Saturday, November 3, 2012

அஃறினை காதல் (அது அவளான கதை)

                             மனிதர்களுக்கு பொருட்களின் மேல் எப்பொழுதும் ஒரு பிரியம் உண்டு. இந்த பிரியத்தை மூன்று வகைகளாய் நாம் காணலாம். முதல் வகை, மக்கள் டீ அருந்த செல்கையில் எப்போதும் ஒரே கடைக்கே செல்வார்கள். கடை மாறினால் டீ டீப்போல் இருப்பதில்லை. அது டீயினாலா என யோசித்தால் அது காரணமாக இருப்பதில்லை. அந்த டீக்கடையிலேயே டீ குடித்து அந்த டீக்கடையின் சூழலோடு இணைபிரியா பந்தம் உருவானதே காரணமாய் இருக்கிறது. இரண்டாம் நிலை, பெண்களுக்கு நகை மேல் இருக்கும் ஆசை, இளைஞர்களுக்கு பேஸ்புக் டிவிட்டர் மேல் இருக்கும் அலாதி ஒற்றுதல் என அடுத்தகட்ட பிரியங்களை உள்ளடக்கியது. கடைநிலை, பிரியம் காதலாகும் நிலை, இதில் அது அவனோ அவளோ ஆகிறது. ஒரு சிறு குழந்தை பொம்மையை உண்மையென எண்ணி பேசும்போது இதை எல்லோரும் காணலாம். இது சிறுபருவத்திலேயே முடிந்துவிடுகிறது. பரசுராமன் என்னும் இளைஞனுக்கோ இந்த நிலைமை தொடர்ந்தவாறு இருந்தது. அவனுக்கு யாரை பிடிக்கும் என்று அவனைக் கேட்டால் எப்போதும் அவன் பதில் "டிரெயின்" என்று இருக்கும்.
                            பரசுராமன், வயது 32, பாலக்காடு ஸ்டேட் பேங்க் உதவி மேலாளர். இவனுக்கு டிரெயின் மேல் இருக்கும் பிணைப்பு சிறு வயதில் இருந்தே தொடங்கியது. விடுமுறைகளில் பாலக்காட்டிலிருந்து வேலூருக்கு செல்வதுண்டு. முதல் இரண்டு பயணங்களில், உறவினர்களை சந்திக்கப்போகும் ஆனந்தமும் விளையாடப்போகும் ஆட்டங்களுமே மனதில் இருந்தது. பிறகு பயணங்களில், டிரெயின் மீது ஏதோ ஒரு அபரிவிதமான பிரியம் வளர்ந்தது. மங்களூரிலிருந்து  திருவனந்தபுரம் செல்லும் ரயிலுக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டனர். அப்போது தன பெயரில் ஒரு ரயில் உள்ளதே என பெருமைப் பட்டுக்கொண்டான்.


                            அவன் ஒவ்வொரு முறை ரயிலில் பயணம் செய்யும்போதும் அவனுள் ஏதோ இனம்புரியா உணர்வு தோன்றியது. அவன் கதவினருகே பயணம் செய்கையில் காற்று அவன் தலையை தடவி கொடுப்பது போல் உணர்ந்தான். அது அவனது மறைந்த தாயார் திருப்புரசுந்தரி தடவிக் கொடுப்பதை போல உணர்ந்தான். தடக் தடக் என ரயில் எழுப்பும் சத்தம் மெல்லிசையாய் அவன் காதுகளில் ஒலித்தது. சிறுவயதில் புகைவண்டியில் பயணம் செல்லும் போது வரும் புகை இப்போது வருவதில்லையே என  வருந்தினான். அவன் அவனது மனசாட்சியிடம் வேலை கிடைத்தவுடன் தினமும் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்று சத்தியம் செய்துகொண்டான் .
                           தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஈரோடு ஸ்டேட் பாங்கில் கிளெர்க் உத்தியோகம் கிடைத்தது பரசுராமுக்கு. பரசுராம் பாலக்காட்டு பிராமணன். எனவே மாலையாள வாடையில் தமிழ் பேசுவான். தாய்மொழியும் தமிழே. இவர்கள் மலையாளத்தவர் முன் தமிழும் தமிழர்கள் முன் மலையாளமும் பேசி ரெண்டுங்கெட்டானாய் திகழ்பவர்கள். தினமும் ரயிலில் பயணிப்பதற்காகவே சேலத்தில் வீடு பார்த்தான். 70 கி.மீ ரயில் பயணம். ஈரோடு செல்லும் போது ரயில் காவிரி பாலத்தை கடந்து செல்லும். அவ்வாறு செல்லும்போது, ஏதோ உடலுறவு வைத்த இன்பத்திற்கு இணையாக பரசுராமுக்கு ஒரு பூரிப்பு எழும். இவனை டிரெயின் பரசு என்றே சக ஊழியர்கள் அழைக்கத் தொடங்கினர். அவனும் அதை விரும்பினான். வார விடுமுறை நாட்களில் ரயில் ஏறி எதாவது ஒரு ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். கொங்கன் ரயில் பாதை இவனக்கு மிகவும் பிடித்தது. 3 நாட்கள் மேல் விடுமுறை இருந்தால் அங்கு செல்லும் ரயிலில் இவனைக் காணலாம். பாம்பன் பாலத்தில் பயணிப்பதும் இவனுக்கு பிடிக்கும் மாதம் ஒருமுறை தவறாது சென்றிடுவான். ஏதாவது ஒரு ரயில் நிலையம் சென்று திரும்புவதே வழக்கமாக்கிக்கொண்டான்.                          ரயில் பயண விரும்பிகள் என்று ஒரு குழு இருப்பதை தெரிந்து கொண்டு, அந்த குழுவினரோடு பல இடங்களுக்கு ரயிலில் சென்று வந்தான். இந்தியாவில் ரயில் நிலையங்கள் உள்ள அனைத்து ஊர்களும் இவனுக்கு அத்துப்படி ஆனது.
                          29 வயது நெருங்கியது பரசுராமிற்கு. வங்கியில் சீனியர் அக்கவுண்டன்ட் வேலை. பாலக்கட்டிற்கே பணிமாற்றமும் கிட்டியது. பரசுராமின் தந்தை காமேஸ்வரன், இவனின் ரயில் பயணங்களுக்கு எதிராய் இருந்ததே இல்லை. நேரம் கழிக்க இதுவும் ஒரு பொழுது போக்கு என்று எண்ணினார். காமேஸ்வரன் சமையல்காரர். இவர் சமையலை உலகமே ருசித்திருக்கும் அவர் தந்தை தடையாக இல்லாதிருந்தால். வெளிநாடு சென்று சமையல் செய்யும் வாய்ப்பு கிடைத்த போது அசைவமும் சமைக்க நேரிடும் வேண்டாம் என இவர் தந்தை தடுத்து விட்டார். அதனால் தான் தன பிள்ளைக்கு எதிலும் தடையாக இருக்க கூடாது என எண்ணினார். பரசுராமிற்கு திருமணம் செய்ய வேண்டும் என விருப்ப பட்டார். பல பெண்களில் காவேரி என்ற பெண்ணை மகனுக்கு பொருத்தமானவள் என்று எண்ணி திருமணம் பேசி முடித்தார். காமேஸ்வரன் காவேரி என்ற பெண்ணை பார்த்துள்ளதாக பரசுராமிடம் சொன்னபோது, காவேரி பாலத்தில்  பயணித்தது அவன் மனதில் வந்தது. உடனே சரி என்றான். திருமணம் ஆகி 11 மாதங்களில் பெண் குழந்தை பிறந்தது. அம்ருதா என பெயரிட்டான். பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலின் பெயர் அது.
                        தினம் ஒன்று என்று இருந்த ரயில் பயணம் வாரத்திற்கு ஒன்று ஆனது. "கல்யாணம் ஆயிடுத்து. இனிமே நிறைய ரயில்ல போறேன்னு ஓடிட கூடாது கேட்டயா." என்ற காமேஸ்வரனின் அறிவுரையே இதற்கு காரணம்.
                        பரசுராமிற்கு வயது 32 ஆனது. உதவி மேலாளராக பதவி உயர்வும் கிடைத்தது. அப்பொழுது தொலைக்காட்சியில், "கன்னியாகுமரியில் இருந்து தில்பர்கா வரை செல்லும் புதிய ரயில் போக்குவரத்தை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கு விவேக் எக்ஸ்பிரஸ் என பெயரிட்டுள்ளனர். 4287 கி.மீட்டரை 82 1/2 மணிநேரங்களில் இந்த ரயில் கடக்கும். இதுவே இந்தியாவில் அதிக தூரம் பயணிக்கும் ரயிலாகும் மேலும் உலகிலேயே இது அதிக தூரம் பயணிப்பதில் எட்டாவது இடத்தில் உள்ளது. சனிக்கிழமை கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் ரயில் புதனன்று தில்பர்கா சென்றடையும்." என செய்தி வந்தது. செய்தியை கேட்டவுடன் அந்த ரயிலின் முதல் பயணிகளில் ஒருவராக இருக்க வேண்டும் என அவனுக்கு தோன்றியது. அடுத்து பிள்ளை பிறந்தால் பெயர் வைக்க ஒரு நல்ல பெயரும் கிட்டியுள்ளது. ரயில் பாலக்காடு வழியே சென்றாலும் கன்னியாகுமரியிலிருந்தே பயணிக்க விரும்பினான். ரயில் டிக்கட் முன்பதிவும் செய்தான். கன்னியாகுமரி சென்றடைய பாலக்கட்டிலிருந்து செல்லும் ரயில்களில் இடம் இல்லாததால், கோவையிலிருந்து செல்லும் ரயிலில் முன்பதிவு செய்தான். காவேரி கருவுற்று இருந்ததால் அவளுக்கு டிக்கட் போடவில்லை.


                      அவன் கன்னியாகுமரி செல்லும் நாள் வந்தது 25 நவம்பர் 2011. முல்லை பெரியார் பிரச்சனையால் தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடையே அன்று பஸ் ரயில் போக்குவரத்து செயல்படவில்லை. அடுத்த நாள் அவன் பாலக்காட்டிலிருந்தே அந்த ரயிலில் ஏறிக்கொள்ளலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. அவன் ரயிலுக்கே செய்யும் இழுக்காக அமைந்துவிடும் என எண்ணினான். தடங்கல் எது வந்தாலும் போய் சேர வேண்டும் என எண்ணினான். 7 மணிக்கு பாலக்காடு பேருந்து நிலையம் அடைந்தான். கோயம்புத்தூர் செல்ல இருந்த பேருந்துகள் ஓய்வெடுத்து கொண்டிருந்தன. தமிழக பேருந்துகள் கல்லடி பட்டு கண்ணாடி உடைந்து தென்பட்டன. லுங்கி அணிந்திருந்த ஒருவன் "கோயம்புத்தூர் 500 கோயம்புத்தூர் 500" என கூவி கொண்டிருந்தான். பரசுராம் என்ன என்று கேட்டபோது அவன், "ஒரு டாக்சி உங்கள வாளையார் கொண்டு சேத்துடும் அங்கிருந்து தமிழ்நாடு டாக்சியிலே கோயம்புத்தூர் போயிடலாம். மொத்தம் 500 ரூபாய்" என்றான். பரசுராம் ஒரு 500 ரூபாய் நோட்டினை அவனிடம் நீட்டினான். அவன் பரசுராமை டாக்ஸியில் அமரச்சொன்னான். டாக்ஸி ஓட்டுனர் 7:26 க்கு வாளையார் நோக்கி புறப்பட்டார். டாக்ஸி 20 நிமிடங்களில் வாளையார் சென்று அடைந்தது. டாக்சி டிரைவர், "பார்டர் க்ராஸ் பண்ணும் போது வாய் திறக்க் வேண்டாம். மறியல் செய்றவங்களுக்கு மலையாளின்னு தெரிஞ்சா, அவங்க போதைய பொறுத்து எதுவும் நடக்கலாம்." என எச்சரித்தார். காரில் வந்த மற்ற நால்வரும் முதலில் சென்று பார்டரை கடந்தனர். பரசுராம் பேய்முழி முழித்தவாறு சென்றதால் அவனை மட்டும் கடக்கவிடமால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிடித்துக் கொண்டனர்.
                        ஒரு ஆர்ப்பாட்டக்காரன்," நீ எந்த ஊரு?" எனக் கேட்டான்.
"ஞான் பாலக்காடு. பக்ஷே தமிழ்."
"முட்டாக்கூதி பொய் சொல்லாதே தேவிடியா மவனே."
"என்னவாக்கும் இது. பாலக்காட்டுல தமிழனா பிறந்தது என் தப்பா. அவா என்ன வித்யாசமா பாக்கறானா. இங்க நம்ம மொழி பேசரவா  இன்னும் மோஸம். இவன் என்னடானா அம்மாவெல்லாம் சபிக்கிறான்."
"இல்ல ஐயரே."
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
 நாவினால் சுட்ட வடு - இதையெல்லாம் உங்க ஸ்கூல்லே சொல்லித்தரலையா? இப்படி நாசம்  பண்றேள். தமிழன்னு சொல்லிக்கவே யோக்யதை இல்லை உங்களுக்கு"

                          

"மன்னிச்சிடு. கிளம்பு."
"போங்கோடா. குடிச்சிண்டு இங்க வந்து அசிங்கமா பேசறது.மனுஷாளுக்கு பிரெச்சன பண்ணின்டு. இப்ப மணி 8 நான் ஸ்டேஷனுக்கு 8 1/2 க்கு போகணும் கார் வேற இல்லை. போங்கோடா."
"நான் வேணும்னா வந்து விட்டுர்றேன் ஐயரே. தப்பாயிடுச்சு என்ன பண்ண சொல்றே. 500 ரூபா தரேன்னு சொன்னாங்க வந்துட்டோம். பைசா தான் கண்ணுல முதல்ல தெரிது. நீ சொன்ன திருக்குறளால ஒரு கட்டிங் தேருமா மனுஷனுக்கு."
"வண்டிய எடு டா."
"குடிச்சிருக்கேன் இந்தா சாவி நீ ஓட்டு."
                        பரசுராம் மொபைலிலிருந்து தடக் தடக் என்று ரிங்டோன் அடித்தது. அதைக் கேட்டவுடன் அவனுக்கு அடுத்த நாள் செல்லவிருக்கும் ரயில் பயணம் மனதில் வந்தது. வேகமாக வண்டியை ஓட்டி 8.25 க்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்து அடைந்தான். அவன் தாயின் முகம் ரயில் நிலையத்தின் முகப்பில் இருந்து வரவேற்பது போல் அவனுக்கு தோன்றியது. வழக்கமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அந்த ரயில் நிலையம் வெறிச்சோடி இருந்தது. அவன் விசாரணை கூடத்திற்கு சென்று ரயில் எந்த பிளாட்பாரத்தில் வரும் என விசாரித்தான். அதற்கு அவர், "இங்க வேல நடக்குது. எல்லா வண்டியும் கோயம்புத்தூர் நார்த் ஸ்டேசன்ல இருந்து கிளம்புது. எல்லா பேப்பர்ளையும் வந்ததே பாக்கலையா நீங்க? இந்நேரத்துக்கு நார்த்ல  இருந்து வண்டி கிளம்பிட்டு இருக்கும்." என கூறினார். முதல் முறையாக பரசுராமிற்கு ரயில் வாழ்கையில் ஒரு கசப்பான அனுபவம். அடுத்த வண்டி அடுத்த நாள் காலையில் தான் என அறிந்து கொண்டு பேருந்தில் பயணிக்க முடிவு செய்தான். ஏதோ ரயில் பயணத்தின் சக்காளத்தி போல தோன்றியது பேருந்து பயணம்.
                     வெள்ளிகிழமைகளில் தென் மாவட்டங்களுக்கு வண்டியில் சீட்டு கிடைப்பது மிகவும் கடினம். அதிர்ஷ்ட்டவசமாக இவனுக்கு ஒரு சீட்டு கிடைத்தது. வண்டி 10 மணிக்கு தான். வண்டி எப்போது நாகர்கோவில்  சென்றடையும் என கேட்க 8 மணி என ஓட்டுனர் சொன்னார். ரயில் மதியம் 2 1/2  மணிக்கு தான். எனவே திருப்தியானான். பஸ்ஸில் செல்ல போவதை எண்ணி வருந்தினான். ரயிலைப்போல் நிம்மதியாக தூங்க முடியாது. இங்கேயும் அங்கேயும் நடக்க முடியாது. கதவருகே சென்று நின்றால் இங்கே நடத்துனர் திட்டுவார். தடக் தடக் என்று சத்தம் வராது. பாலத்தில் செல்லும்போது வரும் ஒரு சுகம் வராது. காபியும் டீயும் நம் இடம் தேடி வராது. காண்டாமிருகத்தோடு உடலுறவு வைத்துக் கொள்வது போல் உணர்ந்தான். வேகத்தடைகளில் செல்லும் போது கஷ்டமாக உணார்ந்தான். ரோட்டோர பட்டர் தோசை வேலையை காண்பிக்க ஆரம்பித்தது. பஸ்ஸில் டாய்லெட் வேறு இல்லை. ரயில் பயணத்தை தவற விட்டதை எண்ணி வருந்தினான்.
பஸ் டீவியில் யாரோ தொலைதூரத்திலிருந்து நேராக ரயில் வண்டிக்குள் பறந்து வந்து ஒரு பறவைக்கு பிளையிங் கிஸ் கொடுத்ததை பார்த்து பக்கத்தில் அமர்ந்தவரிடம் ,
"என்ன படம் இது. அவன் என்குருந்தோ குருவி மாதிரி வந்து குதிக்கிறான் அதுவும் கரக்டா."
"நீங்க சொன்னேங்களே குருவி அதே தான்."
"ஆறடி செவுத்துல இருந்து குதிச்சாலே எலும்பு முறிஞ்சிடும். இவன் என்குருந்துலாமோ குதிக்கிறான். நீங்கலாம் கேக்க மாட்டேலா. பிராந்து பிடிச்சிக்கும் இத பாத்தா."
"யோவ் யாரு யா நீ? கேள்வி கேக்காமா பாரு இல்ல தூங்கு. இண்டரஸ்டா போகுது டிச்டர்ப் பண்ணிக்கிட்டு."
"இல்லை நியூட்டன் என்ன சொல்லிருகாருனா க்ராவிடி..."
"யோவ் மூடிட்டு பாரு யா."
"இல்லை ஞான் தூங்கிடறேன்."
"தூங்கித் தொல. செகண்ட் ஹாப்ல கடலுக்கடிலே போனவர் நிலத்த தொளச்சிகிட்டு  வருவாரு. அதுக்கு பதில் கேப்ப அப்புறம் நீ."
"தூங்கறதே பெட்டெர்."
                      அவன் கண்களை மூடி மேற்கொள்ளவிருக்கும் 5 நாள் பயணத்தை நினைத்து பார்த்தான். பட்டர் தோசையால் நேரிட்ட ரசாயன கோளாறு, படம் பார்த்து ஏற்பட்ட தலைவலி எல்லாம் விலகியது. அவன் காதுகளில் தடக் தடக் என்ற சத்தம் தாலாட்டை போல ஒலித்தது. அப்படியே தூங்கலானான்.
                      அடுத்த நாள் காலை 8:30 மணி.  பேருந்து நாகர்கோவில் வந்து அடைந்தது. அங்கிருந்து அரை மணி நேரத்தில் கன்னியாகுமரி அடைந்திடலாம். இருப்பினும் ஒருவரிடம் ரயிலை அடைந்திடலாமா என  விசாரித்தான். அவர், "எல்லா வண்டியும் நாகர்கோவில் வந்து தான் போவான். எதுக்கு கன்னியாகுமரி வர போறீரு?" என கேட்டார்.
 "ஞான் பாலக்காடு. வண்டி பாலக்காடும் வரும். கேட்ட பிரஷ்னத்துக்கு பதில் சொல்லுங்கோ போதும். கேள்வி கேக்கண்டாம்."
"கன்னியாகுமரி 18 கிலோமீட்டர் தான்.நடந்து போனாலும் 12 1/2 க்கு போய்டலாம். சைக்கிள்ல போனாலும் 10 க்கு லாம் போய்டலாம்."
                     பரசுராமிற்கு திடீரென சைக்கிளில் போகலாம் எனத் தோன்றியாது மீண்டும் பேருந்தில் செல்ல அவன் விரும்பவில்லை. அருகில் இருந்த சைக்கிள் கடைக்கு சென்றான். அது வாடகை சைக்கிள் கடை. அது அவனுக்கு தெரியவில்லை உள்ளே நுழைந்த பரசுராமன் சைக்கிள் அருகே சென்று நின்றான். பார்ப்பதற்கு அச்சு அசலாக அங்கே தினமும் வரும் வாடிக்கையாளர் போல இருந்தான் பரசுராமன்.  கடைக்காரர் வந்து, "மக்கா இன்னிக்கி 7 ஆம் நம்பர் வண்டி எடுத்துக்கே" என்றார்.
"எவளோ கொடுக்கணும்?"
"20 ரூபாய் (1 மணிநேரத்திற்கு)"
"அவளோ தானா?"
"அவளோ தானாவா என்ன தெரியாத மாறி கேக்க? புது கவர்மென்ட் வந்தது இருந்தே 20 தானே."
"நல்ல கவர்மென்ட்" என கூறி விட்டு சைக்கிளை எடுத்து சென்றான். அவனுக்கு இது வாடகை சைக்கிள் என்று தெரியாது. இவ்வளவு குறைந்த விலையில் சைக்கிள் கிடைப்பதற்கு காரணம் புதிய அரசு என்று எண்ணினான். அவர்களால் தான் 10 ரூபாய் 20 ரூபாய் ஆனது என்பது இவனுக்கு தெரியவில்லை.
                   பரசுராமன் வேகமாக சைக்கிளை ஓட்டினான். அவன் ஓட்டிய வேகம் சில டவுன் பஸ்களை பின்னுக்கு தள்ளியது. அவன் இறந்த அன்னையை மீண்டும் ரயில் வடிவில் காண போவதாய் உணர்ந்தான். அரை மணி நேரத்தில் ரயில் நிலையம் அடைந்தான். ரயிலை பார்த்ததும் அவன்  அழத் தொடங்கினான். ரயில் பெட்டியில் அவன் தாய் முகம் தெரிந்தது. கடைசியாக அவன் அன்னையுடன் சென்ற ரயில் பயணம் ஞாபகம் வந்தது. இடுப்பில் வைத்துக் கொண்டு ரயில் முழுவதும் நடந்து செல்வாள். அவள் இறந்த பின்பு இதற்காகவே ரயிலில் தினமும் பயணம் செல்ல துவங்கினான். இன்னும் செய்கிறான். பெட்டி அருகில் சென்று பெட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்தான். இன்னும் ரயில் கிளம்ப 2 மணி நேரம் இருந்த்தது. திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண் போல ரயிலை அலங்கரித்து கொண்டிருந்தனர். ரயிலையும் ரயில் நிலையத்தையும் புகைப்படங்கள் எடுத்தான். மந்திரிகள்  பலர் ரயில் போக்குவரத்தை துவக்கி வைக்க வந்திருந்தனர். காவிரி தன்னோடு வந்திருக்கலாமே என எண்ணினான். அவன் ரயில் பயணங்களில் வைத்திருக்கும் தீராத ஆசையை புரிந்து புரிந்துகொண்ட மிகச்சிலரில் அவளும் ஒருத்தி. காவேரியை போனில் அழைத்து, "காவேரி! டிரெயின் ஏறிட்டேன். நீ வரலயேனு தான் வருத்தமா இருக்கு."
"பரவாயில்லை. டோக்டர் போவேண்டான்னுச் சொல்லிட்டாரே. விவேக் வேற வயத்துக்குள்ள இருந்து ஒதைக்கரான். பாத்து போயிட்டு வாங்கோ. கதவு கிட்ட ரொம்ப நேரம் நிக்கண்டாம். கேட்டேளா? "
"சரி."
"கண்டத வாங்கி திண்ணண்டாம். அரவாணி யாராவது காசு கேட்டு வந்தா சண்ட போடேண்டாம். ஹாப்பி ஜெர்னி. ஹாப்பி எக்ஸ்பீரியன்ஸ்"
"சரி. போயிட்டு வந்துடறேன். அம்ருதாவ  பாத்துக்கோ. அப்பா எதாச்சும் சொன்னா கோச்சிக்காதே. விவேக் உதைச்சா அப்பா அடிப்பர்னு சொல்லு. வெச்சிடுறேன்."
"சரி. பாத்து போயிட்டு வாங்கோ. வெச்சுடறேன்"
                     ரயில் புறப்பட தயார் ஆனது. இருக்கை அட்டவணையை பெட்டியில் ஒட்டினார் ஒரு ஊழியர். அவன் பேரை அட்டவணையில் பார்த்தவுடன் ஒரு பூரிப்பு. திரும்ப அழத்தொடங்கினான். அந்த தாளை ஒரு புகைப்படம் எடுத்து கொண்டான். இருக்கையில் (S3 25) சென்று அமர்ந்து கொண்டான். விவேகனானந்தர் ஆசிரமத்தை சேர்ந்தவர் கொடி அசைத்தவுடன் வண்டி கிளம்பியது. இவனின் பயணம், பிரியம். இல்லை!! இவனின் காதல் தொடங்கியது.