Friday, July 31, 2015

சிதறுதேங்காய்

பள்ளியை முடித்து மணிகண்டனும் சுப்ரமணியும் வீடுத் திரும்பிக் கொண்டிருந்தனர். தென்மேற்கு பருவகாற்று
தொடங்க வாரங்களே இருக்கும் வேளையில் வானம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது.

          " சுப்ரமணி! இந்த மாசம் சதுர்த்தி அன்னிக்கு எவம்லாம் வடல் போடுவானோ, ஒன்னு விடக்குடாதுலே அம்புட்டயும் பொறுக்கிடனும்"
          "ரெவிச் சண்டைக்கு வருவானே? அவனச் சமாளிச்சிட்டா போதும்லே. பொறவு அந்ந நாகம்மப்பாட்டி தான்."
          "ஆமாம்லே அவனக்கு எதையாவது கொடுத்து பேதிக்கிருக்க வைக்கனும். பங்குனி உத்தரத்துக்கு சாத்தான் கோயில்ல எல்லாரையும் சவட்டித் தள்ளி முன்னுக்குப் போய் எடுத்துக்கிட்டே இருந்தான். ஒரு மாசம் சாப்பாட்டுக்குச் சேத்துக்கிட்டானோ?"
         "ஓட்டலுக்கு வித்துட்டு தங்கத்துல சினிமாப் பாத்தானாம்"
         "மக்கா! ரெவிய இந்த தடவ விடக்கூடாதுலே. நாலஞ்சு தேங்காதான் உடைப்பாங்க பொறவு நமக்கு மிஞ்சாது." 
         "வழிப் பண்ணுவோம்"

காலையில் எழுந்து குளத்துக்கு செல்லும்போது திட்டம் தீட்டத் தொடங்கினர்.

        "என்னலே செய்யலாம் மணிகண்டா?"
        "இந்த ரெவி வீராணமங்கலம் ஆத்துக்கு போய்தாமுலே சாயிங்காலம் குளிப்பான். அவன் குளிச்சிட்டு இருக்குறப் பொறவு துண்டு துணி எல்லாம் தூக்கிட்டு ஓடிடுவோம். அடுத்த நாள் வரைக்கும் நீந்திகிட்டே இருக்கட்டும்."
        "நல்ல ஐடியா தான். யாரும் நம்மளப் பாத்துடக்கூடாது."
         "சுப்ரமணி, நான் ரன்னிங் ரேசில பர்ஸ்ட் பாத்துக்கோ. யாரும் பாக்காதப்போ ஆத்துல துணியப் போட்டுட்டு ஓடிடுவோம்"
         "சரிடா மணிகண்டா."

மாலை ஐந்து மணிக்கெல்லாம் சுப்ரமணியும் மணிகண்டனும் ஆற்றங்கரைய அடைந்தனர். மணி ஐந்தரை ஆகியும் ரெவி வந்திருக்கவில்லை. இன்னும் பொறுத்தால் அங்கே ஒன்றும் முடியாது என்று கிராமத்துக்குப் புறப்பட்டனர். செல்லும் வழியில் ரெவி ஏன் குளிக்க வரவில்லை என்ற கேள்விகள். கோவிலிலும் ரெவி இல்லை. மணிகண்டன் வேகமாக ரெவியின் வீட்டிற்கு ஓடினான். வீட்டினுள் படுத்துக் கிடந்தான்.
       
        "அண்ணே இன்னிக்கு சதுர்த்தி. கோயிலுக்கு வரலியா?"
         " மக்கா. காய்ச்சல் டேய். வரலே."
         "சரிண்ணே. பூஜ ஆரம்பிச்சிடும். நான் வரேன்"

காற்றினில் கைகளச் சுற்றிக் கொண்டு வேகமாக்க் கோவில் வந்தடைந்தான். 
      
       "ரெவிக்கு உடம்புக்குச் சுகம் இல்ல. வரமாட்டான்"
       "நாகம்மப் பாட்டி மட்டும் தான் நிக்குது. அது குனியறதுக்குள்ள நம்ம அள்ளிடலாம்"

மணி ஏழைத் தொட்டது. கோவில் வந்தவர்கள் எவரும் தேங்காய் கொண்டு வந்த பாடில்லை.
      
      "ஏலேய் எவாளும் தேங்காய் கொண்டுவந்த பாடுல்லையே."
      "ரெவியும் இல்ல தேங்காயக் காணுமே."

கோயிலுக்குள் ஃபங்க் வாத்தியார் தேங்காயோடு நுழைந்தார். 
      "போச்சுலே மணிகண்டா"

 சிறுவர்களைப் பார்த்து ஒரு அதட்டல் பார்வை பார்த்து
      "என்னலே வடல் தேங்கா பொறுக்கவா?", ஆம் என்பது போல் இருவரும் தலையாட்டினர்.
      "காலாண்டுத் தேர்வு என்னிக்குலே?"
      "அடுத்த வாரம்."' என்றான் சுப்ரமணி. 
      "போனப் பரிட்சைல கணக்குல எவ்வளவு டேய்"
      மெல்லிய குரலில், "அம்பத்தி ஏழு."
       "மணிகண்டா நீ?"
       "எழுவது."
       "படிக்காம தேங்காப் பொறுக்கு நூற்றுக்கும் மேல வாங்கலாம். ஓடிடு கண்ணுலப்படக்கூடாது. கற்பூரம் காமிக்கற வரைக்கும் இங்கதாம்லே இருப்பேன். எட்டு மணிக்கு வந்து கொழுக்கட்ட வாங்கிட்டு ஓடிடனும்."
       தலையாட்டிவிட்டு இருவரும் ஓடினர்.


   
எட்டு மணிபோல கோவிலுக்கு வந்து கொழுக்கட்டை வாங்கிக்கொண்டு அவரவர் வீடு திரும்பினர் சுப்ரமணிக்கு நாகம்மைக்கு அடுத்த வீடு.

        அரைமணி நேரம் கழித்து நாகம்மையின் குரல் கேட்டது. வாசலுக்கு ஓடினான் சுப்ரமணி.
       
        "சுப்ரமணி. லஷ்மண சாமிக்கு மவன் பதினெட்டுத் தேங்கா உடைச்சாங்கப்போ. நான் சமையலுக்கு எடுத்துக்கிட்டேன். இந்தாப்போ பையம்மாருக்கெல்லாம் கொடு. ரெவிக்கும் கொடு காய்ச்சலாம் பாவம்"
        
        சரி என்று வாங்கி கொண்டான். பத்து செதில்களை தனக்கு எடுத்துவிட்டு, மணிகண்டனுக்கும் கொடுத்தான். ஊர் சிறார்களுக்கு கொடுத்துவிட்டு, கடைசி பத்து செதில்களில் ஆளுக்கு ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரெவி வீட்டுக்குச் சென்றனர்.

        "அண்ணே. தேங்கா."
        "என்னலே, இவ்வளவு?"
        "சுந்தர் மாமா பதினெட்டுத் தேங்கா உடைச்சாராம்"
        "அடேங்கப்பா. எனக்கு எதுக்குடா இவ்வளவு? ஒன்னு போதும் சாமிக்காக. நாகம்மை பாட்டிக்கு கொடு. சமச்சிக்கிடும் பாவம்"

         "அட ரெவி அண்ணனப் போய் இப்படி சொல்லுதாய்ங்களே ஊருல."
         "ஆமாம் லே. சரி நான் தூங்கப் போறேன்"

         சுப்ரமணி அருகில் படுத்திருந்த தாத்தாவிடம், "தாத்தா, கோவில்ல எதுக்கு தேங்கா உடைக்குறாங்க?", என்று கேட்டான்.
          "அதுவாப்போ. தேங்கா வெளிலப் பாத்தா மொரடா இருக்குல்ல?"
          "ஆமாம்"
          "உடைச்ச உடனே உள்ள நல்ல ருசியானத் தேங்கா. அத உடைக்கற மாதிரி, போட்டி பொறாம இந்த மாதிரி கெட்டதையெல்லாம் உடச்சி, நல்ல குணத்த கொடுன்னு வேண்டற மாதிரி."

           எதையோ யோசித்துக் கொண்டேத் தூங்கிப் போனான் சுப்ரமணி.

No comments:

Post a Comment