. தனிமைக்கு விடுமுறை கொடுத்து சுகமாய் மகனோடு செலவிடுவாள். என்ன தான் வாட்சப்பும் ஸ்கைப்பும் இருந்தாலும் கூட அமரசெய்து தான் செய்த உணவினை பரிமாறுவதைப் போல் வருமா? மகன் தான் செய்ததை நன்கு சாப்பிடுகிறானா என்று கவனிப்பாள். இன்னும் ஐந்து நாட்களில் மற்றவர்கள் வந்து விடுவார்களே. அப்பொழுது இதுபோல் உபசரிக்க முடியுமோ முடியாதோ? எதுவெல்லாமோ அவனிடம் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றும். ஆனால் பேச்செடுக்காமலே சென்று விடும். தனிமை பற்றி. அதை சொன்னால் கலங்கி விடுவானே. அவர் கனவில் வருவதை பற்றி. அதையெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டு. ஊரார் பேசும் புரளி பற்றி. திட்டிவிடுவானோ? திருமணம் பற்றி. ஓரிரு வருடம் போகட்டும் என்று சொல்லிவிடுவான் என அவளுக்குள்ளேயே பேசி நிறுத்திக் கொள்வாள். இருப்பினும் பேசியே பொழுதைக் கழிக்க தலைப்புகளா இல்லை. நாட்கள் அவ்வாறே சென்று திதியும் முடிந்தது. தனது பிள்ளைகள் மற்றும் பெயரன் பெயர்த்தி வருகிறார்கள் என்ற அந்த கூடுதல் சந்தோசம் அவள் பார்வையிலேயே தென்பட்டது. இன்னும் நான்கு நாட்களுக்குத் தான் என்று கூடவே மனம் சொல்லும்.

                      வாசலில் அழகிய கோலம் இட்டிருந்தாள்.
           
                      உறவினர்கள் அனைவரும் வந்திறங்கி ஆண்கள் ஆற்றில் குளிப்பது என்று தீர்மானமானது. செல்கையில் ராமன் தனது டெஹல்கா விஷயங்களைப் பற்றி நகைச்சுவையாக சொன்னார். ஹரன் ஊரின் அழகினை தனது கேமராவில் ஏற்றினார். விஜயன் தனது மருத்துவ கல்லூரி அனுபவத்தை தன் தந்தை சுரேஷிடம் பகிர்ந்து வந்தான். அடுத்து மூன்று நாட்களுக்கு கடல், அருவி, குளம், ஆறு, கோவில், சினிமா  என்று எங்கு செல்லலாம் எனத் திட்டமிட ஆரம்பித்தான் கிருஷ்ணன்.

                    "அஸ் யூசுவல் கன்னியாகுமரி, சுசீந்திரம் ஒரு நாள். நாளைக்கு போலாம். சனிக்கிழமை நல்லா இருக்கும். சண்டே மார்னிங் திற்பரப்பு ஃபால்ஸ் மட்டும் போயிட்டு வந்துடலாம். இவினிங் கிளம்பணும். இன்னிக்கி சங்கரன் கோவில் போலாம். 4 மணிக்கு வேன் வர சொல்றேன். காலையில லக்ஷ்மி அக்காக்கு  தெரிசனங்கோப்பு வைத்தியர்ட காமிக்கலாம்.", என்றான் கிருஷ்ணன்.
                     "சூப்பர் டா. ஆட்டம் பாட்டம்னு ஜமாய்ச்சிடலாம்.", என்றார் சுரேஷ்.

                     தான் வாங்கித்தந்த துணிகளை அனைவருக்கும் கொடுத்தான் கிருஷ்ணன். அப்படி ஒரு மகிழ்ச்சி ராஜேஸ்வரிக்கு. இதையெல்லாம் காண தன் கணவனில்லையே என்ற வருத்தம். காட்டாமல் இருந்தாள். வண்டியில் அனைவரும் ஆடி பாடி மகிழ்வதை கண்டு மகிழ்ந்தாள். தானும் பாடினாள். அனைவரும் வீடு திரும்பினர்.
                 
                    தன் அம்மாள் அறுபது வயதை அடைந்ததை காரணமாய் கொண்டு முன்பே உறவினர்களை வைத்து ஒரு காணொளி தயார் செய்திருந்தான் கிருஷ்ணன். அனைவர் முன்னரும் அதனைப் போட்டு காட்டினான். நெகிழ்ச்சியில் வாயடைத்தது ராஜேஸ்வரிக்கு.
     
                    அடுத்த நாள் கன்னியாகுமரியிலும் மகிழ்ந்தாள். மாங்காயை பார்த்தவுடன் ஆசை. தனது அக்காள் மகனிடம் கூறி வாங்கி சாப்பிட்டாள். படகு சவாரி முடிந்து கோவில் தரிசனம் முடிந்து சுசீந்திரம் தரிசனமும் முடிந்து வீடு அடைந்தனர். பாடல்களின் சத்தம் தெருவிற்கே கேட்டது. நாளையுடன் அனைவரும் சென்று விடுவர் என்பது அவள் மனதினில் அடித்தது.

                  "இது மாதிரி எல்லா வருஷமும் சேரணும் சித்தி. நான் மிஸ் பண்ணிட்டேன் போன வருஷம் எல்லாம்", என்று ஹரன் சொல்ல
                 "ஆமாம் பா", என்றாள் ராஜேஸ்வரி.
                 "சித்தி நிஜமா சித்தி. எவளோ வருத்தம் தெரியுமா வரதுக்கு முன்னாடி. மூணு நாள் இங்க வந்த தான் கொஞ்சமாவது மாறும்னு நினைச்சேன். இப்போ தான் ஃப்ரீ யா இருக்கு. ஏதோ கிருஷ்ணன் எங்கள கூப்டறான்.",  என்றார் ஹரன்.
                "அதான் அப்டி ஆட்டம் போட்டேன்களா வேன்ல?", என்று ராஜேஸ்வரியின் அக்கா விஜி கேட்க இடமே சிரிப்பில் மூழ்கியது.
             

                  ஏனோ அடுத்த நாள் ராஜேஸ்வரி திற்பரப்பு செல்லவில்லை. நாளை முதல் தனிமை வாசம் தான் என்று தெரிந்தபின்பு எதற்காக இன்றைய குதூகலம். வற்புறுத்தியும் சமைப்பதாக சொல்லி நின்று விட்டாள். அவளது அக்காளும் நின்று விட்டாள். அக்காள் அல்லவா? புரிந்து கொண்டாள்.

                 மதியம் அனைவரும் திரும்ப வந்தனர். வருத்தத்தை முகத்தில்
காட்டாது பரிமாறினாள்.
                       
                 மாலை சென்னை செல்பவர்கள், பெங்களூர் செல்பவர்கள் என்று ஒவ்வொருவராக கிளம்ப, கிருஷ்ணனும் தான் அழைத்திருந்த டாக்ஸியில் திருவனந்தபுரம் விமான நிலையம் புறப்பட்டான். அவள் வாசலில் இருந்து அனுப்பிவிட்டு, ஜன்னல் வழியே ஒரு ஏக்கப் பார்வை பார்த்தாள். அந்த வீடும் மக்கள் பின்னர் எப்போ வருவர் என்ற ஏக்கப் பார்வை பார்ப்பது போல் இருந்தது.
             
                 உள்ளே சென்று தன் கணவனின் லேமினேஷன் ஃபோடோவைப் பார்த்து, "இனி நீங்களும் நானும் தான் கிருஷ்ணன் ஜூன்ல வரவரைக்கும்.", என்று  சொல்லிவிட்டு சமயலறைக்கு சென்றாள்.

             

Monday, March 7, 2016

போதை

குடியால் குடியிழக்கும் மக்காள்
நேர்முயன்று ஓரநடைப் போவோர்
விஷமோ இங்கமிர்தம்?
இல்லாத இன்பம்
மாயத்திலே மாயம்
சுயைமறந்து வேற்றுலகம்
போதைவேண்டி நாளும்

சுயைமறந்து ஈரல்வெந்து
எதற்கிந்த பொய் இன்பம்?
தன்னை மறத்தலா போதை?
அசிங்கப் படுவதா போதை?
கிண்ண மதுவா போதை?
இது சுயை மறத்தலன்று
சுயை இறப்பு

பலசுயையிழப்பில் உயிரிழப்பு
சுயை மறுத்தலா போதை?


சுயை உணர்தலே போதை!
மெய்சிலிர்த்தல் போதை!
வெற்றி போதை!

அருவிக் குளியல்
உடலுக்கு போதை!

இயற்கை அழகு
மலையூடே மேகம்
உயிர்ந்தெழும் கடலலை
குழந்தையின் புன்சிரிப்பு
தோகை விரித்த மயில்
நடைபயண செஞ்சூரியன்
கண்களுக்கு போதை!

கொதிக்கும் மிளகுரசம்
மனோரஞ்சித வாசம்
கோடையில் மண்வாசனை
மூக்கிற்கு போதை!

இன்னிசை போதை
வீணையில் ரீங்காரம்
நாதஸ்வரத்தில் நாட்டைக்குறிஞ்சி
குழலில் நல்லிசை
நற்குரல் வாய்ப்பாட்டு
அன்னையின் தாலாட்டு
பறவைகள் பேசுமொழி
மழலைப் பாட்டு
கடலலை
ஆற்று நீரோட்டம்
சஹானா ராகம்
செவிக்கு போதை!

பசிநேரத்து உணவு
வயிற்றுக்கு போதை!

ஆண் பெண்ணுக்கும
பெண் ஆணுக்கும் போதை!
காதல் போதை!
காதலோடு காமம் போதை!
உறவோடும் நட்போடும்
சுற்றுலா போதை!
நம்பிக்கை போதை!
பெண்ணின் வெட்கம் போதை!
விடைகண்ட கணக்கு போதை!
செந்தமிழ் போதை!
சுயை உணர்தல் போதை!!!

Sunday, January 10, 2016

வெள்ளையில் சிவப்பு

          "இந்த வருஷம் பூதபாண்டி எட்டாந்திருநாளுக்கு யாருலே நாதஸ்வரம் வாசிக்கா?", பெட்டிக்கடை கணபதியிடம் கேட்டார் தாணு.
          "தெரியிலே தாணு. போன வருஷம் ராசுக்குட்டி கச்சேரி பாத்துக்கிடு. அவா தான் இந்த வருஷமும் வாசிப்பான்னு நெனைக்கேன்."

தாழக்குடி திருப்பத்தில் ஒரு லாரி வீட்டு சாமான்களுடன் திரும்பியது.

           "நம்ம கிராமத்துக்கா லே?"
           "ஆமாம் கணபதி. நம்ம கிட்டு சாமி வீடு பூட்டியே கெடக்கல்ல. தாமசத்துக்கு விடப்  போறேன்னு சொல்லி இருந்தான் பாத்துக்கோ. அதான் வந்திருக்கா. வடிவீஸ்வரத்துல இருந்து. இங்க வாடகை கம்மி தானே."
           "ஓஹோ."
           "ஒரு சீப்பு மட்டிப்பழம் குடேன். வீட்டுல பாக்கியம் கேட்டாப் பாத்துக்கோ."

தாணு தன் வீட்டை அடைந்தார். லாரியிலிருந்து புது குடித்தனம் வந்தவர் வீட்டிற்கு பொருட்கள் ஏறிக் கொண்டிருந்தன. தாணு வங்கியிலிருந்து ஓய்வுப் பெற்று தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.ஒரு மகன். சென்னையில் வேலை. வயது 28. இன்னும் திருமணம் ஆகவில்லை.

மாலை கோவிலுக்கு செல்லுமுன் புதுக்குடித்தின வீட்டிற்குச் சென்றார் தாணு. கதவைத் தட்டியவுடன்  வெளியே வந்தார் மணிகண்டன்.

         "நமஸ்காரம். நான் தாணு. மூணாவது ஆத்துல இருக்கேன்."
         "உள்ள வாங்கோ."

வீட்டுப் பொருட்களை எல்லாம் நோட்டம் விட்டார் தாணு.
       
          "உங்க பெயர் சொல்லலையே."
          "நான் மணிகண்டன். சமையலுக்குப் போயிண்டு இருக்கேன். முன்னாடி ரப்பர் எஸ்டேட் அக்கௌன்டன்ட் வேல பாத்துண்டு இருந்தேன்."
          "சந்தோசம். நான் இந்தியன் பேங்க் ரிடயர்ட். இப்போ பொறந்து வளந்த ஊர்ல சுத்திச் சுத்தி வந்துண்டு இருக்கேன்."
           "காபி சாப்பிடறேளா? வசந்தா! மாமாவுக்கு ஒரு காபி குடேன்."

வசந்தா காபி  எடுத்து வந்தாள்.          "என்னம்மாப் பண்ற?"
          "ஆதர்ஷ் ஸ்கூல்ல மாத்ஸ் டீச்சர் மாமா."
          "வெரி குட்."
          "மணிகண்டன். வசந்தாவுக்கு இருவத்தஞ்சு இருவத்தாறு வயசு இருக்கும் போல இருக்கே. வரன் பாக்கலையா?"
           "மாமா. அவ விடோ. கல்யாணமாகி மூணே மாசம் ஆக்சிடெண்ட்ல தவறிட்டார். ஆச்சு பிப்ரவரி வந்தா ரெண்டு வருஷம் ஆயிடும்"
          சற்று நேரம் அமைதியான தாணு, வசந்தாவைப் பார்த்து
           "சாரி மா. தப்பா நினைச்சிக்காத."
           "பரவாயில்ல மாமா.", என்று சொல்லிவிட்டு தாணு குடித்த டம்ளரை எடுத்துச் சென்றாள் வசந்தா.
           "தப்பா நெனச்சிக்காத மணிகண்டா!"
           "இருக்கட்டும் மாமா."
           "உங்காத்து மாமி எங்க?"
           "நாகர்கோவில் போயிருக்கா. நாகராஜா கோவில் வர."
           "நான் கிளம்புறேன். எதுன்னாலும் வந்து கேளுங்கோ. நானும் என் ஆத்துக்காரியும் தான் இருக்கோம். ஒரு பையன். சென்னைல சாப்ட்வேர்ல இருக்கான்."

           பாக்கியம், தாணுவின் மனைவி. கர்நாடக இசை வாய்ப்பாட்டில் வல்லுநர். தற்காலங்களில் கச்சேரிப் பாடுவதில்லை. கோவிலில் தினமும் ஒரு பாடல் பாடுவார். வேண்டி வருவோருக்கு கற்றுக் கொடுப்பார். மாலை கோவிலில் பாடிவிட்டுத் திரும்பும் போது வீணையிசைக் கேட்டு வசந்தா வீட்டு வாசலில் நின்றார்
            "டீவிலே வீணைக் கச்சேரி போயிண்டிருக்கு. போடுங்கோ."
            "எந்த டீவி? எதுலையும் இல்லையே?"
            "புதுசா வந்துருக்காளே அவா ஆத்துல ஓடிண்டு இருந்தது."
            " பக்கவாத்தியம்லாம் கேட்டதா?"
            "இல்லையே."
            "பாக்கியம்! அவாத்துக்குப் போறச்ச வீணையப் பார்த்தேன்டீ. அவாத்துப் பொண்ணு வசந்தா வாசிப்பாளாம்."
            " நானும் அவளப் பார்த்தேன். நம்ம ஆனந்துக்கு பொருத்தமா இருப்பா. கேக்கலாமா?"
            "எனக்கும் பார்த்த உடனே தோனித்து. பாவம் அந்தப் பொண்ணு விடோ."
            "எப்படி?"
            "கல்யாணமாகி மூணே மாசத்துல ஆக்ஸிடெண்ட்ல தவறிட்டான். ரெண்டு வருஷம் ஆயிடுத்தாம்."
            "ஐயோ பாவம்."

நாகர்கோவிலிலிருந்து தாணு ஸ்கூட்டரில் இறச்சகுளம் புறப்படத் தயாரானார். அருகில் தாணுப் பிள்ளை (ஃபங்க்) நடந்து வருவதைப் பார்த்தார். 
           "லேய் ஃபங்க்கு. இறச்சகுளம் தான் போறேன் ஏறிக்க."
           "உன்ன நம்பி ஏறலாமா?"
           "(சிரித்தவாறு) உன் டோப்பா பறந்து போற அளவுக்கு வேகமா ஓட்ட மாட்டேன். ஏறு."
           "சரி லே."
           "என்ன லே சைக்கிள் கணக்கா ஒன் சைட்ல உட்காருத."
           "உடல் உபாதை லே. நீ ஓட்டு."
           "என்ன இப்போ ரெண்டு வாரமா டுயூசன்ல ஆளே இல்லையாமே? எல்லாம் வசந்தா வந்தவுடனே அங்க போயிட்டாளாம். போட்டி ஜாஸ்தி ஆயிடுச்சா?"
           "மக்கா! கோபப் படுத்தாத டேய். படிக்கிறவனுக்கும் படிப்பிக்கிறவனுக்கும் போட்டியே இருக்கக் கூடாது பாத்துக்கிடு.முப்பத்தஞ்சு வருஷ சர்வீஸு. இது வரைக்கும் ஒருத்தனும் கணக்குல தோத்தது கிடையாது. உன் பிள்ளை ஆனந்தையும் சேர்த்து நானூறு பேருக்கு மேலே பத்து கணக்குல நூத்துக்கு நூறு. நான் போட்டிலாம் பாத்ததே இல்ல டேய். பையமார் பார்ரத்தாலும் படிப்பு பரிட்சையோடப் போயிடும்."
            "கோவிக்காத."
            "பாவம் அந்தப் பொண்ணு. விதவை. குடும்பத்தையும் பாத்துக்குது. அதான் கிராமத்துலே டியூசன் நிப்பாட்டிட்டேன். சரி. அது இருக்கட்டும். உங்க இதுல மறுமணம்லாம் ஒத்துக்கமாட்டடாங்க இல்லையா?"
            "ஆமாம் டா. எல்லாம் பழைய பஞ்சாங்கங்க."
            "திருப்பதிசாரத்துல ஒரு டைவர்ஸி. குவைத்துல வேல. பார்ப்போமா?"
            "வியாழன் நல்ல நாள். நீயும் நானும் போய் பேசலாம். சரி பட்டா, வசந்தா அப்பா கிட்ட நான் பேசறேன்"
            "டேய் போற வழிலே பூதத்தான் கோவில் போவோம்."

மாலை கோவிலில் பாடிவிட்டு பாக்கியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் வசந்தாவின் வீணையிசை அவரை ஈர்த்தது. பாடலைக் கேட்டவாறே வீட்டினுள் நுழைந்தார். முழுப் பாடலையும் கேட்டு ரசித்தார். பாடல் முடிந்தது.
            "ரொம்ப நல்லா வாசிக்கறமா. நான் இங்க மூணாவது ஆத்துல இருக்கேன்"
பாக்கியத்தின் காலில் விழுந்து வணங்கினாள் வசந்தா. 
            "நாராயணி, மாமிக்கு ஒரு காஃபி போடு."
            "மங்களகைசிகி ராகம். பாப்புலர் ராகம் கிடையாது மா இது. ஆர்டிஸ்ட்லாம் பாடிக் கூட நான் கேட்டதில்ல. இந்த வீணைக்கு சரஸவதி வீணைன்னு ஒரு பேர் இருக்குமா. அது சத்தியம். சரஸவதி கடாஷம் உனக்கு இருக்கு."
            "மாமி, என் பேரு மணிகண்டன். இவ என் பொண்ணு. பேரு.."
            "தெரியும். ஆத்துல சொல்லிருக்கார்.", என்று சொல்லிவிட்டு, "சீதம்ம மாயம்மா" என்ற பாடலின் பல்லவியைப் பாடினார். "என்ன ராகம் மா?"
            "வசந்தா." என புன்சிரிப்புடன் சொன்னாள் வசந்தா.
            "தெய்வீகமா இருந்தது மாமி. மாமா நீங்க பாடுவேள்னு சொல்லலையே." எனக் கேட்டார் மணிகண்டன்.
            "மறந்துருப்பார்."
            "மாமிப் பேரு."
            "பாக்கியம்"
            "பாக்கியம் மாமி எங்காத்துக்கு வந்தது எங்களுக்கு பாக்கியம்."
            "நன்னாப் பேசறேள்." 
            "மாமி, தெரிசனங்கோப்பு பாக்கியமா?", ஆர்வமாக கேட்டாள் வசந்தா.
            "ஆமாம் மா. இப்போ இறச்சகுளம் பாக்கியம். பெருமாள் கோவிலோட சரி. கச்சேரிக்கெல்லாம் உடம்பு ஒத்துக்கமாட்டேங்கறது."
            "கமலா டீச்சர் அடிக்கடி சொல்லிண்டே இருப்பா."
            "கமலத்தோட சிஷ்யையா?"
            "ஆமாம் மாமி."
            "அதான் மங்களகைசிகிலாம் வாசிக்கற. குருவையும் மிஞ்சிட்ட வாசிப்புலே. வசந்தா, நான் தினமும் கோவில்ல ஆறு மணிக்கு பாட்டுப் பாடுவேன். பத்து நிமிஷம் தான். நீயும் வா மா, வீணை வாசிக்க."
            "உங்களுக்கு வாசிக்க யார் தான் மறுப்பா மாமி. ஆனா நான் கோவில் போறது இல்ல."
            "தெரியும் மா. ஆத்துக்காவது வா."
            "வீக்கெண்ட்ஸ்ல வரேன் மாமி."
            "சரி. நான் வரேன் மா"

சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார் தாணு.
            "என்ன பாக்கியம், ரெண்டு மூணு பாட்டு சேர்த்து பாடிட்டியா? லேட் ஆயிடுத்து. ரெண்டாவது விளம்பர இடைவேளை விட்டுட்டான்டி."
            "வசந்தா ஆத்துக்குப் போயிருந்தேன். நல்லப் பொண்ணு. வீணை அருமையா வாசிக்கறா. என் ஃபிரெண்ட் கமலத்தோட சிஷ்யை. சமத்துப் பொண்ணு."
            "அவளுக்கு செகண்ட் மேரேஜ் பண்ணா என்னடி?" 
            "நானும் அத..."
            "மேலத்தெரு தாணு திருப்பதிசாரத்துல ஒரு டைவர்ஸி இருக்கான்னு சொன்னான். அவாளும் வரன் பார்க்கராளாம். வியாழக்கிழமைப் போறோம்."
            "இவாத்துல ஒத்துப்பாளா?"
            "பையன் நல்லவனா இருந்தா, இங்க நடக்கவேண்டியதெல்லாம் என் பொறுப்பு."
            "பேசியே சரி பண்ணிடுவேள்."
            "ஆமாம்"
            "அவ ஆனந்...தமா இருக்கணும்."

தாணு ஃபங்குடன் திருப்பதிசாரம் புறப்பட்டார்.
           "வீடு அருமையா இருக்கே."
           "ஸகூட்டரு, குவைத் பணம் லே."
           "காலிங் பெல் அடிக்கட்டுமா?"
           "என்னலே கேள்வி? பொறவு எப்படி உள்ளப் போவ?"
           கதவ தட்டியும் போலாம் என்று கூறியவாரே காலிங் பெல்லை அழுத்தினார்.
           "நமஸ்காரம். என் பேர் தாணு. வெங்கடேஷுக்கு டீச்சர்."
           "உள்ள வாங்கோ."
           "நீங்க?"
           "என் பேரும் தாணு தான். தாணுக்கு ஃபிரெண்ட்."
           "சிரிப்பா பேசறேளே."
           "உங்களுக்கு நோய் விட்டுப் போணும்லியா."
           "சரி தான்"
           "மணி ஐயர் உங்காத்துப் பையனுக்கு வரன் பார்க்கறதா சொன்னார்."
           "எல்லாத்தையும் சொன்னாரா?"
           "எல்லாத்தையும் சொன்னார். சரியான தங்கம் மாதிரி ஒரு வரன் கொண்டு வந்துருக்கேன்."
           "சந்தோஷம். அவனும் அவன் அப்பாவும் வந்துடுவா. நான் காஃபி போட்டு எடுத்தண்டு வரேன்."
           "சரி மாமி."
           "டேய் ஃபங்க்கு மாமி ஓகேடா. நல்ல டைப்"
           "மாமா கொஞ்சம் ஒரு மாதிரி."
           "ஓ.."
    
வெங்கடேஷும் அவரது தந்தையும் உள்ளே நுழைந்தனர்.
             
           "வாங்க. வாங்க. வாங்க. வெங்கடேஷா! தாணு சார் வந்துருக்கார் பாரு."
           "வணக்கம். இவர் என் ஃபிரெண்ட் தாணு ஐயர். இறச்சகுளம் தான்."
           "நமஸ்காரம். என் பேர் மகாதேவன் மகாதேவைய்யர்."
           "சந்தோஷம் மாமா."
           "காஃபி சாப்டேளா?"
           "ஆச்சு மாமா."
           "என்ன விஷயம்?"
           "சார், வெங்கடேஷுக்கு பொண்ணுப் பாக்கறதா மணி சொன்னான். தாணு ஐயருக்கு நெருங்கியவங்க வீட்டுல ஒரு வரன் இருக்கு."
           "ஓ! பொண்ணு யாரு?"
           "தாணு! நீங்க சொல்லுங்க."
           "நல்ல பொண்ணு சார். பேரு வசந்தா. ஆதர்ஷ் ஸ்கூல்ல மேத்ஸ் டீச்சர்."
           "வெரி குட்"
           "வீணை அருமையா வாசிப்பா. கமலத்தோட சிஷ்யை."
           "வடிவீஸ்வரம் கமலமா? பேஷ். பொண்ணோட அப்பா என்ன பண்றார்?"
           "பாலமோர் ரப்பர் எஸ்டேட்ல அக்கௌண்டண்டா இருந்தார். இப்போ சமையல் வைதீகம்னு போயிண்டு இருக்கார்."
            "சமையலா?"
            "அதுனால என்ன மாமா? பொண்ணு சரஸ்வதி கடாஷம். அப்படி இருப்பா."
            "ஓஹோ மேல சொல்லுங்கோ."
            "வெங்கடேஷ் மாதிரியே வசந்தாவும் மேரிட்"
            "என்ன சொல்றேள்?"
            "விடோ. பாவம் மாமா. ஆத்துக்காரன் மூணு மாசத்துல போயிட்டான்."
            "வேண்டாம் மாமா."
            "மாமா! வெங்கடேஷும் கல்யாணமவன் தானே. நல்ல பொண்ணு மாமா."
            "உங்களப் பாத்ததுல இருந்து ஒரு மரியாத இருக்கு. கெடுத்துக்காதேள்"
            "சரி மாமா. மரியாதையோட நாங்க கிளம்பறோம். ஷேமமா இருங்கோ."
            
            "ஃபங்க்கு, ஒரு நிமிஷம். வெங்கடேஷ்! நீ உன் முதல் பொண்டாட்டிய தொட்டதே இல்லலையா?"
            "ஸ்கூட்டரு, நீ வா. அவாளுக்கு ரெண்டு வயசுல ஒரு குழந்த இருக்கு. அம்மாவோட இருக்கான்"
            "தப்பித்தது குழந்தை. நான் வரேன்பா வெங்கடேஷ். வெரி நைஸ் மேன். ஆல் தி பெஸ்ட்."

வண்டியில் திரும்ப வருகையில்
           "ஃபங்க்கு. நல்ல ஆளப்பிடிச்ச நீ."
           "வெங்கடேஷ் அவன் அப்பாவத்தான் கட்டிக்கணும், ஸ்கூட்டரு"
           "நல்லா சொன்ன. மாமிக் கிட்ட அவா ஃபோன் நம்பர் வாங்கிருக்கலாம் டா."
           "ஏன்?"
           "மகாதேவனோட இருக்கா. ரத்த கொதிப்பு அது இதுன்னு இருக்கும். ஃபோன் பண்ணி சரி பண்லான்னு தான். அஞ்சாறு ஜோக் சொன்னா சிரிப்பாளே."

வீடு திரும்பினார்.
           "என்ன ஆச்சு அண்ணா?"
           "வசந்தாவுக்கு வேற நல்ல மாப்பிள்ளக் கிடைப்பான் பாக்கியம். இவா வேணாம்"

நாட்கள் சென்றன. வசந்தா ஞாயிறுகளில் வீட்டிற்கு வந்து வீணை வாசித்து வந்தாள்.
         
          "பாக்கியம். இன்னிக்கு ராசி பலன்ல உனக்கு மகிழ்ச்சி, எனக்கு சந்தோஷம்."
          "ரெண்டும் ஒன்னு தானே,"
          "அவன் மாத்தி மாத்தி ரொட்டேஷன்ல போடுவான்."
          "பெரியார் பேரன் மாதிரிப் பேசுவேள். என்ன ராசி பலன் எல்லாம்?"
          "சொல்லறேன் இங்க வா."
          "என்ன விஷயம்?"
          "கோச்சிக்கூடாது. கோச்சிக்கமாட்டேன்னு நினைக்கறேன்."
          "சொல்லுங்கோ."
          "ஆனந்துக்கு டிசம்பர் வந்தா இருபத்தி ஒன்பது வயசாறது. அவனுக்கு அதுக்குள்ள கல்யாணம் பண்ணிடணும்."
         "பரவாயில்லையே பொறுப்பு தென்படறது."
         "ஒரு தெரிஞ்ச வரன் இருக்கு."
         "யாரு?"
         "நல்ல பொண்ணு. பேரு வசந்தா. சங்கீத்த்துல உன்ன மாதிரியே. வாய்ப்பாட்டு இல்ல. வீணை வாசிப்பா. வாய்ப்பாட்டும் நீ பின்ன சொல்லிக் கொடுக்கலாம். நல்ல குரலும் இருக்கு. மேத்ஸ் டீச்சர் வேற. கெட்டிக்காரி. என்ன சொல்ற."
        "நானும் நினைச்சிண்டே இருந்தேன்."
        "எனக்குத் தெரியும். திருப்பதிசாரம் போகும்போது, வசந்தா ஆனந்தமா இருக்கட்டடும்னு சொல்றதுக்கு ஆனந்த் அம்னு சொன்னியே அப்பவேப் பிடிச்சிட்டேன். "
        "எல்லாரும் ஏத்துப்பாளா?"
        "பையனுக்கு அப்பா, அம்மா நம்ப ஏத்துண்டாச்சு. ஆனந்த், வசந்தா, வசந்தாவோட அப்பா, அம்மா ஏத்துண்டா போதும். நான் பாத்துக்கறேன். ஆனந்த் பங்குனி உத்தரத்துக்கு வரானே, பேசிடறேன்"
        "பெருமாள் இருக்கார்."
        
பங்குனி உத்தரத்தை ஒட்டி வீடு வந்தடைந்தான் ஆனந்த். மதிய உணவிற்குப் பின் மூவரும் சோஃபாவில் அமர்ந்து கொண்டணர்.
        "ஆனந்த். என்னடா? ஸ்டாக்ஸெல்லாம் நல்லா ஏறிண்டு போறது இல்லையா?"
        "ஆமாம் அப்பா."
        "நான் சொல்லல பாக்கியம். அவனுக்கு இப்ப நல்ல நேரம். ஆனந்த் இட் இஸ் தி பெர்ஃபெக்ட் டைம் ஃபார் யுவர் மேரேஜ்."
        "போட்டுமே பா."
        "இல்லடா. நேரம் ஆக ஆக, பொண்ணு கிடைக்காது. பிக் அண்ட் சூஸ் பண்ண முடியாது. சூஸ் தி பெஸ்ட் ஏன்ஸர் முடியாது. ஃபில் இன் தி பிளாங்க்ஸ் தான்"
         "ஒரு முடிவோட தான் இருக்கிங்க. உங்க இஷ்டம்."
         "(எப்படா கேப்பான்னு காத்துண்டு இருந்துருக்கான்) குட் டா ஆனந்த்"
         "ரொம்ப அவசரமாத் தேடி ஸ்ட்ரெஸ்லாம் வேணாம்."
         "(உடனே பாக்க சொல்றான்.) கை வசம் ஒரு பொண்ணு இருக்கா. ஸ்ட்ரெஸ்லாம் இல்ல டா."
         "ஓஹோ!"
         "பொண்ணுப் பேர் வசந்தா. மேத்ஸ் டீச்சர். வீணை பிரமாதமா வாசிக்கறா. ரெண்டு மாசமா எல்லா ஞாயிறும் இங்க வரா வாசிக்க. கிட்டு மாமா ஆத்துல தான் இருக்கா."
         "கார்த்தால பார்த்தேன். ஆப்போஸிட்ல கிராஸ் பண்ணிப் போனா."
         "(பாத்துட்டான் செவன்ட்டி ஃபைவ் பெர்சன்ட் ஓகே.) ஒரு சின்ன பிரச்சனப் பாத்துக்கோ. உங்கம்மா என் கிட்ட சொல்லும்போது நான் ஏத்துக்கவே இல்ல. ஸீ வாஸ் மேரிட் ஃபார் த்ரீ மந்த்ஸ். ரெண்டு வருஷம் முன்னாடி ஆக்ஸிடெண்ட்ல தவறிட்டான். நான் ஒத்துக்கல ஃபர்ஸ்ட். அப்பறம் ஐ வாஸ் கன்வின்ஸ்ட் பை அந்த பொண்ணோட பிஹேவியர். என்ன சொல்ற."
        "அப்பா! நான் அந்தப் பொண்ணப் பார்த்தேன். அம்மா சர்ட்டிஃபை பண்றாங்க, நீங்களும். நான் அந்தப் பொண்ணோடப் பேசறேன். அவளுக்கும்  சரின்னா நான் பண்ணணக்கறேன் பா."
        "தேங்க்ஸ் டா. உடனேப் பேச வேண்டாம். விசுக்கப்பறம் பேச சொல்லி ஜோசியர் சொல்லிருக்கார்."
        "ஓ கே. நான் விசுக்கும் வரேன்"
        "சரி."
ஆனந்த் உள்ளே சென்றவுடன்
        "அண்ணா! ரெஸிஸ்ட் பண்ணாம ஒத்துண்டுட்டான்."
        "நீ எப்பவும் சொல்லுவியே, பெருமாள் செயல்."
        "கிண்டலா?"
        "விசன்னு சொல்லி மூணு வாரம் டைம் வாங்கிட்டேன். வசந்தம் வர."
        "நாரதரே அவதாரம் எடுத்து வந்த மாதிரி இருக்கு உங்களப் பார்க்க."
        "அடிப்பாவி. நான் முன்னாள் திக டி."

இரண்டு நாட்கள் கழித்து 
        "மணிகண்டா! மணிகண்டா! "
        "அவரில்லையே மாமா. சமையலுக்குப் போயிருக்கார். உள்ள வாங்கோ."
        "(தெரியுமே) நாராயணி. உன் காஃபி அருமை மா. காஃபி போட்டுத் தரயா?"
        "கண்டிப்பா மாமா."
காஃபி கொண்டு வந்தாள் நாராயணி.
        "நாராயணி. தேங்கஸ் மா. உன் பொண்ணு நல்லா வீணை வாசிக்கிறா. நீயும் வாசிப்பியா?"
        "இல்ல மாமா."
        "அப்போ என்ன உன் ஸ்பெஷல்?"
        "சமையலும் கோலமும் தான் மாமா."
        "மார்கழி மாசத்துல அமர்க்களப் படுத்தினியே மா. கோலம் எல்லாம் அமர்க்களம். பாக்கியம் போடணுமேன்னு போடுவா. பாட்டுக்கோலம் தான் அவளுக்கு."
        "மாமி தான் ஃபேமஸ் ஆச்சே மாமா."
                "ஏம்மா உன் கிட்ட கேக்கணும்னு நினைச்சேன் தப்பா எடுத்துக்காத. வசந்தாவுக்கு திரும்ப கல்யாணம் பண்ணா என்ன?"
        "எப்படி மாமா?"
        "விஷயத்த சொல்லியேக் கேக்கலாம் மா.உங்களுக்கு சரின்னா அமையும் மா."
        "அவருக்கும எனக்கும் ஆச தான். சுத்தி இருக்கறவா..."
        "அடப் போம்மா. எல்லாம் யோக்கியங்கப் பாரு. இதுல என்னம்மாத் தப்பு. நீ ஒன்னுப் பண்ணு. மணியன் வந்தவுடனே அவனையும் வசந்தாளையும் கூட்டிண்டு வா எங்காத்துக்கு. எனக்குத் தெரிஞ்ச பையன் இருக்கான். பேசலாம்."
         "சரி மாமா."
            
தன் வீட்டினுள் நுழைந்தான் தாணு.
        "பாக்கியம் பாக்கியம். கல்யாணம் முடிஞ்ச மாதிரி தான். நூறு சதம். தூங்கிண்டு இருக்காளா? தூங்கட்டும்."
        
நாராயணி சொன்னவாறு மணிகண்டனையும் வசந்தாவையும் அழைத்து வந்தாள்.
          
         "வாங்கோ. வாங்கோ."
         "மணிகண்டா உட்காரு டா. நீங்களும் உட்காருங்கோ. பாக்கியம் நீ கேசரி எடுத்துண்டு வந்துட்டு சேந்துக்கோ. கேசரி பிடிக்குமா வசந்தா?"
         "பிடிக்கும் மாமா."
         "குட். அம்மா சொன்னாளா மா?
         "நீங்க வரசொன்னதா சொன்னா மாமா."
         "சரியாப் போச்சுப் போ. ஓய் மணிகண்டா உன் கிட்ட என்ன சொன்னா?"
         "நீங்க சொன்னத சொல்லியிருக்கா."
         "வசந்தா. நாராயணி கெட்டிக்காரி. நீ வேணான்னு சொல்லுவியோன்னு, விஷயத்த சொல்லாமக் கூட்டிண்டு வந்துருக்கா. நான் அவாள வெச்சிண்டே கேக்கறேன். என் பையனப் பாத்துருக்கியா? பங்குனி உத்தரத்துக்கு வந்தானே. "
         "பாத்தேன் மாமா."
         "அவன உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும்னு எனக்கும் பாக்கியத்துக்கும் ஆச."
         "நான் எப்படி மாமா? வேண்டாம் மாமா."
         "இல்லம்மா நீ ஒத்துக்கணும். அப்பா அம்மா மாதிரி மாமனார் மாமியார் நானாச்சும் ஃப்ராடு. அவன் பாக்கியம் மாதிரி. ரொம்ப நல்லவன். நீ பழச நினைக்காதே. நான் பாரதியார் வழி பிராமணன். எவன் எது சொன்னாலும் நாக்கப் பிடிங்கிக்கற மாதிரி கேப்பேன். அழாதே. பாக்கியம் இவள உள்ளே அழைச்சிண்டுப் போ."

பாக்கியம் வசந்ததாவை உள்ளே அழைத்துச் சென்றாள். 

         "மாமா நீங்க ஆனந்துக்கே கேப்பேள்னு நினக்கல."
         "நாராயணி, கண்ணக் கசக்காத. மணிகண்டா நீ என்னடா சொல்ற."
         "இறச்சகுளம் வந்த நேரம். எல்லாம் பெருமாள் செயல்."
         "கிரெடிட் கோஸ் டு பெருமாள் தோ தி எஃபெர்ட்ஸ் பியிங் ஃப்ரம் மை ஸைட்"
         "என்ன மாமா?"
         "சித்திரை விசுக்கு ஆனந்த் வரான். நாங்க அன்னிக்கி சாப்பட வரமாதிரி வரோம். நிச்சயம் பண்ணிக்கலாம். வெளியாட்களுக்கு முடியிற வரைக்கும் தெரிய வேண்டாம்."
        "சரி மாமா."

வசந்தாவும் அவர்கள் பெற்றோர்களும் சென்றவுடன்
         "பாரதியார் வழியாமே. எங்க அவர் பாட்டு ஒன்னு சொல்லுங்கோ."
         "அது தெரியாதா? (பாடலாய்) துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?"
         "(சிரித்துவிட்டு) அது பாரதிதாசன் நல்லா சமாளிங்கோ."
         " நீ சிரிக்கறதுக்கு சொன்னேன்டி. நல்லதோர் வீணை செய்தேன். அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? நல்லதோர் வீணை வசந்தா. அவள புழுதில தள்ள விடமாட்டேன். வீணையடி வசந்தா ஆனந்துக்கு, மீட்டும் விரல் ஆனந்த் வசந்தாவுக்கு. புரிஞ்சதா?"
         "அது சரி."
         "நீ சித்திரை விசு வரைக்கும் தினமும் கோவில் போயிட்டு வரச்ச ஒரு எட்டுப் போயிட்டுவா."
         "வசந்தா ஆத்துக்குத் தானே. நீங்க சொல்லாட்டியும் போவேன்."

சித்திரை விசு அன்று,
        "மணிகண்டா!"
        "வாங்கோ மாமா! மாமி வாங்கோ!! ஆனந்த் வாப்பா!"
        "நாராயணி மாமி ரசம் எங்காத்து வரைக்கும் மணக்கறது."
        "மாமா! இன்னிக்கு ரசம் நான் பண்ணேன். அவ எடுபிடி."
        "நளபாகமா! வெரி குட்"
விரித்திரிந்த பாயில் அனைவரும் அமர்ந்தனர்.
        "பாயசம் எடுத்துண்டு வா மா வசந்தா."
அனைவருக்கும் வழங்கிவிட்டு தானும் அமர்ந்தாள் வசந்தா.
        "நம்ம எல்லாரும் பேசிட்டோம். வசந்தா ஆனந்த் தான் இனி பேசிட்டு சொல்லணும். அவா பின் பக்கம் போய் பேசிட்டு வரட்டும்.", என்றாள் பாக்கியம்.
        " ஆனந்த், வசந்தா. போங்கோ மா", என்றார் தாணு.

பின்புறத் தோட்டத்தில் மல்லிகைப் பூத்திருந்தது. மனோரஞ்சிதம் நறுமனம் வீசியது.
ஒரு பத்து நொடி மவுனம்.

        "வசந்தா! நான் கிளியரா சொல்லிடறேன். உன்னோட பாஸ்ட் எனக்குத் தெரியும். மூணு மாசத்துல தவறிட்டார். பரிதாபமோ, இல்ல இரக்கமோப் பட்டு நான் சம்மதிக்கல. உன்னப் பத்தி அப்பாவும் அம்மாவும் சொன்னா. நான் உன்னப் பாத்தப்பவும் பிடிச்சிருந்தது. நான் தெளிவா யோசிச்சு தான் சரின்னு சொன்னேன். அஃப் கோர்ஸ் நீயும் சரின்னு சொல்லணும். தெரியலையே பெரியவா எல்லாம் கம்பெல் பண்ணாளா இல்ல எப்படின்னு?"
        "நான் வேண்டான்னு தான் இருந்தேன். ஆனா இப்ப அப்படி இல்ல."
        "வெல். தென், இனி யார் என்ன சொன்னாலும் கவலப் படாத. ஐ வில் பி வித் யூ. எப்பவுமே."
         வசந்தாவின் முகத்தில் மல்லிகை மலர்தலைப் போல ஒரு சம்மத சிரிப்பு.
         "அப்போ நான் போய் சம்மதம்னு சொல்லலாமா?"
         "சொல்லலாமே."

இருவரும் வீட்டினுள் நுழைந்தனர்.
         "என்னடா தட்ட மாத்திடலாமா?", என்றார் தாணு.
         "ம்ம்.."
         "வெரிகுட். மணிகண்டா, வாங்கிக்கோ. பாக்கியம் நீ வசந்தாவுக்கு குங்குமம் இட்டு விடு மா. "
         "தேங்கஸ் மாமா."
         "இருக்கட்டும் டா மணிகண்டா. உடம்ப பாத்துக்கோ. அப்பறம் ஒரு கண்டிஷன். நகை அது இதுன்னு ஒரு செலவும் கூடாது. கல்யாணமும் இங்க கிராமத்து மண்டபத்துல சிம்பிளா பண்ணாப் போதும்."
   
அன்று மாலையே கோவிலில் வீணை வாசிக்க வசந்தா வந்திருந்தாள். வசந்தா ராகத்தில் "பரம்புருஷ ஜகதீஸ்வர" என்றப் பாடலை பாக்கியம் பாட அதற்கு வீணை வாசித்தாள் வசந்தா.

நாட்கள் சென்றன.
        
        "பாக்கியம், பாக்கியம்"
        "சொல்லுங்கோ அண்ணா."
        "இங்க இருக்கியா? ஃபிரண்ட் ஒருத்தனப் பார்க்க நாகர்கோவில் கிளம்பினேன். பஸ் ஸ்டாப்ல வசந்தா நிந்துண்டு இருந்தா. உருமையா என்ன நிப்பாட்டி அவ ஸ்கூல்ல டிராப் பண்ண சொன்னா. நான் போய் விட்டுட்டு வந்தேன் ஸ்கூட்டர்ல."
        "அவளோ தானே."
        "என்ன நீ இப்படி சொல்ற? உரிமையா இருக்கா. எனக்கும் சந்தோஷமா இருக்கு."
        "எனக்கும் தான். ஆனா ஒரு விஷயம் தான் எனக்கு பயமா இருக்கு."
        "என்னது?"
        "அன்னிக்கு வசந்தா அழுதப்போ உள்ள கூட்டிண்டு போக சொன்னேள் இல்லையா?"
        "ஆமாம்"
        "கூட்டிண்டுப் போனேன். ஏன்மான்னுக் கேட்டேன். அவளோட ஃபர்ஸ்ட் ஹஸ்பண்ட் பத்தின நினைப்பு அப்பப்போ வருதாம். பாவம் என்னப் பண்ண முடியும். கல்யாணம் ஆனா எல்லாம் சரியா போயிடும்னு சொன்னேன். சொல்லாமயே வெச்சிண்டு இருந்தேன். மனசுலயே வெச்சிண்டு இருக்க முடியல. அதான் சொல்லிட்டேன். அது ஒன்னு தான் ணா பயமா இருக்கு."
        "அடி போடி. காலேஜ் படிக்கும் போது ஆண்டாள்னு ஒரு பொண்ணு. லட்சணமா இருப்போ வாணிஶ்ரீ மாதிரி. அப்படி ஒரு லவ். ஒன் சைட் தான். இப்பவும் அப்பப்போ எனக்கு அவ ஞாபகம் வரும். என்ன பண்ண முடியும். இந்தப் பொண்ணு மூணு மாசம் ஒன்னா இருந்துருக்கா. எல்லாம் சரி ஆகிடும் ஆனந்த் பார்த்துப்பான்."

தன் முதல் கணவனின் நினைப்பு வசந்தாவை அவ்வப்போது வாட்டியது.

நாட்கள் சென்று. இனிதே நடந்தது ஆனந்த் வசந்தா திருமணம்.

        "வசந்தா. பாரதியார் எப்படி எழுதிருக்கார் பாரேன். வீணை அடி நீ எனக்கு. மீட்டும் விரல் நான் உனக்கு.", என்று சொல்லிக் கொண்டே வசந்தாவின் முதுகில் தன் விரலை வைத்தான் ஆனந்த்.
        வேண்டாம் என்பது போல் ஒரு சிணுங்கல்.
       "உடம்பு சரியில்லையா?"
         ஒரு அமைதி.
        "எதுலையோ டிஸ்டர்ப்டா இருக்க நீ. இட்ஸ் ஓகே. நீ ரெஸ்ட் எடு."
        "தேங்க்ஸ். என்ன புரிஞ்சிண்டதுக்கு."
        "எல்லாம் சரியாகிடும்"

ஒரு வாரம் கழித்து சென்னை வந்து சேர்ந்தனர் ஆனந்தும் வசந்தாவும்.
       "கல்யாணத்துக்கு என் கலீக்ஸ்லாம் வரல. அவங்களுக்கு ஒரு டின்னர் நெக்ஸ்ட் வீக் அரேஞ்ச் பண்ணிருக்கேன்."
       "சரி."
       "மிட் இயர். நீ ஸ்கூல் ஜாய்ன் பண்ண முடியாது. இன்டெர்நெட்ல வெப் பேஜ் கிரியேட் பண்ணித் தரேன். கிளாஸ் எடுத்து வீடியோஸ் அப்லோட் பண்ணு. உனக்கும் டச் இருக்கும். ரீச் நிறைய கிடைக்கும்."
       "சரி. ரொம்ப தேங்க்ஸ்."
       "எப்பன்னாலும் ஃபோன் பண்ணு. நான் வரேன்."
அபர்ணா, ஆனந்தின் நெருங்கிய நண்பர்.  கூட வேலை செய்பவர்.
       "அபர்ணா! ஹை."
       "வா. புது மாப்பிள்ளை. எப்படி இருக்கு மெரிட் லைஃப்."
       "ஒரு வாரம் தானே ஆயிருக்கு."
       "வசந்தா எப்படி இருக்கா?"
       "நல்லா இருக்கா. நான் போற வரைக்கும் தனியா இருக்கணும். பாவம் அவ ஃபர்ஸ்ட் ஹஸ்பண்ட் பத்தின தாட்ஸ் இன்னும் இருக்கு. ரொம்ப கஷ்டப் படுறா என் கிட்டையும் காமிச்சிக்க முடியல."
       "சரி ஆகிடும் ஆனந்த். கல்யாண ஃபோட்டோ காட்டு."
        ஆனந்த் தன் மொபைலை நோண்டி விட்டு "ஆபிஸ் குரூப் வாட்ஸாப்லப் போட்டுருக்கேன் பாரு."
        "நல்ல ஜோடி டா. சாமி போஸ்டர்ல இருப்பாங்களே. அது மாதிரி இருக்கா வசந்தா."

ஆனந்த் மதிய உணவு முடித்து வரும்போது
       "ஆனந்த்"
       "சம்பத்! எப்படி இருக்க?"
       "நல்லா இருக்கேன். ஆனந்த் உன் கூட தனியாப் பேசணுமே."
       "வா மீட்டிங் ரூம் போலாம்"

       "சொல்லு சம்பத்."
       "ஃபோட்டோ பார்த்தேன். கங்கிராட்ஸ்"
       "தேங்க்ஸ் சம்பத்."
       "பொண்ணு பேர் என்ன?"
       "வசந்தா."
       "அப்பிடியா? சாரி டா. நான் உன் கிட்ட சொல்லாமான்னுத் தெரியல. ஸீ இஸ் எ மெரிட் உமன். நாகர்கோவில்ல என் கிளோஸ் ஃபிரெண்ட் ஷங்கர்னு. ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. பாவம் போயிட்டான்."
       "வேற யாருக்காவது தெரியுமா?"
       "இல்லத் தெரியாது."
       "குட். சம்பத் எனக்கு எல்லாம் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணேன். அபர்ணாக்குத் தெரியும். நாட் அதர்ஸ். அப்படியே இருக்கட்டுமே. யாராவது நெக்ஸ்ட் வீக் ட்ரீட்ல தெரியாத் தனமா ஓப்பன் பண்ணிணாலும் கஷ்டம்."
       "பிரவுட் ஆஃப் யூ டா. ஸீ இஸ் லக்கி. சொல்ல மாட்டேன். டேய் நான் ட்ரீட்டுக்கு வரல டா. சப்போஸ் என்ன ஐடண்டிஃபை பண்ணிட்டான்னா கஷ்டம். அந்த கல்யாணத்துக்கு நான் போனேன் டா."
       "இல்ல நீ வா. நான் சமாளிக்கறேன்"

வீட்டிற்கு வந்தடைந்தான் ஆனந்த்
       
      "பழகிடுத்தா?"
      "ஹ்ம்ம். நன்னா."
      "வீணை வாசிச்ச போல இருக்கே."
      "தினமும் வாசிப்பேன். நல்லாத் தெரிஞ்ச கலையாச்சே விட்டுடக் கூடாது. மாமி பாட்டுல ஃபேமஸ். உங்களுக்கும் எதாவது டச் இருக்கணுமே. நீங்க பாடுவேளா? எதாவது இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வாசிப்பேளா?"
       "நல்லா வாசிப்பேன். பத்து பதினஞ்சு புக்ஸ் பாத்திருப்பியே. மியூசிக் கேக்கறதோட சரி."
       "பாக்கியம் மாமி இருந்தும் கத்துக்காம விட்டுட்டேள்."
       "அப்பா லைப்ரரி கூட்டிண்டு போய் பாரதியார், கல்கின்னு பழக்கப் படுத்திட்டார்."
       "நெக்ஸ்ட் வீக் ட்ரீட்னு சொன்னேளே. எத்தனப் பேரு?"
       "என் டீம் அஞ்சு பேரு. அவங்க ஃபேமிலி. மொத்தமா நம்பளையும் சேர்த்து ஒரு டசன் தல."
       "பன்னெண்டு பேருக்கு எதுக்கு ஹோட்டல்? நம்ப ஆத்துல கொடுப்போமே. நானும் ரெண்டு பாட்டு வாசிக்கறேன்."
       இரண்டு மணி நேரம் சம்பாஷனைத் தொடர்தது.

அடுத்த நாள் அலுவலகத்தில்
       "அபர்ணா. நேத்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். நல்ல புரிதல் உண்டாகிட்டிருக்கு."
       "குட்."
       "மோகனும் ரேவதியும் மௌன ராகத்துல சேருவாங்க இல்ல. அந்த ஒரு ஃபீல்."
       "நீ கலக்கு ஆனந்த்."
       "அப்பறம் ட்ரீட் வீட்டுல. ஸீ வான்ட்ஸ் டு பிளே கப்புல் ஆஃப் ஸாங்க்ஸ் ஃபார் யூ பீப்புல்."
       "குட் நான் மிதுனக் கூட்டிட்டு காலைலயே வந்துடறேன்."
       "கிரேட்"

அபர்ணா தன் கணவர் மிதுனுடன் காலையிலேயே வந்து சேர்தாள். நால்வரும் சேர்ந்து சமையலை முடித்தனர். மற்றவர்களும் ஏழு மணிக்கெல்லாம் வந்து சேர்ந்தனர்.
      "சம்பத் இன்னும் வரல", என்றாள் அபர்ணா.
      "நான் கால் பண்றேன். அவன் வந்துட்டு இருப்பான்."
      "ஹலோ சம்பத்."
      "ஹலோ ஆனந்த். ட்ரீட் எப்படி போயிட்டிருக்கு."
      "வந்துட்டு இருக்கியா?"
      "இல்லடா நான் வரல."
      "என்னது வண்டி பிராப்ளமா?"
      "டேய் ஆனந்த்"
      "(வெளியே வந்து) நீ ஏன் வராம இருக்கன்னு எனக்குத் தெரியும். வந்து சேரு."
      "உன் வைஃப் ஐடன்டிஃபை பண்ணிட்டா கஷ்டமாப் போயிடும் வேணான்டா."
      "நீ வா. வர. வந்தாத் தான் நாங்க சாப்பிட ஆரம்பிப்போம். உன் வண்டி ரிப்பேர்னு சொல்லிருக்கேன். ஆட்டோல வா. ரிட்டன் மிதுன் டிராப் பண்ணுவான். ஆன் தி வே தானே. (உள்ளே வந்து) நீ அங்க வண்டிய நிப்பாட்டிட்டு ஆட்டோல வா."

சம்பத் வீட்டில்
      "யாரு டா?"
      "ஆனந்த் டா. அவன் வீட்டுல கல்யாண ட்ரீட்டு. மறந்துட்டேன். கால் பண்ணிட்டான். நான் போயிட்டு வரேன் டா."
     "வண்டி சாவி எடுக்காம்ப் போற."
     "இல்லடா ஹட்லைட் சரியில்ல. மாமா பாத்தான்னா பிரச்சன. நான் ஆட்டோலப் போறேன்"

ஆனந்த் வீட்டில்
      "சம்பத் வண்டி ரிப்பேராம் வர வழிலே. ஆட்டோல வந்துட்டு இருக்கான். அட்லீஸ்ட் ஆஃப் அன் அவர் ஆகும்"
      "சரி. வெயிட் பண்ணுவோம் ஃபார் டின்னர். வசந்தா நீ உன் வீணை கச்சேரி ஸ்டார்ட் பண்ணு." என்றாள் அபர்ணா.

 அனைவரும் அமர்ந்து கொண்டனர். இருபது நிமிடங்களுக்கு கார்நாடக ராகம் வாசித்தாள்.
    
        "ரொம்ப அற்புதம். கேக்க அற்புதமா இருந்தது. ஆனா எங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி சினிமாப் பாட்டு வாசியேன்.", என்றாள் அபர்ணா.
        ஒரு வரி வாசித்து விட்டு, "இது என்னப் பாட்டு."
        "கண்கள் இரண்டால்"
        "இதே ராகம் தான் வாசிச்சேன். ரீதிகௌளை."
        "ஃபுல்லா வாசிம்மா ப்ளீஸ்."
        முழுவதும் வாசித்தாள்.
        " சூப்பர் மா."        "தள்ளிப் போகாதேன்னு போன வருஷம் சிம்புப் படத்துல ஒரு பாட்டு வந்துதே மிதுனுக்குப் பிடிக்கும் அந்த பாட்டு."
        "வாசிக்கறேன்" என்று வாசித்தாள்.
        "ஆனந்த். நீ ஒரு பாட்டு கேளு. அவ வாசிக்கட்டும்."
        "எந்தப் பாட்டு கேக்கலாம்? தென்றல் வந்து தீண்டும் போது."
         வசந்தா வாசிக்க ஆயத்தமானாள்.
         "இரும்மா. உடனே ஸ்டார்ட் பண்ணாதே. நான் ஒரு ஹைப் கொடுக்கறேன். மிதுன் வீடியோ எடு. ரெடியா? இயர் கம்ஸ் தி ஸாங்க் தென்றல் வந்து தீண்டும்போது ஃப்ரம் தி வீணா ஆஃப் லவ்லி லேடி வசந்தா ஃபார் ஹெர் ஸ்வீட் ஹஸ்பண்ட் ஆனந்த்."
         வசந்தா பாதிப் பாடல் வாசித்தபோது சம்பத் உள்ளே நுழைந்தான். அவனை முன்னேயே பார்த்தது போல் நினைவு வந்தது அவளுக்கு. புதிதாய் பார்த்தவர் போல காட்டிக் கொண்டான்.சம்பத். 
         அனைவரும் சாப்பிட்டுக் கிளம்பினர். சம்பத் ஷங்கரின் நண்பர் என்பது வசந்தா நினைவுக்கு வந்தது. ஆனந்திடம் அவன் சொன்னால் ஆனந்த் வருத்தப்படுவார் என அவளே நினைத்துக் கொண்டாள். பிறர் என்ன நினைப்பர் என்ற எண்ணமே அவளை வாட்டியது. ஆனந்திடமும் சொல்ல இயலவில்லை. 

ஆறு மாதங்கள் நண்பர்களாகவே வாழ்ந்தனர். 

இறச்சகுளத்திற்கு சுமங்கலி பிரார்த்தனைக்குச் சென்றாள் வசந்தா.
        "வாம்மா வசந்தா. பரவாயில்லையே. தனியா வந்துட்டயே. இந்த பாக்கியத்துக்கு நாகர்கோவில் மார்கெட் போகவும் நான் துணைக்குப் போகணும்."
        "வா வசந்தா. என்ன எதாச்சு சொல்லணும் இவருக்கு."
 பூஜைக்கு கோவிலுக்கு கிளம்பினர்.
        "வா பாக்கியம். வாம்மா வசந்தா.", என்று அழைத்தார் ஜானகி.
        "வரோம்"
        "பாக்கியம்! வசந்தா உட்காரனுமா? "
        "ஏன் டி. ஆனந்த் உயிரோட தானே இருக்கான்."
        "அதுக்கு சொல்லல."
        "நாங்க கிளம்பறோம். நீ நல்லா நடத்து டி அம்மா."

திட்டியவாறே வீட்டிற்கு சென்றாள்.
       "அறிவில்லாதவா. நீ இங்க உட்காரும்மா. நான் பண்றேன் சுமங்கலி பூஜ. நீயும் நானும் மட்டும் போதும். இந்த ஜானகிக்கு டாப் இல்லம்மா. (கண்களில் தண்ணீர் வர) நீ உட்காரும்மா."

 வீட்டிலேயே சுமங்கலி பிரார்த்தனை நடத்தினாள். நடந்தவற்றை ஆனந்திடம் தொலைபேசியில் கூறினாள். வசந்தா சென்னை வந்தவுடன் வசந்தாவிற்கு தெரியாமல் அபர்ணா வீட்டில் ஒரு சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்து வசந்தாவைப் பங்கு பெற செய்தான். வசந்தாவிடம் தாழ்வு உணர்ச்சி தொடர்ந்து கொண்டே இருந்தது.
   
ஒரு நாள் மாலையில்
         "வசந்தா. நான் உன் கிட்டத் தனியாப் பேசணும்"
         " நீங்களும் நானும் தானே இருக்கோம்."
         "இல்லமா இன்னொருத்தரும் இருக்கா."
         "யாரு?"
         "ஒருத்தர். தனக்குள்ள எதையெல்லமோ வெச்சிண்டு வெளியே சொல்லாம சோக ராகங்கள் வாசிச்சிண்டு."
         "இல்ல"
         "நான் உன்ன வித்தியாசமாப் பாக்கல. எனக்குத் தெரிஞ்சு அந்த ஜானகி மாமித் தவர வேற யாரும் வருத்தப்படுத்தல. அவ பழையப் பஞ்சாங்கம் அடுத்த வருஷப் பூஜைக்கு அவ இருக்கப் போறதில்ல ஊசலாடிண்டி இருக்கா. ஏம்மா நீயே ஒரு சாரோ சர்க்கிள் கிரியேட் பண்ணிக்கற, ஒரு நண்பணா கேக்கறேன்."
        கண்ணீர் விடாது உள்ளே அழுதாள் வசந்தா.
        "நீயே தான்மா மத்தவா என்ன நினைப்பான்னு ஒரு இது க்ரியேட் பண்ணிண்டு இருக்க. நான் இருக்கேன். புரியரதா? ஒன்பது மாசமா ஒரே ஆத்துல இருக்கோம். உன்னப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். நீ நல்லவ. நீ என்ன ஏமாத்துல. உன்னையும் ஏமாத்திக்கல."
       அழத் தொடங்கினாள்.
       "அந்த சர்க்குளத் தூக்கிப் போடு மா. அழாதே. போய் தூங்கு."

அடுத்த நாள் மாலை மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் ஶ்ரீ ராகம் இரண்டு மணி நேரத்திற்கு வாசித்துக் கொண்டிருந்தாள் வசந்தா. ஆனந்த் வந்ததைப் பார்த்து ஒரு புன்னகைப் பூத்து வாசிக்கத் தொடங்கினாள்.

மறுநாள்
       "அபர்ணா. ஒரு வாரம் நான் லீவு."
       "என்னடா?"
       "வசந்தாவுக்கு ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு கூர்க் கூட்டிட்டுப் போறேன்."
       "என்ன ஹனிமூனா?"
       "அப்படித்தான்னு வெச்சிக்கோயேன்"
       "நல்ல சேன்ஜ்ல?"
       "ஒவ்வொரு நாளும். எஸ். அவ சில கஷ்டங்கள வெளில சொல்லாம கஷ்டப்பட்டா. உனக்குத் தான் தெரியுமே. க்ளியரா பேசினேன். அவளே ஒரு மாற்றத்துக்கு வெளில எங்கையாவது ஒரு வாரம் போலாம் னா. ரொம்ப சந்தோஷமா இருந்தா. கொஞ்சம் நாள் போனா மாறிடும். நல்லப் பொண்ணு யூ நோ."
       "ஹேப்பி ஃபார் யூ டா."
       "தேங்க்ஸ் அபர்ணா."
       "ஃபர்ஸ்ட் நைட் அங்கயா இல்ல?"
       "ஏன்டி அபர்ணா?"
       "சாரி டா. ஃபன் டா."

மூன்று மாதங்கள் கழித்து.

       "பாக்கியம் ஃபோன் அடிக்கறதுப் பாரு. எடு."
       "ஹலோ."
       "மாமி."
       "சொல்லும்மா வசந்தா. எப்படி இருக்க?"
       "நல்லா இருக்கேன் மாமி."
       "ஆனந்த்"
       "அவரும் நல்லா இருக்கார். மாமி.."
       "சொல்லும்மா."
       "ரெண்டு மாசம் எனக்குத் தள்ளிப் போயிருக்கு மாமி."
       "ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. நாராயணி இங்க தான் இருக்கா. கொடுக்கறேன். நீயே சொல்லு."

        "அண்ணா வசந்தாவுக்கு ரெண்டு மாசம் தள்ளிப் போயிருக்காம்"
        "ரொம்ப சந்தோஷம் மா. டேய் மணிகண்டா. என்ன முழிக்கற? தாத்தா ஆகப் போறடா."
        வார்த்தை வராமல் அப்படியே மகிழ்ச்சியில் அடைத்துப் போனார் மணிகண்டன்.
         "மணிகண்டா! என்னடா அப்படியே ஸ்டக் ஆயிட்டே. பேரன் பேத்தி பாக்காம்ப் போயிடப் போற டா."
        "எல்லாம் பெருமாள் செயல்"
        " அஸ் யூசுவல் கிரெடிட்ஸ் கோஸ் டு பெருமாள் தோ டெலிஜெண்ட் எஃபர்ட்ஸ் ஆர் ஃப்ரம் மை சன் அண்ட் டாட்டர் இன் லா."
        "என்ன மாமா?"
        "ஒன்னும் இல்ல டா. இங்கிலீஷ் மறக்கக் கூடாதுன்னு இங்கிலீஷ்ல சுக்லாம்பரதம் சொன்னேன்."
        "ஓஹோ."