மூர்த்தியும் கணேசனும் இறச்சகுளம் தெற்கு தெருவை சேர்ந்த சகோதரர்கள். மூர்த்தி இறச்சகுளம் அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு. கணேசன் நான்காம் வகுப்பு. பள்ளி முடிந்து வீடுத் திரும்பிக் கொண்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தி விடுமுறை வேறு. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை. இருவரும் வகுப்பு முடிந்து வீடுத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
"மூர்த்தி அண்ணே! இந்த வருஷம் பிள்ளையார் சதுர்த்திக்கு ஒரு பத்து கொழுக்கட்டையாவுது திங்கனும்னே. தாணு வாத்தியார் வீட்லதான் கோவிலுக்கு செய்யராங்களாம்."
"ஃபங்க் வாத்தியார் வீட்லையா? நான் வர மாட்டேன்போ. காத திருகிவிட்டுருவாறு. கணக்குல நூத்துக்கு நாப்பது லே. "
"கோயில்ல பிரசாதமாத் தருவாங்க. வீட்டுக்கு போக வேண்டாம், பட்டருக்கு மூக்குப் பொடி கொடுத்து வாங்கிடலாம்னே."
"சரி லே கணேஷா!"
"லேய் கணேஷா! அங்கப் பாரு லே ஒரு நாய்க்குட்டி ரோட்டுல ஓடிக்கிட்டிருக்கு."
"ஆமாம் அண்ணே. அழகா இருக்கு."
"ஆமாம் லே."
"அண்ணே நம்ம இந்த நாய்க்குட்டிய வீட்டுக்கு எடுத்துட்டு போய் வளப்போம் ணே."
"போ லே. அம்மே ஏசுவாக."
"நீ போ அண்ணே. நான் பாத்துட்டு வரேன்."
மூர்த்தி அங்கிருந்து கிளம்பினான். கணேசன் நாய்க்குட்டியை ரசித்தவாறு சாலையிலேயே இருந்தான். தனது ஒரு கண்ணை மூடி இரு கைகளையும் மடித்து கேமராவைப் போல் வைத்து புகைப்படம் எடுத்தான்,
"எவ்வளவு அழகா இருக்க! எங்க வீட்டுக்கு வரியா? நாளைக்கு கொழுக்கட்டைலாம் இருக்கு.", என்று நாய்க்குட்டியைப் பார்த்து கேட்டான்.
நாய்க்குட்டி பள்ளத்தில் தேங்கி இருக்கும் நீரில் அதன் முகம் தெரிவதைப் பார்த்து அதனை சுற்றியும் சாடியும் கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு மிதிவண்டி வேகமாக வந்து நாய்க்குட்டியின் அருகே இடிப்பது போல் சென்றது. ஒரு நொடி கணேசன் அதிர்ந்து போனான்.
வேகமாக நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டான்.
"ஏத்திருப்பான். நீ என் கூட வந்துடு. வீட்டுல நான் இருக்கேன். அண்ணன் இருக்கான். அம்மை அப்பாலாம் இருக்காங்க. சரியா?", என்று கூறி வீட்டை நோக்கி நடந்தான்.
வெளியில் மூர்த்தி நின்று கொண்டிருந்தான்.
"லே! தூக்கிட்டு வந்துட்டியா. அடிதாமுலே உனக்கு."
வீட்டிற்குள் எடுத்து சென்று ஒரு ஓரமாக நாய்க்குட்டியை அமர வைத்தான்.
"அம்மே! அம்மே! நம்ம வீட்டுக்கு நாய்க்குட்டியக் கூட்டிவந்துருக்கேன்."
"என்ன லே சொல்லுத? அப்பா அடிபோடுவாரு. எடுத்துட்டு வெளில விட்டுடு."
"இல்ல அம்மே!"
"சொன்னாக் கேக்கமாட்டியா?", என்று அடிப்பது போல் வேகமாக வந்தார்.
"வேண்டாம் மோ.", என அழத் துவங்கினான்.
"அழாதே. அப்பா வரட்டும். சரின்னு சொன்னாருன்னா இருக்கட்டும்.",என்று கூறிவிட்டு சென்றாள்.
அழுகையும் சிரிப்பும் சேர்ந்து கணேசன் முகம் மாறியது. வேகமாக வெளியே ஓடி வந்தான்.
"மூர்த்தி அண்ணே! அம்மை சரின்னு சொல்லிட்டா. அப்பா சரின்னா சரியாமாம்?"
"அதோ அப்பா வராருலே. போய் கேளு."
வேகமாக தெரு முனைக்கு ஓடினான்.
"அப்பா!"
"மக்கா! லீவு விட்டுட்டாங்களா?"
"விட்டுட்டாங்கப்பா..!"
"சொல்லு மக்கா."
"ரோட்டுல ஒரு நாய்க்குட்டி அழகா இருந்துச்சுப்பா.நான் எடுத்துட்டு வந்துட்டேன். நம்ம கூட இருக்கட்டும் பா."
"சரி மக்கா! இருக்கட்டும்."
வீட்டுக்கு வந்த தந்தையிடம் நாய்க்குட்டியை தூக்கி வந்து காண்பித்தான்.
"அழகா இருக்கான் மக்கா!"
"பேர் வைப்போமா பா?", என்றான் மூர்த்தி.
"என்ன பெயர் வைக்கலாம்?"
கணேசன் ஏதோ சொல்ல வாயெடுக்க, "டோனி, ஜிம்மி இது மாதிரி வைப்போம் பா ", என்றான் மூர்த்தி.
"வேதகாரங்க பேர் எதுக்கு? அதெல்லாம் வேண்டாம் மக்களே."
"மணின்னு வைப்போம் பா.", என்றான் கணேசன்.
"நல்லா இருக்கப்போ. அப்படியே வெச்சிடுவோம்."
நாய்க்குட்டியைத் தூக்கிக் கையில் வைத்து தெருவினை சுற்றி வந்தான் கணேசன் .
"மணி! எங்க வீட்டு நாய்.", என்று காண்பவரிடம் எல்லாம் கூறினான்.
சதுர்த்தி மாலை இரண்டு கொழுக்கட்டைகளை அதற்கு கொடுத்துவிட்டு திருநீரும் பூசிவிட்டான்.
மணிக்கு உணவு வைப்பதை மூர்த்தியின் தந்தை வைத்தியலிங்கம் வழக்கமாக கொண்டு இருந்தார்.
மணியைப் பார்த்து, "மக்களே!", என்று சொன்னால் வாலாட்டத் தொடங்கும் மணி. மணியின் மீது வைத்தி அதிக அன்பு காட்டினார்.
மணி வளரத் தொடங்கினான்.
குட்டியாய் இருந்த அழகு இப்போதில்லை என்று கணேசன் மணியோடு விளையாடுவதையும் கொஞ்சுவதையும் குறைத்துக்கொண்டான்.
மணி, மூர்த்தியும் கணேசனும் பள்ளிக்கு செல்லும் போது அவர்களுடன் பள்ளிக்கூட வாசல் வரை சென்று திரும்பும். வைத்தி வரும் நேரமும் சரியாக பேருந்து நிறுத்தம் சென்று விடும். பிஸ்கட் கொடுத்து மணியிடம் பேசிக்கொண்டே வருவார். அவரது மனைவி கடைக்கு செல்கையிலும் கோவிலுக்கு செல்கையிலும் அவருடனே சென்று வாசலில் அமர்ந்து கொள்ளும்.
இவ்வாறே நாட்கள் சென்றன. கணேசனுக்கு ஏழாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறை வந்தது. அண்ணனும் தம்பியும் வீட்டிலேயே இருந்தனர்.
வைத்தி வேலைக்குக் கிளம்பினார். மணி அவருடனே பேருந்து நிறுத்தம் வரை சென்றது.
"மக்கா! சாயந்தரம் வந்துடு. அப்பா பிஸ்கட் வாங்கிட்டு வாரேன்", என்று சொல்லிவிட்டு பேருந்தில் ஏறினார்.
பேருந்து பூதத்தான் கோவில் தாண்டும் வரை அங்கு நின்றுவிட்டு, மணியும் கிளம்பினான்.
மாலை, மாட்டுக்கு கழனித்தண்ணி வாங்க செண்பகம் வந்தாள்.
"செண்பகம், கொல்லையில கழனிக் குடம் கெடக்கு. எடுத்துக்கம்மோ" , என்று டீ.வி பார்த்துக்கொண்டே கூறினாள் சிவகாமி.
செண்பகம் சென்ற நேரம், மணி அந்த குடத்தில் தன் வாயினை விட்டது. சிறிய வாய்க் கொண்ட எவர்சில்வர் குடம். மணியின் தலை குடத்தில் மாட்டிக்கொண்டது. செண்பகம் மணியின் முகத்தை குடத்தில் இருந்து எடுக்க முயன்றாள். முடியவில்லை.
"எக்கா! எக்கா! மணி தல கொடத்துல மாட்டிக்கிட்டு. எடுக்க முடியுல.", என்று கூறினாள்.
கணேசன் வேகமாக கொல்லைக்கு ஓடினான்.
"மணி!", என்று கூறிவிட்டு அழத் தொடங்கினான்.
நேரம் செல்ல மணியும் அழத் தொடங்கினான்.
கணேசன் குடத்தை இறுக்கிப் பிடிக்க, மூர்த்தி மணியை குடத்திலிருந்து எடுக்க முயன்றான். முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.
மணி, வைத்தியலிங்கத்தைக் கூட்டி வர பேருந்து நிறுத்தம் செல்லும் நேரம் வந்தது. மணி ஊளையிட்டு அழுதவாறு இருந்தான். குடத்தினை அறுக்கும் முயற்சியைத் தொடங்கினான் மூர்த்தி. பலனில்லை. மரம் அறுக்கும் சாஸ்தான் வெளியூர் சென்றாயிற்று. அவர் இருந்தால் மெசின் வைத்து குடத்தை எடுத்திருப்பார்.
வைத்தி பேருந்து நிறுத்தம் அடைந்தார். மணி அங்கு வரவில்லை. அருகில் இருந்த பழக்கடையில் மணி வந்தானா என விசாரித்தார். வராததை அறிந்து கொண்டு வீட்டிற்குச் சென்றார்.
தந்தை வந்ததைக் கண்டு கணேஷன் வேகமாக ஓடினான்.
"யப்போ! மணி தல கழனிக்கொடத்துல மாட்டிக்கிட்டு போ. ரெண்டு மணி நேரம் ஆகுது. எடுக்க முடியல போ. அழுதிட்டே இருக்கான்.", என்றான்,
வேகமாக கொல்லைக்கு ஓடினான்.
மணி அழுதுக் கொண்டிருந்தது.
"மக்கா!", என்று கூப்பிட்டார் வைத்தி.
மணி வைத்தியின் குரலை கேட்டு வாலாட்டத் துவங்கினான்.
"அப்பா வந்துட்டேன்லப்போ, அழக்கூடாது."
அப்போதே அழுகையை நிறுத்தியது மணி.
குடத்தினை அறுக்க முயற்ச்சித்தார் வைத்தி. பலனில்லை. பல்வேறு முயற்சிகள் எடுத்தார். வலியில் மணி அழுதது. முதுகினைத் தடவிக் கொடுத்தே இருந்தான். அழுகை குரலும் குறைந்தது.
"அழக்கூட சக்தி இல்லையே போ! மூர்த்தி இங்க வா.", என்று மூர்த்தியை அழைத்தார்,
மூர்த்தியினை குடத்தை இழுத்துப் பிடிக்க கூறி விட்டு, மணியை மறுமுனையிலிருந்து பிடித்து இழுத்தான். மணி வலியில் கத்தியது. இருப்பினும் பிடித்து வெளியில் எடுத்தான். சுவாசிக்க முடியாமல் திணறியது மணி.
மடியில் அமரவைத்து தடவிக் கொடுத்தார் வைத்தி. வாலாட்டியபடியே இருந்தது மணி. சுவாசிக்கத் தடுமாறியது மணி. தான் வாங்கிய பிஸ்கட்டை எடுத்து வருமாறு கணேசனிடம் கூறினார்.
கணேசன் வேகமாக சென்று பிஸ்கட் எடுத்து வர சென்றான். அவன் திரும்பி வரும்போது மணியின் வாலாட்டல் நின்றிருந்தது.
"மணி! மணி! மக்களே! அப்பா!! நீங்க மக்கான்னு கூப்பிடுங்க . அவன் வாலாட்டுவான்.", என்று கூறி அழ ஆரம்பித்தான்.
"இனி ஆட்ட மாட்டான்போ. அவ்வளவுதான். இனி தாத்தா, பாட்டி பாத்துக்குவாங்க!", என்றார் வைத்தி.
மணியை பழையாற்றங்கரையில் சென்று புதைத்து வரும் வரை ஜன்னல் வழியாக வீதியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் கணேசன்.