தில்லை நடராசன் பெருமைகள்
சொல்லில் அடங்காதவையாம்
நந்தன் என்றொரு புலையன்
சாதியினால் கோவில் செல்ல
மறுக்கப் பட்டானாம்
தேரடியில் இருந்தே தரிசித்தால்
போதும் என்றிருந்தானாம்
திருப்பன்கூரில் நந்தி சிலையே விலகியதாம்
சிதம்பரம் கோவிலை தரிசிக்கவே
வாழ்க்கை என்றிருந்தாராம்
தாழ்த்தப்பட்டவர் நாயன்மாரில்
ஒருவரான இடம் சிதம்பரம்!!
எத்தனைப் பாடல்கள் நடராசன் மேலே!!
நந்தன் கதை
ஈர்க்கப்பட்டு கோவில் சென்றேன்
இன்னும் பிரிவினைகள் அங்கே
சாதியில் குறைந்து
பணத்தால் உயர்ந்து
கூட்டமே இல்லாத போதும்
நடராசனை முன்னே நின்று காண
நூறு ரூபாயாம்
பார்க்க நன்றாக இருந்தது
நந்தன் நம்பாடுவான் கருணை
பூணுல் அணியாதோரும் முன்னே நின்றனர்
வாசலில் அமர்ந்திருக்கும் இன்னொருவர்
பத்தைக் காட்டினாலே
பார்க்க விடுகிறார்
பிரிவினைகளும் லஞ்சமும்
கடவுளால் இல்லை!!
கடவுள் இருக்கும்(?) இடத்திலேயே உள்ளது!!
கொடுக்காது வெளியிலிருந்து
பார்க்க இங்கே பலருக்கு மனமில்லை
கோளாறுகள் அதிகம் ஆயினவே
கண், மனம், சிந்தனை
கொடுப்பவன் நிறுத்தினால்
இது யாவும் மாறலாம்
அங்கேயும் லஞ்சம் கொடுக்க
தயார் செய்துவிட்டான்!!
நூறுக்கு வழியின்றி
கள்ளத்தன பத்திற்கு மனமின்றி
வெளியிருந்து காணும் கண்களை
குறையின்றி வைத்திடு
தில்லை நடராஜா!!
உன் கருணையெல்லாம் படித்தேன்!!
நீ செய்திடுவாய்!!