Thursday, October 18, 2012

ஆயிரம் ரூபாயின் கதை

                     
                        காவேரி, ஒரு அக்மார்க் தென் தமிழக கிராமப் பெண். நடந்த தேர்வில் எடுத்திருந்த நல்ல மதிப்பெண்களின் உதவியால், தமிழகத்தின் சிறந்த கல்லூரிகள் ஒன்றில் உயிர்தொழில்நுட்பவியல் (Biotechnology) படிக்கும் வாய்ப்பு அவளுக்கு கிட்டியது.
                     
                        பள்ளி படிப்பு முடிந்தவுடன் இன்ஜினியரிங் அல்லது மெடிக்கல் படிப்பில் சேர வேண்டும் என்பதே இப்போதைய கல்வி நிலையாக உள்ளது. அவ்வாறு சேர்ந்தவர்கள் தான் நல்ல மாணவர்கள். அவர்களுக்கே திருமண சந்தையில் நல்ல மதிப்பு. இதிலும் ஒரு பாகுபாடு பெயர் தெரியாத இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தால் நடுநிலை மாணவன். இன்ஜினியரிங் மெடிக்கல் தவிர வேறு எதை படித்தாலும் அவர்களை கடைநிலையர்கள்.

                       காவேரிக்கு இதில் முதல் நிலை. கோயம்புத்தூரில் தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியில் உயிர்தொழில்நுட்பவியல் படிக்கும் வாய்ப்பு. அவள் கல்லூரியில் தன கால்களை வைத்தபோது, ஏதோ வேற்று கிருகத்தில் கால் வைத்தது போல் அவளுக்கு மகிழ்ச்சி. அரசு கல்லூரி -கட்டணமும் குறைவு. இந்த அரசு கல்லூரியில் பல நிலைகளிலிருந்து வந்த மாணவர்களை காணலாம். சொந்த ஊர்களில் வேற்றுமை, முக்கியமாக செல்வ நிலையில் வேற்றுமை, இந்த கல்லூரி பல கூடல்களின் சங்கமம். காவேரி இதுவரை பாவாடை தாவணியையே உடுத்தி வந்தவள், நல்ல நாகரீகம் கொண்ட நாகரீக வளர்ச்சி இல்லாத இடத்தை சேர்ந்தவள் ஆயிற்றே. கல்லூரியில் இவ்வுடை அணிந்தால் கிண்டலுக்கு ஆளாகலாம் என தோழிகள் கூறியமையால், ஆயிரம் ரூபாய்க்கு மூன்று சுடிதார்களை வாங்கி வந்தாள். அவளுடைய பணக்கார தோழி, ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சுடிதார் வாங்கி கொடுத்திருந்தாள்.

                      கல்லூரி விடுதியில் இருவர் ஒரு அறையை பகிர்ந்து கொள்ளவேண்டும். காவேரியும் சென்னையை சேர்ந்த ஹர்ஷிதாவும் அறையை பகிர்ந்து கொண்டனர். ஹர்ஷிதா சென்னையின் சிறந்த பள்ளிகூடத்தில் படித்தவள். குட்டையிலும் குட்டை பாவாடை அவள் பள்ளி சீருடை. அந்த குட்டை பாவாடையே ஆயிரம் ரூபாய். உலகமயமாக்கல், நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆடைகளின் அளவை குறைப்பதில் வளர்ச்சி அடைந்துள்ளது. பிக்னி பள்ளி சீருடை ஆகிவிடும் 2500இல்.
                   
                    முதல் நாள் வகுப்புக்கு டீ ஷர்ட் ஜீன்ஸ் என தயாரானாள் ஹர்ஷிதா. கல்லூரி விதிமுறைப்படி சுடிதார் அல்லது சாரீ தான் அணிந்து வர வேண்டும் என சீனியர் சொல்ல, ஜப்பானிய எரிமலை போல் வெடித்தாள் ஹர்ஷிதா, ஏதோ இங்கிலீஷ் கெட்டவார்த்தையை சரளமாய் திட்டி விட்டு சுடிதாரில் சென்றாள்.
                 
                   ஹர்ஷிதாவிற்கு காவேரியுடன் அறையை பகிர்ந்து கொள்ள பிடிக்கவில்லை, காலையில் அவள் சொன்ன accustomed என்ற வார்த்தையின் அர்த்தத்தை மட்டும் எட்டு முறை கேட்டு விட்டாள் காவேரி. " accustomed கு அர்த்தம் தெரியல இவ கூட லம் இருக்கணும் தல விதி. ஜேசன் ஸ்டேத்தம் , ஏகான் யாருன்னு கேக்குறா பிட்ச்"    மனதுக்குள் முனகினாள் ஹர்ஷிதா.

                   கால போக்கில், காவேரியை புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஹர்ஷிதாவுக்கு கிடைத்தது. ஆங்கில மனமே இல்லாத பெண். டி ஷர்ட் ஜீன்ஸ் பெண்கள் அணிவதை திரைபடங்களில் மட்டுமே பார்த்தவள். செலவே செய்ய மாட்டாள். நன்றாக பாடுவாள். இப்போது ஆங்கிலம் புரிந்து கொள்வாள். தட்டுத்  தடுமாறி பேசவும் செய்வாள்.

                   காவிரிக்கு சென்னை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நாட்டம். இன்ஜினியரிங் சேர்க்கைக்கு ஜூலையில் சென்றதே முதல் முறை. அங்கு நேரம் கழிக்கவும் முடியவில்லை.ஹர்ஷிதவிடம் சென்னை பற்றி கேட்டாள்.
அப்படியே சென்னை பற்றி இருந்த பேச்சு ஹர்ஷிதாவின் பள்ளி பற்றி சென்றது.
                 
                "உனக்கு தெரியுமா என் ஸ்கூல் டெர்ம் பீஸ் மட்டும் 31,165 ரூபா. இப்ப பாரு எட்டு செமஸ்டர் சேத்தும் பீஸ் அத விட கம்மி."
                 "என்னது 31,000 ஆ  பகல் கொல்லையாள இருக்கு. லெவந்த் ட்வெல்த் சேத்தே எனக்கு ஆயிரம் தான் ஆச்சு."
                "நான் பிசிக்ஸ் ட்யூசனுக்கே மாசம் ஆயிரம் கட்டினேன்."
                "ஏன் டேர்ம்க்கு 31 வாங்கராங்களே  உன் ஸ்கூல்ல பிசிக்ஸ் சொல்லி தரலையா "
                "சொல்லி தந்தாங்க. எங்க அப்பாவோட ப்ரெண்ட்ஸ் பசங்க லாம்  ட்யூசன் போனாங்களாம் என்னையும் அனுப்பிடாறு."
                "ஆயிர ரூபா எங்க வீடு மாச வருமானம்."
                "அப்படி னா நீ 30 டைம்ஸ் அதவிட வாங்க போர."
                "சுசீந்தரம் தாணுமலையான் கிட்ட அத தான் வேண்டிகிட்டு இருக்கேன் பாப்போம்."
             

                நாட்கள் வேகமாக ஓடி அந்த நாள் வந்தது. கேம்பஸ் இன்டர்வியு. இன்ஜினியரிங் படிக்க வரும் மாணவர்கள் பலர் ஒரு பார்முலா ஓட தான் வராங்க.
                12th முடி ---> இன்ஜினியரிங் ஜாயின் பண்ணு எந்த ஸ்ட்ரீமா  இருந்தாலும் பரவா இல்ல ---> சாப்ட்வேர் வேலைல சேரு.
         
                இந்த பார்முலா காவேரியையும் விட்டு வைக்கவில்லை. வேலை கிடைத்தால் ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய்; வீட்டின் மாத வருமானம். கணிப்பொறி முன் அமர்ந்து வேலை செய்தால் நாளுக்கு ஆயிரம். ஏர் பிடித்து, சாக்கடைகளை சுத்தம் செய்து , உடலை வருத்தி கட்டிட வேலை செய்தால் மாதத்திற்கு ஆயிரம். இது எங்கே நியாயம்? கேட்டால் மூளைக்கு தான் அதிக பணம், உடல் உழைப்பு யார் வேண்டுமானாலும் செய்யலாமாம் என்கிறார்கள். எங்கே பில் கேட்ஸ் வந்து ட்ரைநேஜ் சுத்தம் செய்யட்டும் பார்க்கலாம். ஆறு செமெஸ்டர் படித்த Biotechnology காவேரிக்கு ஜாவா வேலை வாங்கி கொடுத்தது.  மொத்தம் ஆறு பேரை தேர்வு செய்தது அந்த நிறுவனம். ஒரு சிவில், 2 மெக்கானிகல், 1 உயிர்தொழில்நுட்பவியல், 2 எலெக்ட்ரிகல். ஒரு கணினி மாணவரையும் சேர்க்கவில்லை அந்த நிறுவனம். பால் சுரக்க காளை மாடுகளை வாங்கிய கோனார் கதை.

                காவிரிக்கு வேலை பெங்களூரில். நாளுக்கு ஒரு ஆயிரம் வாங்க போகும் ஆனந்தம் வேறு. ஆபீசுக்குள் நுழைந்தால் அப்படியொரு திகைப்பு. எல்லாம் மூடியும் தெரியும் வகையில் ஆடை அணிந்த பெண்கள் சிலர். சிகரட்டை குபு குபு என புகைக்கும் சில பெண்கள். இவளை போல இருக்கும் சில பெண்கள். இவளும் சற்று தேர்ச்சி அடைந்திருக்கிறாள். அடர்ந்த மயிர்நிரைந்த இவள் புருவம், மயிர் சற்றே நீக்கப்பட்டு வடிவம் மாறி நேர் கொடு போல இருக்கிறது. மேலே சுடிதார் கீழே ஜீன்ஸ் என்று இவளுக்கும் ஏற்பட்ட நாகரீக வளர்ச்சி. ஊதா நிறத்தில் பொட்டு, லிப்ஸ்டிக், பிளாஸ்டிக் கம்மல், வளையல், சுடிதார். கண்ணாடிக்கும் அதே நிறத்தில் ஒரு ப்ரேம். ஜாவா தொடக்கத்தில் கொரியமொழி படம் போல புரியாமல் இருந்தது. சிறப்பாக பணியாற்றினால் ஆயிரம் இன்னும் வளருமே, கற்று கொண்டாள்.

               அவள் அணியில் பணி புரியும் ஒருவர், நேரடியாக F1 கார் பந்தயம் கண்டு வந்தாராம். அதற்கு ஒரு விருந்து. Barbeque nation ஆம் ஆங்கிலம் தெரிந்தவனும் படிக்க திணறும் பெயர் அந்த ஹோட்டலுக்கு. தான் உண்பது என்ன உணவு என்றே விளங்கவில்லை காவேரிக்கு. பக்கத்தில் இருந்த ஆந்திராவில் இருந்து மெக்கானிகல் முடித்த ஜாவா ஸ்பெசலிஸ்ட் அவளுக்கு உணவுகளில் எது சைவம் என்று பிரித்து கொடுத்தான். இந்திய உணவுகளை சாப்பிட வேண்டாம் கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்று அறிவுரை வேறு. கடைசியாக ஐஸ்கிரீமில் முடிந்தது விருந்து.

              கட்டிய பில்லை பார்த்தல் காவேரி. ஒரு ஆளுக்கு ஆயிரம் ருபாய். அவள் உள்ளிருந்து ஏதோ சொன்னது இந்த ஆயிரம் தான் பல காவேரிகளின் மாத தேவை என்று.

             அதே நேரம் சென்னையில் டிவி செய்தி வாசிப்பாளர், "வறுமை கோட்டுக்கான எல்லை கோடு ஒரு நாளுக்கு நகர் புறத்தவறுக்கு ருபாய் 32 ஆகவும் கிராமப்புற மக்களுக்கு ரூபாய் 26 ஆகவும் மத்திய அரசு அறிவிப்பு."