Saturday, May 16, 2015

நந்தன் கதை

பூனூல் அணியா குலத்தவன்
சிவன்பாதம் சேர்ந்தனன்
மந்திரங்கள் அறியன்
வேதங்கள் அறியன்
சிவமே அறிந்தனன்

ஆதனூர் பறையர் குலத்தினில்
தலைவனாம் நந்தன்
தில்லை காண நாளை செல்வேன்
என நாளும் சொல்லி
சிவமே மனத்தில் கொண்டனன்

நெற்றியில் திருநீரும்
கழுத்தில் மாலையும்
வாயில் நமச்சிவாயமும் கொண்டு
பூனுல் அணியா அந்தணனாய்
இந்த பாவிப் பறையன்

உயிர்பலி கொடுத்து பூசைகள் வேண்டாம்
கடும் நோய்க்கு பூசாரி சூடிட வேண்டாம்
படைத்தவனுக்கே எதற்கு பலி வழிபாடு
சிவன் பெயர் சொல்லி போற்றி பேரானந்தம்
எனத் தன் கூட்டத்திற்கு கூறினான்

மாற்று சிந்தனை மனச்சிக்கல்-
பித்துப் பிடித்த மடையன் என
பலிபூசாரி சொல்லிட
சிவப்பித்தன் தான் என
பாடினன் நந்தன்

ஆதனூர் அந்தணர்  நிலந்தனை
உழுது வாழ்க்கை நடத்தினன் நந்தன்
இவன் மக்கள் யாவரும்
இவனோடு உழுது
செல்வத்தை ஈட்டினர்

தில்லை செல்ல அனுமதி கேட்க
என்றும் அந்தணர் கேலி செய்தார்
பறையனுக்கு எதற்கு தில்லை
தில்லை சென்றால் இங்கே சோறு இல்லை
தொழிலே தெய்வம் என பதில்கள்

நந்தன் மனமோ சிவனையே நாடிட்டு
திருப்பங்கூர் செல்ல திட்டம் ஆயிற்று
அவன் மக்கள் சிலர்  சேர்ந்தும் ஆயிற்று
பறையனுக்கு கோவிலில் என்ன வேலை
என சிலர் வராமலும் ஆயிற்று

நந்தன் கோவிலுக்கு செல்ல
நந்தி சிலையோ உயர்ந்து
வழிமறைத்து நின்றது

(பாடலாக) பாடல் -1

பூனுல் இல்லை கோவிலுள் செல்ல
பாகையும் இல்லை கோவில் செல்ல
நந்திக்கு நந்தன் மேல் என்ன பகை?
சிவலிங்க தரிசனம் என் குலத்தார்
காண நந்தி தடை
மலைப்போலே நந்தி
இதுபோலே  கண்டது இல்லை
இந்த பாவிப் பறையன்
உன்னைக் காணேனோ?
நந்தி நீயேயாயினும்
சற்று விலகாயோ?

என நந்தன் பாட

பாடல்-2

நந்தி! எனைக்காண நந்தன் இங்கு வந்தான்
நந்தி! எனைக்காண நந்தன் இங்கு வந்தான்
விலகாயோ நீ விலகாயோ
சிலை நீ என நான் அறிவேன்
சிலை நீ அதை நான் அறிவேன்
தில்லை செல்லாது இங்கே வந்த்திட்ட
நந்தன் தான் எனை காண விலகாயோ?

பறையனென்று உள்ளே வரமால்
தான் பறையனென்று உள்ளே வரமால்
மனதினுள்ளே என்னை நினைத்து
என்னை காணாது மனம்வாடும்
நந்தன் தான் எனை காண விலகாயோ?

தில்லை கூட செல்லாது
உயர்தில்லை கூட செல்லாது
எனை காண மனம் ஏங்கி
மாந்தரோடு கூடி நின்று
நந்தன் தான் எனை காண விலகாயோ?

குலம்கொண்டு பிரித்தெடுத்து
கோவிலுள்ளே நுழையாது
மூடரவர் சொன்னதற்கு
பாவமாய் அங்கே நிற்கும்
நந்தன் தான் எனை காண விலகாயோ?
(பாடல் முற்று)
என சிவனும் பாட
ஆங்கே சிலையும் விலகிற்று
ஆனந்த தரிசனம் கண்டனன் நந்தன்

ஊர்திரும்ப,
பறைபாவிக்கு கோவில் ;
உழுது யார் திண்ணுவார் ?
என அந்தணனும் திட்ட
நந்தன் மனம் உடைந்தான்
கூட சென்றவருக்கும்
வேலை இல்லை என ஆனது

நாளை நாளை என
பல நாளைக் கடந்தான் நந்தன்
தில்லை செல்ல வழி இல்லை என ஆனது

பாடல்-3

அந்தணன் வீடு சென்றான்
நந்தன்-அந்தணன் வீடு சென்றான்
அந்தணன் வெளியே வந்தான்
அந்தணன் வெளியே வந்தான்
நந்தன்-அந்தணன் வீடு சென்றான்

மடையா! நிலத்திலின்றி இங்கென்ன வேலை?
உழவு விட்டு இங்கென்ன வேலை?
வேதம் கற்க வந்தாயோ?
சிவமந்திரம் கற்க வந்தாயோ?
மடையா! சொல்லடா பைத்தியமே!

பைத்தியம் நான் அல்லன்
ஐயா! பைத்தியம் நான் அல்லன்
வேதமும் எட்டுவன் அல்லன்
தில்லைக்கு போகணுமே
அனுமதி தாரீரோ?

தில்லை இல்லை தில்லை இல்லை
தில்லை சென்றால் சோறு இல்லை
உழுவதற்கு யாரும் இல்லை
நீ என்ன அந்தணனோ
தில்லை ஈசன் காண்பதற்கு

அவன் தந்த இரு கண்ணும்
தில்லைநாதன் காண்பதற்கே
அவன் தந்த இரு காலும்
தில்லைதனை அடைவதற்கே
இருநாளில் திரும்பிடுவேன்
அனுமதி தாரீர்

மடையா! மரமடையா!
சொன்னால் விளங்காதோ
மடையா! மரமடையா!!
பித்தம் தெளியாதோ ?
போக வேண்டாம் மடையா!

மடையன் தான் தில்லை செல்ல
என்ன வழி கூறும் ஐயா
மடையன் தான் தில்லை செல்ல
என்ன வழி கூறும் ஐயா
நிலவு வந்து கேட்கணுமோ
அந்த வானம் வந்து கேட்கணுமோ
சிவன் தனை காண இந்த மடையன்
செல்ல வேண்டும்
தில்லை செல்ல வேண்டும்

செல் நீ செல்
நாளை காலையே செல்
உழுதிட்ட பயிர் யாவும்
நாளை நெல் ஆயினால் செல்
மடையா! இப்போ வீட்டுக்கு செல்
(பாடல்  முற்று)

நந்தன் மறுநாள் கழனி செல்ல
நிலம் யாவும் நெல்லாய் இருந்தது
செய்தி அறிந்து அந்தணன் ஓடி வந்தான்

பாடல்-4

நந்தா நீ இல்லை மடையன்
இந்த பாவிதான் மடையன்
நந்தா நீ இல்லை மடையன்

அந்தணன் ஆனால் என்ன
பறையன்தான் ஆனால் என்ன
சிவனுக்கு தொழுகை செய்ய

இந்தப் பாவி மடையன் சொன்ன
வார்த்தையெல்லாம்
மன்னித்து நந்தா தில்லை செல்வாய்
நீ தில்லை செல்வாய்
(பாடல் முற்று)
என பாடி நந்தன் காலில் விழுந்தான் அந்தணன்


பாடல்-5

காலினில் விழலாமோ
எந்தன் காலினில் விழலாமோ
தாய் தந்தை முதியவர் சிவநாதன் தவிர
காலிலும் விழலாமோ
யார் காலிலும் விழலாமோ
அந்தணர் பறையர் பிரிவில்லை
சிவன் கண்ணினில் யாவவரும்
ஒன்றென அறியவேண்டாமோ
அந்தணர் பறையர் பிள்ளை
யார் என்றாலும்
செத்தபின் சாம்பல் தான்
என அறியவேண்டாமோ
அதை அறியவேண்டாமோ
சாதிகள் இல்லை என சொல்லிடவே
தில்லைநாதனும் என்னை படைதிருப்பானோ?
என்னை படைத்திருப்பனோ ?
அவனை காண வேண்டாமோ?
நான் காண வேண்டாமோ?
இருகண்ணிருக்கும்போதே
அவனை காண வேண்டாமோ?
(பாடல் முற்று)

அந்தணன் எழுந்தான்
தில்லை செல்ல தானே
செல்வம் கொடுத்தான்
தன் குற்றம் அறிந்தான்
மனிதம் மட்டுமே சாதி என்றான்

நந்தனார் தில்லை அடைந்தார்
கோவில் திறந்தவுடன்
மலராக மாறி
சிவன்பாதம் அடைந்தார்