Thursday, June 15, 2023

காந்தி சிரிக்கத்தான் செய்கிறார்

தேடித் தேடி ஓடுகிறார்

சேர்த்தும் சேர்த்தும் தேடுகிறார்

போதாது போதாது எண்ணுகிறார்

நித்தம் நித்தம் ஓட்டத்திலே

தன்னையே தன்னையே தொலைக்கிறார்




காகிதம் தானது ஆனாலும்

காந்தி அவரது சிரிப்பினால்

கனம் கூடிப்போவது ஏன்?

கனத்தால் கூனிப் போனாலும்

முன்னே முன்னே ஓடுகிறார்

தத்தம் சிரிப்பை மறக்கிறார்


அட்டை டிஜிட்டல் வந்தாலும்

ஓட்டத்தில் என்றும் குறைவில்லை

வேகத்தில் சிறு தளர்வில்லை

காந்தி சிரிக்கத்தான் செய்கிறார்


Thursday, July 11, 2019

மகாநதி

      "பழையாத்துல இருந்து நேரா எடுத்து குழாயப் போட்டுட்டான். இனி வீட்டு பொம்பளைங்க எல்லாம் குடத்தத் தூக்கிட்டு குளம் வரைக்கும்  போக வேண்டாம்."



     "ஏலேய் சாத்தான்! அப்போ நீயும் போக வேண்டாம்! உங்க வீட்டு அம்மாவ குடம் கூடத் தூக்க விட மாட்டேங்கியேலே! உனக்கும் சவுரியமாப் போச்சு", சிரித்தவாறு சொன்னார் பூதலிங்கம்.



     இறச்சகுளம் பெருமாள் கோவில் தெரு, கீழத் தெரு, மேலத் தெருவென தெருவிற்கு ஒரு குழாய் போடப்பட்டது. என்றும் வற்றாத பழையாறு இறச்சகுளம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஏனைய இடங்களின் நீர்த் தேவையைப் பார்த்துக் கொள்கிறது.

இருபது வருடங்களுக்குப் பிறகு 

     "தாத்தா. உங்க  ஊரு தண்ணி ரொம்ப சுவீட்டா இருக்கு. வாட்டரே இவ்வளவு டேஸ்ட். சூப்பர்."
   "ஏலே மக்கா அரவிந்து! உங்க ஊரு இல்ல நம்ம ஊரு. மெட்ராஸ் போயிட்டா நீ இறச்சகுளம் இல்லையா? பழையாறு லே. உங்க அப்பா, நான், எங்க அப்பா எல்லாம் இந்தத் தண்ணி. மண்ணு, தண்ணியே நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்குது. தாத்தா பார்த்தியா எப்படி இருக்கேன்?"
    சாஸ்தா தெரு வழியே சென்றார்.
    "ஏலே சாத்தான்! ரெண்டு நாளா அகப்படவே இல்ல. என்ன லே வயசாயிடுச்சா?"
   "பெரிய குளத்துல இருந்து தண்ணி எடுத்துட்டு யாரு வேகமா வருவாப் பாப்போமா லே. வயசாயிடுச்சா? நம்புரான் குதிரைய ஒத்தையாளாத் தூக்கிடுவேன் லே."
   "போ லே சாத்தான்." 
   "பேரன் என்ன சொல்றான்?"
   "நம்ம ஊரு தண்ணி நல்லா இருக்காம்."
   "பழையாத்து தண்ணி மக்களே." சொல்லிக்கொண்டே சாஸ்தா நகர்ந்தார்.

மதிய உணவு முடித்துவிட்டு அரவிந்த் பூதலிங்க  தாத்தாவிடம் வந்தான்.
    "தாத்தா! பழையாறு"
    "வீராணமங்கலம் போகும் போது ஓடுதே அதான். ரிவர்."
    "ஐயோ தாத்தா அது எனக்குத் தெரியும். ரொம்ப ஆறு ஆறு னு அதையே சொல்றீங்க."
    "உங்க ஊருல பாட்டில்ல தண்ணி மக்களே. அதான் அப்படி கேக்கற. நம்ம தெருல என்ன கோயில் இருக்கு?"
    "பெருமாள் கோவில்."
    "சரி. நம்ம குளத்துக்கிட்ட நெறைய நெல் வயல் எல்லாம் இருக்கே."
    "ஆமாம்."
    "தட் பிளாங்ஸ்  டு கோவில்."
    "இது எதுக்கு சொல்றே?"
    "காரியமாத்தான். அந்த நிலம் எல்லாம் ஊருல ஒவ்வொருத்தர் பொறுப்பு. அவங்க அவங்க விவசாயம் பண்ணி பணம் எடுத்தக்கலாம். கோயிலுக்கு கொஞ்சம் நெல் கொடுத்தாப் போதும்."
   "அதுக்கு."
   "நிலத்துக்கு எப்படித் தண்ணி வருது தெரியுமா?"
   "அன்னிக்கு சொன்னியே! ஓடை."
   "பழையாறுல இருந்து பெரிய குளத்துக்கு வந்து, குளத்துல இருந்து ஓடை வழியாத் தண்ணித் திரும்ப வீராணமங்கலத்துல பழையாத்துல சேர்ந்துடும்."
  "அப்படியா?"
  "பழையாறு குடிக்கத் தண்ணி தருது, விவசாயத்துக்கு தருது அதுனால நமக்கு சோறு. மத்தியானம் சாப்பிட்டியே. நம்ம நிலத்துல வந்த அரிசி தான். வாழைப்பழம் நம்மத் தோட்டம். பழையாறும் நமக்கு பெருமாள் மாதிரி தான். அந்த தண்ணி குடிச்சு தான் பாத்தியா எல்லா வீட்டுலயும் தாத்தா, பாட்டி எல்லாம் ஸ்ட்ராங் ஆ இருக்காங்க."

  "தாத்தா கரெக்ட் தான். ஆனா நிறைய வீட்டுல தாத்தா பாட்டி மட்டும் தானே இருக்காங்க."
  "உங்க அப்பா மாதிரி எல்லாம் மெட்ராஸ், டெல்லி, அமெரிக்கா போயிட்டாங்க. ஊரெல்லாம் மெட்ராஸ் போய் அங்க தண்ணி இல்லாமப்  பண்ணியாச்சு. இங்கப் பாரு பழையாறு அவங்க எல்லாம் போயும் கோபம் இல்லாம விடாம கொடுத்துட்டு இருக்கு."
  
மறுநாள் குளத்திற்கு சென்று பூதலிங்கமும் அரவிந்தும் ஆசை தீர குளித்தனர். சிறு வயதில் குளத்தில் டைவ் அடித்த கதைகளை எல்லாம் கூறினார் பூதலிங்கம்.



வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

   "வீட்டுல பெரியவங்க இருக்காங்களா?"
   "தாத்தா ஒரு அங்கிள் வந்திருக்காங்க.", உள்ளே ஓடினான் அரவிந்த்.

   "யாரு மக்கா?"
   "சார். 'அக்வா குமரி'ன்னு தண்ணி கம்பெனில இருந்து வரோம் சார்."
   "தம்பி. பாக்க நம்ம கிட்டா மாதிரி இருக்கியே."
   "அவருக்கு மகன் ரங்கசாமி சார்."
   "மாமான்னு கூப்டு மக்கா. என்ன சார் எல்லாம்? என்ன கம்பெனி அப்போ?"
   "தண்ணி கேன் மாமா."
   "தயவு செஞ்சு போயிடு தம்பி."
   "ஏன் மாமா?"
   "நம்ம ஊருல தான் இல்லாம இருந்துச்சு. இங்கையும் வந்துடுச்சே."
   "மாமா நகரகோவில்ல எல்லாம் இருக்கு மாமா."
   "முட்டாளுங்க லே."
   "ஏன் மாமா?"
   "பழையாத்துல என்ன லே குறைய கண்டானுங்க? அதையே பாட்டில்ல போட்டுப் பணம் வேற? நம்ம பழையாறு பெருமாளு லே."
   "சரி மாமா! நான் வரேன்.", அடுத்த வீட்டுக்கு சென்றான்  
  
தான் வண்டியில் கொண்டு வந்த கேன்கள் எல்லாம் அவனோடுத் திரும்பின.

   "கிட்டாவுக்கு அறிவு வேண்டாம். பணம் வருதுன்னு அடச்சி வித்துட்டா, பணம் இருந்தா தான் தண்ணியும்னு ஆயிடாதா. பெருமாளே எல்லாருக்கும் புத்திய கொடுப்பா.", என்று வருந்திக் கொண்டார். 

 ஆற்றங்கரை, குளங்கள், வயல் வெளிகள் என அடுத்த ஐந்து நாட்களை அரவிந்த் தன் தாத்தாவுடன் கழித்தான். நீரும் மண்ணும் அவன் பால் காதல் கொண்டன. மண்ணின் மைந்தனின் வாசம் தெரியாதா மண்ணுக்கும் நீருக்கும்?

ஊருக்கு கிளம்பும் பொழுது இன்னும் ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்தான்.
  
   "யப்போ! இது மணிகண்டன் ஆபிஸ் கொண்டு போற தண்ணி பாட்டில் இல்லையாப்போ?"
  " ஆமாம் தாத்தா. அப்பாவுக்கு ஒரு பாட்டில். லாஸ்ட் டைம் கொஞ்சூண்டு தண்ணி இருந்தது என் பாட்டில்ல. குடிச்சிட்டு எங்க ஊரு தண்ணி, எங்க ஊரு தண்ணின்னு சொல்லிட்டே இருந்தாரு. இப்போ முழு பாட்டில்."

அரவிந்தன் தன் தாயுடன் ஊர் திரும்பினான். சில தினங்களில் 'அக்வா குமரி'யின் கேன்கள் இறச்சகுளத்திலும் சில வீடுகளுள் நுழைந்தன. சில மாதங்களில் ஓரிரு விளை நிலங்கள் விலைபோக பிளாட்டுகளாக மாறியன.
சில இல்லங்களின் தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் குடும்பத்தினர் வருகையை நாள்காட்டியில் குறித்து எதிர்நோக்கி இருந்தனர். வாண்டுகளின் கண்ணாமூச்சி, சிறார்களின் படிப்பு, கிரிக்கெட், இளைஞர்களின் வேலை, பல பங்குனி உத்திரங்கள் என நாட்கள் சென்று கொண்டு தான் இருக்கிறது. பழையாறும் வற்றாது ஓடிக்கொண்டிருக்கிறாள். 

Monday, August 20, 2018

ஒன்பதும் அறுபத்தி இரண்டும்


"சித்தப்பா! கொல்கத்தாக்கு ட்ரான்ஸ்பர் ஆயிருக்கு. டெம்பரரி. ஆறு மாசம் தான். வெள்ளிக்கிழமை கிளம்புறேன்."கூறினான் சரவணன்.
"நித்யாவ கூட்டிட்டுப் போறியா?"
"இல்ல சித்தப்பா. நித்யாவும் குட்டியும் இங்க அம்மா கூட இருப்பாங்க. நவராத்திரிக்கு அங்க நாலு நாள் லீவு. அப்போ வருவேன். உடனே தீபாவளி. அப்படியே ஓடிடும்."
"நல்லதுப்பா."
"நான் கிளம்பறேன் சித்தப்பா."
"இருப்பா. திலகம்! திலகம்!!! என் சட்டப் பாக்கெட்ல பர்ஸ் இருக்கும். கொஞ்சம் எடுத்துட்டு வா."
"ஏன் சித்தப்பா பணம் எல்லாம்?"
"பெரியவங்க தந்தா வாங்கிக்கணும்."

ஐந்நூறு ரூபாய் சரவணன் கையில் சேர்ந்தது.

கொல்கத்தா

இதற்கு முன்னர் பணியில் சேரும் பொழுது வந்தது. மீண்டும் இப்பொழுது பன்னிரெண்டு வருடங்கள் கழித்து. டிராம்களை முந்திக் கொண்டு டோலிகஞ்ஜ் நோக்கி பயணப்பட்டது உபெர். சரவணன் தங்குவதற்கான வீடு முன்னரே தயாராய் பார்க்கப் பட்டிருந்தது. விமானத்திலிருந்து எடுத்து வந்திருந்த செய்தித்தாளின் பக்கங்கள் புறட்டப்பட்டன.

வீட்டில் இறங்கி சற்று தூங்கிவிட்டு மாலை தேநீருக்கு பால் வாங்க கிளம்பினான் சரவணன். படியில் இறங்கும் பொழுது ஒரு சிறுமி மேலே வந்தாள்.

புன்னகைத்துவிட்டு
"ஹை! வாட்ஸ் யுவர் நேம்?"
"பல்லவி நாயர்."
"ஓ! மலையாளி ஆனோ?"
"எஸ். நிங்களும் மலையாளி ஆனோ?"
"இல்ல. தமிழ்."
"அங்கிளிடே பேரு?"
"சரவணன்."
"பை அங்கிள்"வீட்டை நோக்கி கிளம்பினாள்.

சரவணனுக்கு ஹிந்தி தெரிந்தமையால் கொல்கத்தாவில் சமாளிக்க முடிந்தது. ரோட்டோர முடித்திருத்தகங்கள்இழுவண்டியில் மனிதர்களை இழுத்துச் செல்லும் தொழிலாளர்கள்மறுமுனையில் அடுக்குமாடி மகிழுந்து நிறுத்தம் - இவை அனைத்தையும் கண்டான். ஏற்றமும் தாழ்வும் தான் இந்தியா என எண்ணிக்கொண்டான். வீட்டின் நினைவு - மனைவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பாய் சென்றது.

தேநீர் அருந்திவிட்டி தொலைக்காட்சி பார்க்கும் பொழுது வீட்டின் அழைப்பு மணி அடித்தது. கதவினை திறந்தான் சரவணன். சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி.

"பேட்டா. ஐ லிவ் இன் தி ஆப்போஸிட் ஹவுஸ். ஸ்ரீதேவி."
"கம் இன்."
"தமிழானோ?"
"ஆமாம்."
"நான் மலையாளி. பக்ஷே தமிழ் நல்லா தெரியும். கமலஹாசன் படம்இளையராஜா பாட்டு ரொம்ப பிடிக்கும். தமிழ் தான் பாப்பேன் டிவில.தமிழ் அப்டியே கத்துக்கிட்டேன்."
"பல்லவியோட பாட்டியா?"
"ஆமாம். பல்லவி மீட் பண்ணியாச்சா?"
"ஈவினிங் பார்த்தேன். ஸ்கூல் முடிஞ்சு டயர்டா வந்தாங்க."
சிரித்துவிட்டு, "நைட் என்ன சாப்பாடு?"
"வெளில போணும் ஆண்ட்டி. ஹோட்டல்."
"இங்க பக்கத்துல பெங்காலி ஹோட்டல் தான். சவுத்தும் கிடையாதுநார்த்தும் கிடையாது. கடுகு எண்ணெய்ல செய்வாங்க.நம்ம வீட்டுல சாப்பிடு. ஆப்பமும் பால்கறியும். பிடிக்குமா?"
தவிர்க்கும் விதமாய், "பரவா இல்ல ஆண்ட்டி."
"அதெல்லாம் இல்ல. நம்ம வீட்டுல சாப்பிடு."என்று சொல்லிக்கொண்டே எழுந்து சென்றாள். ஸ்ரீதேவி அழைத்த விதம்! யாராலும் மறுக்க முடியாது. சரவணன் வருவதாய் கூறினான்.

பல நாட்கள் பழகியவர் போல பழகுகிறார்களே! என்று ஆச்சரியப்பட்டான். எதிர்வீட்டு சாப்பாடு தகவலை மனைவிக்கு வாட்சப்பில் தெரியப் படுத்தி ஆயிற்று.

எட்டு மணி. மீண்டும் அழைப்பு மணி. இம்முறை பல்லவி.
"அங்கிள் சாப்பிட வாங்க."
"பல்லவிக்கு தமிழ் தெரியுமா?"
"பாட்டி எப்பவும் தமிழ் தான் பாப்பாங்க டிவில. அதுனால தெரியும்,"
"கியூட்டாப் பேசுறியே! எந்த கிளாஸ் படிக்கிற?"
"ஃபோர்த்."
"ம்ம்ம்ம்.."

பல்லவியின் வீட்டிற்கு சென்றான். கே டிவியில் அஞ்சான் ஓடிக் கொண்டிருந்தது. ஸ்ரீதேவி சமையல் அறையிலிருந்து வந்து
"மோனே! சாய குடிக்குமோ?" என்று கேட்டார்
"இல்ல ஆண்ட்டி. நான் இப்ப தான் குடிச்சேன்."
உள்ளே சென்று தன் கணவரை அழைத்தார். சரவணனை அறிமுகம் செய்து வைத்தார்.
"அங்கிளுக்கு தமிழ் பேச வராது. ஆனா புரியும்."என்று சிரித்தவாறே சொன்னார்.

சரவணனின் கண்கள் பல்லவியின் தாய் தந்தையரைத் தேடின. ஒரு படுக்கை அறை வீட்டில் ஐந்து பேராஹாலிலும் கட்டில் இல்லையே என்று மனவோட்டம். ஒரு பெரிய சைசில் பல்லவியின் புகைப்படம். தொலைக்காட்சியின் மேலே பாட்டியுடன் ஒரு புகைப்படம்.

நன்றி: www.alamy.com


உணவு முடிந்து

"ஆண்ட்டி பல்லவியோட பேரெண்ட்ஸ் காணுமே!"
"புவனேஸ்வர்ல இருக்காங்க."பதில் அளிக்கும்போதே முகம் மாறியது.
"ஓ! என்ன பண்றாங்க?"
"ட்ராவல் ஏஜென்சி."

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அம்பாஸடர் மகிழுந்தை வெளிநாட்டு நிறுவனம் வாங்கிய பின்னர் அதனை மறுபடியும் உற்பத்திக்கு கொண்டுவர ஆய்வு செய்யும் வேலை சரவணனுக்கு. மறுநாள் தன் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பினான். ரசம் செய்து கொஞ்சம் பல்லவி வீட்டிற்கு கொடுக்க எடுத்து சென்றான். வாங்கி வைத்து விட்டு தான் செய்த அவியலை எடுத்து கொடுத்தார் ஸ்ரீதேவி. கார்த்திக் நடித்த சின்ன ஜமீன் திரைப்படம் ஓடி கொண்டிருந்தது.

"மோனே! எதுக்கு சமைச்சதுஇங்க சாப்பிடலாமே."
"இல்ல ஆண்ட்டி."
"நீ எனக்கு மோனப்போல. இங்கையே சாப்பிடு."என்றார்.
"பரவாயில்லை ஆண்ட்டி. எதுக்கு கஷ்டம் உங்களுக்கு?"
"கொஞ்ச நாள்ல ஊருக்கு போக போகுது."
"இல்ல ஆண்ட்டி. ஆறு மாசம்."
"ஆறு மாசம் தானே மோனே."
தமிழர்கள் மட்டுமல்ல மலையாளிகளும் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். சேரநாடு தானே என எண்ணிக்கொண்டான்.
சிறிது நேரத்தில் சரவணன் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.
"வாங்க ஆண்ட்டி."
சுவற்றில் மாட்டியிருந்த படத்தை பார்த்துவிட்டு, "உங்க ஆள்காரா?"
"ஆமாம்."
"பேரு?"
"அம்மா லதாவைஃப் நித்யா. பாப்பா பேரு கண்ணம்மா."
"பாப்பா பெரு பழசா இருக்கே?"
"பாரதியார் பிடிக்கும். அதான்."
"சரி. சரி."
"சொல்லுங்க ஆண்ட்டி."
சிரித்த முகம் வாட ஆரம்பித்தது
"மோனே. பல்லவி முன்னாடி அவ பேரெண்ட்ஸ் பத்தி கேக்கண்டா."
என்ன ரியாக்ட் செய்வது என்று தெரியாது அமைதியாய் இருந்தான். ஸ்ரீதேவியின் கண்ணில் கண்ணீர் வரத் தொடங்கியது. சரவணன் இறந்திருப்பார்களோ என்று யோசித்தான்.

"மோனே! உன்ன என் மகன் மாதிரி நினைச்சி சொல்றேன். என் பொண்ண நான் சரியா வளர்க்கலையோன்னு எனக்கே தோன வெச்சிட்டாங்க."
ஆறுதல் தேடி வந்திருக்கிறார். எப்பொழுதும் சிரித்தபடி இருக்கும் முகத்திற்குள் ஏதோ ஒரு கடுஞ்சோக கதை இருப்பதை உணர்ந்தான்.

"என் பொண்ணு. பி.ஏ டூரிஸம் படிச்சது. ஒரு பெங்காலிய லவ் பண்ணி படிக்கும் போதே கல்யாணம் பண்ணாங்க. நாங்க வீட்டுலையே சேர்க்கல. அவளும் அவனும் டூரிஸம் ஏஜென்ஸி நடத்தினாங்க.. இவப் பெரியவளா அவன் பெரியவனான்னு எப்பவும் சண்டை. பல்லவி ரெண்டு மாச குழந்தை. விட்டுட்டு டைவர்ஸ் பண்ணிட்டாங்க. இங்க வந்து இருந்தா அதுக்கு அப்புறம். பொண்ணாச்சே சேர்த்துக்கிட்டேன். ஒரு ஒரிஸா காரனுக்கு பழசு எல்லாம் சொல்லி கல்யாணம் பண்ணோம். குழந்தை இங்க இருக்கட்டும்னு சொல்லிட்டு போய்ட்டா. எட்டு வருஷம் ஆச்சு. சொல்லப் போன பல்லவி இங்க வந்தது இருந்தே நான் தான்பா அவளுக்கு அம்மா. அங்கிள் தான் அப்பா. முதுகே வலிக்கும் இருந்தாலும் பல்லவிக்காக எல்லா வேலையும் சிரிச்சிக்கிட்டே செய்வாரு. அங்கிள் பாவம். ஆனா ஒன்னு. என் குழந்தைய மாதிரி பல்லவி வரமாட்டா. கட்டுப்பாடும் சுதந்திரமும் ஒரு சேர வளர்ப்பேன். தப்பா நினைக்காத மோனே. பல்லவிக்கு விஷயம் தெரியும். இருந்தாலும் யாராவது கேட்டா அன்னிக்கு எல்லாம் அவ முகம் பார்க்கவே நல்லா இருக்காது. இங்க அவ அம்மா அப்பப்போ வந்துட்டுப் போகும். இருந்தாலும் நாங்க தான் அவளுக்கு எல்லாம். அதான்."

"பல்லவி நல்ல வருவா அம்மா. வேற எதுவும் சொல்ல என்னால முடியல."

அன்று இரவெல்லாம் சரவணனுக்கு தூக்கம் வரவே இல்லை. இந்த தாயுள்ளம் கொண்டவளுக்கு மகளையே விட்டு சென்ற ஒரு மகள் . எது காதல் என்றே தெரியாத தலைமுறையினர் என்ற கோபம். நான் தான் முக்கியம் என்று எண்ணி பெற்ற மகளை விட்டுச்செல்லும் அளவுக்கு இருக்கிறார்கள். ஸ்ரீதேவி அம்மா இருக்கிறார் என்ற உறுதியில் தனக்கென்று மற்றொரு வாழ்க்கையைத் தேடிச் சென்றிருப்பாளோ?  ஸ்ரீதேவியின் மகள் ஆயிற்றே ஈரம் இல்லாமலா இருக்கும்? இவள் புதுமைப் பெண்ணாஇல்லை தாயுமான பாட்டியாய் இருக்கிறாளே ஸ்ரீதேவி அம்மா. அவர் புதுமைப் பெண்ணாஎன்று கேள்விகள். இன்னும் சில வருடங்களில் பல்லவி தெளிந்தவளாய் வளர்ந்த பின்னர் வயது இடைவெளி பிரச்சனைகளைத் தாருமே. ஸ்ரீதேவி அம்மா -புதுமைப் பெண் - பார்த்துக் கொள்வார் என்று தனக்குத் தானே பதில் அளித்துக் கொண்டான்.

நாட்கள் சென்றன. பல்லவியுடன் நல்ல நட்பாகிக் கொண்டான். மாலை ஸ்ரீதேவி அம்மாவுடன் திரைப்படம்சனி ஞாயிறுகளில் ஒன்றாய் ஊர் சுற்றுதல் என்று சென்றது. நவராத்திரி விடுமுறைக்கு சென்னை செல்ல தந்து தாய்மனைவிகுழந்தைக்கு ஸ்ரீதேவி அம்மா வாங்கி தந்த ஆடைகளோடு ஆயத்தமானான்.

சித்தப்பா தந்த ஐந்நூறு ரூபாய் இவர்கள் ஒரு மாதம் முன்னே காளி கோவில் சென்றபோது வரிசையை மீறி செல்ல ஒரு ஹிட்லர் மீசைக்காரனிடம் காணிக்கையாய் சென்றது.

Saturday, May 12, 2018

தேடல் சிந்து

கண்கள் உன்னை தேடுதடி கண்மணி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி

மழைக்காக ஏங்கும் உழவன் போல
உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி
மழைக்காக ஏங்கும் உழவன் போல
உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி


நீ சொல்லாய்
நீ சொல்லாய்
காரணங்கள் என்னவென்று
நீ சொல்லாய்
கண்ணுறங்கும் வேளையிலும்
மனமுறங்கா நிலைதந்து
எங்கே நீ உள்ளாயோ?
கண்முன்னே வாராயோ?
சொல்லடி சொல்லடி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி


Wednesday, March 21, 2018

புத்தபெருமானே!

என்னே அழகு உன் சிரிப்பு!
போதி மரத்தின் கீழ்
மௌனமாய் அமர்ந்து
புன்சிரிப்பு மலர்ந்து
அதை கண்டார்
அதை சொல்ல
கேட்க வேண்டும்!




உன் சிலையின் சிரிப்பே
மனத்தின் பாதாளம் வரை சென்று
அமைதி தர,
நேரில் கண்டோர்
பேரின்பம் பேரமைதி
அன்றோ கொண்டிருப்பர்!
தெருவெல்லாம் இங்கே பிள்ளையார் போல
அங்கே தெருவெல்லாம் நீ!
மலர் கொண்டு உன்னை வணங்கும் பக்தி
நேரில் எத்தனை அன்பு அவர்களுக்கு
நட்பு பாராட்டும் உணர்வு

அவ்வப்போது அரக்கர்களாய்
செந்நீர் பார்த்து மகிழும் சிலர் மட்டும்
உன் புன்னகை காண மறந்திருப்பாரோ?
இன்று கண்டி வரை
உன் கோவில் அருகிலும் செந்நீர் வந்துவிடும்  போல
இன்னும் புன்னகைத்து அமைதி தருகிறாய்
உன்னை வணங்குவோர் சிலர்
உன் புன்னகை பார்ப்பதில்லை
அவர்கள் கண்படுமாய் புன்னகை வீசு!
உன் முகம் பார்த்தால்
கத்தி எடுக்க அல்ல கத்திப் பேசவும் மனம் வருமோ
புத்தபெருமானே?

Saturday, December 9, 2017

கண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை

1960, மதராஸ்

கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என தெரு எங்கும் வண்டிகள். அன்று சுப்புலட்சுமி கச்சேரி வேறு.

கச்சேரி தெரு வாசி - கணபதி சுப்பிரமணியம். டெலிபோன்சில் வேலை. சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம். வேலை நிமித்தமாய் வெளியூர் வாசியானதில் முதலாமவர். மனைவி கண்ணம்மா, மகன் கணேசன் என தனிக் குடித்தனம்.

"கண்ணம்மா! இன்னிக்கி சுப்புலட்சுமி கச்சேரி", ஆரம்பித்தார் சுப்பிரமணியம் .

காபியை ஆற்றிக் கொண்டிருந்தவாறே கண்ணம்மா, "நேத்தே கோவில் வாசல்ல அட்டைல எழுதி இருந்தது பாத்தேன். கண்டிப்பா போகணும். சுவாமிய பாக்க வராளோ இல்லையோ. அவாப் பாட்டுக்கு கூட்டம் கூடிடும். ஞாயித்துக் கிழமை வேற."

"சரியா சொன்ன. கிராமபோன் எல்லாம் இப்ப எம்.எஸ் பாட்டு தான்."

"நானும் நேர்ல பாக்கணும்னு அவ்வளவு ஆசப் பட்டேன். கோவில்லப் பாக்கற மாதிரி பண்ணிட்டான்."

"அத ஏன் கண்ணம்மா கண்ண கசக்கிண்டே சொல்ற?"

"ரெண்டு நாளா ஒரே எரிச்சல். கண் ஆஸ்பத்திரிக்குப் போனா சுலைமான் டாக்டர் டிராப்ஸ் தருவர். சரி ஆயிடும்."

"இப்படி எதையும் என் கிட்ட சொல்லாம  இரு. நாளைக்கு சாயங்காலம் சீக்கரம் வரேன், டாக்டர் கிட்ட அழைச்சுண்டு போறேன்."

காபியை அருந்தி விட்டு கோவிலுக்கு கிளம்பினர். சுப்புலெட்சுமியை நேரில் பார்த்தது அவ்வளவு மகிழ்ச்சி. வீடு திரும்புகையில் கண்ணம்மாவிற்கு இமைகள் வெடித்தாற்போல் ஓர் உணர்வு. வலியால் துடித்தாள்.

"அண்ணா! கண்ணெல்லாம் கட்ட எறும்பு கடிக்கற மாதிரி இருக்கு."

"என்ன கண்ணம்மா இப்படி சிவந்துருக்கு. தூசி ஏதாவது விழுந்துருக்கும்.", என்று சொல்லி விட்டு தன அங்கவஸ்திரத்தை அவிழ்த்து வாயினில் ஊதி அவள் கண்களில் வைத்தார்.

"எல்லாரும் பாக்குறா."

"பாக்கட்டும். ரெண்டு நாளா கண் வலின்னு சொல்ற. இப்ப வேற இப்படி செக்கச்செவேல்னு எம்.எஸ். உடுத்திண்டு வந்த புடவை கலர் மாதிரி ஆயிடுத்து உன் கண்ணு. நாளைக்கு நான் ஆபிஸ் லேட்டா போயிக்கிறேன். ஒன்பது மணிக்கெல்லாம் சுலைமான் டாக்டர் கிட்டப் போயிடலாம்."

"எம்.எஸ். புடவையத்தான் பாத்துண்டு இருந்தேளா?"

"பாத்தேன். அவளோ செவப்பா பளிச்சுனு இருந்ததே. உனக்கு வாங்கினா நல்லா இருக்குமேன்னுப் பாத்தேன். சந்தேகத்தப் பாத்தியா உனக்கு? ராமனே தோத்துடுவான் உன் ஆத்துக்காரன் கிட்ட."

"அதையும் பாக்குறேன்."

அடுத்த நாள் காலை. சுலைமான் டாக்டரிடம் கிளம்பினர். ஆய்வுகள் எல்லாம் செய்தார் சுலைமான் டாக்டர்.

"கணபதி சார்! உங்க மனைவிக்கு கண்ணுல இருக்கற நரம்புல பிரச்சனை. வலி இன்னும் அதிகம் ஆகும். கார்னியால இருந்து மூளைக்கு போற நரம்பு. நீங்கப் படிச்சவங்க சொல்றத  புரிஞ்சிப்பீங்க. உங்க கிட்ட சொல்றேன் அவங்க கிட்ட சொன்னா எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல. அவங்க பார்வை கொறஞ்சிக்கிட்டு இருக்கு. கார்னியா ரெண்டு கண்ணுலையும் இனபெக்ஷன்ல அஃபக்ட் ஆயிருக்கு, ஆபரேஷன் பண்ணாலும் பிரயோஜனம் இல்ல. இன்னும் சில நாட்கள் தான் அவங்களுக்கு பார்வை."

கணபதி எதுவும் பேச முடியாது அமைதி ஆனான்.

"சாரி கணபதி."

"டாக்டர் இப்போ கண்ணம்மா கிட்ட சொல்ல வேண்டாம். நீங்க வைட்டமின் மாத்திரை எழுதித் தாங்க. அவக்கிட்ட தூசி, அடுப்புக் கரி கண்ணுல பட்டதுனால எரிச்சல்னு சொல்லி குடுங்க. நான் சமயம் பாத்து சொல்லிக்கறேன்."

கணபதி சொன்னவாறே செய்தார் டாக்டர். வலி மிகாமல் இருக்க மாத்திரைகள் வழங்கினார்.

நாட்கள் செல்ல பார்வை மங்குவதாய் உணர்ந்தாள் கண்ணம்மா. டாக்டர் சுலைமான் கருணையில் ஒரு கண்ணாடிப் பொருத்தப்பட்டது.

"கணபதி சார்! கண்ணம்மா கிட்ட இன்னும் சொல்லலையா நீங்க?"

"தைரியம் வர வெச்சிட்டு இருக்கேன் சார்.  டிரான்ஸப்ர் கிடைச்சிருக்கு. நாகர்கோவிலுக்கே. மே மாசம் அங்க மாறனும். இங்க இருந்தா அவளுக்கு கஷ்டம். அங்க பாத்துக்க நிறைய பேர் இருகாங்க."

"கடவுள் காப்பாத்துவான் கணபதி சார். நான் உங்களுக்காக துஆ பண்றேன்."

"நன்றி சார்."

பங்குனி முடிந்து சித்திரை பிறந்தது. வாசலில் கோலமிட்டுவிட்டு வந்தாள் கண்ணம்மா.

"கோலம் போட்டாச்சா?"

"போட்டாச்சுண்ணா."

சற்று முன்னே சென்றவள் பின்னே வந்து
"இந்த சுலைமான் டாக்டர் வைத்தியம் படிச்சிட்டு வந்தாரா என்னன்னே தெரியலை. புள்ளிய வெச்சிட்டு பாத்தா ஒன்னும் தெரியலையேன்னு தெரியறவரைக்கும் போட்டேன். பக்காத்தாத்து கிரிஜா வந்துட்டு புள்ளியையே கோலம் அளவுக்கு போடுறையேன்னு கேலி பண்றா. கண்ணாடிப் போட்டும் நல்லா தெரிஞ்ச பாடு இல்ல. இன்னும் மோசமாயிண்டு இருக்கு."


"என்ன சொல்ற நீ? நல்லாத் தெரியும்போதே சிவாஜி படம் வந்துருக்கு. தெய்வப்பிறவி. பாத்துடலாம். பிளாசா தியேட்டர்ல போட்டுருக்கானாம்."

"நான் வரல."

"கணேசன் படம் கண்ணம்மா. சிவாஜி கணேசன் படம். உன் பையனுக்கு கணேசன் பெயர் வைக்க ஒத்த கால்ல நின்ன."

"போகலாம்."

மாலை படம் முடிந்து வீடு திரும்பினர்.

"அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம். அன்பாலே தே...டிய என் அறிவு செல்வம் தங்கம்.", சுருதி கட்டிப் பாடினார் கணபதி.

"படுக்கைல என்ன முதலிரவுப் பாட்டு.?"

"எவ்வளவு நல்லா இருந்தது அந்தப் பாட்டு. படம் பிடிச்சதா?"

"பிடிச்சது. கண்ணுதான் சரி இல்ல. சிவாஜி யாரு, எஸ்.எஸ்.ஆர் யாருன்னுத் தெரியல. குரல் வெச்சுக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கு. பாடும் போது மட்டும் அவருக்கு ரெண்டு குரல் பாத்தேளா?"

"மக்கு. சிவாஜி பாட மாட்டார். அவர் வாயசைப்பார். பாட தனியா ஆள் இருக்கா. அவா பாடினதையும் இவா வாயசைக்கரதையும் சேர்த்துடுவா. இன்னும் பாகவதர் காலத்துலயே இருக்க."

"அது சரி. வயசானவர் பாடுற மாதிரி இருந்தது அந்தப் பாட்டு."

படுக்கையில் படுத்துக் கொண்டே பேச்சு தொடர்ந்தது.

"நாகர்கோயில் மாற்றம் கேட்டிருக்கேன் கண்ணம்மா. மே மாசம் அங்க போக சொல்லுவா போல இருக்கு ஆபீஸுல. இதே உத்தியோகம் தான். இறச்சகுளத்துல இருந்தே சைக்கிள்ல போயிட்டு வந்துடலாம்."

"நீங்களே மாற்றம் கேட்டேளா?"

"ஆமாம் கண்ணம்மா."

"மெட்ராஸ்ல தான் நல்ல முன்னேற முடியும். அது இதுன்னு சொல்லி கூட்டிண்டு வந்தேள்."

"நம்ம கோவில் தாணு ஐயரோட சக்கர பொங்கல், பாயாசம், கொழுக்கட்டை மாதிரி இங்க எவனும் பண்ணலையே."

"இது ஒரு காரணமா?"

"உன் கண் வேற சரி இல்லைன்னு சொல்றியே கண்ணம்மா."

"அதான் சுலைமான் டாக்டர் மருந்து குடுத்துருக்காரே."

"கண்ணம்மா! நான் உன்கிட்ட மறைச்சிட்டேன். உனக்கு கண்ணுல பார்வை கொறஞ்சிண்டு வருது. இன்னும் கொஞ்சம் நாள்ல உன் பார்வை முழுசா போயிடும்னு டாக்டர் சொன்னார். நீ எப்படி கண்ணம்மா இங்க தனியா கஷ்டப்படுவ? அங்க என் அம்மா, உங்க அம்மா எல்லாரும் இருக்கா?"

அழுது தீர்த்தாள் கண்ணம்மா. தூங்கிக் கொண்டிருந்த கணேசன் சிலுசிலுத்தான். ஏதேதோ புலம்பி தீர்த்தாள் கண்ணம்மா.

"கண்ணம்மா! அழாதே. வெப்ராளப் படாதே.  இனி உனக்கும் சேர்த்து நான் பார்ப்பேன். அழாதே.", உருகினார் கணபதி.

மே 1961, இறச்சகுளம்

ஊர் உள்ளே வரும் பொழுது நாவல் மரங்களும், தென்னை மரங்களும் சுகமாய் காற்றைத் தந்தன. சுற்றியிருக்கும் மலைகளில் மேகம் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தது

"சாமி, விடுமுறையா? பங்குனி உத்திரத்துக்கு வரலையே. இந்த முற சரியான சாமியாட்டம். பூதத்தானும் வந்து போனபாடு இல்லையே."

"அப்படியா? செல்லையா நான் லீவுல வரல. இங்கையே மாத்தி வந்துட்டேன். நாகர்கோவில்ல தான் ஜோலி."

"நல்லதா போச்சு சாமி."

"எத்தனை தடவ சொல்லிருக்கேன் சாமின்னு கூப்பிடாதான்னு."

இந்த சம்பாஷனை தொடர, கண்ணம்மா சுற்றியும் பார்த்துக் கொண்டு வந்தாள். மரங்களின் பச்சையும், சாலையின் மண் நிறமும், குளங்களின் நீர் நிறமுமே அவள் கண்களுக்குத் தெரிந்தன. நிறம் மட்டும் தான் தெரிந்தது அவளுக்கு. மரங்களின் உயரத்தை வைத்து நாவல், தென்னை, வாழை என வகைப்படுத்திக் கொண்டாள்.

கண்ணம்மாவிற்கு தனக்கு திருமணம் ஆன பதினாறு வயது வரை இறச்சகுளம் தான் உலகம். ஒவ்வொரு அடியும் அத்துப்படி. படிகளில் ஏறுவது, வீட்டின் முகப்பில் ஓட்டில் இடித்துவிடாமல் குனிந்து செல்வது எனப் பார்த்துக்கொண்டாள்.

நாட்கள் செல்ல செல்ல நிறங்களும் தெரியாது இருள் மட்டுமே தெரிந்தது கண்ணம்மாவிற்கு.

"கண்ணம்மா பாசமலர்னு ஒரு படம் சிவாஜி கணேசன் நடிச்சது போலாமா?"

"நான் என்ன அண்ணா பாக்கறது? இருட்டுத் தவிர ஒன்னும் தெரியல இப்ப எல்லாம். கணேசன் சமத்து தொந்தரவு பண்ணாம புரிஞ்சிண்டு இருக்கான்."

"அவன் நம்ம பையன். சமத்தா தான் இருப்பான். நாளைக்கு சாயிங்காலம்  ஆட்டத்துக்கு பாசமலர் போறோம். தயாரா இரு."

படத்துக்கு கிளம்பினர். வசனங்கள் இல்லாது காட்சிகளால் புரியவைக்கும்படி இருக்கும் இடங்களில் கணபதி விளக்கினார், கணபதியின் கண்கள் வழி திரைப்படம் பார்த்தாள்  கண்ணம்மா.

"கண்ணம்மா படம் பிடிச்சதா?"

"எனக்கு அழுகையே வந்துடுத்து."

"பார்த்தேனே. அந்த மலர்ந்தும் மலராத பாட்டுல என்னமா அழுத? முன்னாடி உட்கார்ந்தவன் வெள்ளம்னு நெனைச்சிட்டான்."

"சிவாஜிக்கு இந்த குரல் பொருத்தமா இருக்கு. அவரே பாடுற மாதிரி.  அந்த தெய்வப்பிறவி பாட்டு கிழவன் பாடின மாதிரி இருந்தது."

ஊரில் திரும்பி வரும்பொழுது கண்ணுத் தெரியாதவளுக்கு பாசமலர் படமாம். எதைக்கண்டானோ இந்த கண்ணம்மா கிட்ட என கிராமம் முழுதும் காதுப்படவே பேச்சுக்கள்.

நாட்கள் சென்றன. நேரில் எல்லோரும் அன்பாய் பேசினாலும், குருடிக்கு வாழ்வைப் பார் எனப் பேச்சுக்களும்.

"போன வாரம் செல்லையன் வயல் பணம் கொடுத்தான். நல்ல விளைச்சல் இந்த வருஷம். அந்தப் பணத்துல உனக்கு ஒரு ஆரமும் வளையலும் வாங்கினேன். போட்டு விடட்டா?"

"எனக்கெதுக்கு அண்ணா நகை. குருடிக்கு"

"அப்படிச் சொல்லாத கண்ணம்மா."

"எனக்குன்னு ஏன் இப்படி செலவு? பார்க்கவும் முடியாது, நான் ஊர் முன்னாடி தங்கத்துல மின்னிண்டு என்ன பிரயோஜனம்."

"கோவில்ல தினமும் தாணு சாமிக்கு எல்லாம் நகைல அலங்காரம் செய்யுறான். சாமிக் கேட்ட மாதிரி நான் பார்க்கலையே. இல்ல சாமி தான் பாத்துக்கறதா தனக்கு இந்த இந்த நகைப் போட்டுருக்கு, இந்த இந்த பூ சாத்திருக்குன்னு."

"உடனே கடவுளப் பழிக்காதேள்."

"நான் மாட்டி விடட்டா?"
மாட்டி விட்டார் கணபதி.

யக்ஞ மாமா வாசலில் இருந்து கணபதியின் பெயரை அழைத்தார்.

"வாங்கோ! யக்ஞ மாமா. ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆச்சு. இப்பதான் கண்ணு தெரிஞ்சதா?"

"எனக்கு நல்லாத் தெரியறது. உனக்கும் தெரியறதான்னு கேட்டுண்டுப் போக வந்தேன்."

"சண்டை போடவந்துருக்கேளா? உக்காருங்கோ."

"கணபதி! உன் ஆத்துக்காரிக்கோ கண்ணு சுத்தமாத் தெரியலை. கணேசனும் சின்ன பையன். நீ நல்லா சம்பாதிக்கற. சர்க்கார் உத்தியோகம், நல்ல வயல் எல்லாம் இருக்கு."

"என்ன சொல்ல வரேள் மாமா?"

காபி எடுத்து வந்தாள் கண்ணம்மா.

"கண்ணம்மா கோவில்ல தாணு பாயாசம் தரேன்னு சொன்னான். அவன் நாகர்கோயில் போகணுமாம். கொஞ்சம் வாங்கிண்டு வாயேன்."

கண்ணம்மாவும் கணேசனும் கோவில் கிளம்பினர். இருவரும் காபி அருந்தினர்.

"கணபதி. திருப்பதிசாரத்துல வெங்கடேசன் வாத்தியார் இருக்கார் இல்லையா. கோமதின்னு அவளுக்கு ஒரு பொண்ணு. திவ்யமா பாடுவா. நல்ல அழகு. சாவித்திரி மாதிரி. நான் சொன்னேன்னா."

"மாமா. நீங்க எதப் பேச வரேள்னு புரியறது."

திரும்பி வந்த கண்ணம்மா வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.

"கணபதி குறையிருக்கு டா  அவளுக்கு, நீ என்னடான்னா சினிமா, நகைன்னு கண்ணுத் தெரியாதவளுக்கு இவ்வளவு செலவு பண்ணுற. இளமைய வீணாக்காதே."

சற்றே கோபம் ஆனார் கணபதி.

"அவளுக்கு என்னைய்யா குறைய கண்டீரு. காபி அவப்போட்டது தான். நல்லா இருந்ததா?"

"காபி போட்டா?"

"நல்லா இருந்ததா? இல்லையா? சொல்லும்."

"நல்லா இருந்தது."

"சக்கரைக்கு பதிலா உப்போ, பாலுக்கு பதிலா மோரோ குடுத்தாளா?"

"இல்லை. காபியும் இதுவும் எப்படி சரியாகும். குறை இருக்கே."

"எனக்குத்தான்  குறை. குன்னத் தொங்கிடுத்து. அவளுக்கும் மாப்பிள்ளை பாரு."

"ஏன் இப்படி எல்லாம் பேசற?"

"மாமா. நான் மரியாதையா சொல்லிக்கறேன். இதப் பத்தி பேச நம்மாத்துக்கு வர வேண்டாம். இங்க தான் நானும் அவளும் இனிமேல் வாழணும். புரிஞ்சிண்டு இருப்பேள் அப்படின்னா சந்தோசம்."

திண்ணையில் அமர்ந்திருந்த கண்ணம்மாவிற்கு கேட்காமலா இருந்திருக்கும்?

அன்று இரவு

"என்ன ஒரே சத்தம் யக்ஞ மாமாவோட."

"புஷ்கலா மாமி படுத்தறாளாம். பாவம் புலம்பித் தள்ளிட்டார்."

"வாசல்ல என் காதுல விழுந்தது."

"இதப் பற்றி பேச வேண்டாம். தூக்கம் வருது. நான் படுத்துக்கறேன்."

கண்ணம்மாவிற்கு நன்றி சொல்ல வேண்டி எண்ணம். வார்த்தையால் சொல்லி என்ன பயன்? நெகிழ்ச்சியில் அவள் வாயடைத்தது. இதுவல்லவோ காதல் என எண்ணிக் கொண்டாள்.

குற்ற உணர்வோ என்னவோ? அடுத்த நாளிலிருந்து யக்ஞ மாமா தினமும் காபி அருந்த ஆஜர் ஆகிவிடுவார்.

தெரு குழந்தைகள் எல்லாம் கண்ணம்மா வீட்டு தோசை என்றால் ஓடி வந்துவிடுவர். குரலை வைத்து யார் என கண்டு கொள்வார் கண்ணம்மா. அன்பாய் முகத்தை வருடியும் பார்ப்பாள்.

இருபது வருடங்கள் கழித்து

"அம்மா! நான் கேட்டாக் கோச்சிக்க மாட்டியே?"

"கணேசா! கிட்ட வா."
முகத்தை வருடிக் கொடுத்தார்.

"என் முகம் உனக்கு ஞாபகம் இருக்கா அம்மா?"

சிரித்துக்கொண்டு,"முகத்துல தாடி எல்லாம் வந்துருக்கு கணேசனுக்கு."

"இருக்கா அம்மா?"

"இருக்குப் பா. மயிலாப்பூர்ல இருந்தோம். மூணு வயசு உனக்கு. அப்பப் பார்த்த முகம். இன்னும் ஞாபகம் இருக்கு."

"இப்போ எப்படி இருக்கும்னு பாக்க ஆசை இல்லையா?"

"முடியாதேப் பா."

"உனக்கு ஏதாவது கற்பனை வருமா? எப்படி இருப்பான்னு தோனுமா?"

"அந்த மூணு வயசு குழந்தைக்கு மீசை மொளச்ச மாதிரி" என்று சிரித்தார்.

கணபதி  உள்ளே நுழைந்தார்.

"கண்ணம்மா! நீ எப்படி இருக்கன்னு தெரிஞ்சிக்கறையா?"

"எனக்கு எதுக்கு?"

"இன்னும் அழகாயிட்ட. தலையில அங்க அங்க வெள்ளி முடி. அவ்வளவு தான். எனக்கு தான் வழுக்கை. யக்ஞ மாமா மாதிரி,"
சிரித்துக் கொண்டாள் கண்ணம்மா.

தனது வழுக்கைத் தலையில் கண்ணம்மாவின் கையை எடுத்து வைத்தார் கணபதி. இருவரும் சிரித்துக் கொண்டனர்.
அன்பும் காதலும் கரைபுரண்டு ஓடின.

1996, இறச்சகுளம்

"பாட்டி, பாட்டி."

"ஆனந்த். பாட்டி தூங்கும்போது தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு சொல்லிருக்கேனா?"

"பாட்டி, நீ தான் கூப்டா எழுந்துக்கற. தாத்தா எழுந்துக்கல."

"அவரத்  தொந்தரவுப் பண்ணாத."

மாலை நான்கு மணிக்கு காபி போட்டுவிட்டு கணபதியை எழுப்ப சென்றார். அப்பொழுதும் எழவில்லை.

"என்ன தூக்கம். ரிட்டயர்டு ஆனா ராத்திரி பகல் தெரியாம தூங்கறது. காபி ஆறறது. டேய் ஆனந்த். எழுப்பு டா தாத்தாவ. கணேசா! பாரு அப்பா இப்படித் தூங்கறாரு."

கணேசன் வந்து பார்த்துவிட்டு கதறி அழத்தொடங்கினான். புரிந்து கொண்ட கண்ணம்மா புலம்பிக்கொண்டே சமயலறைக்கு சென்றாள்.

"கண்ணுத் தெரியமாட்டேங்கறது கணேசா! இருட்டா இருக்கு கோமதி. ஆனந்த், ராதா பாட்டிக்கு கண்ணுத் தெரியலை."
இருவரின் அன்பை நன்கு அறிந்த கணேசனமும் அவரது மனைவியும் அமைதியாய் இருந்தனர்.

இந்த கதை எழுத காரணியாய் இருந்த உண்மை தம்பதி. புகைப்பத்திற்கு நன்றி திரு, ஆனந்த் 


என்றும் நன்கு அறிந்து காலடி வைக்கும் கண்ணம்மாவின் கால்களுக்கு அப்பொழுது ஒவ்வொரு அடியும் புதிதாய் இருந்தது. அவள் சற்று முன்னர் ஏற்றிய விளக்கு அவள் ஆடையைப் பற்றிக்கொண்டது.

"கண்ணுத் தெரியலையே கணேசா. கண்ணுத் தெரியலையே."
உடல் எரிவதைக் கண்ட ஆனந்த்

"அப்பா! பாட்டி பாட்டி", என அலறினான்.

"அம்மா"

"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது டா."

"அம்மா(அழுதவாறு)"

"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது டா. அவர் எழுந்துட்டாரா?"

"அம்மா!"

தண்ணீரை எடுத்து அவர் மேல் ஊற்றினான். நெருப்புக்  காயம் உடலெங்கும் இருந்தது.

"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது. இருட்டா இருக்கு எனக்கு. அவர் எங்கே இருக்கார். ஆனந்த் தாத்தாவ எழுப்பு."


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆறு நாட்களில் உயிர் இழந்தார் கண்ணம்மா!

_____________________________________________________

உருக்மிணி - கண்களை இழந்த தேவதை. இவர்களை நேரிலும் பார்த்திருக்கிறேன். இவரது மகன் இராம்ஜி மற்றும் பேரன் ஆனந்த் இவர்களைப் பற்றி கூறும்போது நெகிழ்வாய் உணர்ந்திருக்கிறேன். அன்பும் காதலும் கரைபுரண்டு ஓடிய வாழ்க்கை. அவர்களின் உண்மை சம்பவங்களை அடிப்படையாய்க் கொண்டு கற்பனை சிறுகதை. அனுமதி தந்த ஆனந்திற்கு நன்றி. என்னுடைய கதைகளில் எத்தனையோ மரணிக்கும் சம்பவங்கள் எழுதி உள்ளேன். இந்த கதையில் எழுதும்பொழுது அழுதேன். மனநிறைவு தந்த கதை.

Friday, November 10, 2017

அன்பிலும் பொருந்தும் நியூட்டனின் மூன்றாம் விதி

அவன்: சார் காபியா? டீயா?
இவன்: காபியே சொல்லிடுங்க சார்
அவன்: ரெண்டு காபி தம்பி

அவன்: ரொம்ப சங்கடமா இருக்கு சார் சில சமயம்
இவன்: என்ன சார்? என்ன ஆச்சு? நீங்க இந்த மாதிரிலாம் சொன்னா எப்படி?  சந்தோசமா  பாஸிட்டிவா இருந்தா தானே சார் நீங்க.
அவன்: என்ன பண்றது சார். நாம எல்லாருக்கும் அன்பு செஞ்சு நல்லது செஞ்சாலும், எல்லாரும் அப்படி நமக்கு திருப்பி நினைக்கறது இல்லையே. நன்றியும் மன்னிப்பும் சொல்றதுக்கு கூட மனசு இல்ல சார் பலருக்கு.
இவன்: புரியுது சார்
அவன்: நாம எல்லார் மேலயும்  காட்டுற அன்பு நமக்கு திருப்பி கெடைக்கலனா ஒரு சோகம் வருது பாருங்க. மன வேதன சார்.
இவன்: காபி எடுத்துக்குங்க சார்.


அவன்: நான் எதையும் எதிர்பார்த்து செய்யல. ஆனா அப்பப்போ மனசு கேக்குது சார்.
இவன்: ஹ்ம்ம்
அவன்: வெறுப்பு உணர்ச்சி வருது சார்.
இவன்: உங்கள பார்த்து பாசிட்டிவிட்டி தெரிஞ்சிக்கிட்டேன் சார். உங்களுக்கு இந்த மனநிலை இப்படி வந்துருக்க வேண்டாம். நான் ஒன்னு சொல்லட்டா சார்.
அவன்: சொல்லுங்க சார்
இவன்: இந்த அன்புக்கும் நியூட்டன் மூன்றாம் விதி மாதிரி இக்குவல் அண்ட் ஆப்போசிட் ரியாக்சன் கண்டிப்பா இருக்கு சார். கர்மான்னும் சொல்லலாம். தமிழ்லயே அழகா சொல்லிருக்காங்க தினை விதைச்சா தினை தான் சார்.
அவன்: எப்போ பா?
இவன்: கிடைக்கும் சார் நியூட்டன் காலத்த வெச்சி சொல்லலையே. இக்குவல் என்ன சார்? அதுக்கு மேலையே கிடைக்கும் அன்பு, காதல்ல எல்லாம்.
அவன்: பேச்சுக்கு நல்லா இருக்கு சார்.
இவன்: சார் உங்களுக்கு திருப்பி வரணும்னு இல்ல சார். உங்களப் பாத்து  நாலு பேரு ஏதாவது செய்யறான் சார். நான் அத நேர்லப் பாக்குறேன்.  அது கூட ஒரு ரியாக்சன். எங்கயோ படிச்ச ஞாபகம் சார். எதோ ஒரு மரம் வேர் விடறதுக்கே மாசங்கள் ஆகுமாம்.
அவன்: சரி. நீ சொல்றதே சரின்னு வச்சுக்குவோம். வஞ்சம் புடிச்சவன், ஏமாத்தி வாழறவன் எல்லாம் நல்லா வசதியா இருக்கானே.
இவன்: மாறும் சார். இங்கத் தொடங்குற அன்பும் நல்ல எண்ணங்களும்  பரவும் சார். அன்பு நிறைஞ்சிட்டா வஞ்சம் அழிஞ்சிடும். வஞ்சம் இன்னொரு பெரிய வஞ்சத்தால அழியறதோட அன்புனால இல்லாமப் போகட்டும் சார்.
அவன்: இந்த காபி மாதிரி புத்துணர்ச்சியா இருக்குப்பா நீ பேசுறது
இவன்: சார் உங்களுக்குப் போய்
அவன்: இக்குவல் ரியாக்சன் உணர்றேன் உங்க பேச்சுல.
இவன்: சார்!