Thursday, October 18, 2012

என் காதல் நித்யா

சென்னை நாள் 23 டிசம்பர் 2011
                 காலை எட்டிலிருந்து ஒன்பதரை வரை மேற்கு மாம்பலத்திலிருந்து அம்பத்தூர் வரை சாலையின் டிராபிக் மெட்ரோ ரயிலுக்காக நீளம் குறைக்கப்பட்டு  மேலும் மோசமாக இருக்கிறது. வண்டியில் செல்வது கிட்ட தட்ட ராட்டிணத்தில் செல்வது போலத்தான். கீறல் இல்லாத காரும் கிடையாது. 50 cm இடைவெளி போதும் ஒரு இருசக்கரவாகனம் புகுந்து சென்று விடும். மோசமான நிலை நடைபாதையில் நடந்து செல்வோருக்கு தான். 50 cm நடைபாதையில் தென்பட்டால் அங்கும் வண்டி புகுந்திடும். ஆட்டோ ஓட்டுனர்கள் மைகேல் ஷூமேக்கரின் சொந்தக்காரர் என்ற நினைப்பில் ஓட்டுவார்கள். நடைபாதையில் நடப்போரிலிருந்து காரில் செல்பவர் வரை எல்லோருக்கும் விபத்துக்கு வாய்ப்பு குறைந்தபட்ச அளவிற்காவது உண்டு. அரையாண்டுத் தேர்வு விடுமுறையாலும் குடித்து ஓட்டுபவர்கள் எண்ணிக்கை இந்த நேரத்தில் குறைவு என்பதாலும்   சற்று டிராபிக் குறைவாக இருந்தது.
               
               காலை 8:42 வடபழனி சிக்னல், அண்ணாநகரை நோக்கி செல்லும் திசையில் இருந்த சிக்னல் சிவப்பை வெளிபடுத்தியது.75 நொடிகளில் 300 க்கும் மேற்பட்ட வண்டிகள் சூழ்ந்தன. முதல் வரிசையில் இருசக்கர வாகனங்கள், பின்னால் ஆட்டோ, கார், இவை இருண்டக்கும் ஹைப்ரிட் செய்தது போல ஷேர் ஆடோக்கள, பேருந்துகள் தொங்கி கொண்டிருக்கும் மக்களால் அகலம் கூடி இருந்தது. பச்சைக்கு மாற சிக்னல் காத்திருந்தது. 5 4 3 என நொடிகள் குறையும் போதே சில இருசக்கரவாகனங்கள் சாலையை கடந்தன. பச்சையாக மாறியவுடன் மற்ற வண்டிகளும் முண்டி அடித்து முன்னேறின.
                             
               8:43:27 சிக்னலில் இருந்து சுமார் 632 மீட்டர், ஒரு ஆட்டோ ஷேர் ஆட்டோவை முந்த நினைத்தது. வலது புறத்தில் இடம் இல்லாதலால், இடது புறமாக முந்த நினைத்தது. ஷேர் ஆட்டோ வின் முன்னர் சாலை குருகலானதால், அதுவும் இடது புறமாக திரும்ப  நினைத்தது. அப்போது ஆட்டோவும் நுழைந்ததால் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் பிரேக் அழுத்த முற்பட்டார். மாறி அக்செலேரட்டரை அழுத்த ஷேர் ஆட்டோ முன்னே சென்றுகொண்டிறந்த  பைக்கை வேகமாக இடித்தது. பைக்கில் இருந்தவர் அடித்த வேகத்தில் பறந்து மெட்ரோ ரயில் வேலைக்காக செங்குத்தாக இருந்த இரும்பு கம்பிகளின் மீது விழுந்தார். கம்பியின் ஒரு முனை வழியாக அவர் கழுத்து நுழைந்து அந்த முனை வெளியில் தெரிந்தது. அவர் இறந்தும் விட்டார். மக்கள் நொடி பொழுதில் அப்பகுதியில் சூழ்ந்தனர். ஒரு காரில் இருந்து வெளியில் வந்த டாக்டர் அந்த இளைஞன் இறந்ததை உறுதி செய்தார்.
       
              8:47:28 கூட்டத்திலிருந்து முன்வந்து ஒருவர் இறந்தவர் பற்றி அறிய முற்பட்டார். கழுத்தில் ஒரு ID இருந்தது. அதில் இவர் பெயர் சந்தோஷ் எனவும் HCL இல் பணி புரிந்ததும் தெரிந்தது. A+ve ஆம் இவர் ரத்தம். இறந்தவர் இனி எதற்கு ரத்த வகை. இவருக்கு ஒரு மொபைல் போன் இருக்க வேண்டும். ஆனால் இப்போது இல்லை. இவர் தூக்கி அடித்து வீசப்பட்ட போது கீழே விழுந்திருக்கும். விற்றால் சாராயத்துக்கு தேருமென எவராவது எடுத்து சென்றிருப்பார்கள். பர்ஸை பார்த்தால் ஒரு பெண், இளையராஜா, சச்சின் டெண்டுல்கர் என மூன்று போட்டோக்கள், 260 ருபாய், சில டெபிட் கார்டுகள் இருந்தன. வண்டியில் புடவை கவர் ஒன்று இருந்தது.
         
             சந்தோஷிற்கு அவன் எங்கு இருக்கிறான் என்பது புரியவில்லை. ஏதோ ஒரு விசை தூக்கி அடித்தது அதன் பிறகு ஒரு மயக்க நிலை கருப்படித்து போல் ஒரு உணர்வு. கருப்பு விலகி ஒரு தெளிநிலை வந்தது. பார்த்தால் வித்தியாசமான உடை அணிந்து சில பேர் இருந்தனர். நெருங்கி சென்றவுடன்  இவர்கள்  எமலோகத்தினர் எனத் தெரிந்தது.  இறந்தவர்களின் நிரைவேறாத 3  ஆசைகளை கேட்டறிவது விசித்திரகுப்தனின் வேலை. ஒவ்வொருவராக சொல்ல, சந்தோஷிற்கு வாய்ப்பு வந்தது.
       
              சந்தோஷ் சொல்ல ஆரம்பிக்கையில், எமதர்மராஜா,"ஏதோ கவுன்டவுன் ஆமே தலைகீழா ஒன்னு ரெண்டு மூணு சொல்வாங்களே. அத மாறி சொல் பாப்போம." என கூறினார்.
              "சார் ரியாலிட்டி ஷோவா நடத்துறீங்க. ஏன் சார்."
              "எதிர்த்து பேசுற. மரியாதையா சொல்லு"
             "3.சரி மாண்புமிகு எமலோக தலைவரே. உங்களுக்கு இளையராஜா தெரியுமா? கண்ணே கலைமானே கேட்டுருக்கேங்களா? ஜனனி ஜனனி? ஒரு இண்டர்லுட் ஆவது அவர் மியூசிக் ல? அவர் பாட்டு கேக்கும்போதெல்லாம், அந்த சந்தோசத்துல அழுகையே வரும். அப்ப தான் பாரதியார் சொன்ன தீக்குள்ள விரல வெச்சா இன்பம்னா என்னனு புரிஞ்சது. அவரோட அடுத்த கச்சேரிக்கு டிக்கெட் கெடச்சிருந்தது. படத்துல வர மாறி ஆவியாவும் போக முடியாது போல. என்னோட இசைகடவுள முதல் தடவ பாக்குற வாய்ப்பு. மிஸ்டர் யமா நீங்க முதல் பாட்டு முடியற வரைக்குமாவது வெயிட் பண்ணி இருக்கலாம்.
              2.கிரிக்கெட் பத்தி தெரியுமா உங்களுக்கு? சச்சின் டெண்டுல்கர்? இங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெரியுமா? ஷார்ஜா மேட்ச் டெசர்ட் ஸ்டார்ம்னு  சொல்லுவாங்களே  தெரியுமா? 100 அடிச்சு பைனல்ஸ் போவோம் பாருங்க ஐயோ. ஒரு 100 அடிக்கறதே கஷ்டம் இவர் நூறாவது நூறு அடிக்க போறார். அடுத்த மூணு மாசத்துல பதினஞ்சு மேட்ச் வருது பங்களாதேஷ் கூடயாவது நூறாவது நூறு அடிசிருப்பாரு. அவர புகழ்ந்து facebookல போட ஒரு ஸ்டேட்டஸ் ரெடி பண்ணி இருந்தேன் போடுற வரைக்கும் வெயிட் பண்ணி இருக்கலாம்."
            ஒன்று என சொல்ல வரும் பொழுதே ஒரு தடுமாற்றம் சந்தோஷிற்கு.
தொடர்ந்தான். இறந்தவர்க்கும் அழுகை வருமோ? அழுதே பேசினான்.

           "1.நித்யா. தேவத. என் மனைவி. ச்ப். நாலு மாசம் தான் ஆச்சு கல்யாணம் ஆகி.   ஏழு வருஷமா தெரியும் ஆனா. என்ன ஆள் ஆக்கினவ. ஒரு பொண்ணு அதுவும் இஷ்டமானவ என்ன பக்கத்துல இருந்தே பாக்கும்போது தான் பல விஷயங்கள என்ன நானே மாத்திக்கிட்டேன். அவ வரதுக்கு முன்னாடி நான் ஒண்ணுமே இல்ல. ஒண்ணுமே ப்ச் இல்ல. அவள எப்பவும் சிரிக்க வெக்கணும்னு நெனச்சேன். இப்ப என்ன பாத்து அவ அழுவா. என் பொனத்த பாத்து அவ அழுவா. இப்ப நீங்க என்னையே அவ அழுதருக்கு காரணம் ஆக்கிட்டேன்க. இத்தனைக்கும் நான் ஹெல்மெட் போட்டுட்டு போனேன். அவ சிரிக்கும்போது தெரியுமே அதான் சொர்க்கம். இது இல்ல சொர்க்கம். இது சொர்கமே இல்ல. மயிருக்கு சமானம் இந்த சொர்க்கம். நித்யாவ என்னால அழ வெச்சிட்டேன்களே. சாரி நீங்க ரொம்ப பெரியவர் மயிர்னு லாம் சொல்லிருக்க கூடாது.

அவ புருவத்த நாள் பூரா பாத்துட்டே இருக்கலாம். உங்களுக்கு தெரியுமா? அவ புருவமே அவ என்ன நினைக்குறானு சொல்லும். அவ புருவம் என்ன அவளோட தாசன் ஆக்கிச்சு. ரெண்டு நாள் முன்னாடி அவள திட்டிட்டேன். எல்லாரும் டி ஷர்ட் ல போற எடத்துக்கு சாரில வந்தா. இப்பயும் புடவை தானானு கேட்டேன். கொஞ்சம் சத்தமா. திட்டுன்னு சொல்ல முடியாது. திட்டினேன்னும் சொல்லலாம். அவ புருவத்துல அவ சோகம் வருத்தம் தெரிஞ்சுது. அவ அமைதியா அத விட்டுட்டா. அவளுக்கு புடவ பிடிச்சது போட்டுக்கறா.  அன்னிக்கி ராத்திரி மதுரைக்கு போனா. இன்னிக்கி காலேல திரும்பி வரா. அவள கூப்ட தான் பஸ் ஸ்டேண்ட் போனேன்.  ஒரு புடவ வாங்கிட்டு போனேன். இன்னும் ஒரு 20 நிமிஷம் வெயிட் பண்ணி இருந்தா புடவைய  குடுத்து மன்னிப்பு கேட்டுருப்பேன். மனசுக்குள்ள சிரிச்சிருப்பா. அது வரைக்கும் வெயிட் பண்ணி இருக்கலாம் நீங்க. நான் சாரி ஆவது கேட்டுருப்பேன் ச்சே."
         
                 சொர்க்கமே ஒரு அமைதியில் இருந்தது. எமன் வேகமாக சந்தோஷ் கையை பிடித்து சந்தோஷ் வா போகலா...........

இன்று 14.10.2007 காலை 8:30 மணி
                     "டேய் எந்திரி டா. 8:30 க்கு என்ன தூக்கம். தூங்கும் போது இளிப்ப பாரு. ஒரு நிமிஷம் லேட்டா போனாலும் அந்த தியரி ஆப் ஸ்ட்ரக்ச்சர் உள்ள சேக்க மாட்டான். எந்திரி." சந்தோஷை எழுப்ப முற்பட்டான் ஈஸ்வரன்.
                     "மச்சி. செம கனவு டா.செத்துட்டு வந்துருக்கேன் இப்போ"
                     "என்னடா சொல்ற?"
                     "அதான் சொன்னேனே செத்து போய்டேன் டா."
                     "ஏன்டா லூசு. செத்து போயட்டேன்கிற அப்பறம் எப்டி அது செம கனவு?"
                     "முழுசா கேழு. நித்யா. நம்ம கிளாஸ்மெட் இருக்கால."
                     "ஆமாம்."
                     "அவ தான்டா என் பொண்டாட்டி."
                     "என்னடா சொல்ற?"
                     "கனவுல கனவுல."
                     "ஓ  ஓ. அதானே பாத்தேன்."
                     "ஆனா அவதான்டா என் பொண்டாட்டி. எமனே வந்து காட்டிட்டாரு."
                     "நேத்து மனோஜ் ஷ்யாமளன் படம் பாத்தியா?"
                     "லவ் மாமா லவ். உனக்கெங்க புரியும். ச்சே அவ புருவத்த பாத்துருக்க?"
                    "ஏன்?"
                    "அவளோ அழகு அவ புருவம்!"
                    "இது லவ் தான் டா?"
                    "எப்புடி சொல்ற?"
                    "ரசிக்கவேண்டியத ரசிக்காம இப்படி புருவம், கண், மூக்குனு ரசிச்சா அது லவ் தான்."
                   "இனிக்கே சொல்லிடறேன் அவ கிட்ட."
                   "நீ நடத்து. அங்க ஏற்கனவே ஆறு பேரு பாத்ரூம் வாசல்ல இருக்காங்க. சீக்கரம் குளிச்சிட்டு வா."
                 
கிளாஸ்ரூம்

                    சந்தோஷ் இதுவரை வகுப்பின் ஒரு பெண்ணிடமும் பேசியது கிடையாது. நித்யா அவன் மனதில் இதுவரை வந்ததே இல்லை. நித்யா முகத்தையும் முழுவதாக குழுபுகைபடத்தில் தான் பார்த்திருப்பான். இருந்தும் ஏன் நித்யா மீது கனவில் அப்படியொரு காதல். பெண்கள் பக்கமே திரும்பாத அவன் கண்கள், நித்யாவையே பார்த்துக்கொண்டிருந்தது. குறிப்பாக அவள் புருவத்தை. எமனிடம் இவன் கூறியது உண்மை தான். பார்த்தவுடன் காதல் கீதங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. அவள் சிரிப்பதை ரசித்தான். தும்பியபோது பதறினான்.
                 
11:15 இடைவேளை
                   
                    சந்தோஷ் எதற்கும் தயங்காமல் தனியாக நின்று கொண்டிருந்த நித்யாவிடம் சென்றான். ஏதோ சொல்ல முயன்றான். வார்த்தை தான் வரவில்லை, அனால் இப்போதே சொல்ல வேண்டும் என்ற வேகம் அவனுக்கு. எமன் அவன் பின் தலையில் அடித்து சொல் என்பது போல் இருந்தது அவனுக்கு.
                 
                     "நித்யா!!"
                     "ஹே சந்தோஷ் நீயா பேசுற ஆச்சர்யம் தான்."
                     "நித்யா உனக்கு ஒன்னு தெரியுமா?"
                     "என்ன"
                     "ஐயோ அது கேள்வி இல்ல. இங்கிலிஷ்ல சொல்லுவாங்களே பில்லர் அது மாதிரி. ஒன்கிட்ட சொல்ல சில விஷயம் இருக்கு. சொல்லிடறேன். நடுவுல இன்டர்பியர் பண்ணாத. மனசுல இருக்கறத சொல்ல மறந்துடுவேன்."
                    "(சிரித்துகொண்டே) சொல்லு."
                    "இன்னிக்கி ஒரு கனவு. அதுல நீ என் பொண்டாட்டி. உனக்கு ஒன்னு தெரியுமா? நீயும் நானும் ஒருத்தர ஒருத்தர் எப்டி தாங்கினோம் தெரியுமா? எல்லாரும் நம்மல மாதிரி இருக்க ஆச பட்டாங்க. எமதர்மராஜா கூட. உன் புருவம் எவளோ அழகு. அதப்பாத்தவுடனே நீ தான்னு சொல்லுது உள்மனசு. நீ தான் எனக்கு எல்லாமே"
                    சொல்லும்போதே அவள் புருவம் சட்டென உயர்ந்தது.
                    "உன்னோட மனச அப்டியே சொல்லுது. இப்ப நீ என்ன இவன் திடீர்னு வரான் பொண்டாட்டினு சொல்றான்னு நினைக்கிற. உன் புருவம் லேசா தூக்கி இருக்கு அது சொல்லுது. உன் புருவத்த பாத்துகிட்டே இருந்தடலாம். சான்சே இல்ல."
                    அவள் லேசாய் சிரித்தாள்.
                   "இப்டி நீ சிரிசிட்டே இருக்கணும்னு ஆச படறேன்.இப்ப நீ சிரிச்சே நரம்புலாம் ஏதோ ஆகுது. உன்ன கவலையே பட விடமாட்டேன். உன் புருவத்த  பாக்க சான்ஸ் குடேன். ப்ளீஸ் சான்ஸ் கொடேன்"
                   "எந்த சினிமால வருது இப்ப நீ சொன்னது எல்லாம்?"
                   "கூகுள்  பண்ணி பாரு நான் வேணா எழுதி தரேன். சந்தோஷின் என் காதல் நித்யானு வரும்."
                   சிரித்துகொண்டே வகுப்புக்கு சென்றால் நித்யா. போகும்போது கண்ணாடியில் அவள் புருவத்தை பார்த்தாள் நித்யா. சம்மதம் என்று புருவம் சொன்னது போல் இருந்தது.
                 
                 ஈஸ்வர் இந்த படலத்தை எல்லாம் ஓரமாய் நின்று கவனித்தான்.  அவள் முகத்தில் சம்மதம் தெரிந்தது ஈஸ்வரனுக்கு. சந்தொஷிடம் வந்து, "எல்லாம் சரி கனவுல நீ செத்து போனையே அத சொல்ல வேண்டியது தானே?" என கேட்டான். சந்தோஷ், "அதான் எமதர்மராஜாவுக்கே எங்க ஜோடி பிடிச்சதுன்னு சொன்னேனே." என்று சமாளித்தான். "என் காதல் நித்யா!! எங்கயோ போய்ட டா."