Friday, July 31, 2015

சிதறுதேங்காய்

பள்ளியை முடித்து மணிகண்டனும் சுப்ரமணியும் வீடுத் திரும்பிக் கொண்டிருந்தனர். தென்மேற்கு பருவகாற்று
தொடங்க வாரங்களே இருக்கும் வேளையில் வானம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது.

          " சுப்ரமணி! இந்த மாசம் சதுர்த்தி அன்னிக்கு எவம்லாம் வடல் போடுவானோ, ஒன்னு விடக்குடாதுலே அம்புட்டயும் பொறுக்கிடனும்"
          "ரெவிச் சண்டைக்கு வருவானே? அவனச் சமாளிச்சிட்டா போதும்லே. பொறவு அந்ந நாகம்மப்பாட்டி தான்."
          "ஆமாம்லே அவனக்கு எதையாவது கொடுத்து பேதிக்கிருக்க வைக்கனும். பங்குனி உத்தரத்துக்கு சாத்தான் கோயில்ல எல்லாரையும் சவட்டித் தள்ளி முன்னுக்குப் போய் எடுத்துக்கிட்டே இருந்தான். ஒரு மாசம் சாப்பாட்டுக்குச் சேத்துக்கிட்டானோ?"
         "ஓட்டலுக்கு வித்துட்டு தங்கத்துல சினிமாப் பாத்தானாம்"
         "மக்கா! ரெவிய இந்த தடவ விடக்கூடாதுலே. நாலஞ்சு தேங்காதான் உடைப்பாங்க பொறவு நமக்கு மிஞ்சாது." 
         "வழிப் பண்ணுவோம்"

காலையில் எழுந்து குளத்துக்கு செல்லும்போது திட்டம் தீட்டத் தொடங்கினர்.

        "என்னலே செய்யலாம் மணிகண்டா?"
        "இந்த ரெவி வீராணமங்கலம் ஆத்துக்கு போய்தாமுலே சாயிங்காலம் குளிப்பான். அவன் குளிச்சிட்டு இருக்குறப் பொறவு துண்டு துணி எல்லாம் தூக்கிட்டு ஓடிடுவோம். அடுத்த நாள் வரைக்கும் நீந்திகிட்டே இருக்கட்டும்."
        "நல்ல ஐடியா தான். யாரும் நம்மளப் பாத்துடக்கூடாது."
         "சுப்ரமணி, நான் ரன்னிங் ரேசில பர்ஸ்ட் பாத்துக்கோ. யாரும் பாக்காதப்போ ஆத்துல துணியப் போட்டுட்டு ஓடிடுவோம்"
         "சரிடா மணிகண்டா."

மாலை ஐந்து மணிக்கெல்லாம் சுப்ரமணியும் மணிகண்டனும் ஆற்றங்கரைய அடைந்தனர். மணி ஐந்தரை ஆகியும் ரெவி வந்திருக்கவில்லை. இன்னும் பொறுத்தால் அங்கே ஒன்றும் முடியாது என்று கிராமத்துக்குப் புறப்பட்டனர். செல்லும் வழியில் ரெவி ஏன் குளிக்க வரவில்லை என்ற கேள்விகள். கோவிலிலும் ரெவி இல்லை. மணிகண்டன் வேகமாக ரெவியின் வீட்டிற்கு ஓடினான். வீட்டினுள் படுத்துக் கிடந்தான்.
       
        "அண்ணே இன்னிக்கு சதுர்த்தி. கோயிலுக்கு வரலியா?"
         " மக்கா. காய்ச்சல் டேய். வரலே."
         "சரிண்ணே. பூஜ ஆரம்பிச்சிடும். நான் வரேன்"

காற்றினில் கைகளச் சுற்றிக் கொண்டு வேகமாக்க் கோவில் வந்தடைந்தான். 
      
       "ரெவிக்கு உடம்புக்குச் சுகம் இல்ல. வரமாட்டான்"
       "நாகம்மப் பாட்டி மட்டும் தான் நிக்குது. அது குனியறதுக்குள்ள நம்ம அள்ளிடலாம்"

மணி ஏழைத் தொட்டது. கோவில் வந்தவர்கள் எவரும் தேங்காய் கொண்டு வந்த பாடில்லை.
      
      "ஏலேய் எவாளும் தேங்காய் கொண்டுவந்த பாடுல்லையே."
      "ரெவியும் இல்ல தேங்காயக் காணுமே."

கோயிலுக்குள் ஃபங்க் வாத்தியார் தேங்காயோடு நுழைந்தார். 
      "போச்சுலே மணிகண்டா"

 சிறுவர்களைப் பார்த்து ஒரு அதட்டல் பார்வை பார்த்து
      "என்னலே வடல் தேங்கா பொறுக்கவா?", ஆம் என்பது போல் இருவரும் தலையாட்டினர்.
      "காலாண்டுத் தேர்வு என்னிக்குலே?"
      "அடுத்த வாரம்."' என்றான் சுப்ரமணி. 
      "போனப் பரிட்சைல கணக்குல எவ்வளவு டேய்"
      மெல்லிய குரலில், "அம்பத்தி ஏழு."
       "மணிகண்டா நீ?"
       "எழுவது."
       "படிக்காம தேங்காப் பொறுக்கு நூற்றுக்கும் மேல வாங்கலாம். ஓடிடு கண்ணுலப்படக்கூடாது. கற்பூரம் காமிக்கற வரைக்கும் இங்கதாம்லே இருப்பேன். எட்டு மணிக்கு வந்து கொழுக்கட்ட வாங்கிட்டு ஓடிடனும்."
       தலையாட்டிவிட்டு இருவரும் ஓடினர்.


   
எட்டு மணிபோல கோவிலுக்கு வந்து கொழுக்கட்டை வாங்கிக்கொண்டு அவரவர் வீடு திரும்பினர் சுப்ரமணிக்கு நாகம்மைக்கு அடுத்த வீடு.

        அரைமணி நேரம் கழித்து நாகம்மையின் குரல் கேட்டது. வாசலுக்கு ஓடினான் சுப்ரமணி.
       
        "சுப்ரமணி. லஷ்மண சாமிக்கு மவன் பதினெட்டுத் தேங்கா உடைச்சாங்கப்போ. நான் சமையலுக்கு எடுத்துக்கிட்டேன். இந்தாப்போ பையம்மாருக்கெல்லாம் கொடு. ரெவிக்கும் கொடு காய்ச்சலாம் பாவம்"
        
        சரி என்று வாங்கி கொண்டான். பத்து செதில்களை தனக்கு எடுத்துவிட்டு, மணிகண்டனுக்கும் கொடுத்தான். ஊர் சிறார்களுக்கு கொடுத்துவிட்டு, கடைசி பத்து செதில்களில் ஆளுக்கு ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரெவி வீட்டுக்குச் சென்றனர்.

        "அண்ணே. தேங்கா."
        "என்னலே, இவ்வளவு?"
        "சுந்தர் மாமா பதினெட்டுத் தேங்கா உடைச்சாராம்"
        "அடேங்கப்பா. எனக்கு எதுக்குடா இவ்வளவு? ஒன்னு போதும் சாமிக்காக. நாகம்மை பாட்டிக்கு கொடு. சமச்சிக்கிடும் பாவம்"

         "அட ரெவி அண்ணனப் போய் இப்படி சொல்லுதாய்ங்களே ஊருல."
         "ஆமாம் லே. சரி நான் தூங்கப் போறேன்"

         சுப்ரமணி அருகில் படுத்திருந்த தாத்தாவிடம், "தாத்தா, கோவில்ல எதுக்கு தேங்கா உடைக்குறாங்க?", என்று கேட்டான்.
          "அதுவாப்போ. தேங்கா வெளிலப் பாத்தா மொரடா இருக்குல்ல?"
          "ஆமாம்"
          "உடைச்ச உடனே உள்ள நல்ல ருசியானத் தேங்கா. அத உடைக்கற மாதிரி, போட்டி பொறாம இந்த மாதிரி கெட்டதையெல்லாம் உடச்சி, நல்ல குணத்த கொடுன்னு வேண்டற மாதிரி."

           எதையோ யோசித்துக் கொண்டேத் தூங்கிப் போனான் சுப்ரமணி.

Friday, July 24, 2015

தித்திப்பு பாகற்காய்

திவ்யா காலாண்டுத்தேர்வின் போது

             "கீதா!! நாப்பத்திரெண்டு வயசாகுது உனக்கு. கல்யாணமாகி பதினேழு வருஷம். இன்னும் எத்தன நாள் சண்டபோடப்போறோம்."
             "நீ பேசறதெல்லாம் சரி. நான் எது சொன்னாலும் தப்பு."
             "ஏம்மா இப்பிடி ஹிஸ்டீரியா வந்நவ மாதிரி கத்தற?"
             "சேகர், நீங்க அமைதியா இப்பிடி குத்தற மாதிரிப் பேசுவீங்க. நான் கத்தி பதில் பேசினா ஹிஸ்டீரியாவா?"
              "கீதா! திவ்யா டீயூசன் முடிஞ்சு வர நேரம். எக்ஸாம் வேற, இந்த நேரத்துல சண்ட வேண்டாம்"
              "எல்லாத்தையும் ஆரம்பிச்சிட்டு சண்ட வேண்டாமாம் நரகம்டா சாமி."
              "ஒரு ரிமோட்டுக்காக எவளோ சண்டடா சாமி?", தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் சேகர்.
             
               சற்று நேரத்ததில் சமையலறையில் இருந்து டமடம என சத்தம் கேட்டது. ஓடினான் சேகர். கீதா இடுப்பைப் பிடித்தவாறு கீழே விழுந்து இருந்தாள்

               "ஹாஸ்பிடல் போலாமா?"
               "ஒன்னும் வேணாம். ஆ... ஐயடக்ஸ் தடவினாப் போதும்"
               "இல்லமா போவோம்."
               "ஹிஸ்டீரியாவுக்கு காமிக்கவா? எனக்கின்னும் ஃபுல்லா கோபம் குறையல."
 

திவ்யா பள்ளி சுற்றுலா சென்றபோது

                "முடியல என்னாலே. ஏன் இப்படி ஆகுதோ? கீதா, எதுக்கெடுத்தாலும் சண்ட. நீ பேசினாலே அயன் பாக்ஸ மூஞ்சுல வெச்ச மாதிரி இருக்கு."
                "எத செஞ்சாலும் எதாவது சொன்னா? மனசுல நான் உங்கள மதிக்கலன்னு நினைப்பு. ஈகோ."
                "வாயமூடு. பேசினா.."
                "ஏன் மூடனும். யார்கிட்ட இருக்குற கோபத்தையோ என்கிட்ட காமிக்க வேண்டியது. நான் என்ன கோவத் தொட்டியா? ரொம்ப பேசாதீங்க. எனக்கு டைவர்ஸ் கொடுத்துடுங்க. நான் போயிடறேன்."
                " போதும். எல்லாம் போதும். நாளைக்கு காலைலயே என் ஃபிரெண்ட் அட்வகேட் அசோக் கிட்ட பேசுறேன். இனிமேலாவது நிம்மதியா..."
                 
                காலிங் பெல் சத்தம் கேட்டது. சேகர் கதவை திறந்தான்.
           
                "வாடா சுந்தர். கீதா உன் தம்பி வந்துருக்கான் மா. அப்பிடியே தூத்துக்குடில இருந்து வாங்கிட்டு வந்த மக்ரூன் நாலு எடுத்துட்டு வாம்மா சுந்தருக்கு."

                மூவருக்கும் சம்பாஷனைத் தொடர்நத்து. 

                "மாமா. புது செல்போன் வாங்கிருக்கேன்"
                "சூப்பர் டா."
                "அக்கா நீயும் மாமாவும் அந்திமழைப் பொழிகிறது பாடுங்க. நான் வீடியோ எடுக்கறேன்."
                "தொண்ட சரியில்ல டா. வேணாம்."
                " மாமா, நீங்கப் பாடுங்க. அக்கா பிஹு பண்ணும் ஆனா பாடிடும்."
                    
                இருவரும் சேர்ந்து பாடி முடித்தனர். இருவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டான்.
                    
                "கீதா! நான் கிளம்புறேன். வாட்ஸப் குரூப்ல பாட்டு வீடியோப் போட்டுருக்கேன். பாருங்க. பை!!"

                சில நிமிடங்களுக்கு அமைதியே ஒலி நிரப்பியது. இருவர் கைபேசியிலும் குறிப்பொலி எழும்பியது. லேஸ் புன்னகை.
                     
                " கீதா! கீதா! பியூட்டிஃபுல் டூயட். கிரேட் அம்மா அண்ட் அப்பா. மேட் ஃபார் ஈச் அதர்னு திவ்யா போட்டுருக்கா. பாத்தீயா?"
                      
                காதில் வாங்காதவள் போல் இருந்தாள் கீதா. 
   
                "பேச மாட்டியா?"
                "எதுக்கு அயன்பாக்ஸ்ல எல்லாம் சூடு வச்சிக்கிட்டு?"
                        
                அன்றிரவு, இருவர் கைபேசியிலும் ஐந்து முறையாவது அந்திமழை பொழிந்தது.

திவ்யா கல்லூரி மூன்றாமாண்டின் போது

                "கீதா! என்னடி இது? ஒழுங்கா இருந்த புருவத்த பியூட்டி பார்லர் போய் என்னலாமோ பண்ணிட்டு வந்துருக்க. நம்மப் பொண்ணுக்கு இருபது வயசு ஞாபகம் வச்சிக்கோ."
                "நீங்க டை அடிச்சிக்கலாம். நான்.."
                "டைக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கா? யார்கிட்ட போய் சொல்றது. உன் அப்பா அம்மா டிக்கட் வாங்கிட்டாங்க. உன் தம்பி அரமண்டயன். அவனே ஒரு வானரம். முடி போன எடத்துலக்கூட டாட்டு போட்டு வெச்சிருக்ககான்."
                "பேசாம டைவர்ஸ் கொடுத்துட்டு நிம்மதியா இருங்க. நான் கோயமுத்தூர் போய் திவ்யா கூட இருக்கேன் பாட்டு கிளாஸ் எடுத்து பொழச்சிக்குவேன்."
                "டிக்கெட் எடுத்து தரேன் போயிட்டு வா. பட் பாட்டு எல்லாம் வேண்டாம். யாராவது ஸ்டூடண்ட் அடிச்சிட்டா, நான் விடோயர் கம் டைவர்சி ஆயிடுவேன். நல்ல காம்பினேசன்ல."
                 "நல்ல ஜோக். சிரிப்பு தான் வரல. வீக்கெண்ட் கோயமுத்தூர் போயிட்டு திவ்யா கூட ஊட்டி போலாமா?"
                 "ஸ்யூர்."


திவ்யா முதல் குழந்தையின் பதிமூன்று வயதின் போது
                
                "என்னங்க போயிட்டேன்", பாத்ரூமிலிருந்து குரல் கொடுத்தாள் கீதா.
        
                 மூக்கு கண்ணாடியை மாட்டிக்கொண்டு இருக்கும் பத்து பதினைந்து முடியையும் கோதியவாறு நுழைந்தார் சேகர். வாஷ் ஷவரை எடுத்து துடைத்து விட்டார். கீதாவின் கண்களில் நீர் தழும்பியது. 

                  "விளக்கேத்த நேரமாச்சு. என் தல சீவிவிடுங்களேன்"

                   தலை சீவிவிட்டு கண்ணாடியில் காண்பித்தார்.
                   
                   "வகுடு எடுக்கத் தெரியுதா? ஊட்டி ஹேர்பின் பெண்டே பரவாயில்லப் போலியே."
                   "திமிரப் பாத்தியா? திவ்யா காலாண்டுத் தேர்வின்போதே எழுதினவன் சண்டையப் பெருசாக்கி டைவர்ஸ் வரைக்கும் போயிருக்கலாம். எல்லாம் என் தலையெழுத்து. இருந்தாலும் ஒரு தித்திப்பு இருக்கு."