Showing posts with label எம் தமிழ் கவிதைகள். Show all posts
Showing posts with label எம் தமிழ் கவிதைகள். Show all posts

Saturday, May 12, 2018

தேடல் சிந்து

கண்கள் உன்னை தேடுதடி கண்மணி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி

மழைக்காக ஏங்கும் உழவன் போல
உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி
மழைக்காக ஏங்கும் உழவன் போல
உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி


நீ சொல்லாய்
நீ சொல்லாய்
காரணங்கள் என்னவென்று
நீ சொல்லாய்
கண்ணுறங்கும் வேளையிலும்
மனமுறங்கா நிலைதந்து
எங்கே நீ உள்ளாயோ?
கண்முன்னே வாராயோ?
சொல்லடி சொல்லடி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி


Wednesday, March 21, 2018

புத்தபெருமானே!

என்னே அழகு உன் சிரிப்பு!
போதி மரத்தின் கீழ்
மௌனமாய் அமர்ந்து
புன்சிரிப்பு மலர்ந்து
அதை கண்டார்
அதை சொல்ல
கேட்க வேண்டும்!




உன் சிலையின் சிரிப்பே
மனத்தின் பாதாளம் வரை சென்று
அமைதி தர,
நேரில் கண்டோர்
பேரின்பம் பேரமைதி
அன்றோ கொண்டிருப்பர்!
தெருவெல்லாம் இங்கே பிள்ளையார் போல
அங்கே தெருவெல்லாம் நீ!
மலர் கொண்டு உன்னை வணங்கும் பக்தி
நேரில் எத்தனை அன்பு அவர்களுக்கு
நட்பு பாராட்டும் உணர்வு

அவ்வப்போது அரக்கர்களாய்
செந்நீர் பார்த்து மகிழும் சிலர் மட்டும்
உன் புன்னகை காண மறந்திருப்பாரோ?
இன்று கண்டி வரை
உன் கோவில் அருகிலும் செந்நீர் வந்துவிடும்  போல
இன்னும் புன்னகைத்து அமைதி தருகிறாய்
உன்னை வணங்குவோர் சிலர்
உன் புன்னகை பார்ப்பதில்லை
அவர்கள் கண்படுமாய் புன்னகை வீசு!
உன் முகம் பார்த்தால்
கத்தி எடுக்க அல்ல கத்திப் பேசவும் மனம் வருமோ
புத்தபெருமானே?

Thursday, September 7, 2017

மாவீரர் மகாத்மா காந்தி

கத்தியையும் வாளையும் ஏந்தி
எதிரணியை வெட்டி சாய்த்த வீரன்(?)
துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு
மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்(?)
வஞ்சமும் நஞ்சும் கொண்டு
தீபுத்தியினால் பலரை வீழ்த்திய வீரன்(?)
ஹிரோஷிமாவும் நாகசாகியும்
அழிய தன் விமானித்திலிருந்து
அணுகுண்டை செலுத்தினானே அவ்வீரன்(?)
சொன்னதை செய்தனர் இவ்வீரர்கள்(?)
வெற்றி அந்நேர மகிழ்ச்சி!
மாண்டவர் என்ன பாவம் செய்தனர்?
மிருகம் நிறைந்த மனிதத்தில்
பங்காய் இருப்பதை தவிர!
போர் புரிந்த போராளிகளாம் இவர்கள்!!

போராளிகளின் செயல்களே
அவர்கள் மனதை கொன்றிடுமே!
குற்ற உணர்வு வாட்டிடுமே!
தண்ணீரைப் பார்த்தாலும்
செந்நீராய்த் தெரியாதோ?

அன்பு வழி போர் செய்தானே
என் பாட்டன் காந்தி -
நிஜப் போராளி!
எதிரியை தாக்கிய ஆயுதம் அஹிம்சை
பிறரை வருத்தாது
தம்மை வருத்தி!
இந்தியர்கள் பொறுமையின் சிகரங்கள்!!
தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை
சரியாக பயன்படுத்திய போராளி!!
இக்குணம் மிகவும் பழகிவிட்டது
தற்போதைய இந்தியாவிற்கு!!
காந்தி வழி கிடைத்த சுதந்திரத்தை
சரியாகத் தொடரச் செய்வோம்!!

Tuesday, August 8, 2017

வெண்ணிலா - அவள் கண்கள்

இலைகளின் நடுவில் வெண்ணிலா
உன் திறந்த கண்களைப் போல!

மிக அருகில் வந்தாள் வெண்ணிலா
கயிறு கட்டி இழுத்து விடலாாம்
என எண்ண வைக்கும் தூரம்


நிலவைக் கூட்டி வந்து
இவள் இங்கே வாழும் நிலவு
என உன்னை அறிமுகம் செய்திருக்கலாம்

செய்யவில்லை
ஒரு வாளுக்கு ஒரு உறை போதும்
கயிற்றை கீழே போட்டுவிட்டேன்

Wednesday, June 14, 2017

நற்பார்வைத் தருவாய் நடராஜா

தில்லை நடராசன் பெருமைகள் 
சொல்லில் அடங்காதவையாம் 

நந்தன் என்றொரு புலையன் 
சாதியினால் கோவில் செல்ல 
மறுக்கப் பட்டானாம் 
தேரடியில் இருந்தே தரிசித்தால் 
போதும் என்றிருந்தானாம் 
திருப்பன்கூரில் நந்தி சிலையே விலகியதாம்  

சிதம்பரம் கோவிலை தரிசிக்கவே 
வாழ்க்கை என்றிருந்தாராம் 
தாழ்த்தப்பட்டவர் நாயன்மாரில் 
ஒருவரான இடம் சிதம்பரம்!!

எத்தனைப் பாடல்கள் நடராசன் மேலே!!
நந்தன் கதை 
ஈர்க்கப்பட்டு கோவில் சென்றேன் 
இன்னும் பிரிவினைகள் அங்கே 
சாதியில் குறைந்து 
பணத்தால் உயர்ந்து 
கூட்டமே இல்லாத போதும் 
நடராசனை முன்னே நின்று காண 
நூறு ரூபாயாம்  
பார்க்க நன்றாக இருந்தது 
நந்தன் நம்பாடுவான் கருணை  
பூணுல் அணியாதோரும் முன்னே நின்றனர் 


வாசலில் அமர்ந்திருக்கும் இன்னொருவர் 
பத்தைக் காட்டினாலே 
பார்க்க விடுகிறார் 
பிரிவினைகளும் லஞ்சமும் 
கடவுளால் இல்லை!!
கடவுள் இருக்கும்(?) இடத்திலேயே உள்ளது!!

கொடுக்காது வெளியிலிருந்து 
பார்க்க இங்கே பலருக்கு மனமில்லை 
கோளாறுகள் அதிகம் ஆயினவே 
கண், மனம், சிந்தனை 
கொடுப்பவன் நிறுத்தினால் 
இது யாவும் மாறலாம் 
அங்கேயும் லஞ்சம் கொடுக்க 
தயார் செய்துவிட்டான்!!

நூறுக்கு வழியின்றி 
கள்ளத்தன பத்திற்கு மனமின்றி
வெளியிருந்து காணும்  கண்களை 
குறையின்றி வைத்திடு 
தில்லை நடராஜா!!
உன் கருணையெல்லாம் படித்தேன்!!
நீ செய்திடுவாய்!!

Saturday, March 11, 2017

கண்ணே என் கண்மணியே - தாலேலோ

பல்லவி:
கண்ணே என் கண்மணியே
அழகே என் செல்வமே
தளிரே என் தங்கமே
தூங்கு என் செல்லமே

சரணம் 1:
நிலவும் நட்சத்திரங்களும் நீ தூங்காமல் வாராதாம்
மின்மினிப்பூச்சிக்கூட ஆசையாய் மின்னாதாம்
ஆந்தைகள் கூட்டம் வந்து திட்டுதென்னை கண்மணியே
நீயும் கொஞ்சம் தூங்கு கண்ணே
தாலேலோ தாலேலோ

                              



சரணம் 2:
மயிலைத் தன் தோகை கொண்டு விசிறிவிட சொல்கிறேன்
குயிலையும் கொண்டு வந்து பாடிடச் செய்கிறேன்
சரஸ்வதி அவளும் வந்து வீணையிங்கு மீட்டணுமோ
நீயும் கொஞ்சம் தூங்கு கண்ணே
தாலேலோ தாலேலோ



இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா


பல்லவி:

பாடல்கள் பல்லாயிரம் தந்தார் இளையராஜா
தன்னிசியால் தாய்மடியை உணர்வித்தார் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா

சரணம் 1:

நாத்திகரும் இசை தெய்வம் இவரே என்பார்
ஆத்திகரோ இசைத் தூதர் இவரே என்பார்
பிள்ளைகளைத் தாலாட்டும்  நீலாம்பரி
இவர் தாரும் சுகமான பாடலொலி
இவர் கை அசைவில் வாத்தியங்கள்
சிந்தை வழி மெல்லிசைகள்
காற்றோடு இணை சேர்ந்து


பல்லவி:

பாடல்கள் பல்லாயிரம் தந்தார் இளையராஜா
தன்னிசியால் தாய்மடியை உணர்வித்தார் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா

சரணம் 2:

மூகாம்பிகை பெறாமகன் இவரே
ஞானத்தந்தை ரமணரின் வடிவே
தமிழ் காத்த பாண்டியரின் குலமே
இசைத்தமிழால் பூஜிக்கும் இசையே
இவரே இசையே
இவர்தந்த இசையாலே
மனம் யாவும் மகிழ்வாலே
இசை என்னும் வழியாலே
மருத்துவம்  செய்திட

கடை பல்லவி:

இன்னும்
பாடல்கள் பல்லாயிரம் தாரீர் இளையராஜா
உம்மிசையால் ஆயிரங்கள் சுகம் தாரீர் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா




Tuesday, July 5, 2016

என்னென்ன புண்ணியம் செய்தேனோ?


என்னென்ன புண்ணியம் செய்தேனோ?
இந்த வாழ்க்கை வாழத்தான்
என்னென்ன புண்ணியம் செய்தேனோ?


தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்

பச்சை நிறச்சட்டையாய் மலைக்கு செடிகள்
பாவம் மலைக்கு குளிரோ?
போர்வையாய் வாரும் மேகம்
கலப்படம் இல்லாத நீலவானம்
இந்த அழகினைக் காணத்தான்
கண்கள் இரண்டை வைத்தானோ?

           தென்பாறை, பூதபாண்டி அருகில் கன்னியாகுமரி மாவட்டம்

கண்ணுக்கு முன்னே வண்ண ஓவியம்!
பச்சை நிற மரங்கள்
நீலமும் பச்சையுமாய் அழகிய ஏரி
சிறகுகள் நீரில் படும்படி
பறந்து திரியும் வெண்ணிற கொக்கு
இந்த அழகினைக் காணத்தான்
கண்கள் இரண்டை வைத்தானோ?

தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்
காற்றின் ஒலி ஸ்வரமாக
நீர் பாறையில் மோதும் ஒலி தாளமாக
காற்றோடு இசை பாடும் பறவைகள் 
ஏழு ஸ்வரங்களில் இயற்கை கச்சேரி!
இதனைக் கேட்டிடத்தான் 
காதுகள் இரண்டை வைத்தானோ?

தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்

தேகம் தீண்டும் தென்றல் 
கண் வழியே மனம் ரசிக்கும் அழகு 
காது வழியே இதயம் கேட்கும் இயற்கை ஒலி 
நுரையீரல் குதூகலிக்க காற்று 
இவையாவையும் கண்டு கேட்டு உணர்ந்து 
பாறையில் அமர்ந்தவாறு நான் 

தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்  

இவையாவும் அனுபவிக்கவே 
உடலும் அதற்கு உயிரும் வைத்தானோ?
இந்த வாழ்க்கை வாழத்தானே
என்னென்ன புண்ணியம் செய்தேனோ?

Monday, March 7, 2016

போதை

குடியால் குடியிழக்கும் மக்காள்
நேர்முயன்று ஓரநடைப் போவோர்
விஷமோ இங்கமிர்தம்?
இல்லாத இன்பம்
மாயத்திலே மாயம்
சுயைமறந்து வேற்றுலகம்
போதைவேண்டி நாளும்

சுயைமறந்து ஈரல்வெந்து
எதற்கிந்த பொய் இன்பம்?
தன்னை மறத்தலா போதை?
அசிங்கப் படுவதா போதை?
கிண்ண மதுவா போதை?
இது சுயை மறத்தலன்று
சுயை இறப்பு

பலசுயையிழப்பில் உயிரிழப்பு
சுயை மறுத்தலா போதை?


சுயை உணர்தலே போதை!
மெய்சிலிர்த்தல் போதை!
வெற்றி போதை!

அருவிக் குளியல்
உடலுக்கு போதை!

இயற்கை அழகு
மலையூடே மேகம்
உயிர்ந்தெழும் கடலலை
குழந்தையின் புன்சிரிப்பு
தோகை விரித்த மயில்
நடைபயண செஞ்சூரியன்
கண்களுக்கு போதை!

கொதிக்கும் மிளகுரசம்
மனோரஞ்சித வாசம்
கோடையில் மண்வாசனை
மூக்கிற்கு போதை!

இன்னிசை போதை
வீணையில் ரீங்காரம்
நாதஸ்வரத்தில் நாட்டைக்குறிஞ்சி
குழலில் நல்லிசை
நற்குரல் வாய்ப்பாட்டு
அன்னையின் தாலாட்டு
பறவைகள் பேசுமொழி
மழலைப் பாட்டு
கடலலை
ஆற்று நீரோட்டம்
சஹானா ராகம்
செவிக்கு போதை!

பசிநேரத்து உணவு
வயிற்றுக்கு போதை!

ஆண் பெண்ணுக்கும
பெண் ஆணுக்கும் போதை!
காதல் போதை!
காதலோடு காமம் போதை!
உறவோடும் நட்போடும்
சுற்றுலா போதை!
நம்பிக்கை போதை!
பெண்ணின் வெட்கம் போதை!
விடைகண்ட கணக்கு போதை!
செந்தமிழ் போதை!
சுயை உணர்தல் போதை!!!

Saturday, November 28, 2015

விழித்திரு

மஸக்கலி ஹிந்தி பாடல் மெட்டில்

பல்லவி:

விழித்திரு விழித்திரு 
முனைந்திடு முனைந்திடு
விழித்திரு விழித்ததிரு
முனைந்திடு முனைந்திடு
விழித்திரு விழி விழித்ததிரு
முனைந்திடு முனைந்திடு
விழித்திரு விழித்ததிரு
முனைந்திடு முனைந்திடு


அனுபல்லவி:

உந்தன் தங்குதடைகளெல்லாம் நொறுங்கி விழுந்திடவே
நீயும்தானே இங்கு விழித்திரு
மேலே ஏற ஏற வழிகள் தினம் பார்த்து
முனைந்து நீயும்தான் ஏறிடு 
நல்ல நடையிடு
தினம் ஓடிடு
வெற்றி அதன் படிக்கட்டில்
கை தூக்கிடு
உனதாக்கிடு
வெற்றி வெற்றி வெற்றி எல்லாம் உந்தன் கையிலே
விழித்திரு விழித்ததிரு
முனைந்திடு முனைந்திடு
விழித்திரு விழித்ததிரு
முனைந்திடு முனைந்திடு

சரணம் 1

தோல்விகள் தானிங்கே 
வெற்றியின் படிக்கட்டு
உதரித்தான் முன்னே நீயும் போயிடு போயிடு போயிடு
பயமே  அது வேண்டாம் இனிமேலே இனிமேலே இனிமேலே 
இனிமேல் பயம் வேண்டாம் போகும் வழியினிலே
பயமே  அது வேண்டாம் இனிமேலே இனிமேலே இனிமேலே 
இனிமேல் பயம் வேண்டாம் போகும் வழியினிலே
பயம் நீக்கிடு 
தடை உடைத்திடு
இடர் மடமடமடவென உடைந்திடுமே
பயம் நீக்கிடு 
தடை உடைத்திடு
இடர் மடமடமடவென உடைந்திடுமே

சரணம் 2:

அறம்தான் வழியென நீ கொண்டு 
நிதம் உன் வாழ்வில் போராடு
குணம்தான் நன்கு என்றிடவே 
சுகமாய் வெற்றி வந்திடுமே
வெற்றி தினம் வெற்றி இனிமேலே இனிமேலே இனிமேலே
இனிமேல் தினம் வெற்றி என நினை மனமே
வெற்றி தினம் வெற்றி இனிமேலே இனிமேலே இனிமேலே
இனிமேல் தினம் வெற்றி என நினை மனமே
தாடி வள்ளுவன் 
மீசை பாரதி 
அதை கேட்டு கேட்டு மனதில் ஏற்றிடு
தாடி வள்ளுவன் 
மீசை பாரதி 
அதை கேட்டு கேட்டு மனதில் ஏற்றிடு


பாடலாய்



Thursday, September 24, 2015

நல்லறமாலை - நல்லதை தினம் நினைத்திடு மனமே

பாடலாய்:


பல்லவி: (ராகம்: ரஞ்சனி)

நல்லதை தினம் நினைத்திடு மனமே
நல்லதை தினம் நினைத்திடு மனமே

சரணம் 1: (ராகம்: ஸ்ரீரஞ்சனி)

அன்பும் அறமுமாய் பண்பும் பயனுமாய்
நல்ல ஒழுக்கமுமாய்
நீ இருப்பாய் நீ இருப்பாய்


சரணம் 2: (ராகம்: மேகரஞ்சனி)

வாய்மை நிறைந்த மனதில் நீ
உலாவும் வெளிச்சம் நீ தெளிவும் நீ
நல்ல அறமும் நீ நல்லறமும் நீ

சரணம் 3: (ராகம்: ஜனரஞ்சனி)

ஈதலால் வரும் புகழும் நீ நற்பெயரும் நீ
வருவோர்க்கு வழங்கிடும் குணமும் நீ
நற்புகழும் நீ நல்லறமும் நீ

Saturday, September 19, 2015

நதிகள் இணைப்பு பாடல்


பாடலாக

பாடல் வரிகள்

பல்லவி:

வளைந்து வளைந்து வரும் காவிரி நதியே
கங்கையோடு இணையாயோ

அனுபல்லவி:

வங்கக் கடல் சேரும் மகாநதியே
நீ அரபிக் கடல் சேராயோ


சரணம் 1:

பாலையாய் போகும் பாலாற்றிலே
பாலாய் ஓடிடு கிருஷ்ணா
அழகர் இறங்கிடும் வைகைதனிலே
சிந்துவும் தபதியும் சேராதோ

சரணம் 2:

சிறுவாணி நீரின் சுவை பூர்ணாவில் சேரும்
காவிரி நீரின் சுவை கூவமும் அடையும்
துங்கையும் இங்கே பொன்னையில் கலந்திட
பயிர்களும் செழிக்கும் வயிர்களும் நிறையும்

Monday, September 14, 2015

முருகன் பாட்டு - மயில் மீது ஆடிடும்

கைலாஷ் கேரின் தில்ருபா பாடல் மெட்டிற்கு எழுதியது.

பாடலாக


பல்லவி:

மயில் மீது ஆடிடும் குமரா முருகா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா
வேலவா சண்முகா அழைக்கிறோம் முன்னர் வா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா 


சரணம் 1:

பக்தரெல்லாம் கூடி நின்று ஆரோஹரா என்பர்
காவடியும் சுமந்து வந்து உந்தன் அடி சேர்வர்
உந்தன் பெயர் சொல்லி சொல்லி மலைமீது ஏறி
கோபுரம் தான் கண்ட பின்னே பரவசம் கொள்வர்
வேலவன் வேலினை கண்டதும் ஆனந்தம்

சரணம் 2:

வீரமுண்டு காதலுண்டு ரெண்டும் சேர்ந்த வேலவா
தமிழாக ஆகி நிற்கும் கலிதீர்க்கும் சண்முகா
சிவனுக்கு பாடம் தந்தாய் சுவாமிமலை ஏறி
உம்மை காண நாமும் வந்தோம் சந்தனம் பூசி
கந்தனாய் வேலனாய் நிற்கிறாய் சண்முகா

Saturday, September 12, 2015

கிருஷ்ணன் பாட்டு - இன்னும் என்ன கோபமோ

புரந்தரதாசர் அவர்களின் கன்னட பாடலான ராம மந்த்ரவ ஜபிசோ பாடலின் மெட்டிற்கு எழுதப்பட்டது

பல்லவி:

இன்னும் என்ன கோபமோ என்மேலே
இன்னும் என்ன கோபமோ கிருஷ்ணா

அனுபல்லவி:

பூவாலும் பாவாலும் உன்னையே தொழுதேனே
வெண்ணெய் பால் இவைகொண்டு நைவைத்யம் செய்தேனே



சரணம்:

பஜனைகள் பாடியும் தீராது ஒரு கோபம்
கீதையை தந்தோனே ஏன் இந்த தனி கோபம்
மந்திரம் பல சொல்லி தனியாத ஒரு கோபம்
கிருஷ்ணா என்றுருகி குறையாத ஒரு கோபம்

பாடலாக

https://soundcloud.com/ramanan-venkatasubramaniam/innum-enna-kobamo-ragam


Saturday, May 16, 2015

நந்தன் கதை

பூனூல் அணியா குலத்தவன்
சிவன்பாதம் சேர்ந்தனன்
மந்திரங்கள் அறியன்
வேதங்கள் அறியன்
சிவமே அறிந்தனன்

ஆதனூர் பறையர் குலத்தினில்
தலைவனாம் நந்தன்
தில்லை காண நாளை செல்வேன்
என நாளும் சொல்லி
சிவமே மனத்தில் கொண்டனன்

நெற்றியில் திருநீரும்
கழுத்தில் மாலையும்
வாயில் நமச்சிவாயமும் கொண்டு
பூனுல் அணியா அந்தணனாய்
இந்த பாவிப் பறையன்

உயிர்பலி கொடுத்து பூசைகள் வேண்டாம்
கடும் நோய்க்கு பூசாரி சூடிட வேண்டாம்
படைத்தவனுக்கே எதற்கு பலி வழிபாடு
சிவன் பெயர் சொல்லி போற்றி பேரானந்தம்
எனத் தன் கூட்டத்திற்கு கூறினான்

மாற்று சிந்தனை மனச்சிக்கல்-
பித்துப் பிடித்த மடையன் என
பலிபூசாரி சொல்லிட
சிவப்பித்தன் தான் என
பாடினன் நந்தன்

ஆதனூர் அந்தணர்  நிலந்தனை
உழுது வாழ்க்கை நடத்தினன் நந்தன்
இவன் மக்கள் யாவரும்
இவனோடு உழுது
செல்வத்தை ஈட்டினர்

தில்லை செல்ல அனுமதி கேட்க
என்றும் அந்தணர் கேலி செய்தார்
பறையனுக்கு எதற்கு தில்லை
தில்லை சென்றால் இங்கே சோறு இல்லை
தொழிலே தெய்வம் என பதில்கள்

நந்தன் மனமோ சிவனையே நாடிட்டு
திருப்பங்கூர் செல்ல திட்டம் ஆயிற்று
அவன் மக்கள் சிலர்  சேர்ந்தும் ஆயிற்று
பறையனுக்கு கோவிலில் என்ன வேலை
என சிலர் வராமலும் ஆயிற்று

நந்தன் கோவிலுக்கு செல்ல
நந்தி சிலையோ உயர்ந்து
வழிமறைத்து நின்றது

(பாடலாக) பாடல் -1

பூனுல் இல்லை கோவிலுள் செல்ல
பாகையும் இல்லை கோவில் செல்ல
நந்திக்கு நந்தன் மேல் என்ன பகை?
சிவலிங்க தரிசனம் என் குலத்தார்
காண நந்தி தடை
மலைப்போலே நந்தி
இதுபோலே  கண்டது இல்லை
இந்த பாவிப் பறையன்
உன்னைக் காணேனோ?
நந்தி நீயேயாயினும்
சற்று விலகாயோ?

என நந்தன் பாட

பாடல்-2

நந்தி! எனைக்காண நந்தன் இங்கு வந்தான்
நந்தி! எனைக்காண நந்தன் இங்கு வந்தான்
விலகாயோ நீ விலகாயோ
சிலை நீ என நான் அறிவேன்
சிலை நீ அதை நான் அறிவேன்
தில்லை செல்லாது இங்கே வந்த்திட்ட
நந்தன் தான் எனை காண விலகாயோ?

பறையனென்று உள்ளே வரமால்
தான் பறையனென்று உள்ளே வரமால்
மனதினுள்ளே என்னை நினைத்து
என்னை காணாது மனம்வாடும்
நந்தன் தான் எனை காண விலகாயோ?

தில்லை கூட செல்லாது
உயர்தில்லை கூட செல்லாது
எனை காண மனம் ஏங்கி
மாந்தரோடு கூடி நின்று
நந்தன் தான் எனை காண விலகாயோ?

குலம்கொண்டு பிரித்தெடுத்து
கோவிலுள்ளே நுழையாது
மூடரவர் சொன்னதற்கு
பாவமாய் அங்கே நிற்கும்
நந்தன் தான் எனை காண விலகாயோ?
(பாடல் முற்று)
என சிவனும் பாட
ஆங்கே சிலையும் விலகிற்று
ஆனந்த தரிசனம் கண்டனன் நந்தன்

ஊர்திரும்ப,
பறைபாவிக்கு கோவில் ;
உழுது யார் திண்ணுவார் ?
என அந்தணனும் திட்ட
நந்தன் மனம் உடைந்தான்
கூட சென்றவருக்கும்
வேலை இல்லை என ஆனது

நாளை நாளை என
பல நாளைக் கடந்தான் நந்தன்
தில்லை செல்ல வழி இல்லை என ஆனது

பாடல்-3

அந்தணன் வீடு சென்றான்
நந்தன்-அந்தணன் வீடு சென்றான்
அந்தணன் வெளியே வந்தான்
அந்தணன் வெளியே வந்தான்
நந்தன்-அந்தணன் வீடு சென்றான்

மடையா! நிலத்திலின்றி இங்கென்ன வேலை?
உழவு விட்டு இங்கென்ன வேலை?
வேதம் கற்க வந்தாயோ?
சிவமந்திரம் கற்க வந்தாயோ?
மடையா! சொல்லடா பைத்தியமே!

பைத்தியம் நான் அல்லன்
ஐயா! பைத்தியம் நான் அல்லன்
வேதமும் எட்டுவன் அல்லன்
தில்லைக்கு போகணுமே
அனுமதி தாரீரோ?

தில்லை இல்லை தில்லை இல்லை
தில்லை சென்றால் சோறு இல்லை
உழுவதற்கு யாரும் இல்லை
நீ என்ன அந்தணனோ
தில்லை ஈசன் காண்பதற்கு

அவன் தந்த இரு கண்ணும்
தில்லைநாதன் காண்பதற்கே
அவன் தந்த இரு காலும்
தில்லைதனை அடைவதற்கே
இருநாளில் திரும்பிடுவேன்
அனுமதி தாரீர்

மடையா! மரமடையா!
சொன்னால் விளங்காதோ
மடையா! மரமடையா!!
பித்தம் தெளியாதோ ?
போக வேண்டாம் மடையா!

மடையன் தான் தில்லை செல்ல
என்ன வழி கூறும் ஐயா
மடையன் தான் தில்லை செல்ல
என்ன வழி கூறும் ஐயா
நிலவு வந்து கேட்கணுமோ
அந்த வானம் வந்து கேட்கணுமோ
சிவன் தனை காண இந்த மடையன்
செல்ல வேண்டும்
தில்லை செல்ல வேண்டும்

செல் நீ செல்
நாளை காலையே செல்
உழுதிட்ட பயிர் யாவும்
நாளை நெல் ஆயினால் செல்
மடையா! இப்போ வீட்டுக்கு செல்
(பாடல்  முற்று)

நந்தன் மறுநாள் கழனி செல்ல
நிலம் யாவும் நெல்லாய் இருந்தது
செய்தி அறிந்து அந்தணன் ஓடி வந்தான்

பாடல்-4

நந்தா நீ இல்லை மடையன்
இந்த பாவிதான் மடையன்
நந்தா நீ இல்லை மடையன்

அந்தணன் ஆனால் என்ன
பறையன்தான் ஆனால் என்ன
சிவனுக்கு தொழுகை செய்ய

இந்தப் பாவி மடையன் சொன்ன
வார்த்தையெல்லாம்
மன்னித்து நந்தா தில்லை செல்வாய்
நீ தில்லை செல்வாய்
(பாடல் முற்று)
என பாடி நந்தன் காலில் விழுந்தான் அந்தணன்


பாடல்-5

காலினில் விழலாமோ
எந்தன் காலினில் விழலாமோ
தாய் தந்தை முதியவர் சிவநாதன் தவிர
காலிலும் விழலாமோ
யார் காலிலும் விழலாமோ
அந்தணர் பறையர் பிரிவில்லை
சிவன் கண்ணினில் யாவவரும்
ஒன்றென அறியவேண்டாமோ
அந்தணர் பறையர் பிள்ளை
யார் என்றாலும்
செத்தபின் சாம்பல் தான்
என அறியவேண்டாமோ
அதை அறியவேண்டாமோ
சாதிகள் இல்லை என சொல்லிடவே
தில்லைநாதனும் என்னை படைதிருப்பானோ?
என்னை படைத்திருப்பனோ ?
அவனை காண வேண்டாமோ?
நான் காண வேண்டாமோ?
இருகண்ணிருக்கும்போதே
அவனை காண வேண்டாமோ?
(பாடல் முற்று)

அந்தணன் எழுந்தான்
தில்லை செல்ல தானே
செல்வம் கொடுத்தான்
தன் குற்றம் அறிந்தான்
மனிதம் மட்டுமே சாதி என்றான்

நந்தனார் தில்லை அடைந்தார்
கோவில் திறந்தவுடன்
மலராக மாறி
சிவன்பாதம் அடைந்தார்


Saturday, March 7, 2015

நேற்று ஒரு கனா!!!

சூழல்:

இரவு கனவில் நாம் காதலர்களாய் இருந்தோம் என்றும் கனவில் நடந்தவற்றையும் பெண்ணிடம் ஆண் பாடலாய் சொல்கிறார்.

பல்லவி:

நேற்று ஒரு கனா
அதில் நீயும் நானும் ஜோடி
நேற்று ஒரு கனா
அதில் நீயும் நானும் ஜோடி
நம்போல் யாருமில்லை
இந்த காதலுலகில்


சரணம்:

உன் கண்களை பார்த்து வந்ததில்லை
உன் வார்த்தையை கேட்டு வந்ததில்லை
உன் புருவம் பார்த்தேன் காதல் அங்கே
சொல்லிவிட்டேன் சொல்லிவிட்டேன் அந்த நொடி காதல்
வாழ்க்கையெல்லாம் வாழ்க்கையெல்லாம் தொடர்ந்தது காதல்

நாம் கைகோர்த்தால் பேரழகு
சேர்ந்து நடந்தால் ஓரழகு
அழகே உருவாய் காதல் அங்கே
அன்புக்கடல் காதற்கடல் நீந்தி சென்றோம்
 இணைராகம் துணைராகம் பாடியே வாழ்ந்தோம்

முடியில் நரைவர எமன் வந்தான்
தோள்கள் சுருங்கிட எமன் வந்தான்
நம் காதல் கண்டான் பூரிப்படைந்தான்
எமராஜன் கண்களிலே காதலைக் கண்டான்
காதலுலகில் மரணம் இல்லை சொல்லிச் சென்றான்

பல்லவி:

நேற்று ஒரு கனா
அதில் நீயும் நானும் ஜோடி
நேற்று ஒரு கனா
அதில் நீயும் நானும் ஜோடி
நம்போல் யாருமில்லை
இந்த காதலுலகில்

பாடலாய் கீழே


Monday, February 2, 2015

ஒளி, கதிர், அலை - அம்மா

பல்லவி:

நிலாவின் ஒளியோ
சூரிய கதிரோ?
கருணை கடலின் அலையோ?

அனுபல்லவி :

வண்டெல்லாம் பசியாறும் தேனூறும் பூவோ இவள்?
தமிழ்மொழியில் கேட்கினிய சுகம்தாரும் சொல்லோ?

சரணம் 1:

பாசமலர் பூக்கும் கொடி
அன்புமழை பொழியும் முகில்
அரவணைப்பில் காந்தமென்றறியோ?

சரணம் 2:

கடுங்குளிரில் அனலிவளோ?
வெப்பத்த்தில் நிழல் இவளோ?
புவியியங்க ஈசன் தந்த கோளோ?

பல்லவி:

நிலாவின் ஒளியிவள்
சூரிய கதிரிவள்
கருணை கடலின் அலையிவள்
அம்மா!!

குந்தவராளி ராகத்தில் சுவாதி திருநாளின் போகீந்த்ர சாயினம் பாடல் போல அமையுமாறு எழுதப்பட்டது.

பாடல் கேட்க -


Monday, September 8, 2014

சபரிவாசன் நோக்கி எங்கள் பயணம்


பல்லவி:

சபரிவாசன் நோக்கி பயணம் - பரந்தாமன்
அவனை நெஞ்சில் கொண்டால் துன்பம் தீரும்
மலையேறிப் புகழ்ப்பாடி திருமேனித்
தான் கண்டிட மனம் துள்ளித்துள்ளி
தினம் ஏங்கும் - அவன் முகம் கண்டு
பூரிப்போகும் (சபரிவாசன்)



சரணம் 1:

தென்னை யாவும் போட்டிப் போடும் சண்டைக் கொள்ளும்
தன் தேங்காயை சபரிக்குத் தாரும் -  சுவாமிமார் இருமுடியில்
தேங்காய் தான் ஏறிடவே காற்றாய்ப் பாடல்கள் பாடும்
மற்றத் தென்னைகள் சோகத்தில் மூழ்கும் (சபரிவாசன்.. தீரும்)

சரணம் 2:

நெய்யினைத் தேங்காய் சுமக்கும் இருமுடி ஏறும் - அந்த
ஐயனைத் தீண்டிடச் செல்லும்- நெய்யோ
நீ கற்பூர ஆழிக்குத்தான் செல்வாய் எனச் சொல்ல
தேங்காய் கள்ளமாய் சிரிக்கும்  (சபரிவாசன்.. தீரும்)

சரணம் 3:

கற்பூர ஆழி சென்றாலும் துயர் இல்லை- உனை
நான் தொட்டு அவன் குளிக்கத் தாரேன் - கற்பூர ஆழியில்
சாம்பலாய்ப் போனாலும் அவன் வாசம் செய்யும் சபரிமலை
அதில் வாசம் செய்யும் என் சாம்பல் (சபரிவாசன்.. தீரும்)

சரணம் 4:

அந்தத் தேங்காய்க்கும் உனைத் தொழவேண்டி எண்ணம்-
நாங்கள் அதையும் கூட்டி வாரோம்
உன் தரிசனம் தாராய் மணிகண்டா!!
ஸ்வாமியே சரணம் அப்பா!!
ஐயப்ப சரணம் அப்பா!

பாடலாய்

Wednesday, July 9, 2014

கேள்வியும் பதிலும்

கேள்வி:

கண்ணிருந்தும் குருடன்
காதிருந்தும்  செவிடு
வாயிருந்தும் ஊமை
இது மூச்சுவிடும் பிணங்களின் பூமி

காவலாளி திருடன்
அரசியல் வியாதி
சாக்கடைலாம் நல்லவன்
காசிருந்தா நீ சாமி
நல்ல மனசெதுக்கு ஆசாமி

சட்டையெல்லாம் கிழிஞ்சி நாயோட சேந்துச்
சோறுத்திம்பான் பிச்சைக்காரன்
ஏசி ரூமில் இருந்து நாலு ஃபுல்லப் போட்டு
ஃபிக்சிங் பண்ணாப் பணக்காரன்

நல்லவழிப்போயிக் கியூவுலத்தான் நின்னு
வேல செஞ்சா அவன் - பொழைக்கத்தெரியாதவன்
அடியில துட்டு கைமேல துட்டு
அப்டி இப்டின்னு செஞ்சா- கெட்டிக்காரன்

நீ வாயத்திறந்து தட்டிக் கேட்டா
நாலு நாளு நியூசு
அஞ்சா நாளு வேற நியூசு
உன் நியூசு ஃபியூசு

எங்கடாப் போகுது உலகம்
எங்கடாப் போகுது உலகம்
எங்கடாப் போகுது உலகம்
எங்கடாப் போகுது உலகம்?

பதில்:

தப்புன்னு நினைச்சாச்
சட்டுன்னுக் கேளு
சரியின்னுப் படும் வர
வாயத்திறந்து கேளு
நியூசு ஃபியூசாப் போனாத்
திருப்பித் திருப்பிக் கேளு



நல்லதப் பாத்தா
வாயத்திறந்துப் புகழு 
நல்லவைகள் எழுது
நல்லவைகள் பேசு
நல்லவைகள் பாடு
நல்லவைகள் எண்ணு
நல்லவனா வாழு

நல்லவர் நிறைய
நல்ல ரத்தம் பாயும்
கெட்ட சுவாசம் போகும்
உலகமே மகிழும்

இங்க நானும் நல்லவன்
அங்க நீயும் நல்லவன்
அவன் நல்லவன் இவன் நல்லவன்
என நல்லவர் உலகம் ஆகும்
மனம் தான் முதலென ஆகும்
பணம் தான் தூசியாப் போகும்
அதனாலத் தப்பே இல்லாமப்  போகும்

வாய்த்திற மனிதா வாய்த்திற மனிதா
வாய்த்திற மனிதா
பூமி ஆகும் சுத்தம் பூமி ஆகும் சுத்தம்
பூமி ஆகும் சுத்தம்

Monday, March 10, 2014

மருத்துவமனை வாயில் பிள்ளையார்


ஒருநாள் விடாது கண்ணீரபிஷேகம்  ஜலதோஷமோ
வெளிமாசில் தூசுபட்டு கண்வலியோ
உள்ளிருப்போர் கூச்சல் கேட்டு காதடைப்போ
உடைதேங்காய் உடல்பட்டு சிராய்ப்போ
இரவு குளிரில் காய்ச்சலோ
இவையாலே கோளாறோ
அதனாலே குணமாய் வெளிவருவோர் மட்டும் கண்படுவரோ
எல்லோரும் நலமென ஓயாத பெருமிதமோ
ஆஹா ஓஹோ கேட்கும் காதுகள்
ஐயோ ஐயகோ கேளாதோ

பணம்பிடுங்க வழியிருப்பின்
பிணத்திற்கும் இங்கே துட்டுவிளையாட்டு
ஒரு சிலார்க்கு மட்டும் கண் வலியோ
குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு மட்டும் காதடைப்போ
மருத்துவமனை வெளியே வெளி பார்த்து நீ
அதனாலோ இப்பெருமிதம்
உள்பக்கம் பார்த்திருப்பின்
மருத்துவ வியாபாரத்தில்
அறியாதோர் பணம் வீணாகாதோ
சிற்பி பின்கழுத்தில் கண்செதுக்கின்
இதை அறிந்திருப்பாயோ
மருத்துவம் மருத்துவமாய் இருக்க
பாலும் தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு தந்திடுவேன்
கடைசியில் உன்னிடமும் வியாபாரம்!