Saturday, November 3, 2012

அஃறினை காதல் (அது அவளான கதை)

                             மனிதர்களுக்கு பொருட்களின் மேல் எப்பொழுதும் ஒரு பிரியம் உண்டு. இந்த பிரியத்தை மூன்று வகைகளாய் நாம் காணலாம். முதல் வகை, மக்கள் டீ அருந்த செல்கையில் எப்போதும் ஒரே கடைக்கே செல்வார்கள். கடை மாறினால் டீ டீப்போல் இருப்பதில்லை. அது டீயினாலா என யோசித்தால் அது காரணமாக இருப்பதில்லை. அந்த டீக்கடையிலேயே டீ குடித்து அந்த டீக்கடையின் சூழலோடு இணைபிரியா பந்தம் உருவானதே காரணமாய் இருக்கிறது. இரண்டாம் நிலை, பெண்களுக்கு நகை மேல் இருக்கும் ஆசை, இளைஞர்களுக்கு பேஸ்புக் டிவிட்டர் மேல் இருக்கும் அலாதி ஒற்றுதல் என அடுத்தகட்ட பிரியங்களை உள்ளடக்கியது. கடைநிலை, பிரியம் காதலாகும் நிலை, இதில் அது அவனோ அவளோ ஆகிறது. ஒரு சிறு குழந்தை பொம்மையை உண்மையென எண்ணி பேசும்போது இதை எல்லோரும் காணலாம். இது சிறுபருவத்திலேயே முடிந்துவிடுகிறது. பரசுராமன் என்னும் இளைஞனுக்கோ இந்த நிலைமை தொடர்ந்தவாறு இருந்தது. அவனுக்கு யாரை பிடிக்கும் என்று அவனைக் கேட்டால் எப்போதும் அவன் பதில் "டிரெயின்" என்று இருக்கும்.
                            பரசுராமன், வயது 32, பாலக்காடு ஸ்டேட் பேங்க் உதவி மேலாளர். இவனுக்கு டிரெயின் மேல் இருக்கும் பிணைப்பு சிறு வயதில் இருந்தே தொடங்கியது. விடுமுறைகளில் பாலக்காட்டிலிருந்து வேலூருக்கு செல்வதுண்டு. முதல் இரண்டு பயணங்களில், உறவினர்களை சந்திக்கப்போகும் ஆனந்தமும் விளையாடப்போகும் ஆட்டங்களுமே மனதில் இருந்தது. பிறகு பயணங்களில், டிரெயின் மீது ஏதோ ஒரு அபரிவிதமான பிரியம் வளர்ந்தது. மங்களூரிலிருந்து  திருவனந்தபுரம் செல்லும் ரயிலுக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டனர். அப்போது தன பெயரில் ஒரு ரயில் உள்ளதே என பெருமைப் பட்டுக்கொண்டான்.


                            அவன் ஒவ்வொரு முறை ரயிலில் பயணம் செய்யும்போதும் அவனுள் ஏதோ இனம்புரியா உணர்வு தோன்றியது. அவன் கதவினருகே பயணம் செய்கையில் காற்று அவன் தலையை தடவி கொடுப்பது போல் உணர்ந்தான். அது அவனது மறைந்த தாயார் திருப்புரசுந்தரி தடவிக் கொடுப்பதை போல உணர்ந்தான். தடக் தடக் என ரயில் எழுப்பும் சத்தம் மெல்லிசையாய் அவன் காதுகளில் ஒலித்தது. சிறுவயதில் புகைவண்டியில் பயணம் செல்லும் போது வரும் புகை இப்போது வருவதில்லையே என  வருந்தினான். அவன் அவனது மனசாட்சியிடம் வேலை கிடைத்தவுடன் தினமும் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்று சத்தியம் செய்துகொண்டான் .
                           தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஈரோடு ஸ்டேட் பாங்கில் கிளெர்க் உத்தியோகம் கிடைத்தது பரசுராமுக்கு. பரசுராம் பாலக்காட்டு பிராமணன். எனவே மாலையாள வாடையில் தமிழ் பேசுவான். தாய்மொழியும் தமிழே. இவர்கள் மலையாளத்தவர் முன் தமிழும் தமிழர்கள் முன் மலையாளமும் பேசி ரெண்டுங்கெட்டானாய் திகழ்பவர்கள். தினமும் ரயிலில் பயணிப்பதற்காகவே சேலத்தில் வீடு பார்த்தான். 70 கி.மீ ரயில் பயணம். ஈரோடு செல்லும் போது ரயில் காவிரி பாலத்தை கடந்து செல்லும். அவ்வாறு செல்லும்போது, ஏதோ உடலுறவு வைத்த இன்பத்திற்கு இணையாக பரசுராமுக்கு ஒரு பூரிப்பு எழும். இவனை டிரெயின் பரசு என்றே சக ஊழியர்கள் அழைக்கத் தொடங்கினர். அவனும் அதை விரும்பினான். வார விடுமுறை நாட்களில் ரயில் ஏறி எதாவது ஒரு ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். கொங்கன் ரயில் பாதை இவனக்கு மிகவும் பிடித்தது. 3 நாட்கள் மேல் விடுமுறை இருந்தால் அங்கு செல்லும் ரயிலில் இவனைக் காணலாம். பாம்பன் பாலத்தில் பயணிப்பதும் இவனுக்கு பிடிக்கும் மாதம் ஒருமுறை தவறாது சென்றிடுவான். ஏதாவது ஒரு ரயில் நிலையம் சென்று திரும்புவதே வழக்கமாக்கிக்கொண்டான்.



                          ரயில் பயண விரும்பிகள் என்று ஒரு குழு இருப்பதை தெரிந்து கொண்டு, அந்த குழுவினரோடு பல இடங்களுக்கு ரயிலில் சென்று வந்தான். இந்தியாவில் ரயில் நிலையங்கள் உள்ள அனைத்து ஊர்களும் இவனுக்கு அத்துப்படி ஆனது.
                          29 வயது நெருங்கியது பரசுராமிற்கு. வங்கியில் சீனியர் அக்கவுண்டன்ட் வேலை. பாலக்கட்டிற்கே பணிமாற்றமும் கிட்டியது. பரசுராமின் தந்தை காமேஸ்வரன், இவனின் ரயில் பயணங்களுக்கு எதிராய் இருந்ததே இல்லை. நேரம் கழிக்க இதுவும் ஒரு பொழுது போக்கு என்று எண்ணினார். காமேஸ்வரன் சமையல்காரர். இவர் சமையலை உலகமே ருசித்திருக்கும் அவர் தந்தை தடையாக இல்லாதிருந்தால். வெளிநாடு சென்று சமையல் செய்யும் வாய்ப்பு கிடைத்த போது அசைவமும் சமைக்க நேரிடும் வேண்டாம் என இவர் தந்தை தடுத்து விட்டார். அதனால் தான் தன பிள்ளைக்கு எதிலும் தடையாக இருக்க கூடாது என எண்ணினார். பரசுராமிற்கு திருமணம் செய்ய வேண்டும் என விருப்ப பட்டார். பல பெண்களில் காவேரி என்ற பெண்ணை மகனுக்கு பொருத்தமானவள் என்று எண்ணி திருமணம் பேசி முடித்தார். காமேஸ்வரன் காவேரி என்ற பெண்ணை பார்த்துள்ளதாக பரசுராமிடம் சொன்னபோது, காவேரி பாலத்தில்  பயணித்தது அவன் மனதில் வந்தது. உடனே சரி என்றான். திருமணம் ஆகி 11 மாதங்களில் பெண் குழந்தை பிறந்தது. அம்ருதா என பெயரிட்டான். பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலின் பெயர் அது.
                        தினம் ஒன்று என்று இருந்த ரயில் பயணம் வாரத்திற்கு ஒன்று ஆனது. "கல்யாணம் ஆயிடுத்து. இனிமே நிறைய ரயில்ல போறேன்னு ஓடிட கூடாது கேட்டயா." என்ற காமேஸ்வரனின் அறிவுரையே இதற்கு காரணம்.
                        பரசுராமிற்கு வயது 32 ஆனது. உதவி மேலாளராக பதவி உயர்வும் கிடைத்தது. அப்பொழுது தொலைக்காட்சியில், "கன்னியாகுமரியில் இருந்து தில்பர்கா வரை செல்லும் புதிய ரயில் போக்குவரத்தை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கு விவேக் எக்ஸ்பிரஸ் என பெயரிட்டுள்ளனர். 4287 கி.மீட்டரை 82 1/2 மணிநேரங்களில் இந்த ரயில் கடக்கும். இதுவே இந்தியாவில் அதிக தூரம் பயணிக்கும் ரயிலாகும் மேலும் உலகிலேயே இது அதிக தூரம் பயணிப்பதில் எட்டாவது இடத்தில் உள்ளது. சனிக்கிழமை கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் ரயில் புதனன்று தில்பர்கா சென்றடையும்." என செய்தி வந்தது. செய்தியை கேட்டவுடன் அந்த ரயிலின் முதல் பயணிகளில் ஒருவராக இருக்க வேண்டும் என அவனுக்கு தோன்றியது. அடுத்து பிள்ளை பிறந்தால் பெயர் வைக்க ஒரு நல்ல பெயரும் கிட்டியுள்ளது. ரயில் பாலக்காடு வழியே சென்றாலும் கன்னியாகுமரியிலிருந்தே பயணிக்க விரும்பினான். ரயில் டிக்கட் முன்பதிவும் செய்தான். கன்னியாகுமரி சென்றடைய பாலக்கட்டிலிருந்து செல்லும் ரயில்களில் இடம் இல்லாததால், கோவையிலிருந்து செல்லும் ரயிலில் முன்பதிவு செய்தான். காவேரி கருவுற்று இருந்ததால் அவளுக்கு டிக்கட் போடவில்லை.


                      அவன் கன்னியாகுமரி செல்லும் நாள் வந்தது 25 நவம்பர் 2011. முல்லை பெரியார் பிரச்சனையால் தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடையே அன்று பஸ் ரயில் போக்குவரத்து செயல்படவில்லை. அடுத்த நாள் அவன் பாலக்காட்டிலிருந்தே அந்த ரயிலில் ஏறிக்கொள்ளலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. அவன் ரயிலுக்கே செய்யும் இழுக்காக அமைந்துவிடும் என எண்ணினான். தடங்கல் எது வந்தாலும் போய் சேர வேண்டும் என எண்ணினான். 7 மணிக்கு பாலக்காடு பேருந்து நிலையம் அடைந்தான். கோயம்புத்தூர் செல்ல இருந்த பேருந்துகள் ஓய்வெடுத்து கொண்டிருந்தன. தமிழக பேருந்துகள் கல்லடி பட்டு கண்ணாடி உடைந்து தென்பட்டன. லுங்கி அணிந்திருந்த ஒருவன் "கோயம்புத்தூர் 500 கோயம்புத்தூர் 500" என கூவி கொண்டிருந்தான். பரசுராம் என்ன என்று கேட்டபோது அவன், "ஒரு டாக்சி உங்கள வாளையார் கொண்டு சேத்துடும் அங்கிருந்து தமிழ்நாடு டாக்சியிலே கோயம்புத்தூர் போயிடலாம். மொத்தம் 500 ரூபாய்" என்றான். பரசுராம் ஒரு 500 ரூபாய் நோட்டினை அவனிடம் நீட்டினான். அவன் பரசுராமை டாக்ஸியில் அமரச்சொன்னான். டாக்ஸி ஓட்டுனர் 7:26 க்கு வாளையார் நோக்கி புறப்பட்டார். டாக்ஸி 20 நிமிடங்களில் வாளையார் சென்று அடைந்தது. டாக்சி டிரைவர், "பார்டர் க்ராஸ் பண்ணும் போது வாய் திறக்க் வேண்டாம். மறியல் செய்றவங்களுக்கு மலையாளின்னு தெரிஞ்சா, அவங்க போதைய பொறுத்து எதுவும் நடக்கலாம்." என எச்சரித்தார். காரில் வந்த மற்ற நால்வரும் முதலில் சென்று பார்டரை கடந்தனர். பரசுராம் பேய்முழி முழித்தவாறு சென்றதால் அவனை மட்டும் கடக்கவிடமால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிடித்துக் கொண்டனர்.
                        ஒரு ஆர்ப்பாட்டக்காரன்," நீ எந்த ஊரு?" எனக் கேட்டான்.
"ஞான் பாலக்காடு. பக்ஷே தமிழ்."
"முட்டாக்கூதி பொய் சொல்லாதே தேவிடியா மவனே."
"என்னவாக்கும் இது. பாலக்காட்டுல தமிழனா பிறந்தது என் தப்பா. அவா என்ன வித்யாசமா பாக்கறானா. இங்க நம்ம மொழி பேசரவா  இன்னும் மோஸம். இவன் என்னடானா அம்மாவெல்லாம் சபிக்கிறான்."
"இல்ல ஐயரே."
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
 நாவினால் சுட்ட வடு - இதையெல்லாம் உங்க ஸ்கூல்லே சொல்லித்தரலையா? இப்படி நாசம்  பண்றேள். தமிழன்னு சொல்லிக்கவே யோக்யதை இல்லை உங்களுக்கு"

                          

"மன்னிச்சிடு. கிளம்பு."
"போங்கோடா. குடிச்சிண்டு இங்க வந்து அசிங்கமா பேசறது.மனுஷாளுக்கு பிரெச்சன பண்ணின்டு. இப்ப மணி 8 நான் ஸ்டேஷனுக்கு 8 1/2 க்கு போகணும் கார் வேற இல்லை. போங்கோடா."
"நான் வேணும்னா வந்து விட்டுர்றேன் ஐயரே. தப்பாயிடுச்சு என்ன பண்ண சொல்றே. 500 ரூபா தரேன்னு சொன்னாங்க வந்துட்டோம். பைசா தான் கண்ணுல முதல்ல தெரிது. நீ சொன்ன திருக்குறளால ஒரு கட்டிங் தேருமா மனுஷனுக்கு."
"வண்டிய எடு டா."
"குடிச்சிருக்கேன் இந்தா சாவி நீ ஓட்டு."
                        பரசுராம் மொபைலிலிருந்து தடக் தடக் என்று ரிங்டோன் அடித்தது. அதைக் கேட்டவுடன் அவனுக்கு அடுத்த நாள் செல்லவிருக்கும் ரயில் பயணம் மனதில் வந்தது. வேகமாக வண்டியை ஓட்டி 8.25 க்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்து அடைந்தான். அவன் தாயின் முகம் ரயில் நிலையத்தின் முகப்பில் இருந்து வரவேற்பது போல் அவனுக்கு தோன்றியது. வழக்கமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அந்த ரயில் நிலையம் வெறிச்சோடி இருந்தது. அவன் விசாரணை கூடத்திற்கு சென்று ரயில் எந்த பிளாட்பாரத்தில் வரும் என விசாரித்தான். அதற்கு அவர், "இங்க வேல நடக்குது. எல்லா வண்டியும் கோயம்புத்தூர் நார்த் ஸ்டேசன்ல இருந்து கிளம்புது. எல்லா பேப்பர்ளையும் வந்ததே பாக்கலையா நீங்க? இந்நேரத்துக்கு நார்த்ல  இருந்து வண்டி கிளம்பிட்டு இருக்கும்." என கூறினார். முதல் முறையாக பரசுராமிற்கு ரயில் வாழ்கையில் ஒரு கசப்பான அனுபவம். அடுத்த வண்டி அடுத்த நாள் காலையில் தான் என அறிந்து கொண்டு பேருந்தில் பயணிக்க முடிவு செய்தான். ஏதோ ரயில் பயணத்தின் சக்காளத்தி போல தோன்றியது பேருந்து பயணம்.
                     வெள்ளிகிழமைகளில் தென் மாவட்டங்களுக்கு வண்டியில் சீட்டு கிடைப்பது மிகவும் கடினம். அதிர்ஷ்ட்டவசமாக இவனுக்கு ஒரு சீட்டு கிடைத்தது. வண்டி 10 மணிக்கு தான். வண்டி எப்போது நாகர்கோவில்  சென்றடையும் என கேட்க 8 மணி என ஓட்டுனர் சொன்னார். ரயில் மதியம் 2 1/2  மணிக்கு தான். எனவே திருப்தியானான். பஸ்ஸில் செல்ல போவதை எண்ணி வருந்தினான். ரயிலைப்போல் நிம்மதியாக தூங்க முடியாது. இங்கேயும் அங்கேயும் நடக்க முடியாது. கதவருகே சென்று நின்றால் இங்கே நடத்துனர் திட்டுவார். தடக் தடக் என்று சத்தம் வராது. பாலத்தில் செல்லும்போது வரும் ஒரு சுகம் வராது. காபியும் டீயும் நம் இடம் தேடி வராது. காண்டாமிருகத்தோடு உடலுறவு வைத்துக் கொள்வது போல் உணர்ந்தான். வேகத்தடைகளில் செல்லும் போது கஷ்டமாக உணார்ந்தான். ரோட்டோர பட்டர் தோசை வேலையை காண்பிக்க ஆரம்பித்தது. பஸ்ஸில் டாய்லெட் வேறு இல்லை. ரயில் பயணத்தை தவற விட்டதை எண்ணி வருந்தினான்.
பஸ் டீவியில் யாரோ தொலைதூரத்திலிருந்து நேராக ரயில் வண்டிக்குள் பறந்து வந்து ஒரு பறவைக்கு பிளையிங் கிஸ் கொடுத்ததை பார்த்து பக்கத்தில் அமர்ந்தவரிடம் ,
"என்ன படம் இது. அவன் என்குருந்தோ குருவி மாதிரி வந்து குதிக்கிறான் அதுவும் கரக்டா."
"நீங்க சொன்னேங்களே குருவி அதே தான்."
"ஆறடி செவுத்துல இருந்து குதிச்சாலே எலும்பு முறிஞ்சிடும். இவன் என்குருந்துலாமோ குதிக்கிறான். நீங்கலாம் கேக்க மாட்டேலா. பிராந்து பிடிச்சிக்கும் இத பாத்தா."
"யோவ் யாரு யா நீ? கேள்வி கேக்காமா பாரு இல்ல தூங்கு. இண்டரஸ்டா போகுது டிச்டர்ப் பண்ணிக்கிட்டு."
"இல்லை நியூட்டன் என்ன சொல்லிருகாருனா க்ராவிடி..."
"யோவ் மூடிட்டு பாரு யா."
"இல்லை ஞான் தூங்கிடறேன்."
"தூங்கித் தொல. செகண்ட் ஹாப்ல கடலுக்கடிலே போனவர் நிலத்த தொளச்சிகிட்டு  வருவாரு. அதுக்கு பதில் கேப்ப அப்புறம் நீ."
"தூங்கறதே பெட்டெர்."
                      அவன் கண்களை மூடி மேற்கொள்ளவிருக்கும் 5 நாள் பயணத்தை நினைத்து பார்த்தான். பட்டர் தோசையால் நேரிட்ட ரசாயன கோளாறு, படம் பார்த்து ஏற்பட்ட தலைவலி எல்லாம் விலகியது. அவன் காதுகளில் தடக் தடக் என்ற சத்தம் தாலாட்டை போல ஒலித்தது. அப்படியே தூங்கலானான்.
                      அடுத்த நாள் காலை 8:30 மணி.  பேருந்து நாகர்கோவில் வந்து அடைந்தது. அங்கிருந்து அரை மணி நேரத்தில் கன்னியாகுமரி அடைந்திடலாம். இருப்பினும் ஒருவரிடம் ரயிலை அடைந்திடலாமா என  விசாரித்தான். அவர், "எல்லா வண்டியும் நாகர்கோவில் வந்து தான் போவான். எதுக்கு கன்னியாகுமரி வர போறீரு?" என கேட்டார்.
 "ஞான் பாலக்காடு. வண்டி பாலக்காடும் வரும். கேட்ட பிரஷ்னத்துக்கு பதில் சொல்லுங்கோ போதும். கேள்வி கேக்கண்டாம்."
"கன்னியாகுமரி 18 கிலோமீட்டர் தான்.நடந்து போனாலும் 12 1/2 க்கு போய்டலாம். சைக்கிள்ல போனாலும் 10 க்கு லாம் போய்டலாம்."
                     பரசுராமிற்கு திடீரென சைக்கிளில் போகலாம் எனத் தோன்றியாது மீண்டும் பேருந்தில் செல்ல அவன் விரும்பவில்லை. அருகில் இருந்த சைக்கிள் கடைக்கு சென்றான். அது வாடகை சைக்கிள் கடை. அது அவனுக்கு தெரியவில்லை உள்ளே நுழைந்த பரசுராமன் சைக்கிள் அருகே சென்று நின்றான். பார்ப்பதற்கு அச்சு அசலாக அங்கே தினமும் வரும் வாடிக்கையாளர் போல இருந்தான் பரசுராமன்.  கடைக்காரர் வந்து, "மக்கா இன்னிக்கி 7 ஆம் நம்பர் வண்டி எடுத்துக்கே" என்றார்.
"எவளோ கொடுக்கணும்?"
"20 ரூபாய் (1 மணிநேரத்திற்கு)"
"அவளோ தானா?"
"அவளோ தானாவா என்ன தெரியாத மாறி கேக்க? புது கவர்மென்ட் வந்தது இருந்தே 20 தானே."
"நல்ல கவர்மென்ட்" என கூறி விட்டு சைக்கிளை எடுத்து சென்றான். அவனுக்கு இது வாடகை சைக்கிள் என்று தெரியாது. இவ்வளவு குறைந்த விலையில் சைக்கிள் கிடைப்பதற்கு காரணம் புதிய அரசு என்று எண்ணினான். அவர்களால் தான் 10 ரூபாய் 20 ரூபாய் ஆனது என்பது இவனுக்கு தெரியவில்லை.
                   பரசுராமன் வேகமாக சைக்கிளை ஓட்டினான். அவன் ஓட்டிய வேகம் சில டவுன் பஸ்களை பின்னுக்கு தள்ளியது. அவன் இறந்த அன்னையை மீண்டும் ரயில் வடிவில் காண போவதாய் உணர்ந்தான். அரை மணி நேரத்தில் ரயில் நிலையம் அடைந்தான். ரயிலை பார்த்ததும் அவன்  அழத் தொடங்கினான். ரயில் பெட்டியில் அவன் தாய் முகம் தெரிந்தது. கடைசியாக அவன் அன்னையுடன் சென்ற ரயில் பயணம் ஞாபகம் வந்தது. இடுப்பில் வைத்துக் கொண்டு ரயில் முழுவதும் நடந்து செல்வாள். அவள் இறந்த பின்பு இதற்காகவே ரயிலில் தினமும் பயணம் செல்ல துவங்கினான். இன்னும் செய்கிறான். பெட்டி அருகில் சென்று பெட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்தான். இன்னும் ரயில் கிளம்ப 2 மணி நேரம் இருந்த்தது. திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண் போல ரயிலை அலங்கரித்து கொண்டிருந்தனர். ரயிலையும் ரயில் நிலையத்தையும் புகைப்படங்கள் எடுத்தான். மந்திரிகள்  பலர் ரயில் போக்குவரத்தை துவக்கி வைக்க வந்திருந்தனர். காவிரி தன்னோடு வந்திருக்கலாமே என எண்ணினான். அவன் ரயில் பயணங்களில் வைத்திருக்கும் தீராத ஆசையை புரிந்து புரிந்துகொண்ட மிகச்சிலரில் அவளும் ஒருத்தி. காவேரியை போனில் அழைத்து, "காவேரி! டிரெயின் ஏறிட்டேன். நீ வரலயேனு தான் வருத்தமா இருக்கு."
"பரவாயில்லை. டோக்டர் போவேண்டான்னுச் சொல்லிட்டாரே. விவேக் வேற வயத்துக்குள்ள இருந்து ஒதைக்கரான். பாத்து போயிட்டு வாங்கோ. கதவு கிட்ட ரொம்ப நேரம் நிக்கண்டாம். கேட்டேளா? "
"சரி."
"கண்டத வாங்கி திண்ணண்டாம். அரவாணி யாராவது காசு கேட்டு வந்தா சண்ட போடேண்டாம். ஹாப்பி ஜெர்னி. ஹாப்பி எக்ஸ்பீரியன்ஸ்"
"சரி. போயிட்டு வந்துடறேன். அம்ருதாவ  பாத்துக்கோ. அப்பா எதாச்சும் சொன்னா கோச்சிக்காதே. விவேக் உதைச்சா அப்பா அடிப்பர்னு சொல்லு. வெச்சிடுறேன்."
"சரி. பாத்து போயிட்டு வாங்கோ. வெச்சுடறேன்"
                     ரயில் புறப்பட தயார் ஆனது. இருக்கை அட்டவணையை பெட்டியில் ஒட்டினார் ஒரு ஊழியர். அவன் பேரை அட்டவணையில் பார்த்தவுடன் ஒரு பூரிப்பு. திரும்ப அழத்தொடங்கினான். அந்த தாளை ஒரு புகைப்படம் எடுத்து கொண்டான். இருக்கையில் (S3 25) சென்று அமர்ந்து கொண்டான். விவேகனானந்தர் ஆசிரமத்தை சேர்ந்தவர் கொடி அசைத்தவுடன் வண்டி கிளம்பியது. இவனின் பயணம், பிரியம். இல்லை!! இவனின் காதல் தொடங்கியது.  

இறைகளின் யுத்தம்

 நிபந்தனை: இக்கதை எந்த ஒரு கடவுளையும் மதத்தையும் இழி செய்ய எழுதப்பட்டதல்ல. பஞ்ச ஈஸ்வரம் என்று அழைக்கப்படும் ஒரு காலத்தில் உலகிலேயே பெரிய இறைவழிப்பாட்டு ஸ்தலமான இலங்கையின் கோணேஸ்வரர் கோவில், இன்ன பிற நான்கு கோவில்கள் போர்த்துகீசியர்களால் தாக்கப்பட்டதை கருவாக கொண்டு கற்பனையாக எழுதப்பட்டதே இந்த கதை. சில நிஜங்கள் சொல்லும் கதை. "இந்துக்களின் ரோமாக திகழ்ந்தது கோணேஸ்வரம்." - பெர்நாவோ டி க்வெயர்ஸ். போர்ச்சுகீஸ் வசனங்கள் தமிழிலேயே இருக்கின்ற. படிப்பவர் புரிந்து கொள்வதற்கும், எனக்கு போர்ச்சுகீஸ் தெரியாது என்பதற்காகவும்.





16 ஆம் நூற்றாண்டு 
திருவனந்தபுரம், திருவிதாங்கூர் ராஜ்ஜியம் 

                          "கண்கன்!! இந்த வருஷம் சித்திர வருஷபொறப்புக்கு ஈழநாடு அழைச்சிண்டு போ டா. பஞ்ச ஈஸ்வரத்துக்கும் போலாம்டா. வருஷ பொறப்பன்னிக்கி கோணேஸ்வரத்துல இருக்கற மாறி போலாமா? அந்த பெரிய தேருல கோணேசன பாக்கணும்டா ", வீரவள்ளி தன் மகனிடம் கேட்டாள். வீரவள்ளி சோழநாட்டின் திருவையாற்றைச் சேர்ந்தவள். செல்வத்தேவை அவளை இங்கு சேர்த்தது. 
                         "சுசீந்திரத்திலேயே சிவன்கோவில் இருக்கே. அங்க போக கூடாதா? அவளோ தூரம் கடல் பயணம் போகணுமா?" கண்கன் கேட்டான்.
                        "உங்க அப்பா காசநோய் வந்து போறதுக்கு முன்ன அங்க அழைச்சிண்டு போயிருந்தார். அப்ப நீ என் வயத்துல இருந்த. எவளோ பெரிய கோவில் தெரியுமா டா? நம்ம தெருவ விட பெருசு. நம்ம முப்பாட்டனுக்கு முப்பாட்டன் காலத்துல கட்டின கோவில் டா. அந்த கோவில் கோபுரத்துல தங்க முலாம் செஞ்சது நம்ம வம்சத்து ஆளுடா. அந்த கோவில்ல மட்டும் தான் தங்க கோபுரம் இருக்கு வேற எங்கயும் கெடயாது. உன்ன அழைச்சிண்டு வரனும்னு உங்க அப்பா அப்பவே ஆசப்பட்டார். நான் இருக்கறச்சையே கூட்டிண்டு போயிடறேன்."

திருக்கேதீஸ்வரம், ஈழநாடு மேற்குபகுதி 

                           "சில வெள்ளையர்கள் நம்ம ஊருக்கு வந்துருக்காங்க. இங்க வியாபாரம் செய்யனுமாம். அவங்களோட இருந்து  ஈழநாட்ட சுத்திக்காட்டச்ச்சொல்லி கேட்டாங்க. நெறைய வெள்ளி தருவாங்களாம்." எல்லாளன் தன் நண்பர்களிடம் கூறினான். 
                          "எந்த நாடு? எங்கிருந்து வந்தாங்களாம்?", குமரன் ஆர்வத்துடன் கேட்டான்.
                          "போர்ச்சுகல். எட்டு மாசம் ஆச்சாம் அவங்க இங்க வந்து சேர. 16 கப்பல்ல வந்திருக்காங்க. பஞ்ச ஈஸ்வரம் சுத்தி காட்டணுமாம்" 
                          "இங்க யாரும் ஏசுவ வழிபடறது இல்ல. ஒரு சர்ச் கூட இங்க இல்ல. நம்ம தான் கட்டணும் போல இருக்கு." போர்ச்சுகீஸில் ப்ரெட்ரிக் கன்ச்டண்டினோவிடம் சொன்னான்.
                          "(போர்ச்சுகீஸில்) இவங்க யார வணங்குறாங்க?" கேட்டான் தாமஸ் டிசோசா. 
                          "(போர்ச்சுகீஸில்) மலபார்ல வழிபடறாங்களே சிவன் அவரத்தான் இங்கயும் வழிபடறாங்க. சிலர் புத்தர்னு யாரையோ வழிபடுறாங்க." கூறினான் பிரெட்ரிக்.
                          "(போர்ச்சுகீஸில்) இங்க இருக்கற எல்லாரையும் ஏசுவ வணங்க வெக்கறேன். ஏசுவயும் கிறிஸ்தவத்தையும் உலகம் முழுதும் பரப்புவேன்." கர்ஜித்தான் கன்ச்டண்டினோ. 
                           அப்போது எல்லாளன் அறைக்குள் நுழைந்தான்.அவர்களுக்கு உதவ சம்மதித்தான். கூறியது போல அனைத்து கோவிலுக்கும் கூட்டி சென்று தரிசனம் செய்து வைப்பதாகவும் கூறினான். அவனுக்கு போர்ச்சுகீஸ் மொழி பயிற்சி அழிக்க கன்ச்டண்டினோ உத்தரவிட்டான்.
                           இரண்டு மாதங்கள் கழித்து பஞ்ச ஈஸ்வரங்களை பற்றி கன்ச்டண்டினோவிடம் கூறினான் எல்லாளன். அவர்களின் சதியை இவன் அறிந்திருக்கவில்லை. எல்லாளனை பொருத்தமட்டில் இவர்கள் வியாபாரிகள், ஈழநாட்டை சுற்றி பார்க்க விரும்புபவர்கள் அவளோ தான். 2000 போர்ச்சுகீஸியர்களை அனைத்து கோவிலுக்கும் அழைத்து சென்றான். கன்ச்டண்டினோ கோவில்களின் ஆடம்பரத்தை பார்த்து பிரம்மித்தான். எல்லோரும் போர்ச்சுகீஸியர்களை சிறந்த முறையில் வரவேற்றனர். போர்ச்சுகீஸியன் ஒருவன் கோவில்களை அப்படியே படமாக வரைந்தான்.

திருவனந்தபுரம் 

                         "அம்மா. கோணேஸ்வரம் போக ஏற்பாடு ஆய்டுத்து. இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பவேண்டியது தான். மணிகண்டனும் சிவசிதம்பரமும் நம்மளோட வராங்க. நீ ஒத்துன்டா, மதுமதியும் வரேன்னா." கண்கன் வீரவள்ளியிடம் சொன்னான்.
                          "அவ வைணவச்சி ஆச்சே. அவ எதுக்கு டா. நா ஒத்துக்கமாட்டேன்."
                          "நீ தான் ராமர் ராமேஸ்வரத்துல சிவனுக்கு பூஜ பண்ணினார்னு எனக்கு சொல்லிக்கொடுத்த. ராமர் விஷ்ணுவோட அவதாரத்துல ஒன்னு தானே. அவர் அப்ப நாமக்காரர் தான். அவர் சிவன வணங்கலாம். மதுமதி கூடாதோ?"
                         "எனக்கு சொல்லி தரயா. எப்ப பாரு விதண்டாவாதம். வரட்டும். வரட்டும்."
                         "அப்ப  நான் அவ கிட்ட சொல்லிடறேன். சம்சயம் இல்லையே."
                         "இல்லை. இல்லை. வரட்டும்"

திருகேதீஸ்வரம் திரும்பும் வழியில் 
                         
                        "(போர்ச்சுகீஸில்) அய்யா. கோணேஸ்வரம் கோவில் தான் உலகத்துலேயே பெரிய கோவில். வருஷபொறப்பன்னிக்கு சுவாமி தேர்ல வரும் பாருங்க அப்பிடி இருக்கும். நீங்க கூடப்பாத்தீங்களே தேர் பெருசா. ஞாபகம் இருக்குல்லே. அந்த கோவிலுக்கு பயங்கரமா சொத்து இருக்கு. தங்க நகைகள மட்டும் பத்து அறைகள்ல வைக்கலாம்.", எல்லாளன் கான்ச்டண்டினோவிடம் கூறினான்.
                      "ஜனவரி 1?"
                      "இல்ல சித்திரை 1."
                      "சைத்ரா ஒன்"
                      "(போர்ச்சுகீஸில்) தமிழ் வருஷப்பொறப்பு."
                      "(போர்ச்சுகீஸில்) நான் அன்னிக்கி பாக்கணும்"

திருகேதீஸ்வரம்    
                        
                      "(போர்ச்சுகீஸில்) நேரம் வந்துருச்சு. இதான் நம்ம நேரம். முட்டாள் எல்லாளன் நம்ம நோக்கம் தெரியாம எல்லாத்தையும் காட்டி கொடுத்துட்டான்.  நாளை வரட்டும், திருகேதீஸ்வரம் கோவில நம்ம கொள்ளையடிப்போம். அதே மாதிரி வருஷபொறப்புக்கு முன்னாடி பஞ்ச ஈஸ்வரத்தையும் கொள்ளை அடிப்போம். அந்த சிவன் சிலைய என் காலால உதச்சி அதே இடத்துல ஏசுராஜா  சிலைய வெக்கறேன். உலகத்துலேயே பெரிய கோவில்ல கடவுள் நம்ம கர்த்தர். ஹா ஹா ஹா எல்லாம் அந்த கர்த்தருக்காக. அல்லேலுயா" தன் மக்களிடம் முழக்கமிட்டான் கன்ச்டண்டினோ.
                       எல்லாளனும் அங்கு இருந்தான். முதல் முறையாக அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டான். ஊருக்கு வேகமாக ஓடினான். தன நண்பர்களிடம் போர்ச்சுகீஸியர்களின் திட்டங்களை கூறினான். இருக்கும் ஆயுதங்களை எடுத்து குமரனை கோணேஸ்வரத்துக்கும், கதிர்காமனை தொண்டேஸ்வரத்துக்கும், மார்த்தாண்டனை நகுலேஸ்வரத்துக்கும், சேனாபதியை முன்னேஸ்வரத்திற்கும் அனுப்பி வைத்தான். 
                        "வருடபிறப்புக்கு மக்கள் வெள்ளமா வருவாங்க. நாம தான் உயிர் சேதம் இல்லாம பாத்துக்கணும். கோவிலையும் அந்த சதிகாரங்க நெருங்காம செய்யணும். செய்வோம். கடவுள காக்க மனுஷனுக்கு வாய்ப்பு செய்வோம்." எல்லாளன் தன நண்பர்களிடம் கூறி அனுப்பினான்.
                       அவர்கள் சென்றவுடன், போர்ச்சுகீஸியர் இருக்கும் இடத்திற்கு சென்றான். புதிதாக இன்னும் ஆயிரக்கணக்கில் இருந்தனர். புதிதாக ஆயுதங்கள் வேறு. தேர் போல் சக்கரம் கொண்ட ஆயுதமும் இருந்தது. உருண்டையாக லட்டு போல கருநிறத்தில் ஆயுதங்கள் இருந்தன. ஒரு சிலர் வட்டங்களை வரைந்து டப் டப் என்று அதில் எதை வைத்தோ சுட்டு கொண்டிருந்தனர். அந்த ஆயுதத்தில் இருந்து வில்லிலிருந்து அம்பு செல்வது போல கல் வடிவில் ஒன்று சென்றது.கன்ச்டண்டினோவிடம் இவைகளைப்பற்றி எல்லாளன் கேட்டான். "(போர்ச்சுகீஸில்)துப்பாக்கி. இத அழுத்தினா குண்டு போய் ஆள சுடும். ஆள் 5 நொடில செத்துடுவான். இது வெடிகுண்டு, இது பீரங்கி.", பட்டியலிட்டான் கன்ச்டண்டினோ. எல்லாளன் ஆபத்து மேலும் அதிகமானதாய் உணர்ந்தான். அவன் கிறிஸ்தவனாக விரும்புவதாய் கன்ச்டண்டினோவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
                        கோவில் பூசாரி வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான். பூஜாரியிடம் நிலையை விளக்கி அவரை கோவிலுக்கு அழைத்து ஓடினான். இருவரும் தங்களால் இயன்ற அனைத்து நகை மற்றும் தூக்குமளவு எடை கொண்ட சிலைகளை எடுத்தனர். சுடுகாட்டின் அருகே நிலத்தை தோண்டி அங்கு அவைகளை மறைத்து வைத்தனர். அடையாளமாக எல்லாளன் அங்கு தன் குதிரையை அருகிலிருந்த மரத்தில் கட்டினான். 

அடுத்த நாள்
முன்னேஸ்வரம்   .     
                          "என் பெயர் சேனாபதி. திருகேதீஸ்வரத்தவன். இந்த கோவிலுக்கு வந்தாங்களே போர்ச்சுகீஸ் காரங்க பஞ்ச ஈஸ்வரத்தையும் தரைமட்டமாக்க நினைக்கிறாங்க. அவங்க கோவிலாவும் மாத்த போறாங்கலாம். திருகேதீஸ்வரத்துல இருந்து இங்க படையோட வருவாங்க. நம்ம ஒண்ணா சேந்தா அவங்கள தடுக்கலாம்.", சேனாபதி கோவில் வாசலில் இருந்து ஊர் மக்கள் அனைவரிடமும் கூறினான்.
                          தங்கள் உயிரையே கொடுக்கவும் தயார் என பலர் முன்வந்தனர். போர்ச்சுகீஸியர்களின் அபாயகரமான ஆயுதங்களை பற்றி இவர்கள் அப்போது  அறிந்திருக்கவில்லை.

நகுலேஸ்வரம் செல்லும் வழியில் 
                          மார்த்தாண்டன் நகுலேஸ்வரம் செல்லும் வழியில் ஒரு கடும் விஷம் கொண்ட பாம்பு அவனைத் தீண்டியது. விஷமேரி துடிக்க ஆரம்பித்தான் மார்த்தாண்டன். மக்களை காக்க முடியாமல் போனதே அந்த கடவுளையே காக்க வாய்ப்பு வந்தும் முடியாமல் போனதே என்று வருந்தினான். துயர் மிகுந்து தானே தன தலையை அறுத்து மாண்டான் மார்த்தாண்டன். 

தொண்டேஸ்வரம் செல்லும் வழியில் 
                          கதிர்காமன் குதிரை ஓட்டத்தில் வல்லவன். அதனாலேயே திருகேதீஸ்வரத்திலிருந்து அதிக தொலைவில் இருக்கும் தொண்டேஸ்வரத்திற்கு கதிர்காமனை அனுப்பினான் எல்லாளன். அது போல் தொண்டேஸ்வரத்தையும் வந்தடைந்தான். வரும் வழியில் உள்ள சிற்றரசர்களையும் அவர்கள் பட்டாளத்தையும் ஆபத்தை விளக்கி தன்னுடன் கூட்டிச்சென்றான். அதில் பாதியினரை கோணேஸ்வரம் அனுப்பினான்.


கோணேஸ்வரம் செல்லும் வழியில் 
                         குமரன் எல்லாளனை நன்கு அறிந்தவன்; உயிர் தோழன். அவன் மனதில் கோணேஸ்வரத்தை எவ்வாறு காக்கலாம் என்பதே ஓடிக்கொண்டிருந்தது. கதிர்காமன் கண்டி ராஜாவிடம் கூறி அவர் படையை அனுப்புவதாகவும் கூறி இருந்தான். குமரன் கோவிலை அடைந்தான். கோவில் திருவிழாக்கோலமாய் இருந்தது. அவன் கோவிலுக்கு நேரவிருக்கும் ஆபத்தினை கூறியும் அதை யாரும் ஏற்க விரும்பவில்லை. விழா நடக்காமல் இருக்க கிளப்பப்பட்ட பொய் செய்தி என எண்ணினர்.





திருகேதீஸ்வரம்       

                          கான்ச்டண்டினோ அவனின் படையுடன் எல்லாளன் உதவியோடு கோவிலை அடைந்தான். கோவிலில் மீதமிருந்த நகை சிலைகளை தன் வசமாக்கினான். கிடைத்த நகை அளவினையும் இடையையும் கண்டு ஆச்சரியப்பட்டான். "(போர்ச்சுகீஸில்) இந்த சின்ன கோவில்லையே இவளோனா அப்போ கோணேஸ்வரத்த நினச்சி பாருங்க. அல்லேலூயா எல்லாம் கர்த்தருக்கே. அல்லேலூயா  அல்லேலூயா"  அனைவரும் அல்லேலூயா என உரக்க பல முறை கூறினர். எல்லாளன் முந்தைய நாள் சிவனின் சிலையை எடுக்கவில்லை. எடை அதிகம் ஆயிற்றே. அந்த சிலையினை பார்த்த கான்ச்டண்டினோவிற்கு  ஒரு திட்டம் தோன்றியது. ஊர் மக்கள் அனைவரையும் கோவிலுக்கு அழைத்தான். அனைவரும் வந்தவுடன் ஊர்மக்கள் முன்பு சிலையில் சிறுநீர் கழித்தான். சிறுநீர் கழித்தவாறே  அல்லேலூயா அல்லேலூயா என உரக்கச் சொன்னான். மக்கள் அனைவரையும் கிறித்துவ மதத்திற்கு மாறுமாறு ஆணையிட்டான். அதை உறுதி செய்ய ஒவ்வொருவராக வந்து சிலையினில் சிறுநீர் கழிக்கச்சொன்னன். அவ்வாறு செய்யாவிடில் ஆண்களின் ஆண்குறியும் பெண்களது ஒரு மார்பகமும் அறுக்கப்படும் என அச்சுறுத்தினான். முதலில் கோவில் பூஜாரியை சிலையின் மேல் சிறுநீர் கழிக்கச்சொன்னான். அவர் அதனை செய்யாததால் அவர் ஆண்குறியை அறுத்தான். அடுத்து எல்லாளனை சிறுநீர் கழிக்கச்சொன்னான். எல்லோரும் மறுத்தால் அனைவருக்கும் இதே நிலைமை தான். மற்ற கோவில்களை காக்க வேண்டுமாயின் இப்போது இதனை ஒப்புக் கொள்வதே சரியென எண்ணினான். போர்ச்சுகீஸியர்களுக்கு தமிழ் தெரியாதமையால் இவர்களின் நோக்கத்தை மக்களுக்கு  "என் மக்களே இந்த சதிகாரர்கள் இதே போல் மற்ற ஈஸ்வரங்களையும் அழிக்க நினைக்கிறார்கள். இங்கிருக்கும் உயிர்கள் இவர்களை விரட்டியடிக்க தேவை. இப்போதைக்கு ஒற்று கொள்ளுங்கள். குருக்களின் குறியினை அறுத்தவர்கள் பிணங்களை ஈச்சைகளுக்கு உணவாக்குவோம்." என எடுத்துரைத்தான். கான்ச்டண்டினோ எல்லாளனிடம் எனா கூறினான் என்று கேட்க, "(போர்ச்சுகீஸில்) மக்களை ஒப்புக்கொள்ளுமாறு சொன்னேன். உங்களின் ராஜ்ஜியத்திலும் கிறித்துவ மதத்தின் வாழ்க்கையிலும் பொற்காலம் அமையும் என கூறினேன்" என்று எல்லாளன் சொன்னான். அனைவரும் மதம் மாற ஒற்று கொண்டு அவன் கூறியவாறு செய்தனர். எல்லாளன் ஆல்பர்ட் ஆனான். போர்ச்சுகீஸியர்கள் வெற்றியில் துள்ளிக் குதித்தனர்.கோவிலை அடிமட்டமாக்கி அங்கு ஒரு கிறித்துவ தேவாலயத்தை அமைத்தனர். கான்ச்டண்டினோ ப்ரெட்ரிக் மற்றும் தாமஸை முன்னேஸ்வரம் மற்றும் தொண்டேஸ்வரத்திற்கு சென்று அங்குள்ள கோவில்களை தேவாலயம் ஆக்குமாறு கட்டளை இட்டான். எல்லாளனை நகுலேஸ்வரத்திற்கு அனுப்பினான். மேலும் தானே கோணேஸ்வரம் செல்வதாக கூறினான். அனைவரையும் 12 ஆம் தேதி கொநேச்வரம் வருமாறு ஆணையிட்டான்.

அடுத்த நாள் ஏப்ரல் 10
திருவனந்தபுரம்
                          "அம்மா நம்ம இன்னிக்கி சாயும் காலம் கிளம்பனும். பஞ்ச ஈஸ்வரம் போறவங்களுக்கு கப்பல் ஏற்பாடு செஞ்சிருக்காரு அரசர்.", கண்கன் வீரவல்லியிடம் தயாராக சொன்னான். மேலும், "நான் மணிகண்டன், சிவசிதம்பரம், மதுமிதா கிட்டயும் தயாராக சொல்ல போறேன். துணிமணிகள கட்டிவெசிக்கோ அம்மா."
"ரெண்டு வாரத்துக்கு தேவயானதுகள எடுத்து வெச்சிக்க சொல்லுடா."

முன்னேஸ்வரம் 
                       "அவர்கள் எந்நேரமும் வரலாம். உங்கள் ஆயுதங்களுடன் தயாராகுங்கள். அவர்களுக்கு நாம் யாரென்று காண்பிப்போம்.", சேனாபதி அங்கு கூடியிருந்தவர்களிடம் கூறினான்.
                        அனைவரும் போர்ச்சுகீஸியர்களை விரட்டி அடிக்கும் முனைப்புடன் தயார் ஆகினர். எதிர்பார்த்தவாறே பிரெட்ரிக் மற்றும் தாமஸ் டிசோசாவின் படை கோவிலின் வாசல் முன் சூழ்ந்தது. சேனாபதி அவர்கள் முன் சென்று, "போர்ச்சுகீஸிய அசுரர்களே!! ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொல்லும்  மதத்தினவராமே நீங்கள். ஆனால் மதக்கொள்கைகளை மீறுகிறீர்கள். உங்கள் தெய்வமும் கண்டுகொள்ளவில்லை. எங்கள் தெய்வமோ அசுரர்களை அழிப்பதற்கே ஒவ்வொரு முறையும் பிறக்கிறான். இதோ அசுரர்களை நீங்கள் வந்துள்ளீர்கள். அவருக்கு வேலை வேயக்காமல் நாங்களே உங்களை அழித்திடுவோம். திரு..." என்று கூறிக் கொண்டிருக்கும்போதே ஒரு துப்பாக்கி குண்டு அவன் திருநீர் அணிந்திருந்த நெற்றியைப் பெயர்த்தது. சுட்ட போர்ச்சுகீஸிய சிப்பாய், "(போர்ச்சுகீஸில்) எதிரி அதிகமாய் பேசினால் பிடிக்காது" என கூறியவாறே சுட்டு வீழ்த்தினான். அவன் முதுகில் தட்டிக்கொடுத்த பிரெட்ரிக், "(போர்ச்சுகீஸில்) பாருங்கள். நீங்கள் தாக்கப்படும்போது உங்கள் கடவுள் காப்பாற்ற வரவில்லை. அவரை நம்பி முடமாகாதீர்கள். கிறித்துவ மதத்திற்கு மாறுங்கள். உயிருடன் கிறித்துவனாக வாழ விரும்புபவர்கள் உள்ளே செல்லுங்கள். மற்றவர்கள் இங்கே குண்டு பட்டு செத்து மடியுங்கள்." என அதட்டினான். உயிர் பயத்தில் பலர் கோவிலுக்குள் ஓடினர்.மீதமிருந்த அனைவரையும் பிணமாக்கினான் பிரெட்ரிக். கோவிலுக்குள் சென்ற சிலர் நகைகளை எடுத்துக்கொண்டு போர்ச்சுகீஸியர்கள் வருமுன் பின்வழியே தப்பித்து தொண்டேஸ்வரம் நோக்கி சென்றனர். போர்ச்சுகீஸியர்கள் கோவிலை இடித்து தேவாலயம் ஆக்கினர். லிங்கம் இருந்த இடத்தில் இப்போது சிலுவையில் ஏசு.

நகுலேஸ்வரம் செல்லும் வழியில் 
                           எல்லாளன் அவனோடு அனுப்பிவைக்கப்பட்ட படையோடு நகுலேஸ்வரம் நோக்கி புறப்பட்டான்.500 சிப்பாய்கள், 4 பெட்டிகளில் வெடிகுண்டுகள், பத்து பீரங்கிகளோடு அவனுடன் சென்றனர். ஒவ்வொரு சிப்பாயிடம் ஒரு பெரிய துப்பாக்கியும் இருந்தது. பாதை மாற்றி அழைத்து செல்லலாம் என்று நினைக்கையில் இவர்களில் பலர் இவனோடு கோவிலுக்கு வந்திருப்பதால் அது சாத்தியமாகாது என்று விளங்கியது.
வேறு எதை செய்யலாம் என்று யோசித்தவாறே இருந்தான். இவர்களோடு திருகேதீஸ்வரத்தை சேர்ந்த 5 சமையல்காரர்கள் வந்தனர்.
                          சட்டென எல்லாளனுக்கு ஏதோ தோன்றியது. சமையல்காரர்களை அழைத்தான்.
"சொக்கா இந்த மிருகங்களோட திட்டங்கள நீ நெனைச்சா தடுக்கலாம். கருவேப்பிலை பதிலா விஷ இலைகளே சேறு. சாப்டுட்டு சாகட்டும். அவங்க ஆயுதங்கள எடுத்துட்டு கோணேஸ்வரம் போவோம்."
"இது நேத்தே உங்களுக்கு புலப்பட்டுருந்தா கான்ச்டண்டினோல இருந்து எல்லாரையும் சாகடிச்சிருக்கலாமே "
"நேத்து அது தப்பா தெரிஞ்சுது. இன்னைக்கு வேற வழி இல்ல. கண்ணனே பாரதத்துல கர்ணன மாய்க்க சதி செஞ்சிருக்கானே."
"ஆகட்டும் எல்லாளா தயார் ஆகு."
                        சொக்கனும் மற்ற சமையல்காரர்களும் போர்ச்சுகீஸியர்களுக்கு உணவு பரிமாறினார். உணவு உண்டு அனைவரும் மயங்கி விழுந்தனர். எல்லாளனுக்கு விஷம் மட்டும் உயிரை மைக்குமோ என சந்தேகம். அனைவரின் தலையையும் வாளினால் வெட்டி தீர்த்தான். அனைவரிடம் இருந்த துப்பாக்கிகளி எடுத்து சாக்கினில் கட்டச்செய்தான். எல்லாளன் கோபத்தில், " முண்டங்களே! சிவன் மீதே சிறுநீர் கழிக்க வைத்துவிட்டீர்களே! உங்களது வெட்டப்பட்ட தலைகளை வனவிலங்குகள் விழுங்கி மழமாகி மண்ணோடு மண்ணாகுங்கள். 12 ஆம் தேதி கான்ச்டண்டினோவிற்கும் இதே நிலைமை தான். அவனிடம் ஆவிகளாகி போய் சொல்லுங்கள். மழமாகட்டும் அவன் தலையும்." என காடு முழுதும் கேட்கும்வண்ணம் கத்தினான்.
                       சொக்கனும் சமையல்காரர்களும் எல்லாளனுக்கு உதவியாக
ஆயுதங்களை எடுத்துக்கொண்டு நகுலேஸ்வரம் கப்பல்கரைக்குச் சென்றனர்.

தொண்டேஸ்வரம் 

                       முன்னேஸ்வரத்திளிருந்து தப்பித்தவர்கள் நகை மற்றும் சிலைகளுடன் தொண்டேஸ்வரம் வந்து அடைந்தனர். போர்ச்சுகீஸியர்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் தன்மையை விளக்கினர். 12 சிற்றரசுகளின் சிப்பாய்கள் அங்கு கூடி இருந்தனர். கோணேஸ்வரத்தில் தாக்குதல் இன்னும் தீவிரமாய் இருக்கும் என எண்ணி கண்டி ராஜன் ஜெயவீரசிங்கே தலைமையில் பாதியினரை கோணேஸ்வரம் அனுப்பினான்.
                        கோணேஸ்வரம் சென்றவர்கள் போக 3000 சிப்பாய்களும் 8 சிற்றரசர்களும் அங்கு இருந்தனர். போர்ச்சுகீஸியர்கள் கோவிலை அடைய கடந்து செல்லவேண்டிய மலை உச்சியில் படையினரை திரட்டினான் கதிர்காமன். மலை உச்சியை அடைவதற்கு முன்பே அனைவரையும் மாய்க்க வேண்டுமென்பதே இவர்களின் திட்டம். கதிர்காமன், எல்லாளன் மற்றும் மார்கண்டேயன் ஈழநாட்டின் தலைசிறந்த போர்வீரர்கள். கதிர்காமன் திட்டமிடுதலில் வல்லுநன். போர்ச்சுகீஸியர்கள் மலையை நெருங்கும்போதே அனைத்து திசைகளிலிருந்தும் அவர்களின் மேல் விஷம் தேய்த்த அம்பினை செலுத்துமாறு ஆணையிட்டான். சிப்பிகள் மலையினை நெருங்கும் போர்ச்சுகீஸியர்கள் மீது அம்பினை செலுத்தினர். எல்லாத்திசைகளிலும் இருந்து அம்பு அவர்கள் மீது வந்ததால் போர்ச்சுகீஸியர்கள் திணறினர். அவர்கள் பாதுகாப்பு கவசங்களை உடுத்தி அம்புகள் வரும் திசையில்  புறப்பட்டனர். அவர்கலின் எண்ணிக்கை பாதிக்கும் மேலாக குறைந்து 500 பேர்களே இருந்தனர். கதிர்காமன் இதை கவனித்து, "நாமோ இங்கு 3000 பேர் இருக்கிறோம். அவர்களோ வெறும் 500 பேர் தான். அதிலும் பலர் இறந்து விட்டனர். இவர்களுக்கு எதற்கு இங்கு 3000 சிப்பாய்கள்? உங்களில் இந்த திசையில் இருப்பவர் தவிர 2000 பேர் இப்போதே கோணேஸ்வரம் புறப்படுங்கள். கடவுளை காக்க மனிதனுக்கு கிடைத்த வாய்ப்பு. இதுவே ஒரு வீரனுக்கு கிடைக்கும் உயர்ந்த வாய்ப்பு. கொநேஸ்வரத்தை காத்திட கிளம்புங்கள். எதிரிகளை வீழ்த்திடுங்கள்" என கூறி சிப்பாய்களை அனுப்பி வைத்தான்."
                   கூறியவாறு அனைவரும் கிளம்பினர் மீதமிருந்தவர்கள் அம்புகளை போர்ச்சுகீஸியர்கள் மீது செலுத்தினர். செலுத்தியும் யாரும் வீழ்ந்து மடியாமல் இருந்ததை கவனித்த அவர்கள் பாதுகாப்பு கவசத்தை அணிந்திருப்பதை பார்த்தான் .  இவர்களின் முயற்சி தோல்வி அடையும் என எண்ணினான்.
                  சிப்பாய்களை அழைத்து, "வீரர்களே! நாட்டை காக்கும் மாவீரர்களே!! இறையின் பாதுகாவலர்களே!! இப்பொழுது நாம் ஈஸ்வரனை பகைத்தால் என்ன ஆகும் என்று அவர்களுக்கு காட்டும் தருணம் கிட்டியுள்ளது. அவர்களே அசுரர்கள். நரகாசுரர்கள். ராவணர்கள். மாய்த்திடுங்கள் அவர்களை. அவர்கள் 500க்கும் குறைவாக உள்ளனர். நாமோ ஆயிரம் பேர். ஆயிரம் சிவன்கள் 500 அசுரர்களை மாய்த்திட மாட்டார்களா? அவர்கள் ஆயுதங்களை கண்டு அஞ்ச வேண்டாம். உள்ளே சிவனைக்கொண்டு முன்னே செல்லுங்கள். ஈட்டியையும் வாலினையும் வைத்து அவர்களை வெட்டி சாயுங்கள். அம்புகளை செலுத்துங்கள். அவர்களை வீழ்த்தி விட்டு இங்கேயே தீபாவளி கொண்டாடுவோம் அவர்கள் ஆயுதங்களை வெடித்து. ஓம் நம சிவாய தாக்குங்கள்" என ஆணையிட்டான்.
                   சிப்பாய்கள் எதிரிகளை நோக்கி சென்றனர். போர்ச்சுகீஸியர்களின் பீரங்கிகள் குண்டுகளை செலுத்த துவங்கியது. ஈழ சிப்பாய்கள் பெருமளவில் மாண்டனர். அடுத்து சிப்பிகள் பயப்படாமல் முன்னேறினாலும், அவர்களிடம்,
                  "உங்கள் அம்புகளும் ஈட்டிகளும் இங்கிருந்தே அவர்கள் கண்களை நோக்கிச் செல்லட்டும். வாளினை அவர்களை நெருங்கியதும் வெட்டிச்  சாய்க்க வைத்துக் கொள்ளுங்கள்." என ஆணையிட்டான்.
 போர்ச்சுகீஸியர்கள் தாக்குதலை தீவிரமாக்கினர். மேலும் ஈழ சிப்பிக்கள் உயிர் இழந்தனர்.
                "(போர்ச்சுகீஸில்) அவர்களின் ஆயுதங்களை பார்த்தீர்களா? கற்காலத்தவர் போல. நம்முடைய ஆயுதங்களே நமக்கு பலம். நாம் கவசம் அணிந்திருப்பதை கவனித்து கண்களை நோக்கி செறிய ஆயுதங்களை செலுத்துகிறார்கள். தலையை குனிந்தவாறு வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் நம்மை நெருங்கியவுடன் அவர்களை தாக்குவோம். குண்டுகள் வீணாகாமல் இருக்...", என்று தாமஸ் கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு ஈட்டி அவன் தலையை அறுத்து தொலை தூரத்தில் எறிந்த்தது.
                இதனால் கோபம் அடைந்த பிரெட்ரிக் அனைத்து பீரங்ககிகளிலிருந்தும் வரிசையாக குண்டுகளை செலுத்த செய்தான். 800 க்கும் மேற்பட்ட ஈழத்தினரில் 42 பேர் மட்டுமே உயிரை பிடித்து இருந்தனர். கதிர்காமன் 37 போர்ச்சுகீஸியர்களை வெட்டி சாய்த்தான். 17 துப்பாக்கி குண்டுகள் அவனை துளைத்திருந்தது. இருப்பினும் போரிட்டுக்கொண்டிருந்தான். ஒருக்கட்டதில் அவன் உடல் ரத்தம் சிந்தவில்லை. ரத்தம் சிந்த ரத்தம் வேண்டுமே!! தன கடைசொட்டுரத்தம் இருக்கும் வரை போரிட்டான். கண்களை திறந்தவாறே கீழே விழுந்தான்.
கடைசியில் உயிருடன் இருந்த 6 சிப்பாய்களும் மாண்டனர். 28 போர்ச்சுகீஸியர்கள் மட்டுமே விஞ்சி இருந்தனர். கோணேஸ்வரம் தம் வசமாவது சுலபம் இல்லை என்பதை உணர்ந்தனர். பிரெட்ரிக் கதிர்காமனின் வாளினை தன கையினில் எடுத்து, "நான் பார்த்ததிலேயே தலைசிறந்த போராளி. இவனை சகல மரியாதையுடன் இறைவினிடம் சேர்க்க வேண்டும்." என கூறினான். தொண்டேஸ்வரம் கோவிலுக்குள்ளே இவனை புதைத்து பன்னிரெண்டு குண்டுகளை செலுத்தினர். அவனுடைய வாளில், "உலகின் தலைசிறந்த போராளியின் வாள்" எனப் பொறித்து தன்னுடன் வைத்துக்கொண்டான் பிரெட்ரிக்.  கோவிலை இடித்து நகை சிலைகளுடன் கோணேஸ்வரம் புறப்பட்டனர் போர்ச்சுகீஸியர்.

கோணேஸ்வரம் 
                 வருஷப்பிறப்பிற்கு மக்கள் வரத்தொடங்கினர். குமரனின்  யாரும் இன்னும் நம்பவில்லை. அந்த நேரத்தில், ஜெயவீரசிங்கே தலைமையிலான படை கோணேஸ்வரம் அடைந்தது. ஜெயவீரசிங்கே கோவில் தலைவரிடம் விரைந்து, " நாங்கள் இப்போது தொண்டேஸ்வரத்திலிருந்து வருகிறோம். கதிர்காமன் அனுப்பி வைத்தான். இப்பொழுது கோவில் பேராபத்தில் உள்ளது. அதை காக்கவே இந்த அரசனும் இந்த வீரர்களும் உள்ளனர். கோவில் விசேஷங்கள் நடக்கட்டும். இப்பொழுது கதிர்காமனும் அந்த போர்ச்சுகீஸியர்களை வீழ்த்திவிட்டு இங்கே வந்துகொண்டிருப்பான்."
என கூறினான்.
                எங்கு காணினும் மக்கள் கூட்டமாய் இருந்தது கோணேஸ்வரம். மதுமதையையும் கோணேஸ்வரரையும் தரிசிக்க பல மக்கள் கூடி இருந்தனர். தங்க கோபுரம் மின்னி கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கில் நாதஸ்வர வித்வான்கள் பாடல் இசைத்து வழிபட்டுக்கொண்டிருன்தனர். வேத பண்டிதர்கள் வேதங்களை போட்டி போட்டு சொல்லிக்கொண்டிருந்தனர். இன்னும் உலகெங்கிலும் இருந்து மக்கள் வந்துகொண்டிருந்த வண்ணம் இருந்தனர்.

திருகேதீஸ்வரம் 
                முன்னேஸ்வரத்தில் சேனாபதியை வீழ்த்திய பிரெட்ரிக் ஏதோ சதி நடப்பதை உணர்ந்து ஒரு சிப்பாயை திருகேதீஸ்வரம் அனுப்பினான். அந்த சிப்பாய் கான்ச்டண்டினோவிடம் நடந்தவையை கூறினான். எல்லாளனும் அவன் நண்பர்களும் சேர்ந்து அவன் கோணேஸ்வரம் அடைவதை கடினமாக்கியதை உணர்ந்தான். எவ்வாறு கொநேச்வரம் கோவிலை அடையலாம் என சிந்திக்க தொடங்கினான்.
                அந்த நேரத்தில், திருகேதீஸ்வரத்தை தரிசிக்க நான்கு வேதபண்டிதர் வந்திருந்தனர். அவர்களை கான்ச்டண்டினோவிடம் அழைத்து வந்தான் காவலாளி. இவர்கள் கோணேஸ்வரம் செல்லும் பண்டிதர்கள் என்பதை அறிந்து கொண்ட கான்ச்டண்டினோ அவர்களை கொன்று, அவர்களின் உடைகளி எடுத்து கொண்டான். கார்த்யாயனி,  எல்லாளனின் மனைவியை அழைத்தான் கான்ச்டண்டினோ. கார்த்யாயனிக்கும்  எல்லாளனுக்கும் திருமணம் ஏழு மாதங்கள் தான் ஆகி இருந்தது.  அவள் கற்பம் அடைந்திருந்தாள். கான்ச்டண்டினோவின் அறையை திறந்த உடனே அவள் நெத்திப்பொட்டில் சுட்டான். சுமங்கலியை உயிர் மாய்ந்ததை காட்டும் வகையில் அவளின் நெற்றியில் ரத்தம் ஊற்றென சிந்தியது.
               திருகேதீஸ்வரத்தில் இருக்கும் பண்டிதர்களின் உடைகளை வாங்கினான் கான்ச்டண்டினோ. அவனுடன் சேர்த்து 100 போர்ச்சுகீஸியர்கள் பண்டிதர் உடையினை அணிந்துக்கொண்டனர். 11 ஆம் தேதியே கோணேஸ்வரத்தினை தாகிட வேண்டும் என திட்டமிட்டு தன படைகளை புரப்ப செய்து தானும் கிளம்பினான்.

ஏப்ரல் 11
கோணேஸ்வரம் செல்லும் வழியில் 
நகுலேஸ்வரம்- நள்ளிரவு 
               எல்லாளன் தரைவழியில் செல்வதை விட கடல் வழியே செல்வதே பாதுகாப்பாக எண்ணினான். ஒரு கப்பல் கரையை நெருங்குவதை கவனித்தான். அந்த காபளிலேயே சென்றிலாம் என முடிவு செய்து அந்த கப்பலை அடைந்தான். அந்த கப்பலில் மக்கள் பலர் இருப்பதை கண்டு, "அவசரம் அபாயம். நாம் விரைவாக கோணேஸ்வரம் அடைய வேண்டும். சில நாசக்கரர்களின் விபரீத ஆசைகளால், பஞ்ச ஈஸ்வரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நாளை மறுநாள் அவர்கள் கோணேஸ்வரத்தை கையகப்படுத்த உள்ளனர். அதற்கு முன்பு நாங்கள் அங்கே செல்ல வேண்டும். தயை செய்து எங்களை அங்கு செல்ல உதவிடுங்கள்." என கூறினான்.
            கப்பலிலிருந்த பயணி ஒருவன், "நாங்களும் கொநேச்வரம் தான் போறோம். மாலுமி அலுப்பாயிடாம இருக்கட்டுமேனு தான், கரை ஒதுங்க சொன்னோம். அதிர்ஷ்ட்டவசமா அது உங்களுக்கு உதவிருக்கு. இப்பவே கிளம்புவோம். வயசானவங்க, பெண்கள், குழந்தைகள இங்க எறக்கிட்டு கிளம்புவோம்." என கூறினான்.
            அங்கிருந்து ஒரு மூதாட்டி வேகமாக வந்து, "டேய் கண்கா!! நான் இங்க எறங்க மாட்டேன். என் சாமி அங்க ஆபத்துல இருக்கு. நீ எறங்கி போணு என்ன சொல்ற. நான் வீரவள்ளி. வீரம்னா என்னன்னு தெரயும்ல உனக்கு? எல்லாரும் போவோம். பொம்மனாட்டிகளும் என்ன வேணும்னாலும் செய்வா. என்னடி சொல்ற மதுமதி?" என தங்களையும் கூடி செல்ல கூறினாள்.
             கப்பல் கொநேச்வரம் நோக்கி கிளம்பியது. கண்கன், "நீங்க யாரு? எங்க இருந்து வறீங்க? என்ன பிரச்சனை?" என்று கேட்டான்.
            எல்லாளன் தன பெயரைகூறி நடந்ததை எல்லாம் கூறினான்.
"எல்லா கோவிலுக்கும் என்ட நண்பர்களை அனுப்பியிருக்கேன். அவர்களுக்கும் கோவில்களுக்கும் என்ன ஆயிருக்கென்டு தெரியல. மார்த்தாண்டனை இஞ்ச காணல. கான்ச்டண்டினோவ கொன்னுட்டு நான் உயிரோட இருந்தா அவனுக்கு என்ன ஆச்சுனு தேடனும். உங்க பெயர் கண்கனோ?"
"ஆமாம்."
"கண்கன் கோணேஸ்வரம் கோவில் கட்டின மகாராசா பெயர். அவரே காக்க வந்துருக்காரோ உங்க ரூபத்துல?"
கண்கன் மதுமதியை எல்லாளனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
"மதுமதி. கோணேஸ்வரம் அம்மனின் பெயர். உங்க பெயர் கேட்ட விடனே, உங்களால ஏதோ எனக்கு நன்மை கிடைக்கும்னு தோணுது."
              எல்லாளன் துப்பாக்கிகளை எடுத்து கப்பலில் இருந்த அனைவருக்கும் அதனை பயன்படுத்த சொல்லிக்கொடுத்தான்.

பிரெட்ரிக் மற்றும் அவனின் படையினர் 
               பிரெட்ரிக் தொண்டேஸ்வரத்திலிருந்து கொநேச்வரம் புறப்பட்டான். தனது வாளினை தூக்கி வீசிவிட்டு கதிர்காமனின் வாளினை தன உரையில் வைத்துக்கொண்டான். செல்லும் வழியில், 200 கூடாரங்களில், பலர் ஓய்வெடுப்பதை கண்டான். தனது சிப்பாய் ஒருவனை அங்கு அனுப்பி பார்க்க சொன்னான்.
              பார்த்துவிட்டு திரும்பி வந்த சிப்பாய், "(போர்ச்சுகீஸில்) ஈழ சிப்பாய்கள் போல இருக்கிறார்கள். அவர்களை உயிருடன் விடுவது நமக்கு ஆபத்து. அவர்கள் நீர் அருந்த இருக்கும் தொட்டியில் விஷம் கலந்துவிட்டேன். குடித்து இரண்டு மணி நேரத்தில் இறந்து விடுவார்கள்."
             "(போர்ச்சுகீஸில்) சபாஷ். விசத்தை நம்ப வேண்டாம். கதிர்காமன் போல் இன்னொருவன் வந்தால் சமாளிப்பது கடினம். பீரங்கிகளால் சுட்டுத் தள்ளுங்கள். அப்படியே நிரந்தரமாக தூங்கி விடட்டும்."
             பீரங்கிகளால் சுடப்பட்டு அனைவரும் பொசிங்கினர். கட்டியிருந்த குதிரைகள் யானைகள் என எல்லா மிருகங்களும் மடிந்தன.

கான்ச்டண்டினோ மற்றும் அவன் படையினர் 
               கான்ச்டண்டினோ 1000 சிப்பாய்களுடன் கோணேஸ்வரம் புறப்பட்டான். அதில் 100 பேர் பண்டிதர் போல உடை அணிந்திருந்தனர். எல்லோரையும் இழைப்பார ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு,
               "(போர்ச்சுகீஸில்) என் கிறித்துவ சகோதரர்களே! இறைவனின் குழந்தைகளே!! நாம் இறைதூதர்கள். உலகமே கிறித்துவத்தை பின்பற்ற வைக்க வேண்டும். நாளை நமது நாள். உலகின் மிக பெரிய இறைவழிபாட்டு தளம் கோணேஸ்வரம். அனால் அங்கு கடவுளோ ஏசு இல்லை. நாம் தான் அதை ஏசுவின் தேவாலயம் ஆக்க வேண்டும். அடிமட்டமாக்கவேண்டும் அந்த கோவிலை. சிவன் இருந்த அதே இடத்தில ஏசு ராஜா இருக்க வேண்டும். அதுவே நம் பிறப்பின் நோக்கம். அங்கு என்ன செய்ய வேண்டும் என நான் இப்போது கூறுகிறேன். பண்டிதர் போல் உடை அணிந்த நம்மை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள். நாம் கோவிலுக்குள் சென்று அங்குள்ளவர்களை சுட்டுத்தள்ள வேண்டும். அதே நேரத்தில் மற்றவர்கள் போரிட ஆரம்பியுங்கள். அங்கே உள்ள அனைத்து வீரர்களும் உங்களிடம் சண்டை இட ஆரம்பிப்பர். அந்த நேரத்தில் கோவில் நகைகளையும் சிலைகளையும் நாம் கையக படுத்தி கடல் வழியே திருகேதீஸ்வரம் புறப்படுவோம். நீங்கள் அனைவரையும் கொன்று ஊர் திரும்புங்கள். அல்லேலூயா!! அல்லேலூயா!!"
              அனைவரும் அல்லேலூயா அல்லேலூயா என கோஷமிட்டனர்.

மதிய நேரம் 
கோணேஸ்வரம்
                 குமரன் கோணேஸ்வரம் அடைந்த படையினரிடம், "வீரர்களே!! போர்ச்சுகீஸியர்களின் திட்டம் வருடப்பிறப்பின் முன் கோவிலை கையகப்படுத்துவது. இன்னும் மூன்று நாட்கள் தான் வருடப்பிறப்புக்கு உள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். என்னுடைய மற்ற நண்பர்கள் இன்னும் வரவில்லை. கதிர்காமனும் இன்னும் வரவில்லை. அவன் போரில் இறந்திருக்க கூடும். அப்படியானால் நம்மை விட போர்ச்சுகீஸியர்கள் படை பலம் வாய்ந்தவர்கள். இந்த கோவிலை உயிரை கொடுத்தாவது காத்திடுவோம். போருக்கு தயாரகிடுவோம்." என தயார் படுத்தினான்.
                  பண்டிதர்கள் போல் உடை அணிந்த போர்ச்சுகீஸியர்கள் கோவிலை அடைந்தனர். அவர்களை மரியாதையுடன் கோவில் தலைவர் வரவேற்றார். தொலை தூரத்திலிருந்து வரும் பண்டிதர்கள் என அவர் நினைத்தார். அதே நேரம் பக்கத்தில் இருந்த திடலில் ஒரு பீரங்கி சுடும் சத்தம் கேட்டது. கோவில் முன் ஜெயவீரசிங்கே மற்றும் 200 சிப்பாய்களை விட்டுவிட்டு மற்ற சிப்பாய்களுடன் திடலுக்கு புறப்பட்டான். அவர்களின் படை பலம் மற்றும் ஆயுதங்களை பற்றி   அவர்கள் அறிந்திருக்கவில்லை. அனைவரும் குண்டுகளால் தாக்கப்பட்டு நொடிகளில் மடியத்தொடங்கினர். 70 பீரங்கிகளிலிருந்து குண்டுகள் வெளியேறிக்கொண்டிருந்தன.
                 கோவிலுக்குள் நுழைந்த கான்ச்டண்டினோ மற்றும் அவன் படையினர்  மற்ற பண்டிதர்களை சுட்டுத்தள்ளினர். அந்நேரத்தில் பண்டிதர்கள் மட்டுமே கோவிலுக்குள் இருந்தனர். சத்தம் கேட்டு ஜெயவீரசிங்கே சிப்பாய்கலுடன் உள்ளே நுழைந்தான். காற்றைப்போல் வளைவதில் ஜெயவீரசிங்கே வல்லவன் எனவே குண்டுகள் பாயாதவாறு வளைந்து வளைந்து தப்பித்துக் கொண்டிருந்தான். தன்னால் முடிந்த அளவுக்கு போர்ச்சுகீஸியர்களை வெட்டி சாய்த்தான்.
                 துறைமுகம் கோவிலுக்கு அருகாமையிலேயே இருந்தது. எல்லாளன் வந்த கப்பல் துறைமுகத்தை அடைந்தது. வெடிகுண்டுகளின் சத்தம் கேட்டு கோவிலை நோக்கி ஓடினான்.  கப்பலில் வந்தவர்களும் துப்பாக்கியை எடுத்து அவனை தொடர்ந்தனர்.
                 ஜெயவீரசிங்கே ஒரு பண்டிதரை கொல்வதை கண்டு, "நாங்கள் எங்கள் கடவுளை காக்க உயிர்கொடுத்து போராடுகிறோம். பௌத்த நாயே நீ இந்த பன்றிகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறாய?" என்று கூறியவாறே அவன் முதுகில் துப்பாக்கியால் சுட்டான். அவன் கீழே விழும்போது கான்ச்டண்டின்மோ பண்டிதர் வேடம் அணிந்திருப்பதை உணர்ந்தான். "(போர்ச்சுகீஸில்) ஒரு நல்லவனை கொன்றுவிட்டேன். அதற்க்கும் நீயே காரணம் ஆகி விட்டாய் . உங்களில் ஒருவனையும் உயிரோடு விடப்போவது இல்லை." என அவனிடம் கூறினான். அவன் ஒவ்வொருவராக சுட ஆரம்பித்தான். கான்ச்டண்டினோ அமைதியாக வெளியேறி மேலும் பல சிப்பிகளை கூட்டிவர திடலுக்கு புறப்பட்டான்.
                 வீரவல்லி சிவன் சிலையை இரண்டு போர்ச்சுகீஸியர்கள் உடைப்பதை கண்டாள். வேகமாக சன்னதிக்கு சென்று ஒருவனை சுட்டாள். இன்னொருவன் வீரவள்ளியை சுட்டுத்தள்ளினான். இதனை பார்த்த கண்கன், தன தாயை சுட்ட போர்ச்சுகீஸியனை சுட்டுத் தள்ளினான். சன்னதியில் நகைகளும், கோபுரத்துக்கு இட்டிருந்த தங்க முலாம், சிலைகள் இருப்பதை கண்டு எல்லாளனையும் மதுமதியையும் அழைத்தான். இவர்கள் மூவர் மட்டும் தான் கோவிலுக்குள் உயிரோடு இருக்கும் மனிதர்கள்
                 போர்க்களத்தில் போர்ச்சுகீஸியர்கள் எல்லா ஈழத்தவரையும் சுட்டு மாய்த்தனர். ப்றேட்ரிக்க்கும் அங்கு வந்து சேர்ந்தான். அனைவறுகும் கதிர்காமன் பற்றி கூறினான். கான்ச்டண்டினோ அங்கு விரைந்து வருவதை கண்டான்.
                 எல்லாளன் கோவில் நகைகளையாவது பாதுகாக்க நினைத்தான். பெட்டிகளில் நகைகளையும் சிலைகளையும் வைத்து  கண்கன் மதுமிதாவுடன்  அனுப்ப நினைத்தான். "போர்க்களத்தில் பீரங்கி துப்பாக்கிகளின் சத்தம் கேட்கவில்லை. அவர்கள் கோவிலுக்கு வந்துக்கொண்டிருப்பார்கள். இதோ இந்த சுரங்க பாதை துறைமுகத்திற்கு செல்கிறது. இதிலே செல்லுங்கள். திருகேதீஸ்வரத்தில் இடுகாட்டிர்க்கருகே கோவில் நகைகளை புதைத்து வைத்திருக்கிறேன். அடையாளத்திற்கு அருகே ஒரு மரத்தில் என் குதிரையை கட்டி வைத்திருக்கிறேன். அவையையும் எடுத்து செல்லுங்கள். உங்கள் அரசரிடம்  கொடுத்து கோவிலை புதுப்பிக்கும் போது எடுத்து வாருங்கள். ஈஸ்வரர் இதை பார்த்து அமைதி காக்க மாட்டார். உண்மை வெல்லும். இந்தாருங்கள் என் வாள். திருகேதீஸ்வரம் சென்று என் மனைவி கார்த்யாயனியிடம் கொடுங்கள். பிறக்க போகும் என் மகனுக்கு கொடுக்க சொல்லுங்கள். அவர்கள் வரும் முன் கிளம்புங்கள்." என கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.
                 எல்லாளன் கோவிலின் வெளியே சென்றான். ஆயிரக்கணக்கில் போர்ச்சுகீஸியர்கள் கோவிலின் வெளியே இருந்தனர். தானே தன்னை சுட்டுக்கொல்ல துப்பாக்கியை எடுத்தான். குண்டுகள் இல்லாததால் முயற்சி பலிக்கவில்லை. பிரெட்ரிக் கதிர்காமனின் வாளினைக் கொண்டு எள்ளலானின் இடுப்பை வெட்டினான். உடல் பாதியாக பிரிந்து ரத்தம் பீறிட்டது.

தமிழ் வருட பிறப்பு 
திருவனந்தபுரம் 
                 "நான் அரசரை சந்தித்து சில விஷயங்களை கொடுக்க வேண்டும்.", கண்கன் காவலரிடம் கூறினான். அரசிர்டம் கேட்டு வருவதாக கூறி  காவலர் உள்ளே சென்றார். சட்ட்று நேரம் கழித்து வந்த அவர் கண்கனையும் மதுமதியையும் அரண்மனைக்குள் அனுப்பினார்.
                   அவர்களை பார்த்து அரசர், "என்னை பார்க்க வேண்டும் என கூறினீர்களாமே? என்ன செய்தி?"
                    "அரசே பஞ்ச ஈஸ்வரங்களை தரிசிக்க ஈழம் சென்றிருந்தோம். போர்ச்சுகீஸியர்களை  தரைமட்டமாக்கி கிறித்துவ தேவாலயமாக்கினர்.  ஒருவன் கொநேச்வரம் மற்றும் திருகேதீஸ்வரம் கோவில்களின் நகைகளையும்  சிலைகளையும் மீட்டு எங்களிடம் உங்களிடம் தருமாறு அனுப்பி வைத்தான். கோவிலை புதுப்பிக்கும்போது கொடுக்குமாறு கூறினான். அவைகளை வந்த கப்பலில் வைத்துள்ளேன். கப்பல் முழுதும் விலைமதிப்பில்லாத நகைகள் உள்ளன. நீங்கள் மற்ற அரசர்களுடன் சென்று அவர்களை வீழ்த்தி மீண்டும் கோவில்  கட்ட வேண்டும். மீண்டும் நகைகளையும் சிலைகளையும் அங்கு சேர்க்க வேண்டும்."
                   "என்னிடம் சொல்லிவிட்டீர்கள். நானவ்வாறே செய்து விடுகிறேன். வேறு யாருக்காவது இதைப்பற்றி தெரியுமா?"
                  "தெரியாது."
                  "இதோ வருகிறேன்."
                  உள்ளே சென்ற அரசர் தன வாளினைக் கொண்டுவந்து இருவரையும் வெட்டிசாய்த்தார்.
                   ஒரு காவலாளியை அழைத்து, "துறைமுகத்தில் கோணேஸ்வரத்திலிருந்து வந்த கப்பல் இருக்கும். நகைகளும் சிலைகளும் நிறைந்து. அவைகளை அடைத்து நம் கோவில் ரகசிய அறைகளில் வை. அது நம் அரசுக்கும் பத்மநாபசுவாமிக்கும் சொந்தமானது." என கூறினார்.
                   அவ்வாறு செய்த காவலாளி தனக்கு உதவிய காவலர்களுடன் அரண்மனைக்கு வந்து அரசரிடம் சாவியை கொடுத்தான்.அரசர் மற்றுமொரு காவலரை அழைத்து, "இவர்களை கொல். இவர்கள் கோவிலின் ரகசிய அறை சாவியை எடுத்து செல்ல முயன்றனர். இவர்களை நான் பிடித்து விட்டேன். இதோ பார் சாவி. கொல் இவர்களை." என ஆணையிட்டான்.
                    உடனே அவர்களை கொன்றான் காவலாளி.

சில உண்மைகள் 
                   கான்ச்டண்டினோ சில போர்ச்சுகீஸியார்களுடன் பண்டிதர் போலே வேடமணிந்து கோணேஸ்வரம் கோவிலுள் புகுந்து கோவிலை கையகப் படுத்தினான். 
                   திருகேதீஸ்வரம்,முன்னேஸ்வரம் மற்றும் கோணேஸ்வரம்  கோவில்கள் மீண்டும் ஈழத்தில் வாழும் தமிழர்களால் புதுப்பிக்கப்பட்டது. 
                   தொண்டேஸ்வரம் இப்போது புத்தர் கோவிலை கொண்டுள்ளது.
                    நகுலேஸ்வரம்  போர்ச்சுகீஸியர்களால் அழிக்கப்படவில்லை. இப்போது இலங்கை ராணுவத்தினர் கீழ் உள்ளது.
                    மேலும் அறிந்துகொள்ள ஊர்களின் மேல் சொடுக்கவும்  கோணேஸ்வரம்,  முன்னேஸ்வரம்திருகேதீஸ்வரம்தொண்டேஸ்வரம் மற்றும் நகுலேஸ்வரம்