Friday, August 18, 2017

கடநாட்டு மருதன்

  "எத்தனைப் போர் வீரர்களை இந்த நாட்டைக் கைப்படுத்த இழந்திருப்போம்! கொண்டாடடியே ஆக வேண்டும். அனைத்து செல்வந்தர்களும் தங்கள் செல்வங்களில் பாதியை தர வேண்டும். திருமணம் ஆகாத செல்விகளையும்" நமுட்டுச் சிரிப்புடன் ஆணையிட்டான் மருதன்.

         மருதன் கடநாட்டின் படைத் தளபதி. அசாத்திய வீரன். மிருகம். இவன் வாள் செலுத்தி எதிரியின் ரத்தம் இவன் முகத்தினில் தெளிப்பதையே இவன் மிகவும் விரும்பினான். இவன் வீழ்த்தாத நாடே எங்கென்றுத் தேட வேண்டும். கடநாட்டின் செல்வத்தைப் பெருக்கினான் - மக்களைக் கொன்று, செல்வங்களை கட்டாயப் படுத்தி அகப்பற்றி. மன்னனும் கண்டு கொள்ளவில்லை, தன் நாட்டு மக்கள் நல்வாழ்விற்கு, தன் நாட்டு செல்வத்தேவைக்கு பிற நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கேட்டால் என்ன என்ற மனநிலை. மற்ற நாடெல்லாம் தனது கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். இவனேப் பெரியவன் என்ற மனநிலை. மன்னனின் பெயர் திரம்பன்.  

             முன்னர் செண்பக நாட்டில் நடந்த கதை மிகவும் கொடூரமானது.

  செண்பகநாடு - கடநாட்டின் கிழக்கே ஓர் அழகியத் தீவு. செல்வச் செழிப்பான நாடு.  வீரத்திலும் குறைவில்லாத நாடு. கடநாட்டுக்கு இணையான படை பலம். மருதனுக்குத் தான் ரத்த போதை ஆயிற்றே, செண்பக நாட்டின் செந்நீர் வாசனை அறிய எண்ணினான். செண்பகநாட்டு செல்வங்களை எடுத்துக் கொண்டால் கடநாடு செல்வநாடு ஆகிடுமே! திரம்பனிடம் அனுமதி பெற்று செண்பகநாட்டுக்குப் படை எடுத்தான்.  இரு பக்கங்களும் உயிர் இழப்புகள் இருந்தாலும் மருதனின் படையே வென்றது. 
யுத்தத்தில் வென்றால் தர்பாரைக் கூட்டி திரம்பனின் செருப்பை சிம்மாசனத்தில் வைத்து செருப்பை அரசராய் அறிவிப்பான். இது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட செருப்புகள் அரியணை ஏறி உள்ளன. பின்னர் செல்வந்தர்களை அழைத்து பாதி செல்வத்தையும், பெண்களையும் சூறையாடி சென்றிடுவான். செண்பகநாட்டிலோ இவன் தர்பாரில் பேசும் பொழுது சில இளைஞர்கள் கல்லை இவன் மேல் எறிந்தனர். "காட்டுமிராண்டியே வெளியே போ", என்று கூச்சல்கள் வேறு. தலை வெடித்தாற்போல் இருந்தது மருதனுக்கு.
             
          "பயமற்று கடநாட்டவரையே எதிர்க்கும் பொதுமக்கள். இந்நாட்டவர் ஒரு ஆண்  கூட உயிரோடு இருத்தல் ஆபத்தாய் முடியலாம். எத்தனை லட்சங்கள் ஆண்கள் இருந்தாலும் அவர்கள் இறக்க வேண்டும் கடநாட்டு  வாளினால்! போர் வீரன் கொள்ளும் ஒவ்வொரு ஆணின் வீடும் அவ்வீட்டின் பெண்டிரும் போர் வீரனுக்கு சொந்தம்.", ஆணையிட்டான் மருதன்  அனைத்து ஆண்களும் மாண்டனர். கர்ப்பிணி பெண்களுக்கும் அன்றே கடைசி நாள். இறை முறையால் செண்பக நாட்டுப் பெண்கள் போர் பயிற்சி இல்லாதவர்கள். முக்காடு அணிந்தே இருப்பர். பல பெண்கள் தங்களை மாய்த்துக் கொண்டனர். ஆணில்லா நாடாக்கி சிதைத்தான் மருதன்.

      ஆதிரநாட்டை வீழ்த்தி செல்வங்களை சூறையாடி நாடு திரும்பினான் மருதன். மருதனுக்கு இருபத்தி ஏழு மனைவிகள். வெறிகொண்ட மிருகத்திற்கு அன்பு ஏது? காதல் ஏது? வெறியினால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள். இவன் முதல் மகளுக்கு இருபத்தி நான்கு வயது, பதினைந்து வயதில்  கற்பமாய் ஒரு மனைவி வேறு. போர் இல்லாவிடில் இதுவே அவன் வேலை. 
_________________________________________________________________________________
   
   மருதன் வீரனாய் கிடைத்ததற்கு கடநாடு கொடுத்து வைத்திருக்க வேண்டும். எதிரி என்று நாட்டவருக்கு ஒருவர் இல்லை.  போரில் எல்லாம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். மருதனால் உலகில் எந்த நாடு ஆயினும் கடநாட்டிற்கு அடிமை நாடு தான். மற்ற நாடுகளுக்கு வேலை கடநாட்டின் வேலைகளுக்கு பின்னிருந்து உதவி செய்வதே. கடநாடு தரும் எலும்புக்கு வேலை செய்யும் அடிமைகள் தான். கடநாட்டுமயமாக்கல்!அவரின் கோபமும் வெறியுமே கடநாட்டு மக்களை நிம்மதியாக செல்வத்தில் குறைவில்லாது வாழ வைத்தது. நாட்டு மக்கள் எல்லாம் தாங்கள் பெற்ற குழந்தைகளுக்கு மருதன் என்று பெயர் வைத்தனர். ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு மாதமும் நாலாயிரம் தங்கங்கள் வழங்கப்பட்டது. பெண்கள் எல்லாம் அவன் வீரத்தில் மயங்கி அவனை மணக்க விரும்பினர். அரசரின் ஒரு பெண்ணும் மருதனின் மனைவிமார்களில் ஒருவர். மருதன் பெண்களை சென்று சூறையாடவில்லையே. அவர்களே வருகின்றனர். 
            
    ஒரு முறை தெருவில் மருதன் நடந்து செல்கையில், ஒரு சிறுவன் அவனிடம்  வந்து தொலைவில் இருக்கும் மலையைக் காண்பித்து அந்த மலைக்கு அப்பால் என்ன உள்ளது என்று கேட்டான். அந்த சிறுவனை அங்கு கூட்டி சென்று அங்கிருக்கும் சிற்றரசை வீழ்த்தி விட்டு அந்த சிறுவனையே அரியணையில் அமர்த்தினான் மருதன். அத்தகைய மனது மருதனுக்கு. அந்த சிறுவன் சூரியனையோ, நிலவையோ, நட்சத்திரங்களையோ காண்பிக்கவில்லை. அங்கும் சென்றிடுவான் மருதன். 

_________________________________________________________________________________  
        அன்றைய இரவு மருதன் கண்ட கனவு அவனையே மாற்றியது. தண்ணீரே இல்லாமல் போய்விடுகிறது கடநாட்டில். உலகில் செண்பக நாட்டைத் தவிர வேறு எங்கும் தண்ணீர் இல்லை. தண்ணீர் இன்றி விவசாயம் பொய்த்து விட்டது. உணவும் இல்லை.  ஊரில் முக்கால் வாசி உயிர்கள் உயிரிழக்கின்றன. முட்டி மோதி உருண்டு புரண்டு செண்பக நாட்டிற்கு செல்கிறான் மருதன். ஒரு பெண்மணி குவளையில் தண்ணீர் சுமந்து செல்வதை கண்டு தண்ணீர் கேட்கிறான். வேகமாக குடித்து முடிக்கிறான் மருதன்.

     "என் தந்தைக்கு உங்கள் வயது தான் இருக்கும். உங்களுக்கு தண்ணீர் கொடுப்பது என் தந்தைக்கே தண்ணீர் கொடுப்பது போல் உள்ளது. அவர் இப்போது இல்லை. மருதன் என்கிற மிருகம் என் தந்தையை கொன்று விட்டது. என் தந்தையை மட்டும் இல்லை, எங்கள் ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும். பிற உயிர்களை கொள்வதில் என்ன இன்பமோ? இதோ ஓடுகிறதே தண்ணீர், அன்று ரத்தம் ஓடியது. மன்னிக்கணும் அய்யா. என் துயரமெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்", என்றாள்.

        அதனைத் தொடர்ந்து அவன் கொன்று குவித்த முகங்களெல்லாம் வந்து தண்ணீர் கொடுத்தன. ஆறுதல் வார்த்தை சொல்லின. மக்கள் எல்லாம் செண்பக நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். அங்குள்ள பெண்கள் தாயைப் போல் வரவேற்றனர். கனவின் நிகழ்வுகளுக்கு நினைவில் கண்ணீர் சிந்தினான் மருதன். 

     அடுத்த நாளிலிருந்து அவன் செயல்கள் மாறுதலாய் இருந்தன. தனது நூற்றி மூன்றாவது குழந்தையை தூக்கி கொஞ்சினான். இருபதாவது மனைவி செய்திருந்த சமையலின் சுவையை வாழ்த்தினான். அவள் பெயரை கேட்டறிந்தான். 

          சில நாட்களுக்குப் பின் சதயநாட்டின் செல்வ வளங்களை அறிந்து அங்கு செல்லுமாறு திரம்பன் மருதனுக்கு ஆணையிட்டான்.
       "அரசே! படைவீரனின் வேலை நாட்டைக் காப்பது. எவரேனும் நம் நாட்டை தாக்க வேண்டும் என்று மனதில் நினைத்தால் அந்த நொடியே அவனை வெட்டி சாய்ப்பேன். மற்ற நாடுகளை சூறையாடுவது இல்லை அரசின் வேலை. அது கொள்ளைக் கூட்டத்தின் வேலை. நாம் சிறந்த நாடு. கொள்ளைக் கூட்டம் அல்ல."
    "திடீர் மாற்ற நாடகம். மருதா! நான் கூறுவதற்கு மறுப்பா? இது எல்லாம் சரித்தரித்தில் உள்ளனவே. ஒரு அரசு மற்ற அரசுடன் போர் முனைவது நாட்டை கையகப் படுத்துவது - இது எல்லாம் பொதுவாய் நடப்பதுவே. மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திரத் தொகைக்கு எங்கு செல்வது? அவர்கள் வாழ்வு நிலை?"
     "மக்கள் உழைக்கட்டும் அரசே! நம் நாட்டில் இல்லாத வளமா? விவசாய நிலங்களெல்லாம் மக்களுக்கு என்று அறிவியுங்கள். மக்கள் அதன் மூலம் பயனடையட்டும். உலகெல்லாம் சென்று விற்கட்டும். பிற நாடுகள் எல்லாம் நமக்கு செய்யும் வேலைகளுக்கு கொடுக்கும் தொகையை நம் மக்களுக்கு கொடுங்கள். அவர்களுக்கு கிடைக்கட்டும். "
         "சிறையில் இடுங்கள் இவனை!"
    "என்னையா சிறையில் இடுவீர்!", மருதனின் வாள் வீச்சில் திரம்பனின் தலை முப்பது அடிகளுக்கு அப்பால் பறந்தது. 
       "மனிதர்களை மிருகம் ஆக்கி வைத்தவன் திரம்பன் தான். இன்றிலிருந்து நானே அரசன். அமைச்சர்களே! இன்றே நான் சொன்னதை எல்லாம் செயலாக்குங்கள். விவசாயம் பயிற்றுவிக்க சோழநாட்டு விவசாயிகளை அழையுங்கள்."
        தான் அகப்பற்றிய நாடுகளை எல்லாம் மீண்டும் அந்தந்த அரசுகளுக்கே வழங்கினான். மாற்று நாட்டுத் திருமணங்களை வரவேற்றான். திருமணமாகாத செண்பக நாட்டு பெண்களுக்கு தன்னாட்டு இளைஞர்களை மணம் முடித்து செண்பக நாட்டிற்கு அனுப்பினான். 
           
_________________________________________________________________________________

        கொண்டாடப்பட்ட மருதனுக்கு பைத்தியம் பிடித்தது. ஒரு கனவில் பிடித்த பைத்தியம். மன்னர் ஆக வேண்டி பைத்தியம். மன்னரிடம் நற்பெயர் வாங்க மருதன் தானாய் முன் சென்று சூறையாடிய நாடுகள் நாற்பத்தி இரண்டு. திடீரென்று போர் செய்யமாட்டாராம். மூப்பு, சென்ற போரில் தொடையில் வாங்கிய வெட்டால் மரண பயம். பித்தினை புரட்சி என்று அவனே கூறிக் கொண்டான். 
    மக்கள் இவனை அரசனாய் ஏற்று கொள்ள நிலங்கள், பரிசுகள். இதைக் கொடுத்தார் போல் கொடுத்துவிட்டு மானியங்களை நிறுத்திவிட்டான். கோகில நாடு போல் மக்களிடமே பணம் பிடுங்கி நாட்டை நடத்தும் நிலை வராதது மட்டும் தான் மீதம். 
      மூப்புத் தொற்றிட்டே! போர் செய்ய இயலாது. போரிட்ட நாடுகளை எல்லாம் அழைத்து நண்பர்களாக்கிக் கொண்டான். 

_________________________________________________________________________________

  மருதன் அனைத்து நாட்டினவரோடும் நன்கு நட்பு பாராட்டினான். அரசர்களை எல்லாம் ஒன்று சேர்த்து அனைவரும் இனி நட்பு பாராட்டுவதாகவும், பாதுகாப்புக்காக போர் என்ற நிலை மாற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினான். சுற்றியுள்ள நாடுகளெல்லாம் ஒதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டினை அந்நிலையில் இருந்து மீட்டான். அன்பு கரை புரண்டு ஓடியது. உலகெல்லாம் மருதனை கொண்டாடியது.

       சுயசரிதை வேறு எழுதினான், "முப்பத்தி ஏழு வயது வரை லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்தேன். ரத்தத்தில் .குளித்தேன். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் என் தூக்கத்தில் நான் கொன்றவர்கள் என்னை அன்பு பாராட்டினார்கள். பசிக்கு உணவு, தாகத்திற்கு தண்ணீர் இப்படி பல. கனவில் கூட பழி நினைக்காத அன்பு தேவதைகளை கொன்றேன். மிருகம் மனிதன் ஆக இப்போது வரை முயற்சிக்கறேன். ஒரு வாழ்க்கை - வன்மம், வெறி, பகை எதற்கு? அன்பு பாராட்டுவோம். நான் தினம் தினம் இறக்கிறேன் குற்ற உணர்ச்சியில். வெறுப்பு வேண்டாம். தீமைகளெல்லாம் என்னோடு முடியட்டும். அன்பே ஆயுதமாய் இருக்கட்டும்." இவ்வாறு முடித்து இருந்தார்.

_________________________________________________________________________________

        
     மருதன் வரலாற்றை மாற்றி சொல்ல ஒரு சுயசரிதை வேறு எழுதினான். தனது பைத்தியக்கார செயல்களை நியாயப் படுத்த. போர் மறந்த வீரன் நேரம் போக வேண்டுமே. மூப்பும் இயலாமையும் தான் காரணம் அனைத்திற்கும். மன்னனாய்த் தன்னை தானே அறிவித்தப் பின் ஒரு புது மணம் கிடையாது. இருந்த எந்த மனைவியும் கற்பம் தரிக்கவில்லை. அந்தப்புரமும் வேண்டாம் என்று விட்டான். 
      அன்பின் அடையாளம் என்றொரு அடையாளம் வேறு. 
      ஒரு லட்சம் கொலைகள். ஒரு நாட்டின் ஆண்களையே இல்லாமல் செய்தது. மகளை விட இளைய மனைவி. இதையெல்லாம் சுருக்க சொல்லி அன்பின் அடையாளமாய் காட்டிக் கொள்ள ஒரு புத்தகம்! இது தான் மருதனின் வாழ்க்கை.
         
        
      


  
                                

Tuesday, August 8, 2017

வெண்ணிலா - அவள் கண்கள்

இலைகளின் நடுவில் வெண்ணிலா
உன் திறந்த கண்களைப் போல!

மிக அருகில் வந்தாள் வெண்ணிலா
கயிறு கட்டி இழுத்து விடலாாம்
என எண்ண வைக்கும் தூரம்


நிலவைக் கூட்டி வந்து
இவள் இங்கே வாழும் நிலவு
என உன்னை அறிமுகம் செய்திருக்கலாம்

செய்யவில்லை
ஒரு வாளுக்கு ஒரு உறை போதும்
கயிற்றை கீழே போட்டுவிட்டேன்